Monday, February 02, 2009

"தீர்வுத் திட்டம்" திணிக்கும் சக்திகளும் மறுக்கும் சக்திகளும்

'எமக்கு இருப்பதோ இந்தச் சிங்கள ஸ்ரீ லங்கா மட்டுமே. எமக்குப் போவதற்கு வேறு இடமெதுவுமில்லை. சிங்கள மக்கள் தமது தொழில் நிமித்தம் பல நாடுகளுக்குப் போயுள்ளனர் தான். ஆனால் நமக்கிருப்பதோ இந்த நாடு மட்டுமே. அது உண்மை. இதனை நாங்கள் பாதுகாக்க வேண்டும்.””

இந்தக் கூற்றை இனவாதியான நளின் த டி சில்வாவோ, குணதாச அமரசேகரவோ, எஸ்.எல்.குணசேகரவோ, சம்பிக்க ரணவக்கவோ, சூரிய குணசேகரவோ, தினேஸ் குணவர்த­னவோ அல்லது போனால் ஹரிச்சந்திர விஜேதுங்கவோ கூறியிருக்கக் கூடும் என நீங்கள் நினைத்தால் நிச்சயம் ஏமாந்துதான் போவீர்கள். ஏனெனில் இதனை கூறியவர் வேறு யாருமல்ல. சாட்சாத் நமது மாட்சிமை தங்கிய ஜனாதிபதி சந்திரிகா அவர்களே தான்.

அவர் ஆசிரியர்களுக்கான மாநாடொன்றிலேயே இவ்வாறு உரை­யாற்றியுள்ளார். இதை அக்கறையுடன் வெளியிட்டுள்ளது ”வெண்தாமரை இயக்கம்” அதன் ”“சமாதானம், அரசியல் தீர்வு மற்றும் நாட்டின் எதிர்காலம்”” எனும் நூலில்.

சிங்கள பௌத்த மரபு ரிதியிலான பேரினவாத கோஷத்­துக்கு அப்பால் நின்று எந்த சிங்கள தலைமையாலும் ”சமாதானம்” பேச முடிவதில்லை என்பதும் சிங்கள பௌத்த பேரினவாதத்தைத் திருப்திப்படுத்தாத எந்தத் தீர்வையும் தமிழ் மக்களுக்கு வழங்கப் போவதில்லை என்பதையும் மீண்டும் உணர்த்தும் சைகைகளே இவை.

இந்த லட்சணத்தில் தான் சமாதான பேச்சுவார்த்தை முஸ்தீபுக­ளும், தீர்வுத் திட்டம் தெரிவுக்குழுவின் அங்கீகாரத்துடன் 3வது முறை முன்வைக்கப்­பட்டிருப்பதும், அது குறித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவகையில் பிரதான கட்சிகள் இரண்டும் கண்டுள்ள உடன்பாடுகளும் நடந்து வருகின்றன.

இவை குறித்து விமர்சிப்போரை தீர்வு முயற்சியையே எதிர்ப்பவர்களாக சித்திரிக்கும் பலரும் உள்ளனர். ஆனால் அரசின் நேர்மையற்ற முயற்சிகள் இதனை நம்பச்செய்யும் வகையில் இல்லையே. இந்தத் தீர்வு முயற்சிகளை தமிழ் மக்கள் நம்ப வேண்டுமெனில் அரசு தான் நேர்மையானது என்பதை வெளிக்காட்டுவது முன்நிபந்தனையாக உள்ளது. அந்த நேர்மையை வெளிப்படுத்தும் தார்மீக பொறுப்பையுடைய அரசு, மீண்டும் மீண்டும் தமிழ் மக்களுக்கு தமது வரலாற்று ரிதியிலான ஏமாற்றங்களை நினைவுபடுத்தும் வகையில், சிங்கள பேரினவாதத்தோடு சமரசம் செய்து கொண்டு அதனை திருப்திப்படுத்தித்தான் தீர்வை வழங்கலாம் என்று கருதுகையில் தமிழ் தரப்பு நம்பிக்கையிழக்காமலிருப்பது எப்படி?

அரசின் இந்த நேர்மையின்மைக்கு பல்வேறு காரணங்கள் கற்பிக்கப்பட லாம் என்பது உண்மையே. ஆயினும் இந்தக் காரணிகளை மீறி இதுவரை எந்த அரசாங்கமும் செயற்பட்டதில்லை என்பதுதான் வரலாற்று அனுபவம்.

இதைப் புரிந்து கொள்ள அரசின் தீர்வுத் திட்ட முஸ்தீபுகள் குறித்து ஒரு மீள்பார்வையை செலுத்துவது பொருத்தமாக இருக்கும்.

தீர்வுத் திட்டத்தின் வளர்ச்சி
பேச்சுவார்த்தை முறிவும் தீர்வு யோசனையும்:

1994ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பொ.ஐ.மு.வின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளாக சமாதானம், பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு என்பன அமைந்திருந்தன. இவற்றைக் கூறி அமோக வெற்றியீட்டி அது ஆட்சியையும் அமைத்தது. அதே வருட இறுதியிலிருந்து விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையையும் தொடக்கியது. ஆயினும், இப்பேச்சுவார் த்தையின் போது அது தொடர்ச்சியாகப் பல இழுத்தடிப்புகளை செய்துவந்தது. இதன் காரணமாக 1995 ஏப்ரல் 19ம் திகதி பேச்சுவார்த்தை முறிவடைந்த போது புலிகளின் திருமலை கப்பல் தாக்குதலை காரணம் காட்டி முறிவுக்கான முழுப்பொறுப் பையும் புலிகளின் மீது சுமத்தியது. புலிகளுக்கும் இம்முறிவில் பங்குண்டு என்ற போதும் முழுப்பொறுப்பையும் அவர்கள் மீது போடுவது அப்பட்டமான பொய்யாகும். ஆயினும் அரசு, தனது தொடர்பு சாதனங்களுக் கூடாக இக்கருத்தை நம்பச்செய்யும் வகையில் தீவிரமாகச் செயற்பட்டது.

”தமிழ் மக்களை மீட்கும் யுத்தம்?”
இழப்பு புலிகளுக்கா? மக்களுக்கா?

பேச்சுவார்த்தையின் போது அரசியல் தீர்வுத் திட்டம் குறித்த எந்த வித தயாரிப்புமே நகல் அளவில் கூட இல்லாததும் அரசு பக்கமிருந்த பலவீனங்களிலொன்று என்பதை பல விமர்சகர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். 3வது ஈழ யுத்தம் தொடர்ந்த போது ”பயங்கரவாதிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்கும் யுத்தம்” என்றும் ”சமாதானத்துக்கான யுத்தம்” என்றும் அரசு பிரச்சாரம் செய்தது. ஆனால் வடக்கில் ஏற்பட்ட - ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இழப்புகளைக் கொண்டு இருப்பதையும் இழந்தவர்கள் புலிகளா? மக்களா? என்பதை எவருமே அறிவர் . அப்படியாயின் இழக்கச் செய்தவர்களின் இலக்கு என்ன? யாரை திருப்தி செய்ய இவ்வாறு அரசு நடந்து கொண்டது? அவை நிச்சயமாக தமிழ் மக்களை திருப்தி செய்யும் ஒன்றாக இருந்திருக்க முடியாது.

பணிய வைக்கும் முயற்சி

உண்மையில் அரசு தரப்பில் யுத்தத்தை தீர்மானிக்கிற காரணிக­ளும் தமிழ் மக்கள் தரப்பில் யுத்தத்தை தீர்மானிக்கிற காரணிகளும் நேருக்கு நேர் முரணான பன்புகளைக் கொண்டுள்ளன. ஏனென்றால் அரசு யுத்தத்தை தொடங்கியது பேரினவாத சக்திகளை தாஜா செய்யவே. புலிகளோ தமது அரசியல் இருப்பைப் பேண யுத்தம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளார்கள்.

“”புலிகளுக்கு யுத்தம்! தமிழ் மக்களுக்கு பொதி!”” என உலகுக்கு கூறிக்கொண்டு ஒரு பக்கம் யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களை களைப்படையச் செய்து, போராட்டம் மீதே வெறுப்பை ஏற்படுத்தி, அவர்களைப் பணிய வைப்பது அல்லது சரணடையச் செய்வதே யுத்தத்தின் பிரதான நோக்கமாகும்.

அந்த நம்பிக்கையிலேயே ஓட்டைத் தீர்வை தைரியயமாக அரசு முன்வைத்தது. முதற் தடைவையாக 1995 ஓகஸ்ட் 3ம் திகதியன்று முதல் நகல் வெளியிடப்பட்டது. இந்த நகலை ஏற்கெனவே ஜீ.எல்.பீரிஸ் தலைமையி லான குழு (ஜீ.எல்.பீரிஸ் பொ.ஐ.முவுடன் சேருவதற்கு முன்னமிருந்தே) கொழும்பு பல்கலைக்கழகத்தில் பல கால உழைப்பின் பின் தயாரித்திருந்தது. அக்குழுவில் புத்திஜீவிகள் என சொல்லப்படும் பல சட்டநிபுணர்களும் இருந்தார்கள். இந்த நகல் மிகவும் முன்னேறிய ஒன்று என்பதே பலரது கருத்து. ஆயினும், அதில் உள்ள விடயங்கள் நன்றாக குறைக்கப்பட்ட பின்பே அரசின் தீர்வுத் திட்ட நகலாக அது வெளியிடப்பட்டது. இது குறித்து கட்சிகள், அமைப்புகள், தனிநபர்களது கருத்துக்களை ஆராய்வதற்கான அரசின் குழுவொன்றும் இயங்கியது. இறுதியாக இவையெல்லாம் ஆராயப்பட்டு முடிந்ததாகக் கூறி 1996 ஜனவரி 17ம் திகதியன்று (அரசியலமைப்பு நகலுடன்) அரசின் திட்டமாக அது வெளியிடப்பட்டது.

தீர்வுத்திட்டம் யாருக்கானது?

தீர்வுத்திட்டத்தை கொண்டு வருவது தமிழ் மக்களின் பிரச்சினை­க்கு அரசியல் தீர்வு காண்பதற்காகவே என்று சொல்லப்பட்டது. அவ்வாறெனில் மக்களின் விமர்சனத்துக்காக வெளியிடப்பட்ட வேளை, தமிழ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட விமர்சனங்கள் முடிந்தளவுக்கு பரிசீலிப்புக்கும் கவனத்துக்கும் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதன்படி எடுக்கப்படும் முடிவும் கூட தமிழ் மக்களின்அபிலாஷைகளைத் தீர்ப்பனவாக இருந்திருக்க வேண்டும். ஆனால் 1995 ஓகஸ்ட் தீர்வு யோசனையானது தமிழ் தரப்பு கோரிக்கைகளை கருத்திற் கொண்டிராதது மாத்திர மன்றி பேரினவாதக் கோரிக்கைகளைக் ஈடுசெய்யும் வகையில் - ஏற்கெனவே இருந்த அதிகாரங்களும் குறைக்கப்பட்டே வெளிவந்தன.

இந்த இடத்தில் அரசு யாரைத் திருப்தி செய்வதற்காக அந்த நிலைப்பாட்டை எடுத்தது என்ற கேள்வி எழுகிறது. நிச்சயமாக தமிழ் மக்களின் தரப்பில் எழுந்த கோரிக்கையை விட சிங்கள பௌத்த பேரினவாதக் கோரிக்கைக்கே அரசு இசைந்து கொடுத்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால் இவ்விடயத்தில் அரசை கட்டுப்படுத்தக் கூடிய வல்லமை இந்த பேரினவாதத்திடமே உள்ளது என்பதும், அரசின் இருப்பே அதில்தான் தங்கியுள்ளது என்பதும் புரியும். எந்த ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு பயந்து பண்டாரநாயக்காவும், பின்னர் டட்லியும் செல்வநாயகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை கிழித்தெறிய நேரிட்டதோ அதே காரணத்துக்காக இன்றும் தமிழ் மக்களின் உரிமைகளை பறித்தெடுக் கவே சிங்கள அரசாங்கங்கள் தயாராக முனைகின்றன என்பது இதிலிருந்து தெரியவருகிறது.

நிறுவனமயப்பட்ட பேரினவாதத்தின் முன்னால்...?

சிங்கள பௌத்த சக்திகளின் பேரினவாத முஸ்தீபுகள் எளிதான சிறிய விடயமாக நோக்கக் கூடியவை யல்ல. சிங்கள பௌத்த பேரினவாதம் ஏற்கெனவே நிறுவனமயப்பட்டுள்ளது, அரசைக் கட்டுப்படுத்தவும் இயக்கவும் வல்லது, (பார்க்க பெட்டி செய்தி) அரச யந்திரத்தின் மூலமாகவே சிங்கள மக்களிடம் சிங்கள பௌத்த பேரினவாத கருத்தியலை ஊட்டி வருவது.

“”இலங்கையின் வரலாற்றில் ஆரம்பத்திலிருந்தே ஜனநாயகம­யப் படுத்தலும், பேரினவாதமயப்படுத்தலும் சமாந்தரமாகவே வளர்ந்து வந்து (அரசியலமைப்புக்களுக்கூடாக) பின்னர் ஒரு கட்டத்தில் பேரினவாதம் மேலாட் சிக்கு வந்து தானே ஜனநாயகமயப் படுத்தலையும் தீர்மானிக்கு­மொன்றாக நிலைபெற்று விட்டது”” என்று பேராசிரியர் ஒருவர் அடிக்கடி கூறுவதுண்டு.

அரசின் நடத்தையை தீர்மானிப் பது சிங்கள பௌத்த பேரினவா­தமே என்றால் அது மிகையல்ல. யுத்தத்தை நடாத்துவதன் பின்புலமும் கூட அது தான். சிங்கள பேரினவாதத்தின் ஆதரவு அரசுக்கு வேண்டுமெனில் யுத்தம் அவசியம். யுத்தத்தை நடத்துவதன் மூலம் இரு விடயங்களை அரசு சாதித்து வருகிறது. ஒன்று பேரினவாதத்தை ஓரளவு கட்டுப்படுத்துவது, மற்றையது ஏனைய பிரச்சினைகளை இரண்டாம் நிலைக்கு தள்ளுவது. ”ஏகாதிபத்தியங்களின் ஊடுருவல் தலையீடுகள் பற்றி கதையாதீர்கள் (சிறிய உதாரணம் ஏழுயு), சுரண்டல்கள் குறித்து கதையாதீர்கள், வாழ்க்கை செலவுப் புள்ளி குறித்து கதையாதீர்கள், எந்த பிரச்சினையானாலும் யுத்தத்துக்கு முன் இரண்டாம் பட்சமே. யுத்தம் செய்ய விடுங்கள். வெல்லும் வரை பொறுங்கள்.” என்பதே அரசின் நிலை.

யோசனையை எதிர்க்கும் அணிகள்

தீர்வு யோசனையை எதிர்க்கும் கூட்டில் பல அணிகளைச் சார்ந்தவர்கள் உள்ளனர். அதனைப் பிரதானமாக நான்காகப் பிரிக்கலாம். நான்கு தளங்களிலிருந்து இதனை இவர்கள் எதிர்க்கிறார்கள்.

சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் சிங்கள பௌத்த நாட்டில் கொடுப் பதை வாங்கிக்கொண்டு கம்முண்ணு இருக்க வேண்டியவர்கள் ஏனைய இனத்தவர்கள். அதை மீறி உரிமை கேட்போரை-போராடுவோரை அழிப்பதைத் தவிர வேறுவழியில்லை என்பதே இவர்களின் நிலைப்பாடு. இந்த அடிப்படையிலேயே தீர்வுத் திட்டத்தை எதிர்ப்பவர்கள்.

தீவிர இடதுசாரிகள் பாட்டாளிகளை இனரிதியிலும் புவியி­யல் ரிதியிலும் கூறுபோடும் அரசினதும் தமிழ் இனவாதிகளதும் முயற்சிகளை முறியடிக்கவேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுபவர்கள். இவர்கள் தீர்வுத்திட்டத்தை எதிர்ப்பதற்கான அடிப்படை இதுவே.

தமிழ் தரப்பு:- தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்க்கக் கூடிய ஒரு குறைந்தபட்சத் தீர்வாகக் கூட இது இல்லை. (பார்க்க பெட்டி செய்தி)
எதிர்க்கட்சி: இது ஒற்றையாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் யோசனை.

ஆதரிக்கும் சக்திகள்

ஆதரிக்கும் சக்திகளாக, (ஸ்ரீமணி தலைமையிலான ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி தவிர்ந்த) அரசுடன் இணைந்து செயல்படும் கட்சிகள், மரபு இடதுசாரிக் கட்சிகள், புத்திஜீவிகள், அரசு சார்பற்ற நிறுவனங்கள் (NGO) என்போர் காணப்படுகின்றனர். இந்த அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தற்போதைய தீர்வு யோசனையை பிரச்சாரப்படுத்துவதற்காகவே பல நாடுகள் நிதியுதவி வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. பல லட்சங்கள் செலவளித்து இதனை இவர்கள் செய்து வருகிறார்கள். இந்த பலவீனமான தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதற்கு இவையும் துணைபோகின்றன. இந் நிறுவனங்கள் பல இதில் உள்ள குறைபாடுகளை தட்டிக் கேட்பதோ அல்லது அதனை திருத்துவதற்காக அரசை நிர்ப்பந்திப்பதோ கிடையாது. மாறாகத் தீர்வு யோசனையை விமர்சிப்பவர்களை, தீர்வு முயற்சியையே எதிர்ப்பவர்களாகக் காட்டுவதில் தான் முனைப்பாக உள்ளன. தீர்வுக்கான முயற்சிகளை தமிழ் தரப்பு ஒருபோதும் எதிர்த்ததாகத் தெரியவில்லை. அதற்காக தீர்வுத்திட்டம் ”போதுமானதாக இல்லாதபோது அதை ஏற்க முடியாது என்று கூறவுமா முடியாது?

வீணாக அடம் பிடிக்காதீர்கள்! அழியாதீர்கள்!

தீர்வு யோசனைக்கு ஏன் தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் தரப்பில் சொல்லப்படும் நியாயங்கள் இவைதான்.

-முதற் தடவையாக நேர்மையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

-ஒரு அரசாங்கம் இத்தனை தூரம் இறங்கி வந்ததே அதிசயம். அதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வதை விட்டு பிடிவாதம் பிடிக்கக் கூடாது.

-முன்னைய மாகாண சபையை விட இது மேலானது.

-நேர்மையாக பேச்சுவார்த்தையை நடாத்தி தோல்வி கண்டிருக்கிறது அரசு.

-பேரினவாத சக்திகள், எதிர்க்கட்சி என்பவை எதிர்க்கின்ற போதிலும் தைரியமாக முன்வைக்கப்பட்ட இதை நாம் ஊக்குவிக்க வேண்டும். வெற்றியடையச் செய்ய வேண்டும்.

இவற்றின் மூலம் மொத்தத்தில் கூறப்படுவது இது தான். இனியும் வீணாக அழியாதீர்கள். இழக்காதீர்கள்! விட்டுக்கொடுங்­கள்!! கைவிடுங்கள்!!! சரணடையுங்கள்!!!! (இவர்களில் பெரும்பாலானோர் இனப்பிரச் சினையை வெறும் மனிதாபிமான பிரச்சினையாக நோக்குபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) டொக்டர் கொன்ஸ்ரன்ரைன் ஒரு கூட்டத்தில் இவ்வாறு பேசியிருந்தார்.

“”கடந்த ஐ.தே.க. காலத்தில் யாரை நான் புத்திஜீவிகள் என நம்பியிருந் தேனோ, அவர்கள் அனைவருமே ஐ.தே.க எதிர்ப்பா­ளர்களாகவும், பொ.ஐ.மு ஆதரவாளர்களாகவும் இருந்ததாலேயே அப்படி தெரிந்தார்களென்பது பின்னர் தான் எனக்குத் தெரிந்தது.””

உண்மை நிலையும் அது தான். இந்தச் சக்திகள் அவ்வளவு துச்சமான சக்திகளல்ல. சர்வதேச அளவில் இவர்களது குரலுக்கு இடமுண்டு. பொ.ஐ.மு வை பதவிக்கு கொண்டு வருவதிலும் முக்கிய பாத்திரமாற்றியவர்கள் இவர்கள். அது தவிர அரசாங்கத்தை முற்போக்கானதாக நம்பியவர்கள். நம்புபவர்கள்.

ஐ.தே.கவின் முடிவு உறுதியானதா?

சரி, இன்று தீர்வுத் திட்டம் தெரிவுக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டது என்று அரசினால் கூறப்படுகிறது. ஐ.தே.க ஆரம்பத்தில் “”தெரிவுக்குழுவிலுள்ள எமது அங்கீகாரத்தை பெறாமல் எப்படி தெரிவுக்குழுவின் அங்கீகாரம் கிடைத்து விட்டது என கூற முடியும்”” என கேட்டு சலசலப்பை ஏற்படுத்திய போதும் பின்னர் பிரித்தானியாவின் நெருக்குதலின் பின்னர் மெனமாகியது. என்றாலும் இத்தீர்வு யோசனையை தொடர்ந்தும் ஒற்றையாட்சிக்கு குந்தகமான ஒன்றாக கருதும் அதன் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. மேலும் ஐ.தே.கவுக்குள்ளேயே பலர் ஐ.தே.க.வின் சமரச முயற்சியை ஏற்கவில்லை என்பது பத்திரிகை அறிக்கைகளி லிருந்து தெரிய வருகிறது.

தாண்ட வேண்டிய தடைகள்!

இத்தனை குறைபாடுகளையுடைய தீர்வு யோசனையைக் கூட இன்னும் பேரினவாத சக்திகள் எதிர்க்கத்தான் செய்கிறன. இந்நிலையில் தீர்வு யோசனை அமுலுக்கு வருவதற்குள் அது கடக்கவிருக்கும் தடைகளை அறிந்தால் மேலும் பீதியே மிஞ்சும். அது கடக்க வேண்டிய தடைகள் இவை.

1. யோசனை முன்வைத்தல் (18 அத்தியாயங்கள் முன்வைக்கப்பட்டு விட்டது)

2. அதனை திருத்தங்களுக்குள்ளாக் கல் (முடிந்தது)

3. நகலாக முன்வைத்தல் (முடிந்தது)

4. எதிர்க்கட்சியின் சம்மதத்தைப் பெறல் (இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது)

5. தெரிவுக்குழுவின் அங்கீகாரத் தைப் பெறல் (பெற்று விட்டதாகக் கூறப்படுகிறது)

6. பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டுவரல்

7. மூன்றில் இரண்டு பெரும்பான் மையுடன் நிறைவேற்றுதல்

8. மக்கள் தீர்ப்புக்கு விடப்பட்டு, வெற்றி பெறல்.

இதில் கடக்க வேண்டிய முதலாவது தடையரணுக்கு முன் இப்போது வந்துள்ளது. பாராளுமன்றத் தில் ஐ.தே.க.வின் அங்கீகாரமில்லாமல் முன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காது. ஐ.தே.க. சம்மதிக்குமா?

அடுத்த தடையரண் மக்கள் தீர்ப்பு.”“மக்கள் தீர்ப்பு”” என்ற பேரில் மீண்டும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சிங்கள பெரும்பான்மை மக்களிடம் அனுமதி கேட்பது உணள்மையில் ஒரு கேலிக்கூத்தே அன்றி வேறல்ல.

தீர்வை அமுல்படுத்த முடியுமா?

சரி, அவற்றிலும் வெற்றியடைந்தது என வைத்துக் கொண்டாலும் தமிழ் கட்சிகளே ஏற்காத ஒன்றை (நியாயமற்ற தீர்வை) புலிகளும் ஏற்கப்போவதில்லை. அப்படியெனில் புலிகளைத் தோற்கடிக்க வேண்டும். அதற்காக யுத்தத்தை தொடர்ந்து நடாத்த வேண்டும். அப்படியென்றால் மீண்டும் அழிவு, இழப்பு என்பனவே தொடரும். அரசின் தரப்பிலோ புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் நிலத்தை மீட்காமல் அங்கு தீர்வை அமுல் படுத்தவே முடியாது. இவற்றுக்கெல்லாம் அப்பால் இது எப்போது சாத்தியம். தீர்வு யோசனையை முன்வைப்பதிலேயே அரசாங்கம் தனது ஆட்சியின் பாதி ஆயுட்காலத்தை இழந்துவிட்டது. இனித்தான் முக்கியமாக கடக்க வேண்டிய அரண்களே உள்ளன. இதற்குள் எத்தனை அரசாங்கங்கள் வந்து போகவேண்டிவருமோ...? அவற்றின் பண்புகள் எப்படி அமையுமோ...?

உண்மையில் ஸ்ரீ லங்கா அரசுக்கு ஒரு நிரந்தரத் தீர்வில் அக்கறை இருப்பின் நேர்மையான முறையில் எந்தச் சக்திகளுக்கும் சோரம் போகாத முறையில், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், வடக்கு கிழக்கு இணைந்த, அதனை தமிழ், முஸ்லிம் மக்களின் தாயகமாக அங்கீகரிக்கிற வகையில் செயல்படுவது அவசியமானது. அதற்கு முன்நிபந்தனையாக அது தன்னை அகவயமாக சிங்கள-பௌத்த பேரினவாத பண்பிலிருந்து மீட்டெ டுப்பது அவசியமாகும். அடுத்தது, அரசாலேயே வளர்த்துவிடப்பட்ட பேரினவாத கருத்தியலை அரசே பொறுப்புடன் புறவயமாக களைந்தெறி வதற்கான வேலையை செய்வது அவசியமாகும். இவற்றைச் செய்யாமல், சிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அனுமதி கேட்பது என்பது ஒரு வகை ஏமாற்றே. வளர்த்த கிடாய் மாரில் முட்டிய கதையாக அரசே வளர்த்துவிட்ட பேரினவாதமானது அரசின் சிறிய முயற்சியைக் கூட ஆதரிக்க அனுமதிக்காது என்பதை கவனத்தில் எடுத்து செயற்படுவது அவசியமாகும்.

(இதழ்-120-மே.97)

0 comments:

தளத்தின் உள்ளடக்கம்.

இந்தத் தளத்தில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உருவாக்கம், விரிவாக்கம், கருத்தாக்கம், அதன் வடிவம், அதன் நிறுவனமயமாக்கம், அதன் திசைவழி குறித்து சரிநகர், ஆதவன், நிகரி, விடிவு, பறை, இனி போன்ற பதிப்புகளில் வெளிவந்த என்.சரவணனின் கட்டுரைகள் மறுபிரதியிடப்படுகின்றன.

சுவடி

Template by - Abdul Munir - 2008 - layout4all