Sunday, February 01, 2009

கொழும்பு இனவாதபேரணி எதிர்ப்புப் பேரணி: இ.தொ.கா.வின் இன்னொரு காட்டிக்கொடுப்பு!

என்.சரவணன்

”பேரினவாதச் செயல்­பாடுகளை அரசுக்கும், இந்நாட்டு மக்களுக்கும் உணர்த்தி அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தே நமது போராட்டத்தை ஏற்பாடு செய்தோம். இவ்விடயங்கள் நிறைவேறும் அறிகுறிகளும், உறுதிமொ­ழிகளும் கடைத்துள்ளமையால் நாம் மெற்கொள்ளவிருந்த ஆர்ப்பாட்டமும் ஊர்வலமும், பொதுக்கூட்டமும் தற்போ­தைக்கு நடத்துவது உசிதமில்லை என கருதுகிறோம்.”

இப்படி பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டவர் இலங்கை தொழிலா­ளர் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன். யூன் 18ஆம் திகதியன்று கொழும்பில் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தாமல் நிறுத்திவிட்டு அதற்கு கூறிய காரணம் தான் இது. 17ஆம் திகதியன்று பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தையுடன் யோகராஜன் எம்பியும், ஏ.எம்.டி.ராஜனும் சென்று சமரரசம் செய்துவிட்டு வந்ததும் விடுத்த அறிக்கை தான் இது.

இப்படி ஒரு ஆர்ப்பாட்டத்தையும், ஊர்வலத்தையும் எதிர்பார்த்து காத்திருந்­தோர் பலர். பெருமளவான தமிழ்ர்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், முற்போக்கு சக்திகள் என தன்னிச்சையாகவே இதற்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள் என்பது தான் உண்மை. ஆனால் வழமையாக மலையகத்தில் தொழிலாளர்கள் நடத்தும் தொழிற்சங்கப் போராட்டங்களின் போது இ.தொ.கா. செய்து வந்த அதே காட்டிக்­கொடுப்பை இங்கும் செய்து காட்டியது இ.தொ.கா.

கொழும்பில் இந்த பிசுபிசுத்துப்போன ஆர்ப்பாட்டத்தை பற்றி பொதுவாக ”எங்களுக்குத் தெரியும் இந்த கும்பல் இப்படிச் செய்யும் என” என்று ஆத்திரத்­துடன் புலம்பியதைக் காணக்கூடியதாக இருந்தது.

பொதுவாக தென்னிலங்கையில் தொண்டமானையும் இ.தொ.கா.வையும் பற்றி சிங்கள மக்கள் மத்தியில், சிங்கள மக்களின் உரிமைகளைப் பறிக்கும் சக்திகள் என நீண்ட காலமாக கருத்தூட்டப்பட்டு வந்திருக்கிறது. அதன் இன்றைய வளர்ச்சி புலிகளின் பேச்சாளர் என்றும், புலிகளின் ”God father” என்றும், சிங்கள மக்களை அழிக்க வந்தவர் என்றும் கூறுமளவுக்கு வந்திருக்கிறது.

மாறாக தொண்டமானோ குறைந்தது மலையக மக்களின் குறைந்தபட்ச நலன்களைக்கூட பெற்றுக்கொடுக்காதவர் என்பதும், சிங்கள அரசாங்கங்களுடன் தனது நலனுக்காக மலையக மக்களின் உரிமைகளை விலை பேசுபவர் என்பதும் யாவரும் அறிந்த உண்மை.

இதற்கு முன்னரும் தேசிய விடுதலை முன்னணி எனும் பேரில் 50களில் இயங்கிய ராஜரட்னா எம்.பி. தலைமையிலான கட்சி, சிங்கள பாஷா பெரமுன, சிங்கள பாதுகாப்புச் சபை, அதன் பின்னர் ஹெல உறுமய, ஜாதிக்க சிந்தனய, மத்ரு பூமி பக்ஷய, சிங்களயே மஹா சம்மத்த பூமி புத்திர பக்ஷய... என இன்னும் பல அமைப்புகள் இதே பாணியில் இயங்கி வந்திருக்கின்றன, வருகின்றன.

ஆனால் இப்போது வந்திருக்கின்ற சிங்கள வீரவிதான இயக்கம் முன்னைய இயக்கங்கள் போன்றது அல்ல. முன்னைய இயக்கங்களுக்கு வெறும் அரசியல் பின்னணி இருந்தது. அல்லது பொருளாதார பின்னணி இருந்தது. அவற்றின் நோக்கங்களாகக் கூட பெரும்பாலும் குறுகிய அரசியல் நோக்கங்கள் மட்டும் தான் இருந்தன. ஆனால் சிங்கள வீரவிதானவுக்கு இன்று நன்கு வார்த்தெடுக்கப்பட்ட பேரினவாத கருத்தாக்கம் இருக்கிறது. அந்த கருத்தாக்கத்தை வலிமைப்படுத்தி கோட்பாட்டக்கம் செய்யும் முக்கிய பணியில் தொடர்ந்து அவ்வியக்கம் வேலை செய்து வருகிறது. சிங்கள பௌத்த வர்த்தகர்கள் பலர் அதன் அமைப்பா­ளர்களாக உள்ளனர். முன்னை நாள் மற்றும் தற்போது களத்தில் இருக்கும் இராணுவ அதிகாரிகள் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். நாடு முழுவதும் பல கிளைகள் அமைத்தாகிவிட்டது. சிறு சிறு பகுதிக­ளுக்கும் சென்று கிளைகளை அமைத்து வருகிறார்கள். துணை அமைப்புகளாக பெண்கள், அமைப்புகள் பிக்குகள் அமைப்புகள், வர்த்தக அமைப்புகள் மாத்திரம் 84 இருப்பதாக கடந்த ஏப்ரல் மாத அறிக்கை ஒன்றிலிருந்து தெரிய வருகிறது.

அப்படிப்பட்ட ஒரு முக்கிய உப அமைப்பாகத்தான் பயங்கரவாத ஒழிப்பியக்கமும் காணப்படுகிறது. இது மருதானை குண்டு வெடிப்போடு சேர்த்து ஆரம்பிக்கப்பட்டது. இதனை சிங்கள வீரவிதான அமைப்பின் உத்தியோகபூர்வ கிளை அமைப்பு என பகிரங்கமாக கூறாவிட்டாலும், அதன் அமைப்பாளர்கள், அதன் செயற்பாட்டுக்கான திட்டங்கள் என அனைத்து விடயத்தையும் சிங்கள வீரவிதானவே தீர்மானிக்கிறது என்பதை அது வெளியிட்டுவரும் ”ஹெல ருவண” எனும் பத்திரிகையின் வாயிலாக அறிய முடியும். இது தவிர சர்வதேச கிளைகளும் அமைத்தாகிவிட்டது. அவற்றின் பங்களிப்பு, மற்றும் செயல்பாடுகள் குறித்தும் அப்பத்திரிகையில் தெரிந்துகொள்ளலாம்.

கடந்த இரு மாதங்களாக சிங்கள வீரவிதான இயக்கத்தின் உத்தியோகபூர்வ வெப் தளமும் நிறுவப்பட்டுள்ளது. அதன் விலாசம் www.svv.com என்பதாகும்..

இன்று இலங்கையில் எந்த இயக்கத்தின் செயற்துடிப்பையும் விஞ்சிவிடுமளவுக்கு இதன் செயல் வேகம் காணப்படுகிறது என்றால் அது மிகையில்லை. ஒவ்வொரு நாளும் அவர்களின் பணிகள் நடந்து கொண்டிருப்பதை சிங்கள தொடர்பூட­கங்களை அவதானிக்கும் எவரும் அறிய முடியும். ஏற்கெனவே சிங்களவர்களை நிறுவனப்படுத்திக்கொண்டிருப்பது விகாரைகள். இந்த விகாரைகளை மகாசங்கத்தினர் மையப்படுத்தியுள்ளனர். நன்றாக வலைப்பினலாக நிறுவனப்படுத்­தப்பட்டிருக்கிற இந்த கட்டமைப்பு அப்ப­டியே இன்று வீரவிதான கட்டுப்படுத்துகிற ஒன்றாக மாறியிருப்பது வீரவிதானவுக்­குள்ள முக்கிய பலமெனலாம்.

கடந்த மே 1ஆம் திகதி நுவரெலியா­வில் இ.தொ.கா. மே தினம் நடத்தியபோது அதனை சிங்கள வீரவிதான இயக்கத்தினர் வந்து குழப்பினர். இதற்கு முன்னரும் மலையகத்தில் நடத்தப்பட்ட வேலை நிறுத்­தப்போராட்டங்களின் போது கடையடைப்­புகளை செய்ய விடாது மிரட்டியும், தாக்குதல் நடத்தியும் இருந்தனர்.

மேதின சம்பவம் முடிந்ததன் பின்னர் அது பற்றி சகல தொடர்பு சாதனங்களிலும் விவாதங்களும், பிரச்சாரங்களும், நடத்துகொண்டிருக்க இன்னொருபுறம் வீர விதான இயக்கத்தினர் 20ஆம் திகதியன்று கொழும்வில் தமிழர்களுக்கு எதிராக இனவாதத்தைக் கக்குகின்ற சுலோகங்களைத் தாங்கிய வண்ணம் ஊர்வலம் நடத்தி விகாரமகாதேவி வெளியரங்கில் ஒரு மாபெரும் கூட்டமொன்றையும் நடத்தி­யிருந்தனர். இதில் பல முக்கிய இனவாதிகள் கலந்துகொண்டிருந்தனர். மடிகே பஞ்ஞா­னசீல தோரோவும் கலந்து கொண்டிருந்தார். பிரபலமான பாடகர்கள் இதில் சிங்களப் பெருமிதம் பேசும் பாடல்களைப் பாடினர். இறந்த படையினரின் குடும்பங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர். தங்களின் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் ஒரு லட்சம் படையினரை ஒரே மாதத்தில் படைக்கு சேர்த்துத் தருவதாக பயங்கரவாத தேசிய இயக்கத்தின் தலைவர் சம்பிக்க ரணவக்கவால் பகிரங்கமாக தெரிவிக்­கப்பட்டது. தமிழ் விஸ்தரிப்புவாதத்தை முறியடிக்க வேண்டும் என்றும் கொழும்பில் இருக்கும் தமிழர்கள் எல்லோரும் சிங்களவர்களை அனுசரித்து நடக்கா­விட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பன போன்ற வசனங்கள் பாவிக்கப்பட்டன. இதனை சுலோகங்களாகவும் எழுதியிருந்தனர்.

இந்த நிகழ்ச்சிகள் பற்றி சிங்களப் பத்திரிகைகள் முக்கிய இடம் கொடுத்­திருந்தன. டீ.என்.எல் சேவை இரண்டு மணி நேரம் அண்மையில் இந்த நிகழ்ச்சியை விளம்பரமின்றி ஒலி’ஒளிபரப்பியது.

இந்த நிலையில் தான் கடந்த தினம் பெரும் ஊர்வலம் மொன்றை பிக்குமார், சிங்கள வீரவிதான உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு ஜனாதிபதியின் வாஸஸ்தலமான அலரிமாளிகைக்குச் சென்று அங்கு மகஜர் ஒன்றை கையளித்தனர். இலங்கையிலேயே மிகவும் அதி பாதுகாப்பு வலையம் என்று கூறப்படும் இந்தப் பகுதிக்கு எதுவித பொலிஸ் அனுமதியுமின்றி இவர்களால் ஊர்வலம் செல்ல முடிந்ததை இங்கு குறிப்­பிட வேண்டும். அப்படி எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை பின்னர் பொலிஸ் மா அதிபரும் ஒப்புக்கொண்டிருந்தார்.

இந்த ஊர்வலம் முடிந்து திரும்பி சென்று கொண்டிருந்த வழியில் தான் இ.தொ.கா.வின் தலைமைச் செயலகமான சௌமியபவான் அருகில் நின்று அங்கு ஏற்றப்பட்டிருந்த இ.தொ.கா. கொடியை கீழிறக்கி அதனை சின்னாபின்னப்­படுத்திவிட்டு, வீரவிதான கொடியையும், தேசிய கொடியையும் ஏற்றினர். அவ்வலுகத்தின் வாசலில் இருந்துகொண்டு ஆர்ப்பாட்டமும் செய்து விட்டுச் சென்றனர்.

இந்தச் சம்பவம் உண்மையில் இ.தொ.கா.வின் கச்சையையும் உருவியதற்குச் சமமான சம்பவம் என்று தான் கூறவேண்டும். மே தின சம்பவத்தின் பின்பும் கூட வீரவிதானவின் பின்னணியில் அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர் இருக்கிறார் என்று கூறிய தொண்டமான் யார் அவர் என்பதை வெளியுலகுக்கு வெளிப்படுத்தவில்லை. அந்த அமைச்சரைப் பாதுகாத்தார். அதுபோல அவரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி பத்திரிகைகளுக்கு விலாசமாக அறிக்கை விடுத்துவிட்டு அதனை செய்யக்கோரி எந்தவித முயற்சியையும் செய்யவில்லை.

அது போலத் தான் சொந்த அலுவலுக தலைமையகத்திற்குள் புகுந்து இத்தனையும் செய்துவிட்டுப் போனபின்னரும் வெளியுலகுக்குத்தான் தமது வீரத்தைக் காட்ட வழமைபோல வாய்ச்சவாடல் விட்டர்களே தவிர, ஆக்கபூர்வமான எதனையும் செய்யவில்லை. இவர்களையும் நம்பி அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் குமார் பொன்னம்பலமும், நவசமசமாஜக்சட்சியினர், வாசுதேவ நாணயக்கார என சகலரும் இதற்கெதிராக ஒன்று கூடினர். சிங்கள வீரவிதானவின் பேரினவாதத்தை எதிர்த்து ஒரு மாபெரும் பேரணி ஒன்றை திட்டமிடுவது குறித்து உரையாட 8ஆம் திகதி சுகததாச ஹோட்டலில் வைத்து நடத்திய கூட்டத்தில் மேற்படி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் பெருமளவு வர்த்தகர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியில் 11ஆம் திகதி இந்த பேரணியை நடத்த திட்டமிட்டனர். குமார் ஒரு புறத்தில் தமிழர்கள் அனைவரையும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்தார். விக்கிரபாகு தலைமையிலான ந.ச.ச.க. இன்னுமொரு புறத்தில் துண்டுப்பி­ரசுரங்களை விநியோகித்து அழைத்தனர். வாசுதேவ நாணயக்கார பல தொண்டர் நிறுவனங்களை இந்த நடவடிக்கையில் பங்குகொள்ளச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக்கொணடிருந்தார். வர்த்தகர்கள் பலர் கடையடைப்பு செய்து தங்களின் எதிர்ப்புகளை காட்டப்போவதாக அறிவித்தனர். சாதாரண மக்கள் இதனைக் கண்டு தைரியமாயினர் என்றால் மிகையில்லை.

இப்படி எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் பார்த்து பொலிஸ் மா அதிபர் இ.தொ.கா.­வினரை அழைத்து, தென் மாகாண சபைத் தேர்தல் கடமைகளுக்காக பொலிஸார் பலர் அனுப்பப்பட்டுள்ளதால் இதனை கைவிடுமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர். இந்தத் தடையை அப்படியே ஏற்றுக்­கொண்டு வந்துவிட்டனர். குறைந்தபட்சம் இவர்களோடு இணைந்து போராடத் தயாரான அமைப்புகள், கட்சிகளைக் கூட கலந்தாலோசிக்கவில்லை. அது மட்டுமன்றி அவர்களுக்கு இந்த தகவல் கூட அறிவிக்­கப்படவில்லை. அவர்களுக்கு வெளியார் கூறித் தான் தகவல் தெரிந்திருந்தது.

இ.தொ.கா.வுக்கு இப்படி ஒரு சந்தர்ப்பத்தை தான் நினைத்திருந்தாலும் உருவாக்கியிருக்க முடியாது. அப்படியொரு சூழ்நிலை தற்செயலாக உருவாகியிருந்தது. அதனை பயன்படுத்த இ.தொ.கா. தயாராக இருக்கவில்லை.

சிங்கள வீரவிதானவின் ஊர்வலம், கூட்டம் என்பன எந்த அனுமதியும் பெறாமல் நடத்தி முடித்திருந்தது. அதற்குப் பின்னரும் கூட அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பாதுகாப்பு தரப்பினர், இ.தொ.கா.வின் ஊர்வலத்தை தடை செய்தமை பற்றி அரசை கண்டிக்­கவில்லை. அரசின் பேரினவாத சார்பை அம்பலப்படுத்தவில்லை. மாறாக எந்த அவசரகால சட்டத்தைக் காட்டி தங்களின் ஊர்வலம் தடை செய்யப்பட்டதோ அதே அவசரகால சட்டத்துக்கு 15ஆம் திகதியன்று ஆதரவாக வாக்களித்துவிட்டுவந்தனர். தொண்டாவும், சிஷ்யகோடிகளும். காலாகாலமாகச் செய்து வரும் இந்தத் துரோகத்தின் மத்தியில் பின்னர் வந்த எதிர்ப்புணர்வுகளைக் கண்டு, அனுமதி கிடைக்கிறதோ இல்லையோ 18ஆம் திகதியன்று கூட்டம் நடத்தியே தீருவது என அறிவிக்கப்பட்டது.

ஆனால் 17ஆம் திகதியன்று பிரதிபாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை யோகராஜன் எம்பியை அழைத்துப் பேசியதன் பின் அவரோடு சமரசம் செய்து வந்ததுமில்லாமல், ”நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் வாக்குறுதி அளித்திருப்பதால் கைவிடுகிறோம்” என அறிவித்தார். அனுருத்த ரத்வத்தை இது வரை மக்களுக்கு அளித்திருக்கும் எந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவர் தனது சொந்த மக்களுக்கு யுத்தக் காலக்கெடு பற்றியும் தான் பல வாக்குறுதிகளை வழங்கியிருகக்கிறார். முடிந்திருக்கிறதா அவரால்? பண்ண முடியாதவற்றை­யெல்லாம் வாக்குறுதிகளாக அறிவிப்பதில் கெட்டிக்காரர்களிடம் வாக்குறுதிக்காக நாடி நிற்பதும், அளித்த வாக்குறுதியை நம்பி வந்ததும், அதே வாக்குறுதியை மக்களையும் நம்பச் சொல்வதையும் விட முட்டாள் தனம் வேறென்ன உண்டு?
ஆனால் யோகராஜன் எம்.பி.க்கு உண்டு. இ.தொ.கா. ஊர்வலத்தை நடத்தி­யதோ இல்லையோ சிங்கள வீரவிதான அதனை எதிர்கொள்ளத் தயராகத் தான் இருந்தது. இ.தொ.கா. தயாரிப்புகளைச் செய்ததோ இல்லையோ வீரவிதான 17ம் திகதி அன்று ஒரு துண்டுப்பிரசுரத்தை பகிரங்கமாக வினியோகித்தது.

கொழும்பில் பொரல்லை, மருதானை, கிருளப்பனை, நுகேகொடை போன்ற இடங்களில் வினியோகித்திருந்தது. அதில் ”...கொழும்புவாழ் தமிழர்களுக்கு நாம் விடுக்கும் எச்சரிக்கை, கொழும்பிலிருந்து கொண்டு தென்பகுதி சிங்கள மக்களின் சுதந்திரத்தைப் பறிக்கின்ற முயற்சியில் ஈடுபட வேண்டாம். அப்படி முயற்சித்தால் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டி நேரிடும்....” என்றிருந்தது.

இந்த மிரட்டலையும் மீறி நான்காம் குறுக்குத் தெரு, மெயின் வீதி, போன்ற புறக்கோட்டைப் பகுதிகளில் உள்ள தமிழ்க்­கடைகள் பல 18ஆம் திகதி கடையடைப்பு செய்திருந்தன. அந்தளவுக்கு தயாரில்லாது இருந்த இ.தொ.க.வோ, தன்னெழுச்சியாக அன்று தயாராக இருந்தவர்களை ஏமாற்றிவிட்டிருந்ததுமல்லா­மல், அன்றைய தினம் கடையடைப்புகளுக்கு தாம் தான் காரணம் என சொந்தம் கொண்டாடுவதில் மட்டும் பின்நிற்கவில்லை!

இ.தொ.கா. அப்போதும், இப்போதும், எப்போதும் இப்படித்தான் நடந்து கொள்கிறது. இன்று இ.தொ.கா. மக்கள் மத்தியில் உள்ள கொஞ்ச நஞ்ச செல்வாக்கு வேறு மாற்று சக்தி இல்லாததன் காரணமாகவே ஒழிய அதன் பலத்தால் அல்ல. அதன் வெற்றியால் அல்ல. அதன் அஸ்தமனத்துக்கு சரியான மாற்று சக்தி இல்லாதது தான் இ.தொ.கா.வுக்கு வாய்ப்பாகப் போயிருக்கிறது என்பதை இ.தொ.கா உணரும் காலம் வந்துவிட்டது.

சிங்கள இனவாதத்தின் குறியீடாக இத்தனை காலம் அறியப்பட்ட நளின் டி சில்வாவே கூட கடந்த மே 16 ஞாயிறு திவய்ன பத்திரிகையில் எழுதிய தனது பத்தியில் சம்பிக்கவையும், சிங்கள வீரவிதான இயக்கத்தையும் பற்றி எச்சிரித்திருப்பதுடன், சிங்கள தேசியவாத இயக்கங்களில் பாசிசம் தலைத்தோங்கத் தொடங்யிருப்பதையும், இது வன்முறையை நோக்கியும், மோசமான இன அழிப்பை நோக்கியும் தான் கொண்டு செல்லும் என்றும் எழுதியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிங்கள பேரினவாதத் தரப்பிலேயே சிங்கள வீரவிதான இயக்கம் குறித்து இத்தனை விழிப்பாக இருக்கக் கோரும் எச்சரிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்க, அவற்றுடன் சமரசத்துக்குப் போகும் எமது தலைவர்களை என்ன செய்யலாம்?

0 comments:

தளத்தின் உள்ளடக்கம்.

இந்தத் தளத்தில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உருவாக்கம், விரிவாக்கம், கருத்தாக்கம், அதன் வடிவம், அதன் நிறுவனமயமாக்கம், அதன் திசைவழி குறித்து சரிநகர், ஆதவன், நிகரி, விடிவு, பறை, இனி போன்ற பதிப்புகளில் வெளிவந்த என்.சரவணனின் கட்டுரைகள் மறுபிரதியிடப்படுகின்றன.

சுவடி

Template by - Abdul Munir - 2008 - layout4all