என்.சரவணன்
”...சிங்கள மக்கள் இனவாதிகள் என்று கூறுகிறார்கள். இன்று சிங்கள மக்களுக்கென்று ஒரு சிங்களக் கட்சியாவது உண்டா, இருக்கின்ற கட்சிகளெல்லாம் தமிழர்களுக்குச் சார்பான கட்சிகள். ஆனால் சிங்கள மக்களை இனவாதக் கட்சிகள் எனக் கூறுகின்ற தமிழ்க் கட்சிகள் தமிழர்களுக்காகவே அமைத்துக் கொள்ளப்பட்ட கட்சிகள். தமிழீழம் கோரும் கட்சிகள். தமிழீழம் என்கின்ற சொல்லைத் தமது கட்சிப் பெயரில் கொண்டுள்ள கட்சிகள். இப்படிப்பட்ட நிலையில் தான் நாங்கள் சிங்கள பௌத்தர்களின் எதிர் காலத்தைப் பற்றி தீவிரமாகச் சிந்திக்க வேண்டியிருக்கிறது...”
இவ்வாறு கடந்த ஜனவரி 14ஆம் திகதியன்று கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் பயங்கரவாத ஒழிப்பியக்கத்தின் தலைவர் சம்பிக்க ரணவக்க உரையாற்றியிருந்தார்.
பயங்கரவாத எதிh;ப்பியக்கத்தினால் (National Movement Against Terrorism) அமைக்கப்பட்டுள்ள ”பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தேசிய செயற்திட்டம்” (National Plan of Action Against Terrorism) எனும் பிரகடனத்தை பகிரங்கமாக சிங்கள மக்களின் முன்வைப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலேயே அவர் அவ்வாறு உரையாற்றியிருந்தார்.
வெற்றிகரமான கூட்டம்!
இக்கூட்டத்திற்கான பிரச்சாரங்கள் பாரிய அளவில் செய்யப்பட்டிருந்தன. திவய்ன, The Island போன்ற பத்திரிகைளிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன. அது தவிர சட்டன, சிங்கள பௌத்தயா, ஹெல ருவண, சிங்க ஹண்ட போன்ற பேரினவாதப் பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தன. ஒரு வாரத்துக்கு முன்னிருந்தே கொழும்பிலும் அதற்கு வெளியிலும் பெருமளவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அச்சு செய்யப்பட்ட 1.5 ஒ 2 அடி அளவிலான போஸ்டர்களும் கையால் வரையப்பட்ட 4 ஒ 2 அடி அளவிலான போஸ்டர்களும் அருகருகே பெருமளவில் ஒட்டப்பட்டிருந்தன. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இப் போஸ்டர்கள் திருப்பித் திருப்பி ஒட்டப்பட்டன. கூட்டம் நடந்த அன்று மண்டபத்துக்கு அருகிலும், வெளிப் பாதைகளிலும் ”தாய் நாடு உன்னை அழைக்கிறது” என்று அறைகூவும் பெரிய கட்டவுட்களும் காணப்பட்டன. மண்டபத்துக்கு வெளியில் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் வெளியிடப்பட்டுள்ள ”பயங்கரவாத ஒழிப்பு தேசியத் திட்டம்” என்ற பிரசுரமும் சிங்கள இனவாதப் பத்திரிகைகள் சிலவும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்டிய சிங்கள சாரி அணிந்த கையில் மொபைல் தொலைபேசிகளுடன் நின்று கொண்டிருந்த உயர் மத்திய தர வர்க்கப் பெண்கள் கூட துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பு, நூல், பத்திரிகைகள் விற்பனை என வீதிக்கு இறங்கி செயற்பட்டனர். வர்க்கம், பால், சாதி போன்ற நிலைகளைக் கடந்து -பேரினவாத- இனத்துவ நடவடிக்கைகளின் செயற்பாட்டாளர்களாக இவர்கள் இருப்பதை இவை காட்டின.
பொலிஸ் பந்தோபஸ்தும் கொடுக்கப்பட்டிருந்தது. கூட்டத்துக்கு பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் ஏனையோர் மண்டபத்துக்கு வெளியில் உரையை மாத்திரம் கேட்டுக் கொண்டிருந்தனர். கலந்து கொண்டிருந்த சிலரது வாகனங்கள் மண்டபத்துக்கு வெளியில் இருந்தன. அவற்றில் இராணுவ அதிகாரி ஒருவரது காரும் ஒன்று. சீருடை தரித்த அவரது சாரதி அக்காருடன் காத்திருந்தார். இவ் அமைப்புடன் முக்கிய படையதிகாரிகள் சிலர் செயற்பாட்டாளர்களாக இருப்பதாக எமக்கு ஏற்கெனவே தகவல் தெரிந்திருந்ததால் அது எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தாவிட்டாலும் வந்திருப்பவர் யார் என்பதை அறிய கிடைக்கவில்லை. சென்ற வருடம் புலிகள் இயக்கத்தைத் தடை செய்யக் கோரி விகாரமகாதேவி பூங்காவிலிருந்து பிரித்தானிய தூதுவராலயத்துக்கு ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் செய்து தூதரகத்துக்கு மகஜர் சமர்ப்பித்த போது அதில் பிரிகேடியர் ஜானக்க பெரேராவும் சிவில் உடையில் கலந்து கொண்டிருந்தார். இவர்களின் இன்னுமொரு செயற்பாட்டாளராக பிரிகேடியர் லக்கி அல்கமவும் இருக்கிறார் என்பதை இவர்களின் செயற்பாடுகளை அவதானித்து வருபவர்கள் அறிவர்.
பயங்கரவாத ஒழிப்பியக்கம்
பின்னணி
இவ்வியக்கம் கடந்த 1998 மார்ச் 05ஆம் திகதியன்று மருதானையில் வெடித்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். சென்ற வருடம் இலங்கையின் 50வது ஆண்டு சுதந்திரப் பொன்விழா கண்டியில் நடத்த திட்டமிருந்த போது கண்டி தலதா மாளிகையருகில் குண்டு வெடித்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், வன்முறைச் சம்வங்களுக்குப் பின்னால் இருந்த அமைப்புகள் முறைப்படியான வேலைத்திட்டத்துடன் நிறுவனமயப்பட்டு இருக்கவில்லை. ஆனால் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு விட்ட சிங்கள வீர விதான அமைப்பின் பல்வேறு துணை நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வந்தன. ஆனால் அத்துணை நிறுவனங்களில் சிலவற்றைத் தான் சிங்கள வீர விதான இயக்கம் தனது துணை நிறுவனமென்று உரிமை பாராட்டியிருந்தது. சிலவற்றை உரிமை பாராட்டவில்லை. அப்படி உரிமை பாராட்டமல் அமைக்கப்பட்டது தான் ப.ஒ.இ. என்கிற அமைப்பு.
மருதானைக் குண்டு வெடிப்போடு பெரிய ஆர்ப்பாட்டம், ஊர்வலம், துண்டுப் பிரசுர விநியோகம், மகஜர், கையெழுத்து வேட்டை, பொதுக் கூட்டங்கள் என ஆரவாரமாக ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்புக்கு சிங்கள வீரவிதான அமைப்பின் இரகசியத் தலைவர் எனக் கருதப்படும் சம்பிக்க ரணவக்கவே பகிரங்கத் தலைவராகச் செயற்படுகிறார்.
நவ பேரினவாதத்துக்கு தலைமை கொடுக்கும் சம்பிக்க
சம்பிக்க ரணவக்க முன்னர் ஜாதிக்க சிந்தனய அமைப்பினை வழி நடத்தியவர். அப்போது நளின் டி சில்வா, குணதாச அமரசேக்கர, எஸ்.எல்.குணசேகர, மாதுலுவாவே சோபித்த தேரோ போன்றவர்கள் தனித்தனியான அணிகளாக இருந்தனர். இவர்களில் சம்பிக்க ரணவக்க அதற்கு முன்னர் ஜே.வி.பி. பின்னணியைக் கொண்டிருந்தார். சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு அரசியல் பொருளாதார வடிவம் கொடுத்து ”ஜாதிக்க சிந்தனய” எனும் பேரில் கோட்பாடாக உருவாக்கிக் கொடுத்தார் அவர். அப்போதெல்லாம் தனித்தனி அணிகளாக இருந்தாலும் பேரினவாதப் நோக்கில் ஒருமித்த கருத்திருந்ததால் பல்வேறு செயற்பாடுகளை இவர்கள் சேர்ந்து செய்தனர். ஆனாலும் சம்பிக்கவின் சளைக்காத உழைப்புக்கு முன்னால் ஏனையோர் தாக்குப் பிடிக்கவில்லை. எனவே தான் சிங்கள பௌத்த பேரினவாதத்தை நிறுவனப்படுத்தும் வேலையில் சம்பிக்கவால் வெற்றி காண முடிந்தது. ஏனையோர் தனிமைப்பட வேண்டியேற்பட்டது.
சிங்கள வீரவிதான அமைப்பு இன்று பல்வேறு சிங்கள பௌத்த அமைப்புகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்துள்ள நிறுவனம். அதன் ஒரு பணியாகவே 1996 டிசம்பர் 18 அன்று சிங்கள ஆணைக்குழுவும் அமைக்கப்பட்டு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான வேலைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இச் சிங்கள ஆணைக்குழுவை வீரவிதான அமைப்பு நேரடியாக நடத்தவில்லை. மாறாக 42 சிங்கள பௌத்த அமைப்புகளை அணி திரட்டி தேசிய ஒருங்கிணைப்புக் கமிட்டி எனும் அமைப்பைத் தொடங்கி அதன் தலைமையிலேயே சிங்கள ஆணைக்குழு செயற்பட்டது.
நிறுவனமயப்படும் பேரினவாதம்
சிங்கள வீரவிதான அமைப்பு இன்று நாடளாவிய ரிதியில் மூலை முடுக்குகளாக கிளைகளை அமைத்து தீவிரமாகச் செயற்பட்டு வரும் அமைப்பு. இன்று ஜே.வி.பி.க்கு அடுத்ததாக மிகவும் திட்டமிட்ட முறையில் அமைப்பை நாடு முழுவதும் மூலை முடுக்குகளெங்கும் தொடக்கி, பரப்பி, பலப்படுத்தி வரும் அமைப்பு வீர விதான அமைப்பு தான். அதன் ஒரு கிளையாக அமைக்கப்பட்டுள்ள இந்த ப.ஒ.இ.வ கடந்த ஒன்பது மாதங்களுக்குள் 12 முக்கிய பெரிய செயற்பாடுகளைச் செய்துவிட்டிருப்பதாக அறிவித்துள்ளது.
ஏற்கெனவே சரிநிகரில் சிங்கள பௌத்த போpனவாதம் நிறுவனமயப்பட்டு பலப்படுத்தப்பட்டு வருவதை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தோம். அந்த நிலைமை இன்று மேலும் உறுதியாகியுள்ளது. பேரினவாதம் நிறுவனமயப்பட்டு வருகிற ஆபத்தை உணராத வரை தமிழ், முஸ்லிம் மக்கள் தங்களுக்கு நேரவிருக்கின்ற எதிர்கால ஆபத்தை தடுத்து நிறுத்த முடியாது.
இன்று பேரினவாதம் நிறுவனமயப்பட்டுள்ள அளவு அதில் சிக்கியுள்ள ஒடுக்கப்படும் மக்கள் ஜனநாயக ரிதியில் நிறுவனமயப்படாதிருப்பது எதிர்காலம் குறித்த பீதியை மேலும் அதிகப்படுத்துகிறது என்றே கூறலாம்.
இன்று வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத தேசியத் திட்டம் வெறுமனே புலிகளுக்கு எதிரானது என்று கருதினால் அது தவறு. அது ஒட்டு மொத்தத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் சனநாயக கோரிக்கைகளுக்கும் அவர்களின் நிம்மதியான வாழ்வுக்கும் எதிரானது. இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை சாராம்சமாக அன்றைய பிரதம பேச்சாளர் சம்பிக்க உரையாற்றும் போது கூடியிருந்தவர்கள் மிகவும் ஆழமாக அவதானித்தனர். அவ்வுரையைக் கேட்டுக் கொண்டிருந்த சில சிங்கள நண்பர்கள் அவ்வுரையைக் கேட்கும் எந்தச் சாதாரண சிங்களவரும் மூளைச் சலவைக்குள்ளாகிவிடுவர் என்றார். அவரின் உரைக்கு இடையில் அவ்வப்போது கூடியிருந்தவர்கள் மத்தியில் இருந்து வந்த கரகோசம் எத்தனையோ விடயங்களை வெளிப்படுத்தியது.
இக் கூட்டத்தில் உரையாற்றிய சம்பிக்க...
”...புலிகள் அமைப்பு பீரங்கிகள், மிசையில், விமானம் போன்றவற்றை வாங்குவது எம்மோடு விளையாடுவதற்கல்ல. அவர்கள் இன்று ஏவுகணைகளைத் தயாரிக்கவும் முயற்சி செய்கின்றனர். இந்நிலைமையில் புலிகளை மேலும் விளையாடுவதற்கு இடமளிக்க முடியாது. நாங்கள் அடிபணியவும் மாட்டோம். எனவே அரசியல்வாதிகள் ஆடிய ஆட்டம் போதும். அந்த ஆட்டங்களுக்குப் பதில் கொடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது. மக்களை அதற்காக நிறுவனமாக அணிதிரளும்படி கூறுகின்ற திட்டமே இதில் உள்ளது...”
திட்டம் என்ன?
ஆடுத்தது இராணுவ வடிவம்
அத்திட்டம் பிரதானமாக ஐந்து விடயங்களை உள்ளடக்கியது. (அருகிலுள்ள 9ஆம் பக்கத்தைப் பார்க்க)
அதன் சாராம்சம் என்னவென்றால் ”சிங்கள மக்களை தமிழீழ போராட்டத்துக்கு எதிராக கோட்பாட்டு ரீதியில், அரசியல் ரீதியில் ஆயுத ரீதியில் தயார்படுத்துவது. போரின் மூலம் முற்றாக துடைத்தெறிவது. இதற்கு சிங்கள மக்களை பலப்படுத்துவது. சிங்களப் படையைப் பலப்படுத்துவது. தமிழ் மக்களை தமது கோரிக்கைகளிலிருந்து வாபஸ் பெறவைப்பது. தமிழ் ஈழப் போராட்டத்தில் பங்குகொள்ளும் எவரும் பிடிபட்டால் அத்தண்டனையை அவரது குடும்பத்தவர்களுக்கும் கிடைக்கச் செய்வது...” போன்றவற்றை உள்ளடக்கியதே இத்திட்டம்.
பேரினவாதம் இது வரைகாலமில்லாத அளவு நவ வடிவம் பெற்று வளர்வதற்கு இது ஆலோசனைகளைக் கூறுவதை இதைப் பார்ப்பவர்கள் அவதானிக்க முடியும்.
இதற்கு முன்னர் அதற்கு ஒரு உறுதியான கோட்பாட்டு வடிவம் இருக்கவில்லை. இதற்கு முன்னர் சாpயான நிறுவன வடிவம் இருக்கவில்லை. உறுதியான அரசியல் வடிவம் இருக்கவில்லை. இன்று அத்தனையையும் அது பெற்று வருவதையும் அவை பலப்படுத்தப்படுவதையும் காண முடிகிறது. இனி பேரினவாதம் பெறவேண்டிய வடிவம் இராணுவ வடிவம் தான். அதற்குரிய காலம் தொலைவிலில்லை என்றே தெரிகிறது.
இது வரை காலம் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலைமை கொடுத்த அரச கட்டமைப்பு இன்று சிங்கள சிவில் மக்கள் மத்தியிலும் ஊடுருவி பலமடைந்து வருகிறது. இதன் விளைவு எதிர்காலத்தில் மோசமாக இருக்கப்போகிறது என்பதைத் தான் அண்மைய போக்குகள் காட்டுகின்றன.
நவீன வியூகம்
இன்று சிங்கள சிவில் மக்கள் மத்தியில் தோன்றி, பலம் பெற்று வருகின்ற போpனவாத அமைப்புகளை நோக்குகின்ற போது அரசுக்கு வேலை மிச்சம். தமிழ் மக்களுக்கு எதிரான ஐதீகத்தை சிங்கள மக்கள் மத்தியில் வளர்த்தல், தமிழ் மக்களை ஒடுக்குதல், அதனை மூடிமறைத்தல், அதனை எதிர்த்து ஒலிக்கும் குரல்களை அடக்குதல். அக்குரல்கள் நீதியற்றவை என்று சர்வதேச பிரச்சாரம் செய்தல் என அரசு செய்து வந்த அனைத்து செயற்பாடுகளையும் இன்று சிவில் அமைப்புகள் செய்கின்றன.
அரசுக்கு வேலை மிச்சம் அரசு போpனவாத குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பலாம். படையினரின் உள நிலையை வளர்த்தெடுக்க இனி அரசு அதிகம் சிரமம் படத்தேவையில்லை. அதனை சிங்கள சிவில் சமூகம் தானே பொறுப்பேற்று நடத்தும். தமிழ் மக்களை கண்காணிக்க, சந்தேகிக்க உளவுத்துறை தேவையில்லை. அதனையும் சிவில் சமூகம் செய்யும். சர்வதேச பிரச்சாரத்தைக் கூட அரசு செய்யத் தேவையில்லை இவ்வமைப்புகளின் கிளைகள் அவற்றை செய்யும் அத்துடன் இன்று கணணியில் இன்டர்நெட் வெப் தளங்களை பல சிங்கள பேரினவாத அமைப்புகள் வைத்துள்ளன அவற்றுக்கூடாக தமிழ் மக்களுக்கெதிரான பிரசாரங்களைச் செய்கின்றன. அரசு அதனை சர்வதேசத்துக்கு சொன்னால் அது ஒருதலைபட்சமாக இருக்கும். ஆனால் ஒரு சிவில் அமைப்பு ஒன்று அவ்வாறு கூறும் போது அதற்கு பலம் அதிகம்.
சர்வதேசப் பிரச்சாரம்
சிங்களப் பேரினவாத வெப் தளங்களாக Sinhaya.com மற்றும் voice of lanka.com போன்ற பல வெப் தளங்கள் இருக்கின்றன இதில் voice of lanka.net.home page.html எனும் வெப் தளத்துக்குப் போனால் அது பல சிங்கள பௌத்த வெப் தளங்களுடன் இணைப்பை ஏற்படுத்தியுள்ளதைக் காணலாம். எனவே இந்தத் தளத்துக்குப் போனால் மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் சிங்கள அமைப்பான சமாதானம், ஐக்கியம், மனித உரிமைகள் என்பவற்றுக்கான இலங்கை அமைப்பு எனும் (SPUR-Society for Pace, Unity and Human Rights for Sri Lanka) அமைப்பு மற்றும் இலங்கை அரசின் பிரச்சாரத் தளங்களுக்கும் போகலாம். இதில் புலிகள் இதுவரை நடத்தியதாக பல குண்டு வெடிப்புகள், மக்கள் மீதான தாக்குதல்கள், யுத்த நிலவரங்கள், அரசியல் நிலவரங்கள், செய்திகள் என பல்வேறு விபரங்களின் பட்டியல்களைக் காணக் கூடியதாக இருக்கிறது. முன்னரெல்லாம் ஈழப் போராட்டத்தை ஏகாதிபத்திய சதியென்றும், போராளிக்குழுக்களை அமொpக்க சீ.ஐ.ஏ. கருவிகள் என்றும் அர்த்தம் கற்பித்த பேரினவாத சக்திகள் இன்று அப்படிக் கூறுவதில்லை. தந்திரோபாய ரிதியில் அவற்றை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதும் இன்று புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் சிலவற்றை செய்திருப்பதாகவும் அவை கருதுகின்றன. தங்களது வெப் தளங்களில் அமெரிக்கா பிரித்தானியா, கனடா போன்ற நாடுகள் புலிகளுக்கு எதிராக விடுத்துள்ள அறிக்கைகளை ஆதாரம் காட்டுகின்றன. இந் நிலைமை அரசுக்கு பெரிதும் சாதகமானது. எனவே அரசே இரகசியமாக இவ்வமைப்புகளுக்கு பல்வேறு வழிகளில் ஆதரவு வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒரு புறம் தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறையும் அதற்கெதிரான போராட்டத்தின் அவசியமும் அதிகரித்து வருகின்ற அதேவேளை மறுபுறம் அதற்கு நேரெதிரான போக்கை சிங்கள சமூகத்தின் மத்தியில் காண முடிகிறது. நம்பிக்கை இழக்க வைக்கின்ற நிலைமைகள் மேலும் அதிகரித்த வண்ணமுள்ளன. இவை துருவமயமான போக்குக்கு அடிகோலுபவையாக ஆகிவிடுகின்றன.
அந்த வகையில் இன்றைய பேரினவாதத்தின் நவீன வடிவத்திலான வியூகங்களை விளங்கிக் கொள்ளல் அவசியம்.
0 comments:
Post a Comment