என்.சரவணன்
”சிங்கள ஜாதிய” (சிங்கள இனம்) எனும் பெயர் கொண்ட ஒரு வாரப் பத்திரிகை (வியாழன் தோறும்) கொழும்பில் அண்மையிலிருந்து வெளியாகத் தொடங்கியுள்ளது. ஒக்டோபர் 16ஆம் திகதி வெளிவரத் தொடங்கியுள்ள இப்பத்திரிகை கடும் இனவாதப் பத்திகையாக வெளிவரத் தொடங்கியிருப்பதுடன் சகல இனவாத சக்திகளுக்கும் களமமைத்துக் கொடுத்துள்ளது.
தென்னிலங்கையில் இயங்கும் இனவாத அமைப்புகளான ”சிங்களயே மகா சம்மத்த பூமி புத்திர பக்ஷய”, ”மகா சங்கத்தினர்”, ”ஹெல உருமய”, ”ஜாதிக்க சிந்தனய”, ”எக்சத் பிக்கு பெரமுன”, ”தேசப்பிரேமி பிக்கு பெரமுன”, ”மக்கள் ஐக்கிய முன்னணி” போன்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பலரது கட்டுரைகளும் பேட்டிகளையும், இனவாத செய்திளையும் தாங்கி வெளிவருகிறது. இப்பத்திரிகையானது விற்பனையில் பெரியளவு முன்னேற்றமில்லாத போதும் அது, இரு நிறங்களில் முகப்பு பக்கத்துடன், பெரிய அளவில், விளம்பரங்கள் எதுவுமின்றி வெளிவருவதைப் பார்த்தால் இது விற்பனையை இலக்காகக் கொண்ட பத்திரிகையல்ல என்பது தெளிவாகத் தெரிகின்றது.
பத்திரிகை வெளிவந்திருக்கின்ற சூழல், அதில் பங்களிப்பு செலுத்தியுள்ளவர்கள், அதில் தாங்கியுள்ள ஆக்கங்கள் என்பவற்றை பார்க்கையில் இப்பத்திரிகை சிங்கள ஆணைக்குழுவின் தொடர்ச்சியாகவே வெளிவருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
”சிங்கள ஆணைக்குழு” 1996ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி தேசிய ஒருங்கிணைப்புக் கமிட்டி எனும் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. பல சிங்கள பேரினவாத அமைப்புகளைக் கொண்ட இந்த அமைப்பு சிங்கள இனத்தைத் தவிர்ந்த ஏனைய இனங்களால் சிங்களத் தேசம் ஒடுக்கப்பட்டு வருவதாகவும், எப்படி இந்த தீமைகள் இழைக்கப்பட்டன? இதற்கு யார் பொறுப்பாளிகள்? இதற்கான தீர்வு என்ன என்பதை ஆராய்வதற்கென இந்த சிங்கள ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டது. பொ.ஐ.மு அரசாங்கம், முதற் தடவையாக தீர்வுத்திட்டத்தை முன்வைத்த நேரத்தில் அத்தீர்வு யோசனைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்ட இவ் வாணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இவ்வருடம் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி வெளியிடப்பட்டது. அவ்வறிக்கை உடனடியாக இடைக்கால அறிக்கை எனும் பேரில் வெளியிடப்பட்டதன் காரணம் பட்ஜட்டுக்கு முன் அரசு தீர்வுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருப்பதாக தெரிவித்ததே. அறிக்கை கூட அரசு ஏற்கெனவே முன்வைத்திருந்த தீர்வு யோசனைகளை சாடும் வகையிலேயே முழுக்க முழுக்க அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசும் சிங்கள ஆணைக்குழுவை ஒரு இனவாத அமைப்பாக பிரச்சாரம் செய்யத் தொடங்கியதைத் தொடர்ந்து சிங்கள ஆணைக்குழுவின் கத்தலும் குறையத் தொடங்கியது. அதற்கு எதிர் நடவடிக்கையாக பல நடவடிக்கைகளை ஆரம்பித்தது சிங்கள ஆணைக்குழு. அரசுக்கு எதிராக தேங்காய் உடைத்து சபிக்கும் திட்டம், நாடளாவிய ரிதியில் பிக்குமார்களைக் கொண்ட ஆர்ப்பாட்டங்களை நடாத்துதல், கருத்தரங்குகளை நடாத்துதல் என அது தொடர்ந்தது. அதன் தொடர்ச்சியே தற்போது வெளிவரத் தொடங்கியுள்ள ”சிங்கள ஜாதிய” பத்திரிகை என தெரிகிறது.
வெளிவந்துகொண்டிருக்கும் ஏனைய இனவாத பத்திரிகைகள்
ஏற்கெனவே தென்னிலங்கையில் வெளிவரும் பத்திரிகைகளில் தினசரி பத்திரிகையான ”திவய்ன” ஒரு கடும் இனவாதப்போக்கையே கடைபிடித்து வருகிறது. அது தவிர ”லங்கா தீப” பத்திரிகையும் இனவாத்தையே கக்கி வருகிறது.
”திரி சிங்களே” (இரு வாரங்களுக்கு ஒரு முறை), ”சிங்கள பௌத்தயா” (மாதாந்த பத்திரிகை), ”வத்மன” (இரு வாரங்களுக்கொருமுறை), ”பொது ஹண்ட” (மாதாந்தப் பத்திரிகை) ”தம்சக்” (மாகாசங்கத்தினரால் வெளியிடப்பட்டு வரும் மாதாந்தப் பத்திரிகை), போன்ற கடும் இனவாதப் பத்திரிகைகள் ஏற்கெனவே வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பது சொல்லத் தேவையில்லை. இதில் ”சிங்கள பௌத்தயா” பத்திரிகையானது இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சியை வித்திடடவர் என சிங்களவர்களால் கூறப்படும் சிங்கள இனவாத சித்தாந்தத்தின் தந்தையான அநகாரிக்க தர்மபாலவினால் நூறு ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. 1896ஆம் ஆண்டு அநகாரிக்க தர்மபாலவினால் தொடக்கப்பட்ட இப்பத்திரிகை சென்ற வருடம் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடியது. அநகாரிக்க தர்மபால தனது மரண சாசனத்தில் இப்பத்திரிகை தான் இறந்தாலும் தொடர்ந்து வெளிவரவேண்டும் என்று கேட்டிருந்தார். அவரது வேண்டுகோளின் படி மகாபோதி சங்கத்தினரால் இன்னமும் வெளியிடப்பட்டு வருகிறது. இலங்கையில் நூறாண்டுக்கும் மேலாக இடைவிடாமல் வெளிவரும் ஒரே ஒரு பத்திரிகை இந்த ”சிங்கள பௌத்தயா” பத்திரிகை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
”சிங்கள ஜாதிய”
”சிங்கள ஜாதிய” (சிங்களத் தேசம்-Sinhalese Nation) பத்திரிகையானது 1903 ஆம் ஆண்டு பெப்ரவரியில் பியதாச சிறிசேன என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இவரே இதன் ஆசிரியராகவும் செயற்பட்டார். அநகாரிக்க தர்மபாலவுடன் பௌத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். அப்பத்திரிகையின் நோக்கம் பற்றி அதன் ஆரம்பப் பத்திரிகையில் இப்படிக் குறிப்பிடப்படுகிறது. ”சிங்கள மக்களின் நலனுக்காக என்ற பரந்த நோக்கில் இது வெளியிடப்படுகிறது. இப்பத்திரிகை சிங்கள பௌத்தர்களின் நல்லபிமானத்தைப் பெற்ற பத்திரிகையென்றும் இதன் ஆசிரியராக இருந்த பியதாச சிறிசேன வை சிங்களவர்களின் தேசிய வீரராக கருதப்படுவதாகவும் ”சிங்கள பத்திரிகை, சஞ்சிகை என்பவற்றின் வரலாறு -தொகுதி 3” இல் குறிப்பிடப்படுகிறது.
ஆரம்பத்தில்சஞ்சிகை வடிவில் ஆரம்பமான இது, 1909 மார்ச் 1ஆம் திகதியிலிருந்து செய்திப்பத்திரிகையாக வெளிவரத் தொடங்கியிருக்கிறது. மீண்டும் எப்போது நின்றது என்பதை அறிய முடியவில்லை. மீண்டும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது.
தற்போது வெளிவரத் தொடங்கியுள்ள ”சிங்கள ஜாதிய” முதலாவது இதழில் 50 வீதத்துக்கும் மேற்பட்ட இடம் தீர்வு யோசனைகளுக்கு எதிரான ஆக்கங்களே ஆக்கிரமித்துள்ளன.
பேராசிரியர், பியசேன திசாநாயக்க, (இவர் தீர்வுப் பொதிக்கு எதிரான ஒரு நூலையும் சிங்கள ஆங்கில மொழிகளில் அண்மையில் வெளியிட்டுள்ளார்) ”தீர்வுப் பொதி,சிங்கள இனம், சிங்கள ஆணைக்குழு” எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் ”சிங்கள ஆணைக்குழுவை போலி ஆணைக்குழுவென்று கூறுகிறார்கள். மூடர்கள். சிங்களவர்களை இந்த பூமியிலிருந்தே அகற்றிவிட முயலும் ஈழம்வாதிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள எமனின் வடிவிலுள்ள பொதி எனப்படும் வெடிக்குண்டினை சுமந்து செல்லும் கழுதையின் ஒரு கையில் தமிழர்களுக்கு வழங்கும் பொதியையும் அடுத்த கையில் அஷ்ரப்புக்கு வழங்கும் பொதியையும் கொண்டு அனைத்து சிங்களவர்களின் கண்களின் மீது மண்ணைத் தூவிக் கொண்டு தவலம் காரர்கள் போகிறார்கள்.” என்கிறார்.
இன்னொரு பேரினவாதியான பிரசித்தி பெற்ற வழக்கறிஞர் எஸ்.எல்.குணசேகரவின் பேட்டியும் வெளியாகியுள்ளது. இவர் திம்பு பேச்சுவார்த்தையில் (ஐக்கிய தேசியக் கட்சி) அரசாங்கத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்டாவர். இந்திய இலங்கை உடன்படிக்கையை எதிர்த்து அதற்கெதிராக பகிரங்கமாக பிரச்சாரம் செய்து கொண்டு ஐ.தே.க.விலிருந்தும், ஏனைய அரச பதவிகளிலிருந்தும் விலகியவர். தீர்வுப் பொதிக்கு எதிராக ”தீர்வுப்பொதியும், எமனின் பொதியும்” எனும் பல பக்கங்களைக் கொண்ட நூலொன்றையும் (சிங்கள ஆங்கில மொழிகளில்) வெளியிட்டிருப்பவர். இவர் அளித்துள்ள பேட்டியில் தீர்வுப் பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையைப் பாதிப்பதாகவும் சிங்கள நாட்டை திமழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் தாரை வார்க்கும் ஒன்றென சட்ட ரிதியில் விளக்கமளிக்கிறார்.
மகா சங்கத்தின் தலைவரான மாதுலுவாவே சோஹித்த ஹிமி சிங்கள ஆணைக்குழு அறிக்கை வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் ”சிங்களவர் உலகத்திலேயே அதி உன்னத இனமாக வாழ்ந்த காலத்திலிருந்து கௌரவத்தையும் புகழையும் பாதுகாத்து வந்த குழுமம். இன்றும் அதே கௌரவத்துடன் இருந்து வரும் இனம் சிங்கள இனம். ஆனால் குறிப்பிட்ட காலமாக பல தீய சக்திகள் சிங்கள இனம் அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.” என்கிறது.
தேசப்பிரேமி பிக்கு பெரமுனவின் பொதுச் செயலாளர் பெங்கமுவே நாலக்க ஹிமி எழுதியுள்ள பெருங்கட்டுரையில் சிங்களவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டிய காலமிது என்று அபாய அறிவிப்பை வலியுறுத்துகிறது.
போராசிரியர் அரமிட்டிபல ரத்னசார தேரர் எழுதியுள்ள கட்டுரையில் ”இந்த தேசத்தின் பூமிபுத்திரர்களாகிய சிங்களவர்களுக்கு எந்தவித இடையூறுமில்லாத வகையில் வாழும் கடப்பாட்டை தமிழர்கள் கொண்டிருக்க வேண்டும்.” என்கிறார்.
ஆசிரியர் தலையங்கத்தில் ”சிங்கள ஜாதிய” பத்திரிகை மீண்டும் வெளிவருவதற்குக் காரணம் சிங்களவர்களை 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய வகையில் சிங்களவர்களை உருவாக்குவதற்கும். அதற்கு தடையாக இருக்கும் தடைகளை நீக்குவதற்குமே.” என்கிறது.
இன்னுமொரு இனவாதியான குணதாச அமரசேகர தனது கட்டுரையில் ”இனவாத தமிழ் தலைவர்களால் தோற்றுவிக்கப்பட்ட யுத்தம் சிங்களவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. அமெரிக்காவில் வெளியாகியுள்ள ”The clash of civilizations and the remaking of world order ” எனும் நூலை குறிப்பிட்டு அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் இன்று கவனமாக ஆராய வேண்டிய விடயம் என்றும் புதிய உலக ஒழுங்குக்கு ஏற்றபடி எப்படி எம்மைத் தாயார் படுத்துவது எனப் பேசுகிறது.
மகாசங்கத்தினரில் ஒரு பகுதியினர் அரசாங்கத்தை அதரித்து வருவதைக் கண்டித்து ”மகாசங்கத்தினருக்குள் பிளவு உண்டாவது பெரும் சாபம்” என்ற தலைப்பில் மகா சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரின் பேட்டிகள் வெளியிடப்பட்டுள்ளன. மடிகே பஞ்ஞான சீல மகாநாயக்க தேரோ உட்பட பல பிக்குகள் பேட்டியளித்துள்ளனர்.
இது தவிர சிங்கள பௌத்த இலக்கிய நயமுள்ள ஆக்கங்களும் செய்திகளும் ஆங்காங்கு உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால். ஆசிரியர் தலையங்கத்தில், ”நாட்டின் பெயரான 'சிங்களம்' என்ற சொல்லையே நீக்கிவிட்டு எமது பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களில் 'இலங்கையர்' என ஆங்கிலேயேர் இட்டதையே இன்றும் பாவிக்குமளவுக்கு நாம் பாதிக்கப்பட்டுள்ளோம்.” என்று கூறுகிறது ஆசிரியர் தலையங்கம். ஆனால் வேறொரு இடத்தில் ”நான்காவது இதழிலிருந்து ”ஆங்கிலப் பாடத்திட்டம்” தொடர்ந்து வெளிவரவிருக்கிறது. உங்கள் பிரதிகளை இப்போதே கூறி வையுங்கள்” என்கிறது. அது சரி, சிங்களவர்கள் தமிழ் கற்பதைவிட ஆங்கிலம் கற்பது சிங்களவர்களைப் ”பாதுகாத்து”விடுமோ தெரியவில்லை.
இரண்டாவதாக வெளிவந்துள்ள ”சிங்கள ஜாதிய” (ஒக்டோபர் 30) இதழில் தலைப்புச் செய்தியாக ”ஜீ.எல்.லின் அரசியலமைப்பு பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு” எனும் தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. உள்ளே குணதாச அமரசேகரவின் மாசீயமும் தேசிய சிந்தனையும் என்ற கட்டுரை இனவாதத்துக்கு மார்க்சிய விளக்கமளிக்க முற்படுகிறது. எஸ்.எல்.குணசேகர எழுதிய (மேற்குறிப்பிட்ட) நூலை தொடராக வெளியிடத் தொடங்கியுள்ளது. ஆசிரியர் தலையங்கத்தில் ”புலிகள் இயக்கத்தை அரசாங்கம் தடை செய்ய வேண்டும்” எனக் கோருகிறது.
இப்படியான சிங்கள பத்திரிகைகளின் வரவானது சிங்கள பௌத்த பேரினவாத கருத்தியலை மேலும் கூர்மைப்படுத்துகின்ற போக்காகவே காணமுடிகிறது. அரசின் கட்டமைப்பே சிங்கள பௌத்த கட்டமைப்பாக இருக்கும் நிலையில் இவ்வாறான போக்குகளை அரசு களையுமென நம்புவது கற்பனாவாதமாகத் தான் இருக்கம். இன்றைய தீர்வு யோசனைகளை ஆதரிக்கும் தமிழ் சக்திகளை இதையே செய்கின்றன. அரசியலமைப்பு ரிதியாகவே இவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவங்களை தற்போது ”சமாதானத் தீர்வு யோசனை” என சொல்லப்படும் தீர்வுத் திட்டத்தில் கூட அகற்றப்படாதது. அதே பேரினவாத கட்டமைப்பின் நீடிப்பையே வலியுறுத்தி நிற்கின்றன. இந் நிலையில் எந்த ”அதிகாரப்பரவலாக்கமோ” அல்லது தீர்வுத்திட்டமோ, சமாதான யோசனைகளோ கூட இந்த ”சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பு” நீக்கம் பெறுவது அனைத்து முயற்சிகளுக்கும் முன்நிபந்தனை–யானது. அது வரையெல்லாம் எல்லாமே பம்மாத்து என்பதை தமிழ் சக்திகள் எவற்றுக்கும் விளங்காமலல்ல. ஆனால் நக்கிப் பிழைக்கும் நாய்களுக்கு நக்க இடம் கிடைத்தால் பின் என்ன நோக்கமிருக்க முடியும். தேவையிருக்க முடியும்.
0 comments:
Post a Comment