என்.சரவணன்
அரசு தீர்வு யோசனைகளை முன்வைத்ததிலிருந்து சிங்கள பேரினவாத சக்திகளின் எதிர்ப்பு தீவிரமாக மேலெழும்பி வருகிறது. இந்தச் சக்திகளை மீறி அரசு எதுவும் செய்ய முடியாத நிலையே உள்ளது. குறிப்பாக சிங்களப் பேரினவாதக் கட்சிகளைக் கூட சில வேளை அரசினால் எதிர்த்து நின்று விடமுடியும். ஆனால் பௌத்த மகாசங்கத்தினரையும், மகாநாயக்கர்க ளையும் அப்படி எதுவும் பண்ணிவிட முடியாது. அரசியலமைப்பு ரிதியில் பௌத்த மதத்துக்கும், பௌத்த பீடத்துக்கும் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவமானது (ஸ்ரீ லங்கா கூதந்திரக் கட்சி ஆட்சியிலேயே 1972ம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் முதல் தடவையாக பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது தெரிந்ததே) அதை மீறி செயற்பட முடியாத நிலையை தோற்றுவித்துள்ளது. தீர்வு யோசனைக்கு எதிராக மகாசங்கத்தினர் தீவிரமாக இயங்கிவருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் கூட திடீரென ”தீர்வுத் திட்டமானது தமிழர்களுக்கு சிங்கள நாட்டை தாரை வார்த்துக் கொடுக்கும் ஒன்று” என கூறி அதனை வாபஸ் பெறாவிட்டால் தாமெல்லோரும் மகாசங்கத்தை விட்டு விலகப் போவதாகவும் பொளத்த மகாசங்கத் தின் உயர்பீட மகாநாயக்கர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி செய்தும் காட்டினர். பாதயாத்திரை, சத்தியாக்கிரகம், ஆர்ப்பாட்டம், கருத்தரங்குகள் என்பனவற்றையும் நடாத்தினர். சிங்கள பத்திரிகைகளும் அதனை வரவேற்று வாழ்த்தின. இறுதியில் அரசு தரப்பில் பேச்சு வார்த்தை நடாத்தி சரணடைய நேரிட்டது. அரசு என்ன அடிப்படையில் மகாசங்கத்தினரை கைவிடச்செய்தது என்பதோ வழங்கிய வாக்குறுதி என்ன என்பதோ இறுதி வரை வெளிவரவில்லை. அரசியலமைப்பு-தீர்வு யோசனையில் கூட ” பௌத்த மதம் அரச மதமாகவும் அதனை பேணிப் பாதுகாப்பது அரசின் கடமையெனவும். பௌத்தத்தைக் காக்கவென மீயுயர் பேரவையொன்று அமைக்கப்படுமெனவும் இம்முறை கூறப்பட்டுள்ளது. பௌத்த பிக்குகளின் போதனைகளை சிங்கள மக்கள் மேலானதாக மதிக்கிறார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
இது தவிர இனவாத கட்சிகள், அமைப்புகள் என்பனவும் முக்கியமானது. குறிப்பாக கட்சி மட்டத்தில் மக்கள் ஐக்கிய முன்னணி, ஜாதிக்க சிந்தனய, ஹெல உருமய, ஜனதா மித்துரோ என்பன முக்கியமானவை இவை தொடர்ச்சியாக பல கருத்தரங்குகளையும் ஆர்ப்பாட்டங்களையும், கூட்டங்களையும் சத்தியாக்கரகங்க ளையும் நடாத்தி வருவதுடன் பல நூல்களையும் துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டு வருகின்றன. தீர்வுத்திட்டம் குறித்து மாத்திரம் இரண்டு முக்கிய நூல்கள் இவர்களால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக பெரிய நூல்களெனக் கொண்டால் ”புலி மத்தியஸ்தர்களும் எமனின் பொதியும்” எனப் பெயர் கொண்ட ஒரு சிங்கள மொழி நூலை எஸ்.எல். குணசேகர என்பவர் வெளியிட்டுள்ளார். இவர் நளின் த டி சில்வா அணியை சார்ந்தவர். இந்நூல் 224 பக்கங்களைக் கொண்டுள்ளது. இதனை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ”Tiger's, Moderates' and Pandoras Package” எனும் பெயரில் வெளியிட்டுள்ளனர். இனவாதி என அழைக்கபடும் காமினி ஈரியகொல்ல என்பவரே இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூல் ”சிங்கள ஆணைக்குழு” விசாரணை நடக்கும் இடங்களிலெல்லாம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சிங்கள ஆணைக்குழு விசாரணை நடக்கும் இடத்துக்கு சென்றும் கூட வாங்க முடியவில்லை அத்தனையும் தீர்ந்திருந்தது. பல இடங்களில் அலைந்து திரிந்த பின்னரே இதனை வாங்க முடிந்தது. அந்த அளவுக்கு விற்பனையாகிக் கொண்டிருக் கும் நூல் இது. விலை ரூபா 100.
இது தவிர சட்டத்தரணி சதிஸ்சந்திர தர்மசிறி என்பவர் ”நாட்டைத் துண்டாடும் யோசனையை நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும்?” எனும் நூலை வெளியிட்டுள்ளார். இந்நூல் 120 பக்கங்களைக் கொண்ட சிங்கள மொழி நூல். விலை 50 ரூபா.
தர்மசிறி செனவிரத்ன என்பவர் ”தம்பி, நமது தாய்க்கு அப்படி செய்யாதே!” என்ற பெயரில் 30 பக்கங்களைக் கொண்ட ஒரு நுலை வெளியிட்டுள்ளார். இதன் விலை ரூபா. 25.
இதைத் தவிர இன்னும் பல பேரினவாதத்தைப் பரப்பும் நூல்கள் பலவற்றில் தீர்வு யோசனைகளுக்கு எதிராக பல விடயங்களும் சொல்லப்பட்டுள்ளன.
இதற்கிடையில் சிங்கள ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டு விசாரணைகளை நடாத்தி வருகிறது. தீர்வு யோசனைக்கெதிரான தொடர் நடவடிக்கையின் அங்கமே இது.
இதில் சிங்கள பேரினவாத சக்திகள் அனைத்தும் இணைந்துள்ளன. இந்த ஆணைக்குழு இது வரை சிங்கள மக்களுக்கு நடந்த அநீதிகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டது. இதன் நடவடிக்கைகளை இனவாதத்தின் உச்ச வடிவம் எனலாம். ஏனெனில் முழுக்க முழுக்க சிங்களவர் களுக்குத்தான் தமிழ்-மலையக - முஸ்லிம் மக்களால் அநீதிகள் நடந்துள்ளன என்றும், அதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியது அரசே என்றும், அரசு சிங்களவர்களுக்கு சேரவேண்டிய பல உரிமைகளை சிறுபான்மையி னருக்கு வழங்கிவிட்டது என்பதையும் கண்டுபிடிப்பதே இவ்வாணைக்குழுவின் நோக்கமாகும். இவ்வாணைக்குழுவின் முடிவானது சிங்கள மக்கள் மத்தியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.
0 comments:
Post a Comment