Sunday, February 01, 2009

சிங்கள வீரவிதான: தமிழ், முஸ்லிம் தேசங்களின் எதிர்காலம்?

என்.சரவணன்

சிங்கள வீரவிதான இயக்கம் குறித்து தற்போது அதிகள­வில் பேசப்படுகிறது. கடந்த மே 20ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்பியக்கத்தினால் நடத்தப்பட்ட ஊர்வலம், ஆர்ப்பாட்டம், கூட்டம், பிரச்சாரம் என்பன சிங்கள வீரவிதான இயக்கத்தின் நடவடிக்கை என்பது தெளிவாக தற்போது தெரிய வந்திருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே சரிநிகரில் வெளியிடப்பட்ட கட்டுரைகளில் பயங்கரவாத எதிர்ப்பியக்கமானது சிங்கள வீரவிதான இயக்கத்தின் ஒரு உப அமைப்பு என்பதுவும், இன்னும் பல பெயர்களில் அதற்கு இதுபோன்ற உப அமைப்புகள் உண்டு என்பதும் சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளன.

கடந்த 20ஆம் திகதி நடத்தப்பட்ட மேற்படி ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக­ளுக்குப் பின்னணியாக பல சம்பவங்கள் நடத்திருந்தன.

மே 20ஆம் திகதி நடத்தப்பட்ட கூட்டத்தில் ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முதலில் ஊர்வலம் கொழும்பு கலாபவனத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட பிக்குமார் கலந்து கொண்டனர்.

”முழு நாட்டையும் திராவிடஸ்தான் ஆக்கும் தமிழ் விஸ்தரிப்புவாதத்தைத் தோற்கடிப்போம்!”

”பிரபாகரனுக்கு தமிழீழம், அஸ்ரப்புக்கு, கிழக்கிஸ்தான், தொண்ட­மானுக்கு மலைநாடு!”

”கொழும்பில் 4 லட்சம் தமிழர்கள் குடியேறியுள்ளனர். தமிழ் விஸ்த­ரிப்பு வாதம் மேல்மாகாணத்தை அடைந்துள்ளது. அதனை விரட்டியடிப்போம்!”

”சிங்கள நாட்டைக் கட்டுப்படுத்தும் தமிழ் இனவாதத்தையும், அதற்குத் துணைபோகும் சிங்கள அரசியல் துரோகிகளையும் எதிர்த்துப் போராடுவோம்!”
”கொலைகாரப் புலியோடு பேச்சுவார்த்தை வேண்டாம்!”

”அந்நிய மத்தியத்துவம் எமக்கு வேண்டாம்.”

”சிங்களவர்களே விழித்தெழுங்கள் சிங்கள மல்லாதவர்க­ளிடமிருந்து சிங்கள நாட்டைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்”

என்பது போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன. இது போன்ற பல இனவாதத்தைக் கக்கும் பதாதைகளையும் தாங்கிய வண்ணம் பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தனர். ஊர்வலம் அனகரிக்க தர்மபால மாவத்தை வழியாக வந்து டி.எஸ்.சேனநாயக்க வீதி சுற்றுவட்டத்துக்கூடாக திரும்பி விகாரமகாதேவி பூங்காவை வந்தடைந்தது. அங்கு ஆர்ப்பாட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.

விகாரமகாதேவி பூங்காவின் அருகில் கூட்டம் நடந்தது. அந்­தக் கூட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பியக்கத்தின் தலைவரும் சிங்கள வீரவிதான இயக்கத்தின் மறைமுகத் தலைவருமான சம்பிக்க ரணவக்க, மற்றும் மடிகே பஞ்ஞாசீல மகாநாயக்க தேரோ உள்ளிட்ட பல முக்கிய இனவாத பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மடிகே பஞ்ஞாசீல தேரோ பேசுகையில் ”...இன்றைய இந்த நடவ­டிக்கை மிகவும் பெருமைப்படக்கூடிய ஒன்று. 10,000 ஆண்டுகளை விட அதிக கால வரலாற்றைக்கொண்டுள்ள சிங்கள இனத்துக்கு தொடர்ச்சியாக அநியாயங்கள் இழைக்கப்பட்டு வருகிறது. சிங்களவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க சிங்களமல்லாதவர்களை கடமைப்பட வைப்பது அரசினது கடமை. சிங்களவர்களே ஐக்கியப்படுவோம். சிங்கள நாட்டைப் பாதுகாப்போம் என்றார்...”

தேசிய சங்க சபையின் அமைப்பாளர் அத்துரலிய ரத்ன ஹிமி பேசுகையில்

”....1987இல் புலிகள் கோட்டையில் குண்டு வைத்தனர். சகலரும் மௌனித்திருந்தனர். ஆனால் அதிலிருந்து தொடர்ச்சியாக கொழும்பில் குண்டுகள் வெடித்தன. இன்று எமக்கு இந்த பயங்கரவாதத்தை முறியடிக்கும் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. அதனை தட்டிக் கழித்து விட்டுப் போக முடியாது. ஆப்கானிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா, சீனா, மத்தியகிழக்கு, ஜப்பான் போன்ற நாடுகளில் பௌத்த இயக்கங்கள் வன்முறையோடு இயங்கவில்லை. ஆனால் 10ஆவது நூற்றாண்டைத் தொடர்ந்து முஸ்லிம் விஸ்தரிப்புவாதத்தால் பௌத்த இயக்கங்கள் அழிக்கப்பட்டன. பௌத்த மக்கள் மிலேச்சத்தனமாக கொல்லப்பட்டனர். எனவே தான் அதற்கு எதிராக எமது பிக்குமார்கள் அணிதிரண்டு போராடத் தொடங்கினார்கள். தாம் போராடுவது சமாதானத்துக்­காகவே என்று கூறினார்கள். உண்மையில் எங்களால் ஒரு கொசுவைக் கூட கொல்லமுடிவதில்லை. ஆனால் பலிபீடத்துக்கு தலையைக் கொடுக்க முடியாது. லேக் ஹவுஸ் பத்திரிகைகளோ பௌத்தர்கள் அஹிம்சைவாதிகள் எனக் கூறி மக்களின் மூளையை சலவை செய்யப் பார்க்கின்றன. மகாபோதியைத் தாக்கும் போதும், தலதா போதியைத் தாக்குகின்ற போதும், திம்புலாகல ஹாமதுருவை கொல்கின்ற போதும் எங்களைச் சும்மா இருக்கவா சொல்கின்றன இந்த என்ஜீ.ஓக்கள். புலிகள் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல கொழும்பிலும் இருக்கிறார்கள். எங்களுக்கு பாரிய பொறுப்புள்ளது....”

சம்பிக்க ரணவக்க உரையாற்றுகையில்

”...போலி சர்வமத குழுக்களும், என்.ஜீ.ஓ.க்களும், வர்த்தகர் சம்மேளனமும், ஐ.தே.க.வும், குப்பைக்கூடைக்குள் விழுந்திருக்கும் இடது சாரி முன்னணிகளும் சந்திரிகாவின் ஆசீர்வாதத்துடன் புலிப்பயங்கரவாதிகளுடன் சமாதானப் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கும்படி கோருகின்றன. இவர்கள் எவருக்கும் புலிகளோடு பேசக்கோர உரிமை கிடையாது. இன்று 4 லட்சம் தமிழர்கள் கொழும்பு தலைநகரில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு கொழும்பில் வசிக்க உரிமை கிடைத்திருக்கிறது. ஆனால் சிங்கள முஸ்லிம்களை விரட்டிவிட்டு போலி தமிழ் விஸ்தரிப்புவாதத்தை நிறுவ முயற்சி செய்கின்றனர். தமிழ் குடியேற்றங்களை இங்கு அமைக்கும் தொலைநோக்கிலான திட்டமிட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். புலிகளோடு நேரடியாகப் பேசி உடன்பாடு காண்பதற்கூடாகவோ அல்லது புலிகளையும் தமிழ் மக்களையும் இரு வேறு தரப்பினர் என்று கருதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கூடாக இந்த பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரலாமென சிங்கள தலைவர்கள் செயற்பட்டனர். ஆனால் இது வரை 23,000க்கும் மேற்பட்ட மக்கள் பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.14,000 படையினர், 3500 சிங்கள மற்றும், சிங்களமல்லாதவர்கள், 550 முஸ்லிம்கள், கொல்லப்பட்டுள்ளனர். ஜே.ஆர் மாவட்ட அபிவிருத்தி சபையை அறிமுகப்படுத்தி சமாதானத்தை கொண்டு வரப்போவதாகப் பிதற்றினார். திம்பு பேச்சுவார்த்தை நடக்கும் போது தான் பாதுகாப்பு படையினரைச் சுற்றி நிலக்கண்ணிகள் வைக்கப்பட்டன. திம்பு பேச்சுவார்த்தையினால் நாங்கள் இழந்த யாழ்ப்பாணத்தை மீட்டெடுக்க 10 வருடங்களைச் செலவிட வேண்டி வந்தது. இன்று புளொட், டெலோ, ஈ.பி.டி.பி., ஈ.பி.ஆர்எல்;எப். போன்ற இயக்கங்ளுக்கு விசித்திரமான சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. எஙகளுக்கு சுதந்திரமில்லையேல் மீண்டும் காடடுக்குத் திரும்பிப்போவோம் என டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். 82இலிருந்து இவர்கள் டெலோவுக்கு சம்பளம் வழங்கி வருகின்றனர். ஏனைய இயக்கங்களுக்கும் கூட அரசாங்கம் சம்பளம் வழங்குகிறது. இதனை நிறுத்தி அனைத்து இயக்கங்களிடமிருந்தும் ஆயுதங்களை களைய அரசை நாங்கள் நிர்ப்பந்திக்கிறோம். மாவட்ட சபை முடிந்து 1987இல் இந்தோ-லங்கா உடன்படிக்கையின் மூலம் வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரு மாகாணமாக்கினார்கள். தமிழ் இனவாத இயக்கங்கள் இதன் மூலம் ஆயுதங்களை ஒப்படைத்து சமாதானத்தை கொண்டுவரப்போவதாக ஜே.ஆர் கூறினார் இந்த ஒப்பந்த்தினால் 72,000 சிங்களவர்கள் தென்னிலங்கையில் கொல்லப்பட்டனர். 667 பிக்குமார் கொல்லப்பட்டனர். இந்த உயிர்களுக்கு சகல அரசியற் தலைவர்களும் பொறுப்பெடுக்கவேண்டும்.

ரணிலுக்கும், டில்வினுக்கும், சந்திரிகாவுக்கும், பாகுவுக்கும் ஒன்றைக் கூறுகிறோம். சமாதானத்தைபற்றி மட்டும் அதிகம் கதைக்க வேண்டாம். அன்றைய பிணங்கள் மீண்டும் வெளியே வரும். பிரேம தாச பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியிருந்த போது 1238 படையினர் கொல்லப்பட்டிருந்தனர். பிரேமதாச காலத்தில் இத்தொகை 2679ஆக அதிகரித்தது. ரணில் போன்றோர் இதற்கு பொறப்பு கூற வேண்டும். சந்திரிகா பேச்சு வார்த் தையைத் தொடக்கி 4 மாதம் கூட ஆகவில்லை புலிப் பயங்கரவாதிகள் 3 ஆயுதக் கப்பல்களைக் கொண்டு வந்து சேர்த்தனர். ஒரு கப்பலில் வெடிமருந்து பொருட்கள் 60,000 தொன்கள் இருந்தன. சபுகஸ்கந்த, மருதானை, தெஹிவளை, சிறி தலதா மாளிகை என்பன தாக்கப் பட்டது இந்த வெடிமருந்துகளாலேயே.

இப்போது இந்தப் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை, சமாதானம் என்றெல்லாம் பிதற்றப் படுகிறது. ஜீ.எல்.பீரிஸின் பொதி வரலாற்றுத் துரோ கம். அந்தத் துரோக அரசியலுகுக்குப் பதிலளிக்க மக்கள் தயார்.

ஜீ.எல்லுக்குஒன்றைக் குறிப்பிடவிரும்புகிறோம். முடிந்தால் பொதியை மக்களின் முன் வைக்கட்டும். புலிகளை யுத்த ரீதியிலும், அரசியல் ரிதியிலும், கருத்து ரிதியிலும் தோற்கடிக்கும் ஆற்றல் எங்களுக்கு உண்டு.

1971இன் தொகைமதிப்பீட்டின்படி வன்னியில் வாழ்ந்த தோட்டப்புற தமிழர்களின் எண்ணிக்கை 61,000 மட்டும் தான் இருந்திருக்கிறது. அதுவே 81 ஆகும் போது 141,000 ஆக ஆகியிருக்கிறத. இது போல குடியேற்றங்கள் தோற்றுவிக்கப்படுவது எதனால்? எங்களது போலி சமாதானத் தூதுவர்களிடம் கேட்கிறேன். இது போன்ற தமிழ் குடியேற்றங்களை அமைக்க புலிகள் எத்தனை கோடி ரூபாய்களை செலவிட்டிருக்கிறார்கள். எதிர்வரும் ஓகஸ்டுக்கு முன்னர் இந்த தேசிய இயக்கம் இராட்சத பாய்ச்சலொன்றை பாய வேண்டும். பயங்கரவாத எதிர்ப்பியக்கத்தைத் தேசிய சக்தியாக ஆக்கிக் காட்ட வேண்டும். தற்போது பத்திரிகைகளுக்கூடாக எம்மைத் தாக்குகின்றனர். அவற்றிற்கு பதிலளிப்பதில் பிரயோசனமில்லை. அது காலவிரயம். செயலில் காட்டுவோம்.

எஸ்.எல்.குணசேகர உரையாற்றுகையில்

'புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் விடுதலைக்கான அமைப்­பல்ல. அவர்கள் அதிகாரத்தின் மீது கொண்டுள்ள பேராசையினாலேயே இந்த யுத்தத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் மதத் தலங்களை அழித்து வருகிறார்கள். சகல சமாதானப் பேச்சுவார்த்தை காலங்களிலும் புலிகள் தங்களை பலப்ப­டுத்திக்கொள்வதற்காகவே அதனைப் பயன்படுத்தி வந்துள்ளனர். எனவே இனிமேலும் பேச்சுவார்த்தையென்று ஒன்று நடக்குமாயிருந்தால் அது புலிப் பயங்கரவாதிகளை மேலும் பலப்படுத்தத்தான் பயன்படும். யுத்தம் மேலும் நீடிக்கும். பெரும் அழிவுகள் தொடரும் எனவே பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கக்கூடாது.

இந்தக் கூட்டத்தின் இறுதியில் படையைச் சேர்ந்த சிலரைத் தொpவு செய்து அவர்களின் வீரப்பிரதாபங்களுக்காக விருதுகள் வழங்கப்பட்டன.

நுவரெலியா நகரில் இ.தொ.கா. இம்முறை மே தினத்தை நடத்துவதற்கு தீர்மானித்தது தொட்டு வீரவிதானவும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியிருக்கிறது. நுவரெலியாவில் இருந்து கிடைக்கின்ற தகவல்களின்படி மே தினத்துக்கு முதல் நாளான ஏப்ரல் 30ஆம் திகதி சிங்கள பேரினவாத சக்திகளை உற்சாகப்படுத்தும் நோக்கிலும், அடுத்த நாளைய மேதின கூட்டத்தை குழப்புவதற்கு ஒழுங்கமைப்பதற்குமென 30ஆம் திகதி வீரவிதான இயக்கத்தால் ஒரு கூட்டம் நுவரெலியா பொது நூலக சபையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்திருக்கிறது. புலியைத் தோற்கடிப்பதற்கானத் திட்டம் எனும் பேரில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்துக்கான பிரச்சார சுவரொட்டிகளில் தோட்ட மக்களுக்கு எதிராக இனவாதத்தை கக்குகின்ற வாசகங்கள் எழுதப் பட்டிருந்திருக்கின்றன. இ.தொ.க. ஆதரவாளர்களால் மேதின பிரச்சார சுவரொட்கள் கொண்டு அவை மூடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சில கைகலப்புகள் நடந்திருக்கின்றன. பொலிஸ் அதிகாரி வரை இப்பிரச்சினை போயுள்ளது. தொண்டமானுக்கு எதிராக நுவரெலியா மாவட்ட சில அரசியல் சக்திகளும் இந்த தருணத்தை உபயோகித்து வீரவிதானவுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இவை எல்லாம் சேர்ந்து அடுத்த நாள் மேதினத்தன்று ஊ அடித்தல், சத்தமிட்டு கேலி செய்தல் எனப் பல ஆத்திரமூட்டல்கள் நடந்துள்ளன. சில கைகலப்புகளும் நடந்திருக்கின்றன. இ.தொ.க. அரசியல் பிரமுகர்கள் கூறுவதைப்போல தோட்டத்தொழிலாளர்களை அன்று கட்டுப்படுத்தாமல் போயிருந்தால் அன்றைய கைகலப்புகள் இனவன்முறை என்கிற அளவுக்கு மேலெழும்பியிருக்கும்.

பயங்கரவாத ஒழிப்பு இயக்கம் இச் சம்பவத்தைத் தொடர்ந்து பத்திரிகைகளில் பெரும் தொண்டமான் எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தது. தொண்டமான் மலைநாடு அமைக்க அறைகூவியதை எதிர்த்தே 30ஆம் திகதி கூட்டம் ஒழுங்கமைக்கப்­பட்டிருந்ததாக சம்பிக்க ரணவக்க 3ஆம் திகதி வெளிவந்த லங்காதீப பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார்.

சிங்கள வீரவிதான இயக்கம் மிகவும் தீவிரமாகவும், திட்டமிட்டும், நிறுவனமயப்பட்டும் செயற்பட்டு வருவதை தொடர்ந்து அதனை ஆழமாக அவதானிப்போரால் அறியமுடியும். தென்னிலங்கையில் ஜே.வி.பி. தவிர்ந்த எந்த இயக்கமும் வீரவிதானவின் அமைப்பு பலத்துக்கு முன்னாள் தூசு என்றே கூறலாம். இவ்வமைப்பின் அமைப்பு வடிவமும், சித்தாந்த பலப்படுத்தலுக்கான வேலைத்திட்டமும், சிறு சிறு சேரிகள் வரை சென்று அமைப்புகளை உருவாக்கி வருவதும், அதன் உள்ளூர், வெளியூர் அமைப்பு வலைப்பின்னலும் எளிமைப்படுத்தி மதிப்பிடக் கூடியவை அல்ல. தாங்கள் குழப்ப நினைக்கும் எந்தவொரு கூட்டத்தையும் குழப்புவதற்கு கூட தனியான அணிகளை உருவாக்கி வைத்துள்ளனர். (கடந்த வருடம் டிசம்பர் 11ஆம் திகதி கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடத்தப்பட்ட சமாதானக் கூட்டமும் இவர்களாலேயே குழப்பப்பட்டன என்பதும், அவர்கள் அடிதடிக்கும் தயாராக வந்திருந்தனர் என்பதும் பலர் அறிந்த விடயம்.) தமது செயற்பாடுகளை புரட்சிகர இயக்கங்களைப் போல தலைமறைவு வேலை முறையையும் கொண்டியங்கி வருகின்றனர். தமிழ் மக்களுக்கு எதிராகவும், போராட்டத்துக்கு எதிராகவும், பிரச்சார நடவடிக்கைகளுக்கு மாத்திரம் தற்போது பல பெயர்களில் இன்டர்நெட் வெப் தளங்களை நிறுவியிருக்கின்றனர்.

தென்னிலங்கையில் சிங்கள மக்களை சிங்களபௌத்த பேரினவாத மயப்படுத்துவதில் திட்டமிட்டு செயற்பட்டு வருவதில் வீரவிதானவுக்கு நிகர் வீரவிதான தான். இந்தப் போக்கு காலப்போக்கில் பாசிசத்தை உறுதியாக நிறுவினாலும் ஆச்சிரியப்படு­வதற்கில்லை. ஏற்கெனவே இந்த நிலைமைகளுக்கு காரணமான சிங்கள அரச கட்டமைப்பும், அரசாங்கங்களும் இனி தமது வழியை மாற்றிக் கொண்டாலும் அதனால் பிரயோசனம் ஏற்படப் போவதில்லை என்பதை மற்றும் உணரமுடிகிறது. எழுச்சியுற்று வரும் சிங்கள பேரினவாத சக்திகளின் பிடியிடம் இருந்து அவையும் தப்பப் போவதில்லை.

தென்னிலங்கை பாராளுமன்ற சிங்கள அரசியல் சக்திகளைப் பொறுத்தவரை அவை ஒன்றில் முழுமையாக தம்மை மாற்றிக் கொண்டு அரசியல் செய்ய வேண்டும். இல்லையேல் தற்போதைய பேரினவாதத்திடம் முழுமையாக சரணடையவோ அல்லது அந்த பேரினவாதத்துக்கு தலைமைதாங்கவோ வேண்டிவரப்போகிறது. அவ்வாறு செய்யாவிட்டால் தற்போதைய நிலைமையில் அவை இருப்புக் கொள்வது அவ்வளவு சுலபமான காரியமல்ல.

0 comments:

தளத்தின் உள்ளடக்கம்.

இந்தத் தளத்தில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உருவாக்கம், விரிவாக்கம், கருத்தாக்கம், அதன் வடிவம், அதன் நிறுவனமயமாக்கம், அதன் திசைவழி குறித்து சரிநகர், ஆதவன், நிகரி, விடிவு, பறை, இனி போன்ற பதிப்புகளில் வெளிவந்த என்.சரவணனின் கட்டுரைகள் மறுபிரதியிடப்படுகின்றன.

சுவடி

Template by - Abdul Munir - 2008 - layout4all