Sunday, February 01, 2009

இ.தோ.கா. மே தினக் கூட்டத்தில் மே ஆய்வு குழப்பம்?

என்.சரவணன்

கடந்த மே தினத்தன்று நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடத்திய மேதின ஊர்வலம் கூட்டம் என்பனவற்றை குழப்பவும், அதனை இனவன்முறையாக ஆக்கவும் சிங்கள வீரவிதான இயக்கம் செய்த முயற்சியும், அங்கு நடந்த சில அசம்­பாவிதங்களும் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய விவாதமாக ஆகியுள்ளன. இம் மேதினக் கூட்டம் குழப்பப்பட்டமை குறித்து காலம் கடந்து ஞானம் பிறந்தாகக் காட்டிக்கொண்ட தொண்டமான் அக்கூட்டம் சிங்கள வீரவிதான இயக்கத்தினால் அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என திடீரென்று அறிக்கை விட்டதைத் தொடர்ந்து இப்பிரச்சினை அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக ஆனது. அமைச்சர் தொண்டமானின் அவ்வறிக்கையில் இது குறித்து அரசாங்கம் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட அரசாங்கத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அவ்வாறு எடுக்கும் வரை புதிதாக அமைக்கப்பட்ட மாகாண அரசாங்கங்களுக்கு தாம் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் தொண்டமான் மலையக மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து தீர்மானகரமான நிபந்தனைகளுடனும், ஒப்புதல்களுடனுமே மாகாண சபை அரசாங்கங்களுக்கு தாம் ஆதரவு அளிக்கப்போவதாக முன்னர் அறிவித்திருந்தார். ஆனால் வெறும் மே தின நிகழ்ச்சியை எடுத்து அதனையே ஒரு நிபந்தனையாக விதித்தமையும் அதனைத் தொடர்ந்து அவர் மீதும் மலையக மக்கள் மீதும் சிங்கள பௌத்த பேரினவாதம் பாய்ந்த பாய்ச்சலானது மலையக மக்களின் உண்மையான கோரிக்கைகளையும் மறக்கடிக­்கும்படி செய்யப்பட்டிருந்தது. உண்மையில் தொண்டமானுக்கும் இது தான் தேவைப்­பட்டிருக்கும். தொண்டமான் வாழ்வதே இப்படி அடிக்கடி பேரினவாதத்துக்கும், பேரினவாத அரசாங்கங்க­ளுக்கும் எதிராக மேற்கொள்ளும் வாய்ச்சவாடலாலும், கவர்ச்சிகரமான தாக்குதல்­களாலும் தான். இவ்வாறான சந்தர்ப்­பங்களிலெல்லாம் தொண்டமானை பாதுகாக்க வேண்டுமென்கிற கருத்து பொதுவாக தமிழர்கள் மத்தியில் பரவுவது வழக்கம். எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களை தொண்டமான் அதிகபட்சம் பயன்படுத்துவது வழக்கம். அவ்வாறான ஒன்று தான் இந்த மேதின குழப்பமும், அரசாங்கத்துக்கு இட்ட நிபந்தனையும். அப்படிப் பார்த்தால் இந்த மே தினமென்ன மலையகத்தில் வேட்டை­யாடப்பட்டுக் கொண்டிக்கும் மலையக இளைஞர்களுக்காக (இவ் வேட்டையாடலின் பங்குதாரர்கள் என்பதை திரும்பத்திரும்ப சொல்லத்தேவையில்லை) தனது அமைச்சுப் பதவியை துறந்திருக்க வேண்டும். அதிகம் தேவையில்லை இரத்தினபு­ரியில் நடத்தப்பட்ட நரவேட்டையை எதிர்த்து தற்போது அரசாங்கத்துக்கு வழங்கி வரும் சகலவித ஆதரவினையும் வாபஸ் வாங்கியிருக்க வேண்டும்.

இம்முறை தான், மே தின சம்பவத்துக்கு பின்னால் இருந்த அமைச்சரின் பெயரை அம்பலப்படுத்த கூட தொண்டமான் பின்வாங்க­லாம். ஆனால் ரத்தினபுரி சம்பவத்துக்கு பின்னால் இருந்த அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் முழு விபரங்களும் முழு மக்களும் அறிவர். ஆனால் இது வரை அமைச்சர் தொண்டமான், அச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தக்கோரி எந்தவித நிர்ப்பந்தங்களையும் கொடுக்கவு­மில்லை. அதற்காக எந்தவித 'நிபந்தனையையும்' விதித்ததில்லை. இன்று ரத்தினபுரி சம்பவம் மறக்கடிக்கப்பட்ட சம்பவமாகப் போய்விட்டது.

'...நாங்கள் மாதாமாதம் அவசரகால சட்டத்துக்கு அதரவளித்து வருபவர்கள். அவ்வாறு ஆதரவளிப்பதன் நோக்கம் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே. அப்படிப்பட்ட எங்களை பயங்க­ரவாதத்துக்கு ஆதவானவர்கள் என்று முத்திரை குத்த முயற்சிக்கிறார்களே....' இவ்வாறு தெரிவித்திருப்பவர் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நுவரெலியா மாவட்ட எம்.பி. சதாசிவம். மே தினமன்று இ.தொ.க.வின் கூட்டம் குழப்பப்பட்டமை குறித்து லங்காதீப பத்திரிகையாளர்கள் கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு ஆராய சென்றிருந்த போதே அவர் அவ்வாறு தெரிவித்திருக்கிறார். மே 23ஆம் திகதி லங்காதீப பத்திரிகையில் இச்சம்பவம் பற்றிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகளின் கருத்துக்கள் அப்பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தன.

ஒரு புறம் தமிழ் பத்திரிகைகளுக்கு புலிகளைப் பற்றியும், வடக்கு கிழக்கு போராட்டம் குறித்தும் ஆரவாரத்தோடு ஆதரித்துப் பேசும் இ.தொ.கா. இன்னொரு புறம் தம்மை அப்போராட்டத்தக்கு எதிரானவர்கள் என்று காட்டுவது அதன் உண்மையான சுயரூபத்தை தோலுரித்துக்காட்டப் போதுமானது.

இந்த பேரினவாத செயற்பாடுகளின் மூலம் அரசியல் லாபமடைய எதனையும் செய்யத்தயாராக இருக்கும் பேரின­வாத அரசியல் தலைவர்களுக்கும் தொண்டமானுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.

பேரினவாதத்தை எதிர்த்து நிற்கும் அனைவரும், தனது அரசியல் நலன்களுக்காக சொந்த மக்களை எந்த நிலையிலும் பழியாக்க தயாராக இருக்கும் தொண்டமானின் திருகுதாளங்­களை அறிந்து வைத்திருத்தல் மிகமிக அவசியம்.

0 comments:

தளத்தின் உள்ளடக்கம்.

இந்தத் தளத்தில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உருவாக்கம், விரிவாக்கம், கருத்தாக்கம், அதன் வடிவம், அதன் நிறுவனமயமாக்கம், அதன் திசைவழி குறித்து சரிநகர், ஆதவன், நிகரி, விடிவு, பறை, இனி போன்ற பதிப்புகளில் வெளிவந்த என்.சரவணனின் கட்டுரைகள் மறுபிரதியிடப்படுகின்றன.

சுவடி

Template by - Abdul Munir - 2008 - layout4all