Monday, February 02, 2009

சிங்கள ஆணைக்குழு தோற்றமும் பின்னணியும்

என்.சரவணன்

”எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு சிங்கள மக்களுக்கு அநியா யங்கள் நிகழ்ந்துள்ள இப்படியான ஒரு காலகட்டத்தில் இப்படியான ஒரு ஆணைக்குழு நியமிக்கப்படுவது மிகவும் அவசியம். இது சிங்கள நாடு. யார் என்ன தான் சொல்லட்டும் அன்றிலிருந்து இன்று வரை இது சிங்களவர்களின் நாடு...” (திவய்ன-19.12.96)

சிங்கள பாதுகாப்புச் சபையின் தலைவர் காமினி ஜயசூரிய ஆற்றிய உரையின் ஒரு பகுதியே அது.

கடந்த டிசம்பர் மாதம் 18ம் திகதியன்று அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் வைத்து 42 சிங்கள பௌத்த அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து அமைத்த ”சிங்கள ஆணைக்கு”வின் அங்குரார்ப்ப­ணக் கூட்டத்தின் போதே மேற்படி உரையை ஆற்றியிருந்தார்.

ஆணைக்குழுவின் பின்னணி

இந்த ”சிங்கள ஆணைக்குழு”வை தேசிய ஒருங்கிணைப்பு கமிட்டி எனும் அமைப்பே முன்னின்று அமைத்துள் ளது. காலனித்துவத்துக்குப் பின்னர் சிங்கள மக்களுக்கு நடந்த அல்லது நடத்தப்பட்ட சகல அநீதிகளையும் ஆராய்வதற்காகவே இவ் ஆணைக்கு ழுவை அமைத்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி முக்கிய 14 தலைப்பில் இவ்வநீதிகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் (பார்க்க பெட்டி செய்தி) பெப்ரவரியிலிருந்து ஒன்பது மாத காலத்துக்குள் இவ்வாணைக்குழு தனது ஆராய்வு­களை முடிக்க விருப்பதாகவும் தெரிவித்துள்ளது இவ்வமைப்பு.

பௌத்த விபர ஆணைக்குழு என்ற ஒன்று பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலப்பகுதியில் இயங்கியது. அவ் வாணைக்குழுவின் பரிந்துரைகளை தான் நடைமுறைபடுத்துவதாக பண்டாரநாயக்கா அப்போது பௌத்த மகா சங்கத்தினருக்கு உறுதியளித் திருந்தார். ஆனாலும் அவர் அதற்குள் கொல்லப்பட்டார். (அவர் கொல்லப்பட் டதும் பௌத்த துறவியொருவரினால் என்பது தெரிந்ததே)

இன்று அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழு அவ்வ­ளவு சாதாரண ஆணைக்குழுவல்ல இது 'சிங்கள ஆணைக்­குழு. இதன் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.டபிள்யு. வல்பிட்ட. ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக முன்னாள் பிரதம நீதியரசர்.ஏ.டீ.டி.எம்.பி.தென்னகோன், பேராசிரியர். ஏ.டி.வீ.டி.எஸ் இந்திரரத்ன (இவர் முன்னை நாள் புத்த சாசன ஆணைக்குழுவினதும் உறுப்பினர்) பேராசிரியர் பீ..ஏ.டி.சில்வா, பீ.டீ.உடு வெல (முன்னைநாள் செயலாளர்-பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு) பேராசிரியர்.திருமதி.லிலி.டி.சில்வா (ஓய்வு பெற்ற விரிவுரையாளர்-பாளி-பௌத்த, கற்கை-பேராதெனிய பல்கலைக்கழகம்) ஜீ.பி.எச்.எஸ்.டி. சில்வா (ஓய்வு பெற்ற தலைவர்-தேசிய சுவடிகள் கூடத் திணைக்களம்.)

இந்த 'சிங்கள ஆணைக்குழு'வின் தோற்றமானது நிகழ்கால சூழலில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உச்ச வெளிப்பாடாகவே காண முடிகிறது என்றால் அது மிகையில்லை. இதனை அமைக்கும் நோக்கம், அமைக்கின்ற சூழல், பின்னிற்கும் சக்திகள், இவை முன்வைக்கும் கருத்துக்கள் என்பன ஆழ்ந்து அவ­தானிக்க வேண்டியவை. போரை நிறுத்த - சமாதானத்தை ஏற்படுத்த, குறைந்தபட்சத் தீர்வைத்தானும் கொண்டுவர இருக்கின்ற சொற்பமான வாய்ப்புகளை அடைத்துவிடும் ஒரு சூழல் இப்படி முதிர்ச்சி பெற்று வருவதை அநாயசமாக தட்டிக் கழித்துவிட முடியாது. பின்னணியில் இருக்கும் சக்திகள், பலவீனமானவையல்ல. இலங்கையில் மிகவும் முன்னணியிலுள்ள புகழ்பெற்ற சிங்கள பௌத்த பேரினவாதிகள், அவர்களது அமைப்புகள் (சிங்களயே மகா சம்மத்த பூமி புத்திர பக்ஷய, சஙிகள மீட்பு முன்னணி, சிங்கள பாதுகாப்புச் சபை, தேசப்பிரேமி பிக்கு பெரமுன உள்ளிட்ட பல அமைப்புகள்) எல்லாமே ஓரணி திரண்டுள்ளனர் என்பதும் அவர்கள் ஏனைய தமிழ், முஸ்லிம், மலையக தேசங்கள் தொடர்பாக முன்வைத் துள்ள கருத்துக்களும் பிரச்சாரங்களும் குறிப்பாக அவதானிக்கத் தக்கவை.

”இனியும் சகியோம்!”

அங்குரார்ப்பண கூட்டத்தின் போது உரையாற்றிய மாதுலுவாவே சோபித்த ஹிமி உரையாற்றுகையில்

”தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏதோ வரலாற்று ரிதியான அநியாயங்கள் நடந்துவிட்டதாக பெரியள­வில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஏதோ சிங்களவர் மிகவும் சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருவதாக அல்லவா மறுபக்கம் சொல்லப்படுகிறது. இப்படித்தான் சிங்களவர்களைப்பற்றி பிழையான படமொன்றையே உலகுக்கு காட்டி வந்துள்ளனர். கதிர்காமத்தில் ஊசி­யால் உடலில் குத்தி நேத்திக் கடன் செலுத்துவதை படம்பிடித்துச் சென்று தமிழ் மக்கள் எப்படியெல்லாம் கொடுமை படுத்தப்படுகிறார்கள் பாருங்கள் என புலிகள் பிரான்ஸில் ஊர்வலம் செல்கின்றனர்...சிங்கள கிராமங்களில் தாங்களே படுகொலை செய்துவிட்டு அந்த புகைப்படங்களை தமிழ் மக்களை சிங்களவர் படுகொலை செய்ததாக அமெரிக்காவில் காட்டுகின்றனர் புலிகள். எனவே பௌத்த மறுமலர்ச்சிக்காக இந்த சிங்கள ஆணைக்குழுவால் பலவற்றைப் புரிய முடியும்...”
(லங்காதீப-20.12-96)

குணதாச அமரசேகர உரையாற்றுகையில்

”...இன்று எமது நாட்டின் சனத் தொகையில் எழுபத்தைந்து வீதமளவு வாழும், அதே போல் ”இனம்” என்று அழைக்கக்கூடிய தகுதியுடைய ஒரே யொரு இனக்குழுமமான சிங்களவர் பல இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த ஆணைக்குழு ஒரு அரசியலின் அடிப்படையிலேயே முன்செல்ல வேண்டும். அது குறிப்பாக தேசிய அரசியல் நோக்குடன் இருக்க வேண்டும். அது சிங்கள இனத்தை முதன்மையாகக் கொண்ட ”சிங்களத் துவத்தை” மையப்படுத்திய தேசிய நோக்காதல் வேண்டும். இதற்கு சந்தர்ப்பவாத ”கட்சி அரசியல் முறை” யை கைவிட்டு விதேச அரசியலுக்குப் பின்னால் போகாமல் இருத்தல் வேண்டும்...

இந்த நாட்டின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கமர்ந்து செய்ததெல்லாம் சிங்களவரின் அரசியலை பலவீனப்படுத் தியதே. சரியாக இரண்டாக பிரித்து பூஜ்ஜியத்துக்கு தள்ளியதே இதன் மூலம் நடந்தது. இதன் காரணமாக சிறுபான்மை இனவாதிகளின் அதிகாரம் வரவர மேலெழும்பியது. அதிகாரம் படைத்தவர்கள் தாம் அதிகாரத்தைப் பெறுவதற்கான தீர்மாணகர சக்திகளாக சிறுபான்மையி னர் ஆனார்கள். சிங்கள மக்களுக்கு ஏற்பட்ட சகல அநியாயங்களுக்கும் காரணமானது இதுவே. இப்போதாவது சிங்களவர் தமது இனத்தின் அழிவை நெருங்கி வருகிறார்கள் என்பதை உணர வேண்டும். அதற்கு இந்த ஆணைக்குழு பயன்பட வேண்டும்...

இந்த நாட்டில் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்து­வப்படுத்துவ தாக கூறும் சகல கட்சிகளும் இனவாத கட்சிகளே என்பதை யாவரும் அறிவர். அந்த இனவாதத் தலைவர்கள், தமது இனவாத முகத்தை தயங்காது வெளிக் காட்டி வருகிறார்கள். இவர்கள். சிங்கள மக்களை இனவாதிகளாகவே உலகம் முழுதும் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர். இவ்வளவையும் சிங்களவன் இத்தனை காலம் கொறுமையாக சகித்துக்கொண்டிருந்தான். இவ்வாறு சிறுபான்மை இனவாத கட்சிகள் செயற்படும் வரை சிங்களத்துவத்தை முன்னிறுத்திய தேசிய அரசியலொன்றை வளர்க்க முடியாது. தொடர்ந்தும் இக்கட்சிகள் இயங்க இடமளிக்கத் தான் வேண்டுமா என்பதை இந்த ஆணைக்குழு தீர்மாணிக்க வேண்டும்...” (29.12.96-திவய்ன)

மடிகே பஞ்ஞானசீல நாஹிமி உரையாற்றுகையில்

”...சகல பௌத்த அமைப்புகளும் ஒன்றிணையாவிட்­டால் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு இன்னும் நாற்பது ஐம்பது வருடங்களில் முழு இலங்கையும் போய்விடும். நாம் ஒன்றிணையாது போனால் இந்த ஆக்கிரமிப்பு நிச்சயமாக நடந்தே தீரும்...”

அலுத்கம தம்மானந்த அநுநாயக்க ஹிமி உரையாற்றுகையில்

”...இன்று அதிகார பூர்வமாக பதிவு செய்யப்பட்ட 32 கட்சிகள் உள்ளன. கடந்த 48 ஆண்டுகளில் 48 கட்சிகள் தோன்றாமல் இருந்தது ஆச்சிரியமானதே. இந்நாட்டில் தோன்றிய கட்சிகள் பல சிங்களவரை பிளவுபடுத்திய கட்சிகள். மகாசங்கத்தினரும், மக்க ளும் கட்சிரிதியாக பிளவுற்றிருக்கின்றனர். கட்சி பேதமில்லாமல் ஆளுங் கட்சி, எதிர்கட்சிகளையும் கலந்து கொள்ளும்படி எழுத்துமூலம் அறிவித்தி ருந்தோம்.

கிராமப்புறங்களில் நூற்றுக்கு 25 வீதம் சிறுபான்­மையினர் வாழ்ந்தாலும் சிங்கள தமிழ் இருசாராரும் அப்பிர தேசத்தை நிர்வகிக்க வேண்டுமென கடந்த நாட்களில் செய்தி வெளியாகியிருந்தது. அப்படியானால் கொழும்பு, கண்டி போன்ற பிரதேசங்களுக்கு என்ன ஆவது? இன்று எமக்கிருப்பதோ 25ஆயிரம் மைல் பரப்பே அதிலும் கொஞ்சம் கடலில். இருக்கும் கொஞ்சத்தையும் பிரித்து போடப் போகிறார்களா...?”

பேராசிரியர் கம்புறுபிட்டியே ஆரிய சேன நாஹிமி உரையாற்றுகையில்

”... பாராளுமன்ற பிரதிநிதிகளைத் தெரிவு செய்வது தொடர்பாக 78ம் ஆண்டு அரசியலமைப்பில் உருவாக்கப் பட்ட விகிதாசார தேர்தல் முறையினால் சிங்களவர்க்கு அநியாயம் நடந்துள் ளது. வேறு காலங்களில் ஒரு ஆசனம் மட்டுமே கிடைக்கிற தொண்டமான், அஷரப் போன்றவர்களுக்கு இதன் காரணமாக ஒன்பது , எழு என கிடைக்கிறது. சிங்கள பெரும்பான்மை இனத்தை ஏமாற்றி சிறுபான்மை வாக்குகளால் ஆட்சிக்கு அமர பிரதான கட்சிகள் செயற்படுவது இந்த தேர்தல் முறையினாலேயே. இதனால் என்றாவது இனக்கலவரமொன்று வரும். சிங்க ளவரை பாதுகாக்க இந்த தேர்தல் முறை அழிக்கப்பட வேண்டும்...” (19.12.96-திவய்ன)

தேசிய ஒருங்கிணைப்பு கமிட்டியின் பொதுச்செய­லாளர் பேராசிரியர்பிய சேன திசாநாயக்க உரையாற்றுகையில்

”...பிரித்தானியர் மிகவும் சூட்சும மான முறையில் தமிழ் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் விசேட சலுகைகளை அளித்தனர். பெரும்பா ன்மை சிங்களவர்க்கு அநீதி புரிந்தனர். இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சி புரிந்தவர்கள் அனைவரும் சிங்கள மக்களின் சகல உரிமைகளையும் காட்டிக் கொடுத்து சிறுபான்மையினரை வென்றெடுப்பதனூடாக அதிகார த்தில் அமரவே முயன்றுள்ளனர். இதனை சிங்கள மக்கள் மேலும் பொறுக்க மாட்டார்கள்...”

பேரினவாத எழுச்சியை அலட்சியம் செய்யலாமா?

இவ்வாறான உரையாடல் சிங்கள மக்களை மேலும் சிங்கள பேரினவாத கருத்தியலை நோக்கி அணிதிரட்டவும் மேலும் வளர்க்கவுமே செய்கிறது.

அண்மைய சிங்கள பௌத்த பேரினவாத எழுச்சியானது அலட்சியம் செய்யத்தக்க ஒன்றல்ல. தமிழ் மக்கள் முன்வைத்தால் அதை இனவாதமென் றும் சிங்கள பேரினவாதம் முன்வைத் தால் அதனை உரிமையென்றும் மிகச் சாதாரணமாகவே பேசப்படும் ஒரு நிலமை வளர்ந்து வருகிறது.

தற்செயலாக நடந்த பிழையொன்றினால் தீகவாபி பிரச்சினை துவேஷ த்தை கிளப்பியிருந்தமையும் அது தற்செயலானது என்று ஒப்புக்கொள்ளப்பட்ட பின்னரும் தென்னிலங்கையில் நடந்த பேரினவாத பிரச்சாரங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் கருத்தரங்குகள் என்பன பேரினவாதம் எவ்வளவு தூரம் நிறுவுனமயப்பட்டு திட்டமிட்டு முன்னேறி வருகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

”ஈழம் படுகுழியானது” எனும் தலைப்பில் நடந்த கண்காட்சியில் காண்பிக்கப்பட்ட புகைப்படங்கள், எழுப்பிய துவேஷங்கள், பல்கலைக் கழக மட்டத்தில் தற்போது நடத்தப் பட்டு கருத்தரங்குகள் சிங்கள மொழியிலான பேரினவாத நூல்கள் வெளியீடு என்பன பக்கசார்பான-அதே வேளை பொய்மை மிகுந்த பிரச்சாரங் களை வெளிப்படுத்தின. சிங்கள பேரினவாத சக்திகளை அணிதிரட்டு கின்ற பரந்த தேசிய முன்னணி அகைகப்பட்டு வருவதும் அது ஜனவரி இறுதிக்குள் தன்னை வெளிப்படுத்த இருப்பதும் கட்சி ரிதியில் பேரினவாதம் நிறுவனமயப்புடுவதை காட்டுகிறது.

தென்னிலங்கையில் பலர் இந்நிகழ்வுகளை அலட்சியமாகவே கான்கின் றனர். பலமற்ற சிறுகுழு மாத்திரமே இவையென்றும் இதனால் ஒன்றும் ஆகப்போவதில்லையென்றும் பேசப்பட்டபோதும் முக்கியமாக இங்கு கவனிக்க வேண்டிய ஒரு அம்சம்தான் இச்சக்திகளின் இயங்கியலுக்கும், இருப்புக்கும் தோதான சூழல் தேசிய அளவில் அதிகார மட்டத்தில் இயங்கி வருகிறது என்பது தான்.

பேரினவாத சார்பு அரசொன்றினால் என்ன பண்ண முடியும்?

அரசினதும் அரச யந்திரங்களி னதும் செயற்பாடுகள் பேரினவாதத் துக்கு சார்பாகவே உள்ளன. அரசாங்க த்தைச்' சேர்ந்தவர்களது உரைகள், அரச தொடர்பு சாதனங்களுக்குகூடாக ஆட்சேர்ப்புக்கு காட்டப்படும் விளம்பரங்கள், எல்லைப்புற கிராமப் படுகொலை பற்றி வாராந்தம் தொலைக்காட்சியில் கான்பிக்கப்படும் விவரணங்கள் செய்தித் தொகுப்புகள், அரசியல் கலந்துரையாடல்கள் என்பன மறுபக்கத்தை சொன்னதே இல்லை. போதாதற்கு சகல தொடர்பூடக செயற்பா­டுகளும் அதாவது அரச சார்பற்ற 'சுதந்திர' பத்திரிகை­களும் சுட பேரினவாதத்துக்கு எதிரான கருத்தூட் டலை, வழிநடத்தலை செய்வதில்லை.

ஐ.தே.க. சார்பு டீ.என்.எல் தொலைக் காட்சி சேவை­யோ அரச தொடர்பு சாதனங்களுடன் போட்டியிட்டு பேரினவாதத்தை கக்குகின்றன. இதற்கு பல உதாரணங்கள் உண்டு.

சிங்கள பேரினவாத தரப்பு முன்வைப்புகளுக்கு எதிர்வினையாக தமிழ் தரப்பில் ஜனநாயக மட்டத்தில் முன்வைக்கக்கூட வாய்ப்பான சூழல்தான் தென்னி­லங்கையில் உண்டா? முன்வைக்கப்பட்டுள்ள அரை­குறை தீர்வை நோக்கிக் கூட சிங்கள மக்களை அணி­திரட்ட முடியாத (முயலாத) அரசாங்கம் நாளை குறைந்­தபட்ச சமஷ்டிக்காகக் கூட அணிதிரட்டுவதென்றால் அது சாத்தியமாகுமா? ஏற்கெனவே சிங்கள பேரினவா­தத்துக்காக தீர்வுத்திட்ட யோசனைகளிலிருந்து ஆங்காங்கு விட்டு கொடுத்து வந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ஏதாவது செயததுண்டா?

இந்நிலைமைகளுக்கெல்லாம் மாறாக இயங்கி வரும் அரசாங்கம் புதிய போpனவாத எழுச்சியை முறியடிக்க என்னதான் பண்ணிவிட முடியும்?

பேரினவாதம் செய்யும் எச்சாpக்கை, பயமுறுத்தல் வரலாற்றுத் திரிபு, கருத்தியலுஸட்டல் என்பனவற்­றுக்கு பொறுப்புடன் எதிர்நிலையில் செயற்பட வேண்டிய அரசே அதற்குத் துணை போவதுடன் கூடச் சேர்ந்து செய்யும் அதற்கு சமமான செயற்பாடுகளானது நாளை ஒரு சமாதானச் சூழலுக்காக அரசே மாறி நின்று தன்னை நோக்கி இழுக்க முயன்றாலும் அது வளர்த்து விட்ட பேரினவாத சித்தார்ந்தமானது தாமும் போகப்போவதில்லை அரசை யும் விடப்போவதில்லை.

(இதழ்-113,ஜனவரி-97)

0 comments:

தளத்தின் உள்ளடக்கம்.

இந்தத் தளத்தில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உருவாக்கம், விரிவாக்கம், கருத்தாக்கம், அதன் வடிவம், அதன் நிறுவனமயமாக்கம், அதன் திசைவழி குறித்து சரிநகர், ஆதவன், நிகரி, விடிவு, பறை, இனி போன்ற பதிப்புகளில் வெளிவந்த என்.சரவணனின் கட்டுரைகள் மறுபிரதியிடப்படுகின்றன.

சுவடி

Template by - Abdul Munir - 2008 - layout4all