என்.சரவணன்
''நீங்கள் பிக்குமார். அன்னச் சோறு சாப்பிடுவதும் மோட்சத்தை அடைவதற்கு பண (பௌத்த உபதேசம்) சொல்வதுமே உங்கள் வேலை. அன்று மன்னர்காலத்தில் உங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அப்படியே இன்று நான் பிரதிபண்ண பண்ணமுடியாது. அரசியலமைப்பின் படியே நான் ஆட்சி நடத்த முடியும். உங்கள் இஷ்டப்படி ஆட்சி நடத்துவதென்பது அரசியலமைப்புக்கு விரோதமானது. அரசியலமைப்புக்கு விரோதமாவதென்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. ஜனநாயகத்துக்கு விரோதமாவதென்பது மக்களுக்கு விரோதமானது. அப்படியான ஒன்றை என்னால் செய்ய முடியாது. நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள். நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம்”
இப்படி யார் கூறியிருந்தார் என யோசிக்கிறீர்களா? மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். தான் இப்படி கூறியிருக்கிறார். 1977இல் பதவிக்கு வந்து சில காலத்தில் பிக்குமார், தங்களுக்கும் பௌத்தத்துக்கும் மன்னர்கள் அளித்த முக்கியத்துவத்தை தற்போதைய அரசாங்கம் அளிக்கவில்லையென கூட்டம் கூடி அறிவித்த பின் அவர்களெல்லோரையும் அழைத்து கூட்டமொன்றை வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு ஜே.ஆர். தெரிவித்திருந்தார். ஜே.ஆரின் மக்கள் நேசிப்பு, ஜனநாயகம் என்பன ஒருபுறமிருக்க, பௌத்தத்துக்கு அரசியலமைப்பு ரிதியாகவே அந்தஸ்தெல்லாம் வழங்கிவிட்டு அதே பௌத்த சக்திகள் தனது எதிரணி அரசியல் சக்திகளுடன் சேர்ந்து தனக்கு எதிராகப் புறப்பட்டு விடாதபடியிருக்க அதற்கு ஒரு எல்லைக் கோட்டைப் போட்டுவிட்டிருந்தார்கள்.
''1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் பௌத்தமதத்தை அரசமதமாக மீண்டும் ஜே.ஆர். பிரகடனப்படுத்தியதானது வெறுமனே ஜே.ஆர் சார்ந்த விடயம் மட்டுமல்ல. 1972ஆம் ஆண்டு ஸ்ரீ.ல.சு.க. ஆட்சியிலேயே அது கொண்டு வரப்பட்டு விட்டதால் அதனை ஜே.ஆரால் நீக்கிவிடுவது என்பது சாத்தியமானதல்ல” என சில அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுவர்.
பௌத்த மதத்துக்கு அரசியலமைப்பின் மூலம் கொடுத்த முக்கியத்துவம் என்பது சிங்கள பௌத்த சக்திகள் அரசையே தமது பொம்மையாக ஆட்டி வைக்குமளவிற்கு கட்டுப்பாட்டை மீறி சென்று விட்டது. தமது பிழைப்பரசியலுக்கு பௌத்தத்தை எப்படி பயன்படுத்தலாம் என ஆட்சியாளர்கள் செயற்பட்டு வந்தனர். ஆனால் அரசை தமக்கு ஏற்றாற் போல் எப்படி நடத்துவது என்பதில் சிங்கள பௌத்த தரப்பு வெற்றி கண்டு விட்டது. அதன் தொடர்ச்சிப் போக்குகளில் ஒன்றாகவே இன்று மங்கள சமரவீரவுக்கு நேர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. சிங்கள ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை வரலாற்றின் குப்பைத் தொட்டியிலேயே போடப்படும் என தபால் தொலைதொடர் அமைச்சர் கூறியிருந்த கருத்துக்கு எதிராக இன்று சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் எழுப்பியிருக்கும் பிரச்சினையும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் கடந்த இருவாரங்களாக சகல தொடர்பு ஊடகங்களிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள விடயம். இது சமகாலத்தில் அரசுக்கும் சிங்கள பேரினவாத சக்திகளுக்கும் தமிழ் தேசிய சக்திகளுக்கும் பிரதான பிரச்சினையாகவும் ஆகியிருக்கிறதென்றால் மிகையில்லை.
சிங்கள ஆணைக்குழு:
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18ம் திகதியன்று அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் வைத்து 'தேசிய ஒருங்கிணைப்பு கமிட்டி” எனும் அமைப்பால் தொடக்கப்பட்டதே சிங்கள ஆணைக்குழு. இந்த கமிட்டியின் கீழ் 47 சிங்கள பௌத்த அமைப்புகள் ஒன்றிணைந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
காலனித்துவத்துக்குப் பின்னர் சிங்கள மக்களுக்கு நேர்ந்த சகல அநீதிகளையும் ஆராய்வதற்காகவே இவ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முக்கிய 14 தலைப்புகளில் அவ் அநீதிகளை ஆராய்வதாகவும் அது தெரிவித்திருந்தது.
அவ் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எல்லோரும் மிகவும் முக்கியமானவர்கள். முன்னாள் பிரதம நீதியரசர், பேராசிரியர்கள் உயர் அரச அதிகாரிகள் என்போர் அடங்குவர்.
இவர்கள் மாவட்டம் மாவட்டமாகப் போய் சாட்சியங்களை விசாரித்தனர். பல அரசியல்வாதிகள், பொலிஸ், மற்றும் படை அதிகாரிகள் அரச உத்தியோகத்தர்கள், பௌத்த பிக்குமார், சிங்கள பௌத்த அமைப்புகள் எனப் பலர் தனிநபர்களாகவும், அமைப்புகளாகவும் சாட்சியமளித்தனர்.
தமிழ், முஸ்லீம், மலையக மக்களுக்கு எதிராக பலர் ஆணைக்குழுவின் முன் உரையாற்றினர். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட இதில் சாட்சியமளித்தனர்.(மே 26ம் திகதி அன்று குருநாகல் மாவட்ட ஆளுங் கட்சி பா.உ. ஜயசேன ராஜகருனா சாட்சியம் அளித்திருந்தார்) தொடர்பு சாதனங்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கின ஆணைக்குழுவின் முன் நிகழ்த்தப்படும் உரைகளெல்லாம் அடுத்த நாளே சகல சிங்கள, ஆங்கில தினசரிகளிலும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டு வந்தன.
ஆணைக்குழுவின் விசாரணைகள் எல்லாம் பௌத்த நிலையங்களிலேயே நடத்தப்பட்டன. இந்த ஆணைக்குழு சாட்சியங்கள் சகல தொடர்புசாதனங்களுக்கூடாகவும் வெளிவந்தமையானது தமிழ், முஸ்லீம், மலையக மக்களுக்கெதிராக பெரும் பிரச்சாரத்தையும் இனத்துவேஷத்தையுமே அதிகரிக்கச் செய்திருந்தது. மீண்டும் மீண்டும் ஒரே விதமான துவேஷக் கருத்துக்களும் வரலாற்றுப் பொய்களும் சொல்லப்பட்டமையால் பேரினவாதத்தை அது ஆழப்படுத்தியது.
ஏன் ஆணைக்கு?
ஆணைக்குழு அவசர அவசரமாக தோற்றுவிக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கவே செய்கிறது. அரசாங்கம் முன்வைத்த உத்தேச தீர்வுப்பொதியை முறியடிப்பதே இதன் பிரதான இலக்காக இருந்தது. அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வுப்பொதி நாட்டை துண்டாடும் ஒன்று என்றும் சிங்கள நாட்டை பிரபாகரனுக்கும், அஷ்ரப்பிற்கும், தொண்டமானுக்கும் தாரைவார்த்துக் கொடுக்கும் முயற்சி என்றும் சிங்கள இனவாத சக்திகள் பிரச்சாரம் செய்து வந்தன.
பல எதிர்ப்புக் கூட்டங்களை நடத்தின. படிப்படியாக இந்த எதிர்ப்புகள் எல்லாமே ஓரணியில் திரண்டன. ஏலவே வளர்த்து விடப்பட்டிருந்த சிங்கள பௌத்த பேரினவாத கருதியலும் , தொடர்பூடகங்கள், பௌத்த உயர் பீடம், அரசாங்கத்தை எதிர்க்கும் தொலைக்காட்சிகள் என அனைத்தினதும் உதவிகளால் பேரினவாதம் பலமாக நிறுவனமயப்படுவது கடினமாக இருக்கவில்லை.
குறிப்பாக தேசிய பௌத்த மகாசங்கத்தினரின் ஆசி இந்தபேரினவாத சக்திகளுக்குக் கிடைத்தது. அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கிய மகா சங்கத்தினர் ஒரு கட்டத்தில் 'தீர்வுப்பொதியை” வாபஸ் வாங்காது போனால் மகாசங்கத்தை விட்டு தாங்கள் விலகப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன் படி சிலர் செய்தும் காட்டினர் அதனைத் தொடர்ந்து பல பாதயாத்திரை, சத்தியாக்கிரகங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் என நடாத்தினர். இறுதியில் அரசு இறங்கிப்போய் அவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் என்ன உடன்பாடுகள் காணப்பட்டன என்பது வெளிவரவில்லை. ஒரு சில மாதங்கள் அமிழ்ந்திருந்த இந்த எதிர்ப்புகள் அரசு புதிதாகத் திருத்திய உத்தேச அரசியல் திட்டத்தை முன் வைத்ததோடு திடீரென மீண்டும் வெளிக் கிளம்பின. இதற்கு அரசு பேரினவாதிகள் கேட்டபடி அத்தனையும் அரசியல் திட்டத்தில் கொண்டிராதது காரணமாக இருக்கலாம். இறுதியில் இந்த ஆணைக்குழுவில் போய் முடிந்தது.
ஆணைக்குழுவின் ஆறிக்கை
ஆணைக்குழு தனது விசாரணையை முடிக்கும் முன்னமே தனது இடைக்கால அறிக்கையை வெளியிட வேண்டியேற்பட்டதற்கு சில காரணங்கள் உண்டு. குறிப்பாக அரசாங்கம் தனது உத்தேச அரசியல் திட்டத்தை பட்ஜட்டுக்கு முன்பு பாராளுமன்றத்துக்கோ அல்லது நேரடியான சர்வஜன வாக்கெடுப்புக்கோ விடப்போவதாக அறிவித்திருந்ததே அதன் காரணம். எனவே தீர்வுத்திட்டத்தை முறியடிக்க அவசரஅவசரமாக தயாரிக்கப்பட்டதே ''சிங்கள ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை”
இந்த அறிக்கை செப்டம்பர் மாதம் 17ந் திகதியன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது. அறிக்கையை யானையின் மேல் வைத்து (பெரஹர) ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பொரளை பௌத்த இளைஞர் காங்கிரசில் இருந்து பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள பௌத்த மகா சம்மேளனத்துக்கு கொண்டு வரப்பட்டது. பல பிக்குகள் உட்பட பெருந்திரளானோர் ஊர்வலமாக வர ஊர்வலத்தின் முன் அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது அமர்ந்தபடி (கண்டி நிலமே சீருடையில்) சிங்கள ஆணைக் குழுவின் செயலாளர் பத்மஷாந்த விக்கிரம சூரிய ஆணைக்குழு அறிக்கையை ஏந்தியபடி வந்தார். கூட்டம் நிரம்பி வழிய பௌத்த சடங்கு முறைகளுடன் கூட்டம் நடந்தது. அறிக்கை சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டு விற்கப்பட்டது. (ஆங்கிலம்: ரூ.150 சிங்களம்: ரூ. 125) அறிக்கையை நீண்ட வரிசையில் நின்று வாங்கினார்கள். மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிய ஏனையோர் மற்ற கட்டிடங்களிலும், வெளி மைதானத்திலும், பாதையிலும் நின்று ஒலிபெருக்கியில் கேட்டுக்கொண்டிருந்தனர். தொலைக்காட்சிப்பெட்டிகள் ஆங்காங்கு வைக்கப்பட்டு மண்டபத்தில் நடப்பவை நேரடியாக காட்டப்பட்டுக் கொண்டிருந்தன.
ஆணைக்குழு அறிக்கையை வெளியிடுவதற்கு செப்டம்பர் 17ம் திகதியை தெரிந்தெடுத்ததற்கு காரணம் அது அநகரிக்க தர்மபாலவின் சிரார்த்ததினம் என்பதே. அநகாரிக்க தர்மபால சிங்கள பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என சிங்கள பௌத்தர்கள் குறிப்பிடுவர். அவர் சிங்கள பௌத்த பேரினவாதத்தை பரப்புவதில் எந்தளவு பங்காற்றியிருந்தார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்தக் கூட்டத்திற்கு முன்னைநாள் எம்.பி. தினேஸ் குணவா;த்தன, ஸ்ரீமணி அத்துலத்முதலி மற்றும் அமைச்சர் தி.மு.ஜயரத்ன உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டதுடன் அமைச்சர் தி.மு.ஜயரத்ன அறிக்கையை மகாசங்கத்தினரிடமிருந்து மேடையில் வைத்துப் பெற்றுக் கொண்டார்.
ஆணைக்குழுவின் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரையில் அதில் முழுக்க முழுக்க தீர்வுத்திட்டத்துக்கு பதிலளிக்கும் வகையிலும், சிங்கள பௌத்தர்களுக்கு பிரயோசனப்படக் கூடிய வகையில் ஒற்றையாட்சித் தன்மையைப் பேணக்கூடிய, சிங்கள பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கக் கூடிய வகையிலும் சட்டப் புத்தகம் போல் தொகுக்கப்பட்டிருந்தது.
அன்றைய பத்திரிகைகளில் வெளியீட்டுச் செய்தியை விளம்பரங்கள், வாழ்துக்கள், செய்திகள் என அமர்க்களப்படுத்தியிருந்தன.
அடுத்தடுத்த நாட்களில் அறிக்கை முழுவதும் தொடராக திவய்ன, லங்காதீப, ஐலண்ட் ஆகிய பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின. ஆணைக்குழு அறிக்கைக்கு ஆதர வாக பொதுவாக அறிக்கைகள் பல பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தன. அதற்கு எதிராக எந்த குரலும் இருக்கவில்லை.
வரலாற்றுக் குப்பைக்கூடைக்குள்
சிங்கள பௌத்த சக்திகளை பகைத்துக் கொள்ள பலர் விரும்பவில்லை. ஆனால் இது பற்றி ஆளுங்கட்சியினதும் எதிர்க்கட்சியினதும் அபிப்பிராயத்தை அறிய பலர் ஆர்வமாக இருந்தனர். செப்டம்பர் 25ம் திகதியன்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த பத்திரிகையாளர் கூட்டம் நடந்தபோது ஒரு பத்திரிகையாளர் அமைச்சரவைப் பேச்சாளரான மங்கள சமரவீரவிடம் கேட்டு விட்டார். அவரும் உணர்ச்சி வசப்பட்டவராக ''சிங்கள ஆணைக்குழுவின் அறிக்கை வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தான் போடப்படும்” என அறிவித்து விட்டார். அன்றைய தொலைக்காட்சி, வானொலி செய்திகளில் இது கூறப்பட்டதோடு அடுத்த நாள் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் முன்பக்க முக்கிய செய்தியாக இது இடம் பெற்றது.
தமது தீர்வுத்திட்டத்துக்கு எதிராகவே திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட அந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக பதிலளிக்க வேண்டும் எனும் நோக்கம் தான் இருந்ததேயொழிய சிங்கள பௌத்த பேரினவாத போக்குக்கு பதிலளிக்கும் தைரியம் மங்களவிடம் இருக்கவில்லை. எப்படி இருக்க முடியும்?பண்பில் இந்த இரு தரப்புக்குமிடையில் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்? எந்த அளவில் இருக்கக் கூடும்?
மங்களவின் ”குப்பைக் கூடை” கதைக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை போpனவாத சக்திகள் காட்டத் தொடங்கின. பௌத்த மகா சங்கத்தினர், இவை மகா சங்கத்தினரை அவமதிக்கும் ஒன்றெனக் கூறி பிரச்சாரம் செய்தனர். மகா சங்கத்தினரை அவமதிப்பதென்பது சிங்கள பௌத்தர்களைப் பொறுத்தளவில் சாதாரண விடயமல்ல. பலர் மங்களவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டனர். (பார்க்க பெட்டி செய்தி) எதிர்ப்பு செய்தி சூடு பிடித்தது. செப்டம்பர் 30-ம் திகதியன்று கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் 1500க்கம் மேற்பட்ட பிக்குமார்கள் உட்பட பலர் ஒன்று கூடி எதிர்ப்பார்ப்பாட்டத்தை நடாத்தினர். உள்ள புத்தர் சிலைக்கு பூசை செய்துவிட்டு அங்கிருந்த அநகாரிக்க தர்மபாலவின் சிலைக்கருகில் அமர்ந்து தமது எதிர்பார்ப்பாட்டத்தை நடாத்தினர்.
அவ் வார்ப்பாட்டத்தில் ஆளுங் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கேசரலால் குணசேகர, ஐ.தே.க பா.உ. சுசில் முனசிங்க, முன்னாள் பா.உ.க்களான தினேஷ் குணவர்தன, எஸ்.எல்.குணசேகர, சிங்களயே மகா சம்மத்த பூமி புத்திர பக்ஷ்ய” கட்சியினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். அமைச்சர் தனது அறிக்கையை வாபஸ் பெற 42 மணிநேர கெடு கொடுத்தனர். எந்த பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் மேலும் 72 மணி நேரம் வழங்கினர்.
அதே வேளை சகல விகாரைகளிலும், மதச் சடங்குகளிலும் அமைச்சர் மங்கள சமரவீரவை நிராகரிக்கின்ற வகையில் ”பத்த நிக்குஜ்ஜன கர்ம” தண்டனையை விதிப்பதாக தேசிய பௌத்த மகா சங்கத்தினர் தீர்மான மெடுத்திருந்தனர். அந்த தீர்மானத்தின் படி ”மங்கள உட்பட நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் சதிகாரர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க தெய்வத்துக்கு முறையிட்டு தெய்வ சந்நிதிகளில் ஆயிரம் தேங்காய்கள் உடைக்கவும் தீர்மானித்துள்ளோம் என மகா சங்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோஹித்த தேரர் அறிக்கை வெளியிட்டார்.
”பத்த நிக்குஜ்ஜன கர்மய”
இந்த தண்டனையை மங்களவுக்கு மகா சங்கத்தினர் அளித்துள்ளனர். இதன் படி மங்களவின் மதச் சடங்குகளில் மகாசங்கத்தினர் கலந்து கொள்ளமாட்டார்கள் என்பதுடன் மங்களவின் பௌத்த கடமைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இந்த தண்டனை வரலாற்றிலேயே இறுதியாக வழங்கப்பட்டது காசியப்பன் அரசனுக்கே.
காசியப்பன் தனது தகப்பன் தாதுசேனனை கொன்றுவிட்டு அரசமர்ந்தவன். ஒருமுறை காசியப்பன் அன்னதானத்துக்கென பிக்குமாரை அழைத்திருந்தான். பிக்குமார் அமர்ந்தனர். அன்னதானத்தை வழங்க முற்பட்டபோது அன்னப் பாத்திரத்தை பிக்குமார் திருப்பிக் கொண்டனர். ” தந்தையைக் கொன்ற தனயனின் அன்னதானம் எமக்கு தேவையில்லை என்றனர்...”
மங்கள சமரவீர அளித்திருந்த ஒரு பேட்டியில் ” காசியப்பனுக்குப்பின் தண்டனை பெறுவது மங்கள சமரவீர என்று வரலாற்றில் பதிவாவதானது எனக்கு மகிழ்ச்சியே” என தெரிவித்திருந்தார்.
அரசாங்க சார்பு பிக்குவான ”ஸ்ரீ ரோஹணபிக்கு பெரமுன”வின் செயலாளர் கெட்டமான்னே தம்மாலங்கார தேரர் தினமினவில் வெளியிட்ட அறிக்கையொன்றில்...
”பத்த நிக்குஜ்ஜன கர்மய'வை அமைச்சருக்கு எதிராக எப்படிவிதிக்க முடியும். இன்று அன்னப் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு எந்த பிக்கு போகிறார். அந்த தண்டனை விதிக்கப்பட்ட எவரேனும் அன்னமிட வந்தால் அவ் அன்னத்தை பெறாது பாத்திரத்தை திருப்பிக் கொள்ள வேண்டும். பௌத்த தர்மம் சொல்லிக் கொடுத்துள்ள 'நிக்குஜ்ஜன கர்மய' சரி என அவர்கள் எண்ணுவதாயின் பௌத்த தர்மத்தில் சொல்லப்பட்டுள்ளபடி பாத்திரமேந்தி பிச்சையெடுத்து பசி தீர்ப்பதையும் கடைப்பிடிக்க வேண்டும்.என்கிறார்.
”மங்களவுக்கு நீங்கள் என்ன தன்டனை விதிப்பது இதோ பாருங்கள்” எனும் தொணியில் 4ஆம் திகதியன்று வெளியான ஏரிக்கரை பத்திரிகையான தினமின (அரச கட்டுப்பாடு பத்திரிகை) மங்கள சமரவீர பௌத்த சடங்குகள் செய்வதை பெரிய படமாக போட்டு அமர்க்களப்படுத்தியிருந்தது.
விசாரமாகா தேவி ஆர்ப்பாட்டத்துக்கு முன்னைய நாளான 29ஆம் திகதியன்றுஅமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பேசப்பட்டது. அதன் போது ஜனாதிபதி சந்திரிகா ”ஒரு அறிக்கையை வெளியிட்டு அதை வாபஸ் வாங்கி அந்த பிரச்சினைக்கு முடிவு காணுங்கள்” என கூறியதாக லங்காதீப பத்திரிகை தெரிவித்திருந்தது. இதன் மூலம் அரசின் சரணடைவையே இங்கு வெளிப்படுத்துவதைக் காணலாம். ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தாலும் அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் மங்களவிடம், ”அரசாங்கத்தை பாதுகாக்கின்ற வகையில் அவ்வறிக்கையை மங்களவின் 'சொந்தக் கருத்தாகஆக்கி' தனிப்பட்ட முறையில் தீர்க்குமாறு தொவித்ததைத் தொடர்ந்து மங்களவும் அதனை ஏற்றக்கொண்டுள்ளார். அதன்படி மங்கள சமரவீர ஒக்டோபர் முதலாம் திகதியன்று பத்திரிகை அறிக்கையொன்றை வெளியிட்டு தனது பேச்சு மகாசங்கத்தினரை புண்படுத்தியிருந்தால் அதற்காக தான் வருந்துவதாக தெரிவித்தார். ஆனால் மகாசங்கத்தினர் அதனை ஏற்கவில்லை. சிங்கள மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதோடு தீர்வுத்திட்டத்தையும் வாபஸ் வாங்க வேண்டுமென்றும் அறிவித்தனர். தொடர்ந்தும் தமது எதிர்ப்பார்ப்பாட்டத்தை நாடுமுழுதும் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
அரசாங்கமோ இந்த எதிர்ப்புகள் தமது தீர்வுத்திட்டத்துக்கு உலை வைக்கப்போகிறது எனப் பயந்ததில் வேறு சில பிக்குமாரையும் பௌத்த அமைப்புகளையும் சேர்த்துக்கொண்டு மகாசங்கத்தினரின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது. தொலைக்காட்சி செய்திகளில் அதிக நேரம் இந்த எதிர்ப்பிரச்சாரங்களுக்கு ஒதுக்கப்பட்டதுடன் பௌத்த பிக்குமாரைக் கொண்டே பதிலளித்தது. ஒக்டோபர் 7ஆம் திகதியன்று விகாரமகாதேவி பூங்காவினருகில் அரசாங்கத்தின் தீர்வுத்திட்டத்தை ஆதரித்து ஒரு பெரும் ஆர்ப்பாட்டத்தை அரச சார்பு பௌத்த அமைப்புகள் நடத்தின. பெருமளவில் இதற்குக் கூட்டம் இருந்தது. பல அரச சார்பற்ற நிறுவனங்களும், புத்திஜீவிகளும் ”பேரினவாதிகளுக்கு எதிராக” ஒன்று சேர வேண்டும் எனும் நோக்கில் அரசாங்கத்தை ஆதரித்து வருவது வேடிக்கையாக இருக்கம் அதே நேரம் தீர்வுத் திட்டத்தையும் ஆதரித்து தமது வேலைத்திட்டங்களை அமைத்து வருகின்றன. இந்த கண்மூடித்தனமான போக்கு ஒட்டுமொத்தத்தில் பேரினவாதத்துக்கு பலி கொடுக்கும் ஒரு போக்கேயன்றி வேறில்லை.
பேரினவாதிகளின் நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக நிதியளித்து அதரவளித்து வருவதாக ஐ.தே.க சார்பு சிங்கள வார பத்திரிகையொன்று தெரிவித்துள்ளதும் இங்கு கவனிக்கத்தக்கது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஐ.தே.க.வினர் மீது ஒழுக் காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதெல்லாம் வெறும் கண்கட்டிவித்தையே. ”சிங்கள ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் கூறியிருப்பதைக் கொண்டு அதன் உள்நோக்கத்தை அறியலாம். ஐ.தே.க. இது பற்றிய தனது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்க வில்லை. ஆனால் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு பூரணமாக உடன்பாடில்லாவிடினும் ஒற்றையாட்சித் தன்மை மாறாதிருக்க வேண்டும். எனும் ஆணைக்குழுவின் அறிவிப்புக்கு தமக்கும் உடன்பாடு உள்ளது” என ரணில் தெரிவித்திருப்பதையும் கொண்டு அதன் உண்மையான சுயரூபத்தை அறியலாம்.
அரசாங்கத்தைப் பொறுத்தளவில் பேரினவாதிகளின் இந்த எதிர்ப்புகள் ஒரு பக்கம் தமக்கு வாய்ப்பானதே. ஏனெனில் ஏற்கெனவே அரசு சார்பற்ற அமைப்புகள், புத்திஜீவிகள் பலரையும் பேரினவாதிகளைக் காட்டித்தான் தம்பக்கம் இழுத்துக்கொண்டது. அதே போல் பாராளுமன்ற தமிழ் அரசியல் சக்திகளையும் தம்பக்கம் இழுத்துவிடலாம். ”சின்ன, சின்ன பிழையிருந்தாலும் அரசாங்கத்தை கவிழ்க்க விடமாட்டோம்.” எனும் பாராளுமன்றஇடதுசாரிகளின் நிலைப்பாடும் இந்த வகையைச் சார்ந்ததே.
உண்மையில் பேரினவாதிகள் செய்யும் ஆர்ப்பாட்டத்திலும் எந்த வித அர்த்தமுமில்லையென கூறலாம். அரசாங்கம் உண்மையில் தமிழ் மக்களுக்கும் எதையும் வழங்கிவிடாத பொதியையே முன்வைத்துள்ளது. அந்த வகையில் பேரினவாதிகளின் கடமையைத் தானே அரசாங்கமும் செய்துள்ளது.
பேரினவாதத்தை வளர்ப்பதில் அரசுக்கும், அரசியல் வாதிகளுக்கும் இருந்த பாத்திரம் பாரியது. அரசாங்கங்களே வளர்த்துவிட்ட பேரினவாதப் போக்கானது குறிப்பிட்ட வளர்ச்சியின் பின் அரசே தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டாலும் கட்டுப்படாதது மாத்திரமன்றி பேரினவாதமே அரசை வழிநடத்துமளவுக்கு சென்றுவிடும். அந்த நேரம் அரசு கூட பேரினவாதத்திடம் மண்டியிட்டு, சமரசம் செய்துகொள்ளவும், சரணடையவும் நேரிடும் என்பதற்கு இந்த ஒரு சில போக்குகளே சிறந்த ஆதாரம்.
மங்கள சமரவீர லங்காதீபவுக்கு அறித்த பேட்டி இதற்கு நல்ல உதாரணம். அப்பேட்டியில்...
”சிங்கள ஆணைக்குழுவின் நோக்கமான சிங்கள மக்களக்கு நேர்ந்த அநீதிகளை ஒழிப்பது எனும் அதே இலக்கிலேயே அரசாங்கமும் செயற்பட்டு வருகிறது. யுத்தத்தினால் அதிகமாகக் கொல்லப்படுபவர்கள் எமது சிங்கள பௌத்த இளைஞர்களே. இது பற்றிய வருத்தம் இருப்பதாலேயே யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதி தீர்வுத்திட்டத்தை முன்வைத்துள்ளார். இன்று சிங்கள இனத்தைப் பாதுக்காக நாம் செய்யக்கூடிய உயரிய விடயம் யுத்தித்தினால் கொல்லப்படும் சிங்கள பௌத்த இளைஞர்களின் உயிர்களை பாதுகாப்பதே”
(லங்காதீப-5-10-97)
சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ள முடியாமல் தாஜா பண்ணுவதையே இங்கு காண முடிகிறது.
இந்த நிலையில் தமிழ் முஸ்லிம் மலையக மக்களுக்கு இதுவரை சிங்கள ஆட்சியாளர்களினால் ஏற்பட்ட அநீதிகள் குறித்து விசாரணை செய்ய ஆணைக்குழு அமைத்தால் அதன் எதிரொலி என்னவாயிருக்கும்? முதலில் அப்படியொன்றை அனுமதித்து விடுவார்களா? மகா சங்கத்தினரைப் பற்றி எங்குமே அறிக்கையில் குறிப்பிடவோ அறிக்கையில் குறிப்பிடவோ அறிக்கையை பொறுப்பேற்கவோ இல்லை. இல்லாத போது மகாசங்கத்தினரை அவமதித்ததாக எப்படி மகாசங்கத்தினர் கூறமுடியும்? அனுராதபுரத்தில் சிங்கள விசசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது அமைக்கப்படாத சிங்கள ஆணைக்குழுதென்னிலங்கையில் 60,000க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட போது அமைக்கப்படாத ஆணைக்குழு, 600க்கும் மேற்பட்ட பிக்குகள் சிங்களத் தலைவராலேயே டயருக்கு இரையாகிய போது அமைக்கப்படாத ஆணைக்குழு இப்போது எங்கிருந்து வந்து முளைத்தது?
இனவாதத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?
0 comments:
Post a Comment