என்.சரவணன்
மலையகத்தில் மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட பழனிமுத்து பஞ்சவர்ணம் கடந்த 15 வருடங்களாக கொழும்பில் வசித்து வருபவர். நவ சமசமாஜக்கட்சியின் உறுப்பினராகவும், அக்கட்சியின் தமிழ்ப் பத்திரிகையான புதிய சமதர்மம் பத்திரிகையின் குழுவில் ஒருவராகவும் இருந்து வருகிறார். 20ஆம் திகதியன்று வீரவிதான கோஷ்டியினரால் கைது செய்து பொலிஸாரிடம் தான் ஒப்படைக்கப்பட்டமை குறித்து அவர் இப்படிக் கூறுகிறார்.
அன்று கட்சி வேலையாக சலாகாவில் போட்டோக்களை பெற்று வருவதற்காகப் போயிருந்தேன். அருகில் டவுன் ஹோலில் ஆர்ப்பாட்டம் நடப்பதைக் கேள்விப்பட்டு அதனையும் பார்த்து வரலாம் என்று போயிருந்தேன். அந்த ஆர்ப்பாட்டம், ஊர்வலம், கூட்டம் என்பனவற்றைப் பார்த்துவிட்டு பஸ் ஏறி வரும் போது கொம்பனி வீதியிலுள்ள சோதனை அரணுக்கு அருகிலுள்ள பஸ் நிலையத்தில் பஸ் நின்றது. அப்போது சுமாராக 3 மணி இருக்கும். பஸ்ஸில் வைத்து இருவர் சாரதியிடம் எதையோ சொல்லிவிட்டு இறங்கிச்சென்று காலரணில் உள்ள பொலிஸாரிடம் எதையோ கதைத்து விட்டு திரும்பி வந்தனர். என்னை இறங்கச் சொல்லிவிட்டு பஸ்ஸை அனுப்பி வைத்தனர். நான் இறக்கப்பட்டு பொலிஸ் அதிகாரியொருவரால் விசாரிக்கப்பட்டேன்.
அப்போது தான் என்னால் உணர முடிந்தது, என்னை ஆரம்பத்திலிருந்தே இரு சிங்கள இளைஞர்கள் பின் தொடர்ந்து வந்திருக்கிறார்கள் என்பதும், அவர்களின் நிர்ப்பந்தத்தாலேயே இறக்கி விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதையும்.
அவர்கள் இருவரும் தாங்கள் மருத்துவக் கல்லூhp மாணவர்கள் என்றும், வீரவிதான வின் உறுப்பினர்கள் என்றும், பயங்கரவாத எதிர்ப்பியக்கத்தின் கூட்டத்தை வேவு பார்க்க வந்த புலிகளின் உளவாளி நான் என்றும் பொலிஸாரிடம் தெரிவித்தனர். பொலிஸார் என்னை விசாரித்தனர். நான் நவ சமசமாஜக்கட்சியின் உறுப்பினர் என்றும், கட்சி வேலையாக வெளியில் வந்ததையும், கூட்டத்தையும் பார்த்துவிட்டு திரும்பிப் போகும் வழியிலேயே இவ்வாறு நடந்தது என்பதையும் தெரிவித்தேன். பொலிஸார் என்னுடன் அந்தளவு மோசமாக நடந்து கொள்ளவில்லை. ஆனால் அவ்விளைஞர்கள் இருவரும் தொடர்ந்தும் பொலிஸாருடன் தர்க்கித்தனர். தாங்கள் பின்தொடர்ந்து கண்காணித்து வந்த சந்தேகத்துக்கிடமான ஒரு நபரை சுலபமாக விடுவிக்க வேண்டாம் என்றும் என்னை கைது செய்து விசாரிக்கும்படியும் கூறினர்.
அங்கிருந்த பொலிஸ் அதிகாரியும் பொலிசுக்கு தகவல் அனுப்பி ஒரு வாகனத்தை வரவழைத்து என்னையும் அந்த இளைஞர்கள் இருவரையும் ஏற்றி பொலிசில் போய் பார்த்துக்கொள்ளும்படி கூறி அனுப்பினார்.
பொலிஸ் வந்ததும் அங்கும் விசாரணை நடந்தது. அந்த இருவரும் என்னை உளவாளி என்று முடிவே செய்திருந்தார்கள். என்னை உள்ளே தள்ளாமல் போகமாட்டேன் என்றிருந்தார்கள். 5 மணியளவில் நான் அத்தனையையும் கூறியதன் பின்னரும் எனது வாக்குமூலத்தை உறுதி செய்வதற்காக நவசமசமாஜ கட்சி காரியாலயத்துக்கு என்னை அழைத்து வந்தனர். அங்கு தோழர் திருநாவுக்கரசு உள்ளிட்ட கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் பலர் இருந்தனர். அவர்கள் என்னைப் பற்றி உறுதிபடுத்தினார்கள். ஆனாலும் ஒரு வாக்குமூலத்தை எடுத்துவிட்டு விடுகிறோம் என்று கூறி மீண்டும் என்னை பொலிசுக்கு அழைத்துச் சென்றார்கள். அவ்விளைஞர்கள் இருவரும் முறைப்பாடு எழுதி கொடுத்ததினாலேயே வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொண்டு விடுவித்து விடுவதாகக் கூறிய பொலிஸார் பின்னர் அங்கேயே தடுத்து வைத்து விட்டனர். அன்று இரவு 8 மணிக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வந்து என்னை விசாரணை செய்தனர்.அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் வீட்டிலிருந்து யாரும் வரவில்லையா என்று கேட்டனர். ஆனால் அதுவரை வீட்டுக்கும் பொலிஸார் தகவல் அனுப்பி வைத்திருக்கவில்லை. கட்சி உறுப்பினர்கள் தான் வீட்டுக்கு தகவல் தெரிவித்திருந்தனர். மீண்டும் என்னிடம் வாக்குமூலம் ஒன்றினை எடுத்தனர். எனது முழு விபரத்தையும் வாக்குமூலமாகப் பெற்றுக் கொண்டனர். எனது பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, தொழில், கொழும்பு வந்ததன் நோக்கம், நவசமசமாஜக்கட்சியில் இணைந்ததற்கான காரணம். அதில் எனது பொறுப்புக்கள் என பல கேள்விகளைக் கேட்டதோடு, வீரவிதானவின் கூட்டத்தை பார்க்கப் போனதன் காரணத்தையும் கேட்டனர். இந்த நாட்டின் பிரஜை என்கின்ற முறையில் ஒரு பகிரங்கக் கூட்டமொன்றை காணச் சென்றேன் என்று பதிலளித்தேன்.
பின்னர் சிங்களத்தில் எழுதப்பட்ட அறிக்கையைக் காட்டி அதில் கையெழுத்து இடும்படி கேட்டனர். சிங்களத்தில் எழுதப்பட்டிருந்த அதில் கையெழுத் திட்டேன். எனக்கு அதில் இருந்த சிங்களம் தெரியாது.
பின்னர், கட்சியிலிருந்து யாரையாவது வரச்சொல்லி பிணை வழங்கினால் என்னை விடுவித்துவிடுவதாகக் கூறினார்கள். ஆனால் அதற்கு உள்ளே இருக்கும் எனக்கு வாய்ப்பு இருக்கவில்லை. அதற்குள் 12 மணியளவில் என்னை நீதிமன்றத்தில் ஒப்படைத்து விடுவிப்பதாகக் கூறி அழைத்துச் சென்றனர். கொம்பனி வீதியிலுள்ளகோட்டை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற போது அங்கு நீதிவான் இருக்கவில்லை. பின்னர் என்னை மகசின் சிறைச்சாலைக்கு கொண்டு சென்று அடைத்து விட்டனர். அடுத்த நாள் சனி, ஞாயிறு இரு தினங்களும் நீதிமன்றங்கள் இயங்காது. எனவே திங்கள் வரை உள்ளே அடைந்திருக்க நேரிட்டது. முதலில் கொம்பனி வீதி பொலிஸில் வியாழக்கிழமையும், மகசின் சிறைச்சாலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களும் இருந்தேன். மகசின் சிறைச்சாலையில் ஒரு பெரிய அறையில் 130 பேருக்கு மேல் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சிங்களம் பேசத்தெரியாத ஒரு தமிழ் இளைஞனை அந்த ஒரே காரணத்துக்காக சிறைக்காவலர்கள் தாக்கியது, தண்டனை பெற்ற குற்றவாளிகளின் சண்டித்தனம், வெறும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து கொண்டு வரப்பட்டிருந்தவர்களின் அவலம் என பலவற்றையும் காணக் கிடைத்தது.
24ஆம் திகதி திங்கள் மீண்டும் கோட்டை நீதிமன்றத்துக்கு என்னைக் கொண்டுவந்து குற்றங்கள் எதுவுமின்றி விடுவித்தனர்.
0 comments:
Post a Comment