Monday, February 02, 2009

"சிங்கள ஜாதிய" பேரினவாதத்தின் தொடர்ச்சி


என்.சரவணன்
”சிங்கள ஜாதிய” (சிங்கள இனம்) எனும் பெயர் கொண்ட ஒரு வாரப் பத்திரிகை (வியாழன் தோறும்) கொழும்பில் அண்மையிலிருந்து வெளியாகத் தொடங்கியுள்ளது. ஒக்டோபர் 16ஆம் திகதி வெளிவரத் தொடங்கியுள்ள இப்பத்திரிகை கடும் இனவாதப் பத்திகையாக வெளிவரத் தொடங்கியிருப்பதுடன் சகல இனவாத சக்திகளுக்கும் களமமைத்துக் கொடுத்துள்ளது.

தென்னிலங்கையில் இயங்கும் இனவாத அமைப்புகளான ”சிங்களயே மகா சம்மத்த பூமி புத்திர பக்ஷய”, ”மகா சங்கத்தினர்”, ”ஹெல உருமய”, ”ஜாதிக்க சிந்தனய”, ”எக்சத் பிக்கு பெரமுன”, ”தேசப்பிரேமி பிக்கு பெரமுன”, ”மக்கள் ஐக்கிய முன்னணி” போன்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பலரது கட்டுரைகளும் பேட்டிகளையும், இனவாத செய்திளையும் தாங்கி வெளிவருகிறது. இப்பத்திரிகையானது விற்பனையில் பெரியளவு முன்னேற்றமில்லாத போதும் அது, இரு நிறங்களில் முகப்பு பக்கத்துடன், பெரிய அளவில், விளம்பரங்கள் எதுவுமின்றி வெளிவருவதைப் பார்த்தால் இது விற்பனையை இலக்காகக் கொண்ட பத்திரிகையல்ல என்பது தெளிவாகத் தெரிகின்றது.

பத்திரிகை வெளிவந்திருக்கின்ற சூழல், அதில் பங்களிப்பு செலுத்தியுள்ளவர்கள், அதில் தாங்கியுள்ள ஆக்கங்கள் என்பவற்றை பார்க்கையில் இப்பத்திரிகை சிங்கள ஆணைக்குழுவின் தொடர்ச்சியாகவே வெளிவருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

”சிங்கள ஆணைக்குழு” 1996ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி தேசிய ஒருங்கிணைப்புக் கமிட்டி எனும் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. பல சிங்கள பேரினவாத அமைப்புகளைக் கொண்ட இந்த அமைப்பு சிங்கள இனத்தைத் தவிர்ந்த ஏனைய இனங்களால் சிங்களத் தேசம் ஒடுக்கப்பட்டு வருவதாகவும், எப்படி இந்த தீமைகள் இழைக்கப்பட்டன? இதற்கு யார் பொறுப்பாளிகள்? இதற்கான தீர்வு என்ன என்பதை ஆராய்வதற்கென இந்த சிங்கள ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டது. பொ.ஐ.மு அரசாங்கம், முதற் தடவையாக தீர்வுத்திட்டத்தை முன்வைத்த நேரத்தில் அத்தீர்வு யோசனைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்ட இவ் வாணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இவ்வருடம் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி வெளியிடப்பட்டது. அவ்வறிக்கை உடனடியாக இடைக்கால அறிக்கை எனும் பேரில் வெளியிடப்பட்டதன் காரணம் பட்ஜட்டுக்கு முன் அரசு தீர்வுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருப்பதாக தெரிவித்ததே. அறிக்கை கூட அரசு ஏற்கெனவே முன்வைத்திருந்த தீர்வு யோசனைகளை சாடும் வகையிலேயே முழுக்க முழுக்க அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசும் சிங்கள ஆணைக்குழுவை ஒரு இனவாத அமைப்பாக பிரச்சாரம் செய்யத் தொடங்கியதைத் தொடர்ந்து சிங்கள ஆணைக்குழுவின் கத்தலும் குறையத் தொடங்கியது. அதற்கு எதிர் நடவடிக்கையாக பல நடவடிக்கைகளை ஆரம்பித்தது சிங்கள ஆணைக்குழு. அரசுக்கு எதிராக தேங்காய் உடைத்து சபிக்கும் திட்டம், நாடளாவிய ரிதியில் பிக்குமார்களைக் கொண்ட ஆர்ப்பாட்டங்களை நடாத்துதல், கருத்தரங்குகளை நடாத்துதல் என அது தொடர்ந்தது. அதன் தொடர்ச்சியே தற்போது வெளிவரத் தொடங்கியுள்ள ”சிங்கள ஜாதிய” பத்திரிகை என தெரிகிறது.

வெளிவந்துகொண்டிருக்கும் ஏனைய இனவாத பத்திரிகைகள்

ஏற்கெனவே தென்னிலங்கையில் வெளிவரும் பத்திரிகைகளில் தினசரி பத்திரிகையான ”திவய்ன” ஒரு கடும் இனவாதப்போக்கையே கடைபிடித்து வருகிறது. அது தவிர ”லங்கா தீப” பத்திரிகையும் இனவாத்தையே கக்கி வருகிறது.

”திரி சிங்களே” (இரு வாரங்களுக்கு ஒரு முறை), ”சிங்கள பௌத்தயா” (மாதாந்த பத்திரிகை), ”வத்மன” (இரு வாரங்களுக்கொருமுறை), ”பொது ஹண்ட” (மாதாந்தப் பத்திரிகை) ”தம்சக்” (மாகாசங்கத்தினரால் வெளியிடப்பட்டு வரும் மாதாந்தப் பத்திரிகை), போன்ற கடும் இனவாதப் பத்திரிகைகள் ஏற்கெனவே வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பது சொல்லத் தேவையில்லை. இதில் ”சிங்கள பௌத்தயா” பத்திரிகையானது இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சியை வித்திடடவர் என சிங்களவர்களால் கூறப்படும் சிங்கள இனவாத சித்தாந்தத்தின் தந்தையான அநகாரிக்க தர்மபாலவினால் நூறு ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. 1896ஆம் ஆண்டு அநகாரிக்க தர்மபாலவினால் தொடக்கப்பட்ட இப்பத்திரிகை சென்ற வருடம் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடியது. அநகாரிக்க தர்மபால தனது மரண சாசனத்தில் இப்பத்திரிகை தான் இறந்தாலும் தொடர்ந்து வெளிவரவேண்டும் என்று கேட்டிருந்தார். அவரது வேண்டுகோளின் படி மகாபோதி சங்கத்தினரால் இன்னமும் வெளியிடப்பட்டு வருகிறது. இலங்கையில் நூறாண்டுக்கும் மேலாக இடைவிடாமல் வெளிவரும் ஒரே ஒரு பத்திரிகை இந்த ”சிங்கள பௌத்தயா” பத்திரிகை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

”சிங்கள ஜாதிய”

”சிங்கள ஜாதிய” (சிங்களத் தேசம்-Sinhalese Nation) பத்திரிகையானது 1903 ஆம் ஆண்டு பெப்ரவரியில் பியதாச சிறிசேன என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இவரே இதன் ஆசிரியராகவும் செயற்பட்டார். அநகாரிக்க தர்மபாலவுடன் பௌத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். அப்பத்திரிகையின் நோக்கம் பற்றி அதன் ஆரம்பப் பத்திரிகையில் இப்படிக் குறிப்பிடப்படுகிறது. ”சிங்கள மக்களின் நலனுக்காக என்ற பரந்த நோக்கில் இது வெளியிடப்படுகிறது. இப்பத்திரிகை சிங்கள பௌத்தர்களின் நல்லபிமானத்தைப் பெற்ற பத்திரிகையென்றும் இதன் ஆசிரியராக இருந்த பியதாச சிறிசேன வை சிங்களவர்களின் தேசிய வீரராக கருதப்படுவதாகவும் ”சிங்கள பத்திரிகை, சஞ்சிகை என்பவற்றின் வரலாறு -தொகுதி 3” இல் குறிப்பிடப்படுகிறது.

ஆரம்பத்தில்சஞ்சிகை வடிவில் ஆரம்பமான இது, 1909 மார்ச் 1ஆம் திகதியிலிருந்து செய்திப்பத்திரிகையாக வெளிவரத் தொடங்கியிருக்கிறது. மீண்டும் எப்போது நின்றது என்பதை அறிய முடியவில்லை. மீண்டும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது.

தற்போது வெளிவரத் தொடங்கியுள்ள ”சிங்கள ஜாதிய” முதலாவது இதழில் 50 வீதத்துக்கும் மேற்பட்ட இடம் தீர்வு யோசனைகளுக்கு எதிரான ஆக்கங்களே ஆக்கிரமித்துள்ளன.

பேராசிரியர், பியசேன திசாநாயக்க, (இவர் தீர்வுப் பொதிக்கு எதிரான ஒரு நூலையும் சிங்கள ஆங்கில மொழிகளில் அண்மையில் வெளியிட்டுள்ளார்) ”தீர்வுப் பொதி,சிங்கள இனம், சிங்கள ஆணைக்குழு” எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் ”சிங்கள ஆணைக்குழுவை போலி ஆணைக்குழுவென்று கூறுகிறார்கள். மூடர்கள். சிங்களவர்களை இந்த பூமியிலிருந்தே அகற்றிவிட முயலும் ஈழம்வாதிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள எமனின் வடிவிலுள்ள பொதி எனப்படும் வெடிக்குண்டினை சுமந்து செல்லும் கழுதையின் ஒரு கையில் தமிழர்களுக்கு வழங்கும் பொதியையும் அடுத்த கையில் அஷ்ரப்புக்கு வழங்கும் பொதியையும் கொண்டு அனைத்து சிங்களவர்களின் கண்களின் மீது மண்ணைத் தூவிக் கொண்டு தவலம் காரர்கள் போகிறார்கள்.” என்கிறார்.

இன்னொரு பேரினவாதியான பிரசித்தி பெற்ற வழக்கறிஞர் எஸ்.எல்.குணசேகரவின் பேட்டியும் வெளியாகியுள்ளது. இவர் திம்பு பேச்சுவார்த்தையில் (ஐக்கிய தேசியக் கட்சி) அரசாங்கத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்டாவர். இந்திய இலங்கை உடன்படிக்கையை எதிர்த்து அதற்கெதிராக பகிரங்கமாக பிரச்சாரம் செய்து கொண்டு ஐ.தே.க.விலிருந்தும், ஏனைய அரச பதவிகளிலிருந்தும் விலகியவர். தீர்வுப் பொதிக்கு எதிராக ”தீர்வுப்பொதியும், எமனின் பொதியும்” எனும் பல பக்கங்களைக் கொண்ட நூலொன்றையும் (சிங்கள ஆங்கில மொழிகளில்) வெளியிட்டிருப்பவர். இவர் அளித்துள்ள பேட்டியில் தீர்வுப் பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையைப் பாதிப்பதாகவும் சிங்கள நாட்டை திமழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் தாரை வார்க்கும் ஒன்றென சட்ட ரிதியில் விளக்கமளிக்கிறார்.

மகா சங்கத்தின் தலைவரான மாதுலுவாவே சோஹித்த ஹிமி சிங்கள ஆணைக்குழு அறிக்கை வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் ”சிங்களவர் உலகத்திலேயே அதி உன்னத இனமாக வாழ்ந்த காலத்திலிருந்து கௌரவத்தையும் புகழையும் பாதுகாத்து வந்த குழுமம். இன்றும் அதே கௌரவத்துடன் இருந்து வரும் இனம் சிங்கள இனம். ஆனால் குறிப்பிட்ட காலமாக பல தீய சக்திகள் சிங்கள இனம் அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.” என்கிறது.

தேசப்பிரேமி பிக்கு பெரமுனவின் பொதுச் செயலாளர் பெங்கமுவே நாலக்க ஹிமி எழுதியுள்ள பெருங்கட்டுரையில் சிங்களவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டிய காலமிது என்று அபாய அறிவிப்பை வலியுறுத்துகிறது.

போராசிரியர் அரமிட்டிபல ரத்னசார தேரர் எழுதியுள்ள கட்டுரையில் ”இந்த தேசத்தின் பூமிபுத்திரர்களாகிய சிங்களவர்களுக்கு எந்தவித இடையூறுமில்லாத வகையில் வாழும் கடப்பாட்டை தமிழர்கள் கொண்டிருக்க வேண்டும்.” என்கிறார்.

ஆசிரியர் தலையங்கத்தில் ”சிங்கள ஜாதிய” பத்திரிகை மீண்டும் வெளிவருவதற்குக் காரணம் சிங்களவர்களை 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய வகையில் சிங்களவர்களை உருவாக்குவதற்கும். அதற்கு தடையாக இருக்கும் தடைகளை நீக்குவதற்குமே.” என்கிறது.

இன்னுமொரு இனவாதியான குணதாச அமரசேகர தனது கட்டுரையில் ”இனவாத தமிழ் தலைவர்களால் தோற்றுவி­க்கப்பட்ட யுத்தம் சிங்களவர்களின் எதிர்காலத்தை கேள்­விக்குள்ளாக்குகிறது. அமெரிக்காவில் வெளியாகியுள்ள ”The clash of civilizations and the remaking of world order ” எனும் நூலை குறிப்பிட்டு அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் இன்று கவனமாக ஆராய வேண்டிய விடயம் என்றும் புதிய உலக ஒழுங்குக்கு ஏற்றபடி எப்படி எம்மைத் தாயார் படுத்துவது எனப் பேசுகிறது.

மகாசங்கத்தினரில் ஒரு பகுதியினர் அரசாங்கத்தை அதரித்து வருவதைக் கண்டித்து ”மகாசங்கத்தினருக்குள் பிளவு உண்டாவது பெரும் சாபம்” என்ற தலைப்பில் மகா சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரின் பேட்டிகள் வெளியிடப்பட்டுள்ளன. மடிகே பஞ்ஞான சீல மகாநாயக்க தேரோ உட்பட பல பிக்குகள் பேட்டியளித்துள்ளனர்.

இது தவிர சிங்கள பௌத்த இலக்கிய நயமுள்ள ஆக்கங்களும் செய்திகளும் ஆங்காங்கு உள்ளடக்கப்பட்டுள்­ளன.

இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால். ஆசிரியர் தலையங்கத்தில், ”நாட்டின் பெயரான 'சிங்களம்' என்ற சொல்லையே நீக்கிவிட்டு எமது பிறப்பு அத்தாட்சிப் பத்­திரங்களில் 'இலங்கையர்' என ஆங்கிலேயேர் இட்டதையே இன்றும் பாவிக்குமளவுக்கு நாம் பாதிக்கப்பட்டுள்ளோம்.” என்று கூறுகிறது ஆசிரியர் தலையங்கம். ஆனால் வேறொரு இடத்தில் ”நான்காவது இதழிலிருந்து ”ஆங்கிலப் பாடத்திட்டம்” தொடர்ந்து வெளிவரவிருக்கிறது. உங்கள் பிரதிகளை இப்போதே கூறி வையுங்கள்” என்கிறது. அது சரி, சிங்களவர்கள் தமிழ் கற்பதைவிட ஆங்கிலம் கற்பது சிங்களவர்களைப் ”பாதுகாத்து”விடுமோ தெரியவில்லை.

இரண்டாவதாக வெளிவந்துள்ள ”சிங்கள ஜாதிய” (ஒக்டோபர் 30) இதழில் தலைப்புச் செய்தியாக ”ஜீ.எல்.லின் அரசியலமைப்பு பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு” எனும் தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. உள்ளே குணதாச அமரசேகரவின் மாசீயமும் தேசிய சிந்தனையும் என்ற கட்டுரை இனவாதத்துக்கு மார்க்சிய விளக்கமளிக்க முற்படுகிறது. எஸ்.எல்.குணசேகர எழுதிய (மேற்குறிப்பிட்ட) நூலை தொடராக வெளியிடத் தொடங்கியுள்ளது. ஆசிரியர் தலையங்கத்தில் ”புலிகள் இயக்கத்தை அரசாங்கம் தடை செய்ய வேண்டும்” எனக் கோருகிறது.

இப்படியான சிங்கள பத்திரிகைகளின் வரவானது சிங்கள பௌத்த பேரினவாத கருத்தியலை மேலும் கூர்மைப்படுத்துகின்ற போக்காகவே காணமுடிகிறது. அரசின் கட்டமைப்பே சிங்கள பௌத்த கட்டமைப்பாக இருக்கும் நிலையில் இவ்வாறான போக்குகளை அரசு களையுமென நம்புவது கற்பனாவாதமாகத் தான் இருக்கம். இன்றைய தீர்வு யோசனைகளை ஆதரிக்கும் தமிழ் சக்திகளை இதையே செய்கின்றன. அரசியலமைப்பு ரிதியாகவே இவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவங்­களை தற்போது ”சமாதானத் தீர்வு யோசனை” என சொல்லப்படும் தீர்வுத் திட்டத்தில் கூட அகற்றப்படாதது. அதே பேரினவாத கட்டமைப்பின் நீடிப்பையே வலியுறுத்தி நிற்கின்றன. இந் நிலையில் எந்த ”அதிகாரப்பரவலாக்கமோ” அல்லது தீர்வுத்திட்டமோ, சமாதான யோசனைகளோ கூட இந்த ”சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பு” நீக்கம் பெறுவது அனைத்து முயற்சிகளுக்கும் முன்நிபந்தனை–யானது. அது வரையெல்லாம் எல்லாமே பம்மாத்து என்பதை தமிழ் சக்திகள் எவற்றுக்கும் விளங்காமலல்ல. ஆனால் நக்கிப் பிழைக்கும் நாய்களுக்கு நக்க இடம் கிடைத்தால் பின் என்ன நோக்கமிருக்க முடியும். தேவையிருக்க முடியும்.

"தீர்வுத் திட்டம்" திணிக்கும் சக்திகளும் மறுக்கும் சக்திகளும்

'எமக்கு இருப்பதோ இந்தச் சிங்கள ஸ்ரீ லங்கா மட்டுமே. எமக்குப் போவதற்கு வேறு இடமெதுவுமில்லை. சிங்கள மக்கள் தமது தொழில் நிமித்தம் பல நாடுகளுக்குப் போயுள்ளனர் தான். ஆனால் நமக்கிருப்பதோ இந்த நாடு மட்டுமே. அது உண்மை. இதனை நாங்கள் பாதுகாக்க வேண்டும்.””

இந்தக் கூற்றை இனவாதியான நளின் த டி சில்வாவோ, குணதாச அமரசேகரவோ, எஸ்.எல்.குணசேகரவோ, சம்பிக்க ரணவக்கவோ, சூரிய குணசேகரவோ, தினேஸ் குணவர்த­னவோ அல்லது போனால் ஹரிச்சந்திர விஜேதுங்கவோ கூறியிருக்கக் கூடும் என நீங்கள் நினைத்தால் நிச்சயம் ஏமாந்துதான் போவீர்கள். ஏனெனில் இதனை கூறியவர் வேறு யாருமல்ல. சாட்சாத் நமது மாட்சிமை தங்கிய ஜனாதிபதி சந்திரிகா அவர்களே தான்.

அவர் ஆசிரியர்களுக்கான மாநாடொன்றிலேயே இவ்வாறு உரை­யாற்றியுள்ளார். இதை அக்கறையுடன் வெளியிட்டுள்ளது ”வெண்தாமரை இயக்கம்” அதன் ”“சமாதானம், அரசியல் தீர்வு மற்றும் நாட்டின் எதிர்காலம்”” எனும் நூலில்.

சிங்கள பௌத்த மரபு ரிதியிலான பேரினவாத கோஷத்­துக்கு அப்பால் நின்று எந்த சிங்கள தலைமையாலும் ”சமாதானம்” பேச முடிவதில்லை என்பதும் சிங்கள பௌத்த பேரினவாதத்தைத் திருப்திப்படுத்தாத எந்தத் தீர்வையும் தமிழ் மக்களுக்கு வழங்கப் போவதில்லை என்பதையும் மீண்டும் உணர்த்தும் சைகைகளே இவை.

இந்த லட்சணத்தில் தான் சமாதான பேச்சுவார்த்தை முஸ்தீபுக­ளும், தீர்வுத் திட்டம் தெரிவுக்குழுவின் அங்கீகாரத்துடன் 3வது முறை முன்வைக்கப்­பட்டிருப்பதும், அது குறித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவகையில் பிரதான கட்சிகள் இரண்டும் கண்டுள்ள உடன்பாடுகளும் நடந்து வருகின்றன.

இவை குறித்து விமர்சிப்போரை தீர்வு முயற்சியையே எதிர்ப்பவர்களாக சித்திரிக்கும் பலரும் உள்ளனர். ஆனால் அரசின் நேர்மையற்ற முயற்சிகள் இதனை நம்பச்செய்யும் வகையில் இல்லையே. இந்தத் தீர்வு முயற்சிகளை தமிழ் மக்கள் நம்ப வேண்டுமெனில் அரசு தான் நேர்மையானது என்பதை வெளிக்காட்டுவது முன்நிபந்தனையாக உள்ளது. அந்த நேர்மையை வெளிப்படுத்தும் தார்மீக பொறுப்பையுடைய அரசு, மீண்டும் மீண்டும் தமிழ் மக்களுக்கு தமது வரலாற்று ரிதியிலான ஏமாற்றங்களை நினைவுபடுத்தும் வகையில், சிங்கள பேரினவாதத்தோடு சமரசம் செய்து கொண்டு அதனை திருப்திப்படுத்தித்தான் தீர்வை வழங்கலாம் என்று கருதுகையில் தமிழ் தரப்பு நம்பிக்கையிழக்காமலிருப்பது எப்படி?

அரசின் இந்த நேர்மையின்மைக்கு பல்வேறு காரணங்கள் கற்பிக்கப்பட லாம் என்பது உண்மையே. ஆயினும் இந்தக் காரணிகளை மீறி இதுவரை எந்த அரசாங்கமும் செயற்பட்டதில்லை என்பதுதான் வரலாற்று அனுபவம்.

இதைப் புரிந்து கொள்ள அரசின் தீர்வுத் திட்ட முஸ்தீபுகள் குறித்து ஒரு மீள்பார்வையை செலுத்துவது பொருத்தமாக இருக்கும்.

தீர்வுத் திட்டத்தின் வளர்ச்சி
பேச்சுவார்த்தை முறிவும் தீர்வு யோசனையும்:

1994ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பொ.ஐ.மு.வின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளாக சமாதானம், பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு என்பன அமைந்திருந்தன. இவற்றைக் கூறி அமோக வெற்றியீட்டி அது ஆட்சியையும் அமைத்தது. அதே வருட இறுதியிலிருந்து விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையையும் தொடக்கியது. ஆயினும், இப்பேச்சுவார் த்தையின் போது அது தொடர்ச்சியாகப் பல இழுத்தடிப்புகளை செய்துவந்தது. இதன் காரணமாக 1995 ஏப்ரல் 19ம் திகதி பேச்சுவார்த்தை முறிவடைந்த போது புலிகளின் திருமலை கப்பல் தாக்குதலை காரணம் காட்டி முறிவுக்கான முழுப்பொறுப் பையும் புலிகளின் மீது சுமத்தியது. புலிகளுக்கும் இம்முறிவில் பங்குண்டு என்ற போதும் முழுப்பொறுப்பையும் அவர்கள் மீது போடுவது அப்பட்டமான பொய்யாகும். ஆயினும் அரசு, தனது தொடர்பு சாதனங்களுக் கூடாக இக்கருத்தை நம்பச்செய்யும் வகையில் தீவிரமாகச் செயற்பட்டது.

”தமிழ் மக்களை மீட்கும் யுத்தம்?”
இழப்பு புலிகளுக்கா? மக்களுக்கா?

பேச்சுவார்த்தையின் போது அரசியல் தீர்வுத் திட்டம் குறித்த எந்த வித தயாரிப்புமே நகல் அளவில் கூட இல்லாததும் அரசு பக்கமிருந்த பலவீனங்களிலொன்று என்பதை பல விமர்சகர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். 3வது ஈழ யுத்தம் தொடர்ந்த போது ”பயங்கரவாதிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்கும் யுத்தம்” என்றும் ”சமாதானத்துக்கான யுத்தம்” என்றும் அரசு பிரச்சாரம் செய்தது. ஆனால் வடக்கில் ஏற்பட்ட - ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இழப்புகளைக் கொண்டு இருப்பதையும் இழந்தவர்கள் புலிகளா? மக்களா? என்பதை எவருமே அறிவர் . அப்படியாயின் இழக்கச் செய்தவர்களின் இலக்கு என்ன? யாரை திருப்தி செய்ய இவ்வாறு அரசு நடந்து கொண்டது? அவை நிச்சயமாக தமிழ் மக்களை திருப்தி செய்யும் ஒன்றாக இருந்திருக்க முடியாது.

பணிய வைக்கும் முயற்சி

உண்மையில் அரசு தரப்பில் யுத்தத்தை தீர்மானிக்கிற காரணிக­ளும் தமிழ் மக்கள் தரப்பில் யுத்தத்தை தீர்மானிக்கிற காரணிகளும் நேருக்கு நேர் முரணான பன்புகளைக் கொண்டுள்ளன. ஏனென்றால் அரசு யுத்தத்தை தொடங்கியது பேரினவாத சக்திகளை தாஜா செய்யவே. புலிகளோ தமது அரசியல் இருப்பைப் பேண யுத்தம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளார்கள்.

“”புலிகளுக்கு யுத்தம்! தமிழ் மக்களுக்கு பொதி!”” என உலகுக்கு கூறிக்கொண்டு ஒரு பக்கம் யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களை களைப்படையச் செய்து, போராட்டம் மீதே வெறுப்பை ஏற்படுத்தி, அவர்களைப் பணிய வைப்பது அல்லது சரணடையச் செய்வதே யுத்தத்தின் பிரதான நோக்கமாகும்.

அந்த நம்பிக்கையிலேயே ஓட்டைத் தீர்வை தைரியயமாக அரசு முன்வைத்தது. முதற் தடைவையாக 1995 ஓகஸ்ட் 3ம் திகதியன்று முதல் நகல் வெளியிடப்பட்டது. இந்த நகலை ஏற்கெனவே ஜீ.எல்.பீரிஸ் தலைமையி லான குழு (ஜீ.எல்.பீரிஸ் பொ.ஐ.முவுடன் சேருவதற்கு முன்னமிருந்தே) கொழும்பு பல்கலைக்கழகத்தில் பல கால உழைப்பின் பின் தயாரித்திருந்தது. அக்குழுவில் புத்திஜீவிகள் என சொல்லப்படும் பல சட்டநிபுணர்களும் இருந்தார்கள். இந்த நகல் மிகவும் முன்னேறிய ஒன்று என்பதே பலரது கருத்து. ஆயினும், அதில் உள்ள விடயங்கள் நன்றாக குறைக்கப்பட்ட பின்பே அரசின் தீர்வுத் திட்ட நகலாக அது வெளியிடப்பட்டது. இது குறித்து கட்சிகள், அமைப்புகள், தனிநபர்களது கருத்துக்களை ஆராய்வதற்கான அரசின் குழுவொன்றும் இயங்கியது. இறுதியாக இவையெல்லாம் ஆராயப்பட்டு முடிந்ததாகக் கூறி 1996 ஜனவரி 17ம் திகதியன்று (அரசியலமைப்பு நகலுடன்) அரசின் திட்டமாக அது வெளியிடப்பட்டது.

தீர்வுத்திட்டம் யாருக்கானது?

தீர்வுத்திட்டத்தை கொண்டு வருவது தமிழ் மக்களின் பிரச்சினை­க்கு அரசியல் தீர்வு காண்பதற்காகவே என்று சொல்லப்பட்டது. அவ்வாறெனில் மக்களின் விமர்சனத்துக்காக வெளியிடப்பட்ட வேளை, தமிழ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட விமர்சனங்கள் முடிந்தளவுக்கு பரிசீலிப்புக்கும் கவனத்துக்கும் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதன்படி எடுக்கப்படும் முடிவும் கூட தமிழ் மக்களின்அபிலாஷைகளைத் தீர்ப்பனவாக இருந்திருக்க வேண்டும். ஆனால் 1995 ஓகஸ்ட் தீர்வு யோசனையானது தமிழ் தரப்பு கோரிக்கைகளை கருத்திற் கொண்டிராதது மாத்திர மன்றி பேரினவாதக் கோரிக்கைகளைக் ஈடுசெய்யும் வகையில் - ஏற்கெனவே இருந்த அதிகாரங்களும் குறைக்கப்பட்டே வெளிவந்தன.

இந்த இடத்தில் அரசு யாரைத் திருப்தி செய்வதற்காக அந்த நிலைப்பாட்டை எடுத்தது என்ற கேள்வி எழுகிறது. நிச்சயமாக தமிழ் மக்களின் தரப்பில் எழுந்த கோரிக்கையை விட சிங்கள பௌத்த பேரினவாதக் கோரிக்கைக்கே அரசு இசைந்து கொடுத்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால் இவ்விடயத்தில் அரசை கட்டுப்படுத்தக் கூடிய வல்லமை இந்த பேரினவாதத்திடமே உள்ளது என்பதும், அரசின் இருப்பே அதில்தான் தங்கியுள்ளது என்பதும் புரியும். எந்த ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு பயந்து பண்டாரநாயக்காவும், பின்னர் டட்லியும் செல்வநாயகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை கிழித்தெறிய நேரிட்டதோ அதே காரணத்துக்காக இன்றும் தமிழ் மக்களின் உரிமைகளை பறித்தெடுக் கவே சிங்கள அரசாங்கங்கள் தயாராக முனைகின்றன என்பது இதிலிருந்து தெரியவருகிறது.

நிறுவனமயப்பட்ட பேரினவாதத்தின் முன்னால்...?

சிங்கள பௌத்த சக்திகளின் பேரினவாத முஸ்தீபுகள் எளிதான சிறிய விடயமாக நோக்கக் கூடியவை யல்ல. சிங்கள பௌத்த பேரினவாதம் ஏற்கெனவே நிறுவனமயப்பட்டுள்ளது, அரசைக் கட்டுப்படுத்தவும் இயக்கவும் வல்லது, (பார்க்க பெட்டி செய்தி) அரச யந்திரத்தின் மூலமாகவே சிங்கள மக்களிடம் சிங்கள பௌத்த பேரினவாத கருத்தியலை ஊட்டி வருவது.

“”இலங்கையின் வரலாற்றில் ஆரம்பத்திலிருந்தே ஜனநாயகம­யப் படுத்தலும், பேரினவாதமயப்படுத்தலும் சமாந்தரமாகவே வளர்ந்து வந்து (அரசியலமைப்புக்களுக்கூடாக) பின்னர் ஒரு கட்டத்தில் பேரினவாதம் மேலாட் சிக்கு வந்து தானே ஜனநாயகமயப் படுத்தலையும் தீர்மானிக்கு­மொன்றாக நிலைபெற்று விட்டது”” என்று பேராசிரியர் ஒருவர் அடிக்கடி கூறுவதுண்டு.

அரசின் நடத்தையை தீர்மானிப் பது சிங்கள பௌத்த பேரினவா­தமே என்றால் அது மிகையல்ல. யுத்தத்தை நடாத்துவதன் பின்புலமும் கூட அது தான். சிங்கள பேரினவாதத்தின் ஆதரவு அரசுக்கு வேண்டுமெனில் யுத்தம் அவசியம். யுத்தத்தை நடத்துவதன் மூலம் இரு விடயங்களை அரசு சாதித்து வருகிறது. ஒன்று பேரினவாதத்தை ஓரளவு கட்டுப்படுத்துவது, மற்றையது ஏனைய பிரச்சினைகளை இரண்டாம் நிலைக்கு தள்ளுவது. ”ஏகாதிபத்தியங்களின் ஊடுருவல் தலையீடுகள் பற்றி கதையாதீர்கள் (சிறிய உதாரணம் ஏழுயு), சுரண்டல்கள் குறித்து கதையாதீர்கள், வாழ்க்கை செலவுப் புள்ளி குறித்து கதையாதீர்கள், எந்த பிரச்சினையானாலும் யுத்தத்துக்கு முன் இரண்டாம் பட்சமே. யுத்தம் செய்ய விடுங்கள். வெல்லும் வரை பொறுங்கள்.” என்பதே அரசின் நிலை.

யோசனையை எதிர்க்கும் அணிகள்

தீர்வு யோசனையை எதிர்க்கும் கூட்டில் பல அணிகளைச் சார்ந்தவர்கள் உள்ளனர். அதனைப் பிரதானமாக நான்காகப் பிரிக்கலாம். நான்கு தளங்களிலிருந்து இதனை இவர்கள் எதிர்க்கிறார்கள்.

சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் சிங்கள பௌத்த நாட்டில் கொடுப் பதை வாங்கிக்கொண்டு கம்முண்ணு இருக்க வேண்டியவர்கள் ஏனைய இனத்தவர்கள். அதை மீறி உரிமை கேட்போரை-போராடுவோரை அழிப்பதைத் தவிர வேறுவழியில்லை என்பதே இவர்களின் நிலைப்பாடு. இந்த அடிப்படையிலேயே தீர்வுத் திட்டத்தை எதிர்ப்பவர்கள்.

தீவிர இடதுசாரிகள் பாட்டாளிகளை இனரிதியிலும் புவியி­யல் ரிதியிலும் கூறுபோடும் அரசினதும் தமிழ் இனவாதிகளதும் முயற்சிகளை முறியடிக்கவேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுபவர்கள். இவர்கள் தீர்வுத்திட்டத்தை எதிர்ப்பதற்கான அடிப்படை இதுவே.

தமிழ் தரப்பு:- தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்க்கக் கூடிய ஒரு குறைந்தபட்சத் தீர்வாகக் கூட இது இல்லை. (பார்க்க பெட்டி செய்தி)
எதிர்க்கட்சி: இது ஒற்றையாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் யோசனை.

ஆதரிக்கும் சக்திகள்

ஆதரிக்கும் சக்திகளாக, (ஸ்ரீமணி தலைமையிலான ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி தவிர்ந்த) அரசுடன் இணைந்து செயல்படும் கட்சிகள், மரபு இடதுசாரிக் கட்சிகள், புத்திஜீவிகள், அரசு சார்பற்ற நிறுவனங்கள் (NGO) என்போர் காணப்படுகின்றனர். இந்த அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தற்போதைய தீர்வு யோசனையை பிரச்சாரப்படுத்துவதற்காகவே பல நாடுகள் நிதியுதவி வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. பல லட்சங்கள் செலவளித்து இதனை இவர்கள் செய்து வருகிறார்கள். இந்த பலவீனமான தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதற்கு இவையும் துணைபோகின்றன. இந் நிறுவனங்கள் பல இதில் உள்ள குறைபாடுகளை தட்டிக் கேட்பதோ அல்லது அதனை திருத்துவதற்காக அரசை நிர்ப்பந்திப்பதோ கிடையாது. மாறாகத் தீர்வு யோசனையை விமர்சிப்பவர்களை, தீர்வு முயற்சியையே எதிர்ப்பவர்களாகக் காட்டுவதில் தான் முனைப்பாக உள்ளன. தீர்வுக்கான முயற்சிகளை தமிழ் தரப்பு ஒருபோதும் எதிர்த்ததாகத் தெரியவில்லை. அதற்காக தீர்வுத்திட்டம் ”போதுமானதாக இல்லாதபோது அதை ஏற்க முடியாது என்று கூறவுமா முடியாது?

வீணாக அடம் பிடிக்காதீர்கள்! அழியாதீர்கள்!

தீர்வு யோசனைக்கு ஏன் தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் தரப்பில் சொல்லப்படும் நியாயங்கள் இவைதான்.

-முதற் தடவையாக நேர்மையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

-ஒரு அரசாங்கம் இத்தனை தூரம் இறங்கி வந்ததே அதிசயம். அதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வதை விட்டு பிடிவாதம் பிடிக்கக் கூடாது.

-முன்னைய மாகாண சபையை விட இது மேலானது.

-நேர்மையாக பேச்சுவார்த்தையை நடாத்தி தோல்வி கண்டிருக்கிறது அரசு.

-பேரினவாத சக்திகள், எதிர்க்கட்சி என்பவை எதிர்க்கின்ற போதிலும் தைரியமாக முன்வைக்கப்பட்ட இதை நாம் ஊக்குவிக்க வேண்டும். வெற்றியடையச் செய்ய வேண்டும்.

இவற்றின் மூலம் மொத்தத்தில் கூறப்படுவது இது தான். இனியும் வீணாக அழியாதீர்கள். இழக்காதீர்கள்! விட்டுக்கொடுங்­கள்!! கைவிடுங்கள்!!! சரணடையுங்கள்!!!! (இவர்களில் பெரும்பாலானோர் இனப்பிரச் சினையை வெறும் மனிதாபிமான பிரச்சினையாக நோக்குபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) டொக்டர் கொன்ஸ்ரன்ரைன் ஒரு கூட்டத்தில் இவ்வாறு பேசியிருந்தார்.

“”கடந்த ஐ.தே.க. காலத்தில் யாரை நான் புத்திஜீவிகள் என நம்பியிருந் தேனோ, அவர்கள் அனைவருமே ஐ.தே.க எதிர்ப்பா­ளர்களாகவும், பொ.ஐ.மு ஆதரவாளர்களாகவும் இருந்ததாலேயே அப்படி தெரிந்தார்களென்பது பின்னர் தான் எனக்குத் தெரிந்தது.””

உண்மை நிலையும் அது தான். இந்தச் சக்திகள் அவ்வளவு துச்சமான சக்திகளல்ல. சர்வதேச அளவில் இவர்களது குரலுக்கு இடமுண்டு. பொ.ஐ.மு வை பதவிக்கு கொண்டு வருவதிலும் முக்கிய பாத்திரமாற்றியவர்கள் இவர்கள். அது தவிர அரசாங்கத்தை முற்போக்கானதாக நம்பியவர்கள். நம்புபவர்கள்.

ஐ.தே.கவின் முடிவு உறுதியானதா?

சரி, இன்று தீர்வுத் திட்டம் தெரிவுக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டது என்று அரசினால் கூறப்படுகிறது. ஐ.தே.க ஆரம்பத்தில் “”தெரிவுக்குழுவிலுள்ள எமது அங்கீகாரத்தை பெறாமல் எப்படி தெரிவுக்குழுவின் அங்கீகாரம் கிடைத்து விட்டது என கூற முடியும்”” என கேட்டு சலசலப்பை ஏற்படுத்திய போதும் பின்னர் பிரித்தானியாவின் நெருக்குதலின் பின்னர் மெனமாகியது. என்றாலும் இத்தீர்வு யோசனையை தொடர்ந்தும் ஒற்றையாட்சிக்கு குந்தகமான ஒன்றாக கருதும் அதன் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. மேலும் ஐ.தே.கவுக்குள்ளேயே பலர் ஐ.தே.க.வின் சமரச முயற்சியை ஏற்கவில்லை என்பது பத்திரிகை அறிக்கைகளி லிருந்து தெரிய வருகிறது.

தாண்ட வேண்டிய தடைகள்!

இத்தனை குறைபாடுகளையுடைய தீர்வு யோசனையைக் கூட இன்னும் பேரினவாத சக்திகள் எதிர்க்கத்தான் செய்கிறன. இந்நிலையில் தீர்வு யோசனை அமுலுக்கு வருவதற்குள் அது கடக்கவிருக்கும் தடைகளை அறிந்தால் மேலும் பீதியே மிஞ்சும். அது கடக்க வேண்டிய தடைகள் இவை.

1. யோசனை முன்வைத்தல் (18 அத்தியாயங்கள் முன்வைக்கப்பட்டு விட்டது)

2. அதனை திருத்தங்களுக்குள்ளாக் கல் (முடிந்தது)

3. நகலாக முன்வைத்தல் (முடிந்தது)

4. எதிர்க்கட்சியின் சம்மதத்தைப் பெறல் (இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது)

5. தெரிவுக்குழுவின் அங்கீகாரத் தைப் பெறல் (பெற்று விட்டதாகக் கூறப்படுகிறது)

6. பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டுவரல்

7. மூன்றில் இரண்டு பெரும்பான் மையுடன் நிறைவேற்றுதல்

8. மக்கள் தீர்ப்புக்கு விடப்பட்டு, வெற்றி பெறல்.

இதில் கடக்க வேண்டிய முதலாவது தடையரணுக்கு முன் இப்போது வந்துள்ளது. பாராளுமன்றத் தில் ஐ.தே.க.வின் அங்கீகாரமில்லாமல் முன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காது. ஐ.தே.க. சம்மதிக்குமா?

அடுத்த தடையரண் மக்கள் தீர்ப்பு.”“மக்கள் தீர்ப்பு”” என்ற பேரில் மீண்டும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சிங்கள பெரும்பான்மை மக்களிடம் அனுமதி கேட்பது உணள்மையில் ஒரு கேலிக்கூத்தே அன்றி வேறல்ல.

தீர்வை அமுல்படுத்த முடியுமா?

சரி, அவற்றிலும் வெற்றியடைந்தது என வைத்துக் கொண்டாலும் தமிழ் கட்சிகளே ஏற்காத ஒன்றை (நியாயமற்ற தீர்வை) புலிகளும் ஏற்கப்போவதில்லை. அப்படியெனில் புலிகளைத் தோற்கடிக்க வேண்டும். அதற்காக யுத்தத்தை தொடர்ந்து நடாத்த வேண்டும். அப்படியென்றால் மீண்டும் அழிவு, இழப்பு என்பனவே தொடரும். அரசின் தரப்பிலோ புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் நிலத்தை மீட்காமல் அங்கு தீர்வை அமுல் படுத்தவே முடியாது. இவற்றுக்கெல்லாம் அப்பால் இது எப்போது சாத்தியம். தீர்வு யோசனையை முன்வைப்பதிலேயே அரசாங்கம் தனது ஆட்சியின் பாதி ஆயுட்காலத்தை இழந்துவிட்டது. இனித்தான் முக்கியமாக கடக்க வேண்டிய அரண்களே உள்ளன. இதற்குள் எத்தனை அரசாங்கங்கள் வந்து போகவேண்டிவருமோ...? அவற்றின் பண்புகள் எப்படி அமையுமோ...?

உண்மையில் ஸ்ரீ லங்கா அரசுக்கு ஒரு நிரந்தரத் தீர்வில் அக்கறை இருப்பின் நேர்மையான முறையில் எந்தச் சக்திகளுக்கும் சோரம் போகாத முறையில், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், வடக்கு கிழக்கு இணைந்த, அதனை தமிழ், முஸ்லிம் மக்களின் தாயகமாக அங்கீகரிக்கிற வகையில் செயல்படுவது அவசியமானது. அதற்கு முன்நிபந்தனையாக அது தன்னை அகவயமாக சிங்கள-பௌத்த பேரினவாத பண்பிலிருந்து மீட்டெ டுப்பது அவசியமாகும். அடுத்தது, அரசாலேயே வளர்த்துவிடப்பட்ட பேரினவாத கருத்தியலை அரசே பொறுப்புடன் புறவயமாக களைந்தெறி வதற்கான வேலையை செய்வது அவசியமாகும். இவற்றைச் செய்யாமல், சிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அனுமதி கேட்பது என்பது ஒரு வகை ஏமாற்றே. வளர்த்த கிடாய் மாரில் முட்டிய கதையாக அரசே வளர்த்துவிட்ட பேரினவாதமானது அரசின் சிறிய முயற்சியைக் கூட ஆதரிக்க அனுமதிக்காது என்பதை கவனத்தில் எடுத்து செயற்படுவது அவசியமாகும்.

(இதழ்-120-மே.97)

தொடர்பு சாதனங்கள்

என்.சரவணன்

சிங்கள இனவாத அணியில் உள்ள முக்கிய விடயம் தொடர்பு சாதனங்கள். இனவாதத்தை தூண்டுவதில் இவை முக்கிய பாத்திரமாற்றி வருகின்றன. மக்களின் சித்தாந்தத்தை தீர்மானிப் பதாகவும், சிந்தனையை வழிநடத்துவ தாகவும் இவையே உள்ளன. எனவே இவற்றை இலகுவாக அலட்சியம் செய்து விட முடியாது.

பத்திரிகைகள்

தினசரி பத்திரிகைகளில் முக்கியமாக மூன்று உள்ளன. பேரினவாதத்தைக் கக்குகின்ற ”வத்மன”, ”சட்டன”, ”திரி சிங்களே”, ”சிங்கள பௌத்தயா” என்பனவும் வெளிவருகின்ற போதும் கருத்தை உருவாக்கும் வலிமை இந்த தினசரிகளுக்கே உண்டு.

தினமின - அரசு சார்பு லேக் ஹவுஸ் பத்திரிகை. ”புலிகளுக்கு எதிரான நடவடிக்கை” எனும் பேரில் தமிழ் மக்களின் மீதான அரச பயங்கரவாதத் தை மறைக்கும் அல்லது நியாயப்படுத் தும் வேலையை இது செய்து வருகிறது.

திவய்ன - உப்பாலி பத்திரிகை நிறுவனத்தின் பத்திரிகை. இதன் உரிமையாளர் ஒரு ஆயுத வியாபாரி என்பது கடந்த காலங்களில் அம்பலப்படுத்தப்பட்டது. இதை அம்பலப்படுத்துவதில் முக்கியமாக முன்னின்றவர் ராவய ஆசிரியர் விக்டர் ஐவன். சகல இனவாதிகளுக்கும் இது களமமைத்துக் கொடுத்துள்ளது. மிகவும் மோசமான முறையில் நேரடியாக இனவாதத்தைக்கக்குகின்ற, பாரிய விற்பனையுள்ள பத்திரிகை. உரிமையாளர் தனது ஆயுத வியாபாரத்தை செவ்வனே நடத்த வேண்டுமெனில் இந்த யுத்தத்தை ஊக்குவித்தல் வேண்டும். அதற்கு சிங்கள மக்களை உசுப்பி விட வேண்டும். இனவாதத்தை பரப்புவதற்காகவே இந்த பத்திகைகையை நடத்தப்படுகிறது என்றும் கூறுவர். இதன் உரிமையாளர் ஜனாதிபதி சந்திரிகாவின் உறவினர் என்ற போதும் ஜனாதிபதியாலேயே ஆயுத வியாபாரி என வர்ணிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லங்காதீப- இது விஜய நிறுவனத்தினது. இது திவய்ன அளவு இல்லாவிட்டாலும் இனவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் சளைத்ததல்ல. இதன் உரிமையாளர் ரணில் விக்கிரமசிங்கவின் உறவினர் என்பதும் அதற்காகவே இந் நிறுவனத்தின் ஏனைய பத்திகைகளான Sunday Times, Midweek Mirror போன்ற பத்திகைகள் ஐ.தே.கவுக்கு சார்பாக செயற்பட்டு வருகின்றன என்றும் கூறலாம். இதன் உரிமையாளரையும் ஆயுத வியாபாரத்துடன் சம்பந்தப்படு த்தி கதைப்பது வழக்கம். ஆனால் திவய்னவை நிரூபித்ததைப் போல் இதனை நிரூபிக்க முடியவில்லை.

வானொலி

இது தவிர வானொலியை எடுத்துக்கொண்டால், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சேவையோடு அதன் ஸ்ரீ லங்கா எப்.எம் மற்றும் விஷ்வ ஷ்ரவணி எனும் சேவையும் அரசு சார்பு சேவைகளாக இயங்குகின்றன. இவற்றைத் தவிர சிரச, லக்ஹண்ட, சவண, ரஜரட்ட ஆகிய தனியார் சிங்கள வானொலி சேவைகளும் Yes FM, Capitol Radio, FM 99, TNL, Radio போன்ற தனியார் ஆங்கில வானொலி சேவைகளும் இயங்குகின்றன. இவை அனைத்தும் மிகவும் பேரினவாத சார்பான முறையில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகின்றன.

தொலைக்காட்சி

தொலைக்காட்சியை எடுத்துக்கொண்டால் ரூபவாஹினி, ஐ.டீ.என். ஆகியவை அரசு சார்பு நிறுவனங்களாகவும் ஸ்வர்ணவாகினி, Dyna Vision, ETV, TNL, MTV, BBC போன்ற தனியார் சேவைகளும் இயங்குகின்றன. இவற்றிலும் இனவாத சார்புடைய நிகழ்ச்சிகள் காட்டப்படுகின்றன.

தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் ஏதாவது காட்டப்பட்டாலும் அவை தமிழ் மக்களின் நலன்களை முற்றுமுழுதாகப் பிரதிநிதித்துவப் படுத்தப்படுவதில்லை. எப்போதாவது நடக்கும் ஓரிரு கலந்துரையா­டல்க­ளில் மட்டும் தமிழ் மக்களின் நலன் சார்ந்த கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

ரூபவாஹினி, ஐ.டீ.என். ஆகிய அரசு சார்பு சேவைகளில் மாத்திரமே தமிழ் செய்திகளும் காண்பிக்கப்பட்டு வருகின்றன. டீ.என்.எல். எம்.டீ.வி ஆகியவற்றில் சிங்கள மொழியில் அரசு சார்பற்ற செய்திகள் வெளியிடப்பட்ட போதும் தமிழில் அப்படியான வாய்ப்புகள் எதுவுமில்லை.

மொத்தத்தில் இந்த தொடர்பு சாதனங்கள் அத்தனையும் தமிழ் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் இல்லை. அவை ஏற்கெனவே கட்டியெழுப்பப்பட்டுள்ள சிங்கள பேரினவாதத்­துக்கு தேவையான இனவாத தாகத்தை தணிக்கும் கடமையை - அந்த இயுடைவெளியை நிரப்பும் பணியையே செய்து வருகின்றன. தமது இனவாத சார்புக் கொள்கை, மூலதனத்தை பெருக்குதல், ஆயுத வியாபாரம், அரசியல் லாபம் என்பனவற் றுக்காக முழு மக்களையும் பலிகொடுத் துக்கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை.

பேரினவாதத் தரப்பின் அணிவகுப்பு!


என்.சரவணன்

அரசு தீர்வு யோசனைகளை முன்வைத்ததிலி­ருந்து சிங்கள பேரினவாத சக்திகளின் எதிர்ப்பு தீவிரமாக மேலெழும்பி வருகிறது. இந்தச் சக்திகளை மீறி அரசு எதுவும் செய்ய முடியாத நிலையே உள்ளது. குறிப்பாக சிங்களப் பேரினவாதக் கட்சிகளைக் கூட சில வேளை அரசினால் எதிர்த்து நின்று விடமுடியும். ஆனால் பௌத்த மகாசங்கத்தினரையும், மகாநாயக்கர்க ளையும் அப்படி எதுவும் பண்ணிவிட முடியாது. அரசியலமைப்பு ரிதியில் பௌத்த மதத்துக்கும், பௌத்த பீடத்துக்கும் வழங்கப்­பட்டுள்ள முக்கியத்துவமானது (ஸ்ரீ லங்கா கூதந்திரக் கட்சி ஆட்சியிலேயே 1972ம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் முதல் தடவையாக பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது தெரிந்ததே) அதை மீறி செயற்பட முடியாத நிலையை தோற்றுவித்துள்ளது. தீர்வு யோசனைக்கு எதிராக மகாசங்கத்தினர் தீவிரமாக இயங்கிவருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் கூட திடீரென ”தீர்வுத் திட்டமானது தமிழர்களுக்கு சிங்கள நாட்டை தாரை வார்த்துக் கொடுக்கும் ஒன்று” என கூறி அதனை வாபஸ் பெறாவிட்டால் தாமெல்லோரும் மகாசங்கத்தை விட்டு விலகப் போவதாகவும் பொளத்த மகாசங்கத் தின் உயர்பீட மகாநாயக்கர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி செய்தும் காட்டினர். பாதயாத்திரை, சத்தியாக்கிரகம், ஆர்ப்பாட்டம், கருத்தரங்குகள் என்பனவற்றையும் நடாத்தினர். சிங்கள பத்திரிகை­களும் அதனை வரவேற்று வாழ்த்தின. இறுதியில் அரசு தரப்பில் பேச்சு வார்த்தை நடாத்தி சரணடைய நேரிட்டது. அரசு என்ன அடிப்படையில் மகாசங்­கத்தினரை கைவிடச்செய்தது என்பதோ வழங்கிய வாக்குறுதி என்ன என்பதோ இறுதி வரை வெளிவ­ரவில்லை. அரசியலமைப்பு-தீர்வு யோசனையில் கூட ” பௌத்த மதம் அரச மதமாகவும் அதனை பேணிப் பாதுகாப்பது அரசின் கடமையெனவும். பௌத்­தத்தைக் காக்கவென மீயுயர் பேரவையொன்று அமைக்கப்படுமெனவும் இம்முறை கூறப்பட்டுள்ளது. பௌத்த பிக்குகளின் போதனைகளை சிங்கள மக்கள் மேலானதாக மதிக்கிறார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

இது தவிர இனவாத கட்சிகள், அமைப்புகள் என்பனவும் முக்கியமானது. குறிப்பாக கட்சி மட்டத்தில் மக்கள் ஐக்கிய முன்னணி, ஜாதிக்க சிந்தனய, ஹெல உருமய, ஜனதா மித்துரோ என்பன முக்கியமானவை இவை தொடர்ச்சியாக பல கருத்தரங்குகளையும் ஆர்ப்பாட்டங்களையும், கூட்டங்களையும் சத்தியாக்கரகங்க ளையும் நடாத்தி வருவதுடன் பல நூல்களையும் துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டு வருகின்றன. தீர்வுத்திட்டம் குறித்து மாத்திரம் இரண்டு முக்கிய நூல்கள் இவர்களால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பாக பெரிய நூல்களெனக் கொண்டால் ”புலி மத்தியஸ்தர்களும் எமனின் பொதியும்” எனப் பெயர் கொண்ட ஒரு சிங்கள மொழி நூலை எஸ்.எல். குணசேகர என்பவர் வெளியிட்டுள்ளார். இவர் நளின் த டி சில்வா அணியை சார்ந்தவர். இந்நூல் 224 பக்கங்களைக் கொண்டுள்ளது. இதனை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ”Tiger's, Moderates' and Pandoras Package” எனும் பெயரில் வெளியிட்டுள்ளனர். இனவாதி என அழைக்கபடும் காமினி ஈரியகொல்ல என்பவரே இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்­த்துள்ளார். இந்நூல் ”சிங்கள ஆணைக்குழு” விசாரணை நடக்கும் இடங்களிலெல்லாம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சிங்கள ஆணைக்குழு விசாரணை நடக்கும் இடத்துக்கு சென்றும் கூட வாங்க முடியவில்லை அத்தனையும் தீர்ந்திருந்தது. பல இடங்களில் அலைந்து திரிந்த பின்னரே இதனை வாங்க முடிந்தது. அந்த அளவுக்கு விற்பனையாகிக் கொண்டிருக் கும் நூல் இது. விலை ரூபா 100.

இது தவிர சட்டத்தரணி சதிஸ்சந்திர தர்மசிறி என்பவர் ”நாட்டைத் துண்டாடும் யோசனையை நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும்?” எனும் நூலை வெளியிட்டுள்ளார். இந்நூல் 120 பக்கங்களைக் கொண்ட சிங்கள மொழி நூல். விலை 50 ரூபா.

தர்மசிறி செனவிரத்ன என்பவர் ”தம்பி, நமது தாய்க்கு அப்படி செய்யாதே!” என்ற பெயரில் 30 பக்கங்களைக் கொண்ட ஒரு நுலை வெளியிட்டுள்ளார். இதன் விலை ரூபா. 25.

இதைத் தவிர இன்னும் பல பேரினவாதத்தைப் பரப்பும் நூல்கள் பலவற்றில் தீர்வு யோசனைகளுக்கு எதிராக பல விடயங்களும் சொல்லப்பட்டுள்ளன.

இதற்கிடையில் சிங்கள ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டு விசாரணைகளை நடாத்தி வருகிறது. தீர்வு யோசனைக்கெதிரான தொடர் நடவடிக்கையின் அங்கமே இது.

இதில் சிங்கள பேரினவாத சக்திகள் அனைத்தும் இணைந்துள்ளன. இந்த ஆணைக்குழு இது வரை சிங்கள மக்களுக்கு நடந்த அநீதிகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டது. இதன் நடவடிக்கைகளை இனவாதத்தின் உச்ச வடிவம் எனலாம். ஏனெனில் முழுக்க முழுக்க சிங்களவர் களுக்குத்தான் தமிழ்-மலையக - முஸ்லிம் மக்களால் அநீதிகள் நடந்துள்ளன என்றும், அதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியது அரசே என்றும், அரசு சிங்களவர்களுக்கு சேரவேண்டிய பல உரிமை­களை சிறுபான்மையி னருக்கு வழங்கிவிட்டது என்பதையும் கண்டுபிடிப்பதே இவ்வாணைக்குழுவின் நோக்கமாகும். இவ்வாணைக்குழுவின் முடிவானது சிங்கள மக்கள் மத்தியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.

சிங்கள ஆணைக்குழு தோற்றமும் பின்னணியும்

என்.சரவணன்

”எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு சிங்கள மக்களுக்கு அநியா யங்கள் நிகழ்ந்துள்ள இப்படியான ஒரு காலகட்டத்தில் இப்படியான ஒரு ஆணைக்குழு நியமிக்கப்படுவது மிகவும் அவசியம். இது சிங்கள நாடு. யார் என்ன தான் சொல்லட்டும் அன்றிலிருந்து இன்று வரை இது சிங்களவர்களின் நாடு...” (திவய்ன-19.12.96)

சிங்கள பாதுகாப்புச் சபையின் தலைவர் காமினி ஜயசூரிய ஆற்றிய உரையின் ஒரு பகுதியே அது.

கடந்த டிசம்பர் மாதம் 18ம் திகதியன்று அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் வைத்து 42 சிங்கள பௌத்த அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து அமைத்த ”சிங்கள ஆணைக்கு”வின் அங்குரார்ப்ப­ணக் கூட்டத்தின் போதே மேற்படி உரையை ஆற்றியிருந்தார்.

ஆணைக்குழுவின் பின்னணி

இந்த ”சிங்கள ஆணைக்குழு”வை தேசிய ஒருங்கிணைப்பு கமிட்டி எனும் அமைப்பே முன்னின்று அமைத்துள் ளது. காலனித்துவத்துக்குப் பின்னர் சிங்கள மக்களுக்கு நடந்த அல்லது நடத்தப்பட்ட சகல அநீதிகளையும் ஆராய்வதற்காகவே இவ் ஆணைக்கு ழுவை அமைத்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி முக்கிய 14 தலைப்பில் இவ்வநீதிகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் (பார்க்க பெட்டி செய்தி) பெப்ரவரியிலிருந்து ஒன்பது மாத காலத்துக்குள் இவ்வாணைக்குழு தனது ஆராய்வு­களை முடிக்க விருப்பதாகவும் தெரிவித்துள்ளது இவ்வமைப்பு.

பௌத்த விபர ஆணைக்குழு என்ற ஒன்று பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலப்பகுதியில் இயங்கியது. அவ் வாணைக்குழுவின் பரிந்துரைகளை தான் நடைமுறைபடுத்துவதாக பண்டாரநாயக்கா அப்போது பௌத்த மகா சங்கத்தினருக்கு உறுதியளித் திருந்தார். ஆனாலும் அவர் அதற்குள் கொல்லப்பட்டார். (அவர் கொல்லப்பட் டதும் பௌத்த துறவியொருவரினால் என்பது தெரிந்ததே)

இன்று அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழு அவ்வ­ளவு சாதாரண ஆணைக்குழுவல்ல இது 'சிங்கள ஆணைக்­குழு. இதன் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.டபிள்யு. வல்பிட்ட. ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக முன்னாள் பிரதம நீதியரசர்.ஏ.டீ.டி.எம்.பி.தென்னகோன், பேராசிரியர். ஏ.டி.வீ.டி.எஸ் இந்திரரத்ன (இவர் முன்னை நாள் புத்த சாசன ஆணைக்குழுவினதும் உறுப்பினர்) பேராசிரியர் பீ..ஏ.டி.சில்வா, பீ.டீ.உடு வெல (முன்னைநாள் செயலாளர்-பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு) பேராசிரியர்.திருமதி.லிலி.டி.சில்வா (ஓய்வு பெற்ற விரிவுரையாளர்-பாளி-பௌத்த, கற்கை-பேராதெனிய பல்கலைக்கழகம்) ஜீ.பி.எச்.எஸ்.டி. சில்வா (ஓய்வு பெற்ற தலைவர்-தேசிய சுவடிகள் கூடத் திணைக்களம்.)

இந்த 'சிங்கள ஆணைக்குழு'வின் தோற்றமானது நிகழ்கால சூழலில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உச்ச வெளிப்பாடாகவே காண முடிகிறது என்றால் அது மிகையில்லை. இதனை அமைக்கும் நோக்கம், அமைக்கின்ற சூழல், பின்னிற்கும் சக்திகள், இவை முன்வைக்கும் கருத்துக்கள் என்பன ஆழ்ந்து அவ­தானிக்க வேண்டியவை. போரை நிறுத்த - சமாதானத்தை ஏற்படுத்த, குறைந்தபட்சத் தீர்வைத்தானும் கொண்டுவர இருக்கின்ற சொற்பமான வாய்ப்புகளை அடைத்துவிடும் ஒரு சூழல் இப்படி முதிர்ச்சி பெற்று வருவதை அநாயசமாக தட்டிக் கழித்துவிட முடியாது. பின்னணியில் இருக்கும் சக்திகள், பலவீனமானவையல்ல. இலங்கையில் மிகவும் முன்னணியிலுள்ள புகழ்பெற்ற சிங்கள பௌத்த பேரினவாதிகள், அவர்களது அமைப்புகள் (சிங்களயே மகா சம்மத்த பூமி புத்திர பக்ஷய, சஙிகள மீட்பு முன்னணி, சிங்கள பாதுகாப்புச் சபை, தேசப்பிரேமி பிக்கு பெரமுன உள்ளிட்ட பல அமைப்புகள்) எல்லாமே ஓரணி திரண்டுள்ளனர் என்பதும் அவர்கள் ஏனைய தமிழ், முஸ்லிம், மலையக தேசங்கள் தொடர்பாக முன்வைத் துள்ள கருத்துக்களும் பிரச்சாரங்களும் குறிப்பாக அவதானிக்கத் தக்கவை.

”இனியும் சகியோம்!”

அங்குரார்ப்பண கூட்டத்தின் போது உரையாற்றிய மாதுலுவாவே சோபித்த ஹிமி உரையாற்றுகையில்

”தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏதோ வரலாற்று ரிதியான அநியாயங்கள் நடந்துவிட்டதாக பெரியள­வில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஏதோ சிங்களவர் மிகவும் சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருவதாக அல்லவா மறுபக்கம் சொல்லப்படுகிறது. இப்படித்தான் சிங்களவர்களைப்பற்றி பிழையான படமொன்றையே உலகுக்கு காட்டி வந்துள்ளனர். கதிர்காமத்தில் ஊசி­யால் உடலில் குத்தி நேத்திக் கடன் செலுத்துவதை படம்பிடித்துச் சென்று தமிழ் மக்கள் எப்படியெல்லாம் கொடுமை படுத்தப்படுகிறார்கள் பாருங்கள் என புலிகள் பிரான்ஸில் ஊர்வலம் செல்கின்றனர்...சிங்கள கிராமங்களில் தாங்களே படுகொலை செய்துவிட்டு அந்த புகைப்படங்களை தமிழ் மக்களை சிங்களவர் படுகொலை செய்ததாக அமெரிக்காவில் காட்டுகின்றனர் புலிகள். எனவே பௌத்த மறுமலர்ச்சிக்காக இந்த சிங்கள ஆணைக்குழுவால் பலவற்றைப் புரிய முடியும்...”
(லங்காதீப-20.12-96)

குணதாச அமரசேகர உரையாற்றுகையில்

”...இன்று எமது நாட்டின் சனத் தொகையில் எழுபத்தைந்து வீதமளவு வாழும், அதே போல் ”இனம்” என்று அழைக்கக்கூடிய தகுதியுடைய ஒரே யொரு இனக்குழுமமான சிங்களவர் பல இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த ஆணைக்குழு ஒரு அரசியலின் அடிப்படையிலேயே முன்செல்ல வேண்டும். அது குறிப்பாக தேசிய அரசியல் நோக்குடன் இருக்க வேண்டும். அது சிங்கள இனத்தை முதன்மையாகக் கொண்ட ”சிங்களத் துவத்தை” மையப்படுத்திய தேசிய நோக்காதல் வேண்டும். இதற்கு சந்தர்ப்பவாத ”கட்சி அரசியல் முறை” யை கைவிட்டு விதேச அரசியலுக்குப் பின்னால் போகாமல் இருத்தல் வேண்டும்...

இந்த நாட்டின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கமர்ந்து செய்ததெல்லாம் சிங்களவரின் அரசியலை பலவீனப்படுத் தியதே. சரியாக இரண்டாக பிரித்து பூஜ்ஜியத்துக்கு தள்ளியதே இதன் மூலம் நடந்தது. இதன் காரணமாக சிறுபான்மை இனவாதிகளின் அதிகாரம் வரவர மேலெழும்பியது. அதிகாரம் படைத்தவர்கள் தாம் அதிகாரத்தைப் பெறுவதற்கான தீர்மாணகர சக்திகளாக சிறுபான்மையி னர் ஆனார்கள். சிங்கள மக்களுக்கு ஏற்பட்ட சகல அநியாயங்களுக்கும் காரணமானது இதுவே. இப்போதாவது சிங்களவர் தமது இனத்தின் அழிவை நெருங்கி வருகிறார்கள் என்பதை உணர வேண்டும். அதற்கு இந்த ஆணைக்குழு பயன்பட வேண்டும்...

இந்த நாட்டில் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்து­வப்படுத்துவ தாக கூறும் சகல கட்சிகளும் இனவாத கட்சிகளே என்பதை யாவரும் அறிவர். அந்த இனவாதத் தலைவர்கள், தமது இனவாத முகத்தை தயங்காது வெளிக் காட்டி வருகிறார்கள். இவர்கள். சிங்கள மக்களை இனவாதிகளாகவே உலகம் முழுதும் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர். இவ்வளவையும் சிங்களவன் இத்தனை காலம் கொறுமையாக சகித்துக்கொண்டிருந்தான். இவ்வாறு சிறுபான்மை இனவாத கட்சிகள் செயற்படும் வரை சிங்களத்துவத்தை முன்னிறுத்திய தேசிய அரசியலொன்றை வளர்க்க முடியாது. தொடர்ந்தும் இக்கட்சிகள் இயங்க இடமளிக்கத் தான் வேண்டுமா என்பதை இந்த ஆணைக்குழு தீர்மாணிக்க வேண்டும்...” (29.12.96-திவய்ன)

மடிகே பஞ்ஞானசீல நாஹிமி உரையாற்றுகையில்

”...சகல பௌத்த அமைப்புகளும் ஒன்றிணையாவிட்­டால் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு இன்னும் நாற்பது ஐம்பது வருடங்களில் முழு இலங்கையும் போய்விடும். நாம் ஒன்றிணையாது போனால் இந்த ஆக்கிரமிப்பு நிச்சயமாக நடந்தே தீரும்...”

அலுத்கம தம்மானந்த அநுநாயக்க ஹிமி உரையாற்றுகையில்

”...இன்று அதிகார பூர்வமாக பதிவு செய்யப்பட்ட 32 கட்சிகள் உள்ளன. கடந்த 48 ஆண்டுகளில் 48 கட்சிகள் தோன்றாமல் இருந்தது ஆச்சிரியமானதே. இந்நாட்டில் தோன்றிய கட்சிகள் பல சிங்களவரை பிளவுபடுத்திய கட்சிகள். மகாசங்கத்தினரும், மக்க ளும் கட்சிரிதியாக பிளவுற்றிருக்கின்றனர். கட்சி பேதமில்லாமல் ஆளுங் கட்சி, எதிர்கட்சிகளையும் கலந்து கொள்ளும்படி எழுத்துமூலம் அறிவித்தி ருந்தோம்.

கிராமப்புறங்களில் நூற்றுக்கு 25 வீதம் சிறுபான்­மையினர் வாழ்ந்தாலும் சிங்கள தமிழ் இருசாராரும் அப்பிர தேசத்தை நிர்வகிக்க வேண்டுமென கடந்த நாட்களில் செய்தி வெளியாகியிருந்தது. அப்படியானால் கொழும்பு, கண்டி போன்ற பிரதேசங்களுக்கு என்ன ஆவது? இன்று எமக்கிருப்பதோ 25ஆயிரம் மைல் பரப்பே அதிலும் கொஞ்சம் கடலில். இருக்கும் கொஞ்சத்தையும் பிரித்து போடப் போகிறார்களா...?”

பேராசிரியர் கம்புறுபிட்டியே ஆரிய சேன நாஹிமி உரையாற்றுகையில்

”... பாராளுமன்ற பிரதிநிதிகளைத் தெரிவு செய்வது தொடர்பாக 78ம் ஆண்டு அரசியலமைப்பில் உருவாக்கப் பட்ட விகிதாசார தேர்தல் முறையினால் சிங்களவர்க்கு அநியாயம் நடந்துள் ளது. வேறு காலங்களில் ஒரு ஆசனம் மட்டுமே கிடைக்கிற தொண்டமான், அஷரப் போன்றவர்களுக்கு இதன் காரணமாக ஒன்பது , எழு என கிடைக்கிறது. சிங்கள பெரும்பான்மை இனத்தை ஏமாற்றி சிறுபான்மை வாக்குகளால் ஆட்சிக்கு அமர பிரதான கட்சிகள் செயற்படுவது இந்த தேர்தல் முறையினாலேயே. இதனால் என்றாவது இனக்கலவரமொன்று வரும். சிங்க ளவரை பாதுகாக்க இந்த தேர்தல் முறை அழிக்கப்பட வேண்டும்...” (19.12.96-திவய்ன)

தேசிய ஒருங்கிணைப்பு கமிட்டியின் பொதுச்செய­லாளர் பேராசிரியர்பிய சேன திசாநாயக்க உரையாற்றுகையில்

”...பிரித்தானியர் மிகவும் சூட்சும மான முறையில் தமிழ் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் விசேட சலுகைகளை அளித்தனர். பெரும்பா ன்மை சிங்களவர்க்கு அநீதி புரிந்தனர். இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சி புரிந்தவர்கள் அனைவரும் சிங்கள மக்களின் சகல உரிமைகளையும் காட்டிக் கொடுத்து சிறுபான்மையினரை வென்றெடுப்பதனூடாக அதிகார த்தில் அமரவே முயன்றுள்ளனர். இதனை சிங்கள மக்கள் மேலும் பொறுக்க மாட்டார்கள்...”

பேரினவாத எழுச்சியை அலட்சியம் செய்யலாமா?

இவ்வாறான உரையாடல் சிங்கள மக்களை மேலும் சிங்கள பேரினவாத கருத்தியலை நோக்கி அணிதிரட்டவும் மேலும் வளர்க்கவுமே செய்கிறது.

அண்மைய சிங்கள பௌத்த பேரினவாத எழுச்சியானது அலட்சியம் செய்யத்தக்க ஒன்றல்ல. தமிழ் மக்கள் முன்வைத்தால் அதை இனவாதமென் றும் சிங்கள பேரினவாதம் முன்வைத் தால் அதனை உரிமையென்றும் மிகச் சாதாரணமாகவே பேசப்படும் ஒரு நிலமை வளர்ந்து வருகிறது.

தற்செயலாக நடந்த பிழையொன்றினால் தீகவாபி பிரச்சினை துவேஷ த்தை கிளப்பியிருந்தமையும் அது தற்செயலானது என்று ஒப்புக்கொள்ளப்பட்ட பின்னரும் தென்னிலங்கையில் நடந்த பேரினவாத பிரச்சாரங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் கருத்தரங்குகள் என்பன பேரினவாதம் எவ்வளவு தூரம் நிறுவுனமயப்பட்டு திட்டமிட்டு முன்னேறி வருகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

”ஈழம் படுகுழியானது” எனும் தலைப்பில் நடந்த கண்காட்சியில் காண்பிக்கப்பட்ட புகைப்படங்கள், எழுப்பிய துவேஷங்கள், பல்கலைக் கழக மட்டத்தில் தற்போது நடத்தப் பட்டு கருத்தரங்குகள் சிங்கள மொழியிலான பேரினவாத நூல்கள் வெளியீடு என்பன பக்கசார்பான-அதே வேளை பொய்மை மிகுந்த பிரச்சாரங் களை வெளிப்படுத்தின. சிங்கள பேரினவாத சக்திகளை அணிதிரட்டு கின்ற பரந்த தேசிய முன்னணி அகைகப்பட்டு வருவதும் அது ஜனவரி இறுதிக்குள் தன்னை வெளிப்படுத்த இருப்பதும் கட்சி ரிதியில் பேரினவாதம் நிறுவனமயப்புடுவதை காட்டுகிறது.

தென்னிலங்கையில் பலர் இந்நிகழ்வுகளை அலட்சியமாகவே கான்கின் றனர். பலமற்ற சிறுகுழு மாத்திரமே இவையென்றும் இதனால் ஒன்றும் ஆகப்போவதில்லையென்றும் பேசப்பட்டபோதும் முக்கியமாக இங்கு கவனிக்க வேண்டிய ஒரு அம்சம்தான் இச்சக்திகளின் இயங்கியலுக்கும், இருப்புக்கும் தோதான சூழல் தேசிய அளவில் அதிகார மட்டத்தில் இயங்கி வருகிறது என்பது தான்.

பேரினவாத சார்பு அரசொன்றினால் என்ன பண்ண முடியும்?

அரசினதும் அரச யந்திரங்களி னதும் செயற்பாடுகள் பேரினவாதத் துக்கு சார்பாகவே உள்ளன. அரசாங்க த்தைச்' சேர்ந்தவர்களது உரைகள், அரச தொடர்பு சாதனங்களுக்குகூடாக ஆட்சேர்ப்புக்கு காட்டப்படும் விளம்பரங்கள், எல்லைப்புற கிராமப் படுகொலை பற்றி வாராந்தம் தொலைக்காட்சியில் கான்பிக்கப்படும் விவரணங்கள் செய்தித் தொகுப்புகள், அரசியல் கலந்துரையாடல்கள் என்பன மறுபக்கத்தை சொன்னதே இல்லை. போதாதற்கு சகல தொடர்பூடக செயற்பா­டுகளும் அதாவது அரச சார்பற்ற 'சுதந்திர' பத்திரிகை­களும் சுட பேரினவாதத்துக்கு எதிரான கருத்தூட் டலை, வழிநடத்தலை செய்வதில்லை.

ஐ.தே.க. சார்பு டீ.என்.எல் தொலைக் காட்சி சேவை­யோ அரச தொடர்பு சாதனங்களுடன் போட்டியிட்டு பேரினவாதத்தை கக்குகின்றன. இதற்கு பல உதாரணங்கள் உண்டு.

சிங்கள பேரினவாத தரப்பு முன்வைப்புகளுக்கு எதிர்வினையாக தமிழ் தரப்பில் ஜனநாயக மட்டத்தில் முன்வைக்கக்கூட வாய்ப்பான சூழல்தான் தென்னி­லங்கையில் உண்டா? முன்வைக்கப்பட்டுள்ள அரை­குறை தீர்வை நோக்கிக் கூட சிங்கள மக்களை அணி­திரட்ட முடியாத (முயலாத) அரசாங்கம் நாளை குறைந்­தபட்ச சமஷ்டிக்காகக் கூட அணிதிரட்டுவதென்றால் அது சாத்தியமாகுமா? ஏற்கெனவே சிங்கள பேரினவா­தத்துக்காக தீர்வுத்திட்ட யோசனைகளிலிருந்து ஆங்காங்கு விட்டு கொடுத்து வந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ஏதாவது செயததுண்டா?

இந்நிலைமைகளுக்கெல்லாம் மாறாக இயங்கி வரும் அரசாங்கம் புதிய போpனவாத எழுச்சியை முறியடிக்க என்னதான் பண்ணிவிட முடியும்?

பேரினவாதம் செய்யும் எச்சாpக்கை, பயமுறுத்தல் வரலாற்றுத் திரிபு, கருத்தியலுஸட்டல் என்பனவற்­றுக்கு பொறுப்புடன் எதிர்நிலையில் செயற்பட வேண்டிய அரசே அதற்குத் துணை போவதுடன் கூடச் சேர்ந்து செய்யும் அதற்கு சமமான செயற்பாடுகளானது நாளை ஒரு சமாதானச் சூழலுக்காக அரசே மாறி நின்று தன்னை நோக்கி இழுக்க முயன்றாலும் அது வளர்த்து விட்ட பேரினவாத சித்தார்ந்தமானது தாமும் போகப்போவதில்லை அரசை யும் விடப்போவதில்லை.

(இதழ்-113,ஜனவரி-97)

Sunday, February 01, 2009

சிங்கள ஆணைக்குழுவும் மங்கள சமரவீரவும்



என்.சரவணன்

''நீங்கள் பிக்குமார். அன்னச் சோறு சாப்பிடுவதும் மோட்சத்தை அடைவத­ற்கு பண (பௌத்த உபதேசம்) சொல்வதுமே உங்கள் வேலை. அன்று மன்னர்காலத்தில் உங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அப்படியே இன்று நான் பிரதிபண்ண பண்ணமுடியாது. அரசியலமைப்பின் படியே நான் ஆட்சி நடத்த முடியும். உங்கள் இஷ்டப்படி ஆட்சி நடத்துவ­தென்பது அரசியலமைப்புக்கு விரோத­மானது. அரசியலமைப்புக்கு விரோத­மா­வதென்பது ஜனநாய­கத்துக்கு விரோதமானது. ஜனநாயகத்­துக்கு விரோதமாவதென்பது மக்களுக்கு விரோதமானது. அப்படியான ஒன்றை என்னால் செய்ய முடியாது. நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள். நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம்”

இப்படி யார் கூறியிருந்தார் என யோசிக்கிறீர்களா? மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். தான் இப்படி கூறியிருக்கிறார். 1977இல் பதவிக்கு வந்து சில காலத்தில் பிக்குமார், தங்களுக்கும் பௌத்தத்­துக்கும் மன்னர்கள் அளித்த முக்கியத்து­வத்தை தற்போதைய அரசாங்கம் அளிக்கவில்லையென கூட்டம் கூடி அறிவித்த பின் அவர்களெல்லோரையும் அழைத்து கூட்டமொன்றை வைத்து உரையாற்று­கையிலேயே இவ்வாறு ஜே.ஆர். தெரிவித்திருந்தார். ஜே.ஆ­ரின் மக்கள் நேசிப்பு, ஜனநாயகம் என்பன ஒருபுறமிருக்க, பௌத்தத்து­க்கு அரசியலமைப்பு ரிதியாகவே அந்தஸ்தெல்லாம் வழங்கிவிட்டு அதே பௌத்த சக்திகள் தனது எதிரணி அரசியல் சக்திகளுடன் சேர்ந்து தனக்கு எதிராகப் புறப்பட்டு விடாதபடி­யிருக்க அதற்கு ஒரு எல்லைக் கோட்டைப் போட்டுவிட்டிருந்தார்கள்.

''1978ஆம் ஆண்டு அரசியலமைப்­பின் மூலம் பௌத்தமதத்தை அரசமதமாக மீண்டும் ஜே.ஆர். பிரகடனப்படுத்தியதானது வெறுமனே ஜே.ஆர் சார்ந்த விடயம் மட்டுமல்ல. 1972ஆம் ஆண்டு ஸ்ரீ.ல.சு.க. ஆட்சியிலேயே அது கொண்டு வரப்பட்டு விட்டதால் அதனை ஜே.ஆரால் நீக்கிவிடுவது என்பது சாத்தியமான­தல்ல” என சில அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுவர்.

பௌத்த மதத்துக்கு அரசியல­மைப்பின் மூலம் கொடுத்த முக்கியத்து­வம் என்பது சிங்கள பௌத்த சக்திகள் அரசையே தமது பொம்மையாக ஆட்டி வைக்குமளவிற்கு கட்டுப்பாட்டை மீறி சென்று விட்டது. தமது பிழைப்பரசிய­லுக்கு பௌத்தத்தை எப்படி பயன்படுத்த­லாம் என ஆட்சியாளர்கள் செயற்பட்டு வந்தனர். ஆனால் அரசை தமக்கு ஏற்றாற் போல் எப்படி நடத்துவது என்பதில் சிங்கள பௌத்த தரப்பு வெற்றி கண்டு விட்டது. அதன் தொடர்ச்சிப் போக்குகளில் ஒன்றாகவே இன்று மங்கள சமரவீரவுக்கு நேர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. சிங்கள ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை வரலாற்றின் குப்பைத் தொட்டியிலேயே போடப்படும் என தபால் தொலைதொடர் அமைச்சர் கூறியிருந்த கருத்துக்கு எதிராக இன்று சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் எழுப்பியிருக்கும் பிரச்சினையும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் கடந்த இருவாரங்க­ளாக சகல தொடர்பு ஊடகங்களிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள விடயம். இது சமகாலத்தில் அரசுக்கும் சிங்கள பேரினவாத சக்திகளுக்கும் தமிழ் தேசிய சக்திகளுக்கும் பிரதான பிரச்சினை­யாக­வும் ஆகியிருக்கிறதெ­ன்றால் மிகையில்லை.

சிங்கள ஆணைக்குழு:

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18ம் திகதியன்று அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் வைத்து 'தேசிய ஒருங்கிணைப்பு கமிட்டி” எனும் அமைப்பால் தொடக்கப்பட்டதே சிங்கள ஆணைக்குழு. இந்த கமிட்டி­யின் கீழ் 47 சிங்கள பௌத்த அமைப்புகள் ஒன்றிணைந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

காலனித்துவத்துக்குப் பின்னர் சிங்கள மக்களுக்கு நேர்ந்த சகல அநீதிகளையும் ஆராய்வதற்காகவே இவ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முக்கிய 14 தலைப்புகளில் அவ் அநீதிகளை ஆராய்வதாகவும் அது தெரிவித்திருந்தது.

அவ் ஆணைக்குழுவின் உறுப்பி­னர்கள் எல்லோரும் மிகவும் முக்கிய­மான­வர்கள். முன்னாள் பிரதம நீதியரசர், பேராசிரியர்கள் உயர் அரச அதிகாரிகள் என்போர் அடங்குவர்.

இவர்கள் மாவட்டம் மாவட்டமாகப் போய் சாட்சியங்களை விசாரித்தனர். பல அரசியல்வாதிகள், பொலிஸ், மற்றும் படை அதிகாரிகள் அரச உத்தி­யோகத்தர்கள், பௌத்த பிக்குமார், சிங்கள பௌத்த அமைப்புகள் எனப் பலர் தனிநபர்களாகவும், அமைப்பு­களாகவும் சாட்சியமளித்தனர்.

தமிழ், முஸ்லீம், மலையக மக்களு­க்கு எதிராக பலர் ஆணைக்குழுவின் முன் உரையாற்றினர். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட இதில் சாட்சியமளித்தனர்.(மே 26ம் திகதி அன்று குருநாகல் மாவட்ட ஆளுங் கட்சி பா.உ. ஜயசேன ராஜகருனா சாட்சியம் அளித்திருந்தார்) தொடர்பு சாதனங்கள் இதற்கு அதிக முக்கியத்­துவம் வழங்கின ஆணைக்குழுவின் முன் நிகழ்த்தப்படும் உரைகளெல்லாம் அடுத்த நாளே சகல சிங்கள, ஆங்கில தினசரிகளிலும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்­பட்டு வந்தன.

ஆணைக்குழுவின் விசாரணைகள் எல்லாம் பௌத்த நிலையங்களிலேயே நடத்தப்பட்டன. இந்த ஆணைக்குழு சாட்சியங்கள் சகல தொடர்பு­சாதனங்களுக்கூடாகவும் வெளிவந்த­மை­யானது தமிழ், முஸ்லீம், மலையக மக்களுக்கெதிராக பெரும் பிரச்சா­ரத்தையும் இனத்துவேஷத்தை­யுமே அதிகரிக்கச் செய்திருந்தது. மீண்டும் மீண்டும் ஒரே விதமான துவேஷக் கருத்துக்களும் வரலாற்றுப் பொய்க­ளும் சொல்லப்பட்டமையால் பேரினவா­தத்தை அது ஆழப்படுத்தியது.

ஏன் ஆணைக்கு?

ஆணைக்குழு அவசர அவசரமாக தோற்றுவிக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கவே செய்கிறது. அரசாங்கம் முன்வைத்த உத்தேச தீர்வுப்பொதியை முறியடிப்பதே இதன் பிரதான இலக்காக இருந்தது. அரசாங்கம் முன்வைத்து­ள்ள தீர்வுப்பொதி நாட்டை துண்டாடும் ஒன்று என்றும் சிங்கள நாட்டை பிரபாகரனுக்­கும், அஷ்ரப்பிற்கும், தொண்டமானுக்கும் தாரைவார்த்துக் கொடுக்கும் முயற்சி என்றும் சிங்கள இனவாத சக்திகள் பிரச்சாரம் செய்து வந்தன.

பல எதிர்ப்புக் கூட்டங்களை நடத்­தின. படிப்படியாக இந்த எதிர்ப்புகள் எல்லாமே ஓரணியில் திரண்டன. ஏலவே வளர்த்து விடப்பட்டிருந்த சிங்கள பௌத்த பேரினவாத கருதியலும் , தொடர்பூடகங்கள், பௌத்த உயர் பீடம், அரசாங்கத்தை எதிர்க்கும் தொலைக்­காட்சிகள் என அனைத்தி­னதும் உதவிகளால் பேரினவாதம் பலமாக நிறுவனமயப்படுவது கடினமாக இருக்கவில்லை.

குறிப்பாக தேசிய பௌத்த மகாசங்கத்தினரின் ஆசி இந்தபேரின­வாத சக்திகளுக்குக் கிடைத்தது. அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்க்­கத் தொடங்கிய மகா சங்கத்தினர் ஒரு கட்டத்தில் 'தீர்வுப்பொதியை” வாபஸ் வாங்காது போனால் மகாசங்கத்தை விட்டு தாங்கள் விலகப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்­தனர். அதன் படி சிலர் செய்தும் காட்டினர் அதனைத் தொடர்ந்து பல பாத­யாத்திரை, சத்தி­யாக்கிரகங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் என நடாத்தினர். இறுதியில் அரசு இறங்கிப்போய் அவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் என்ன உடன்பா­டுகள் காணப்பட்டன என்பது வெளிவர­வில்லை. ஒரு சில மாதங்கள் அமிழ்ந்திருந்த இந்த எதிர்ப்புகள் அரசு புதிதாகத் திருத்திய உத்தேச அரசியல் திட்டத்தை முன் வைத்த­தோடு திடீரென மீண்டும் வெளிக் கிளம்பின. இதற்கு அரசு பேரினவா­திகள் கேட்டபடி அத்தனையும் அரசியல் திட்டத்தில் கொண்டிராதது காரணமாக இருக்கலாம். இறுதியில் இந்த ஆணைக்குழுவில் போய் முடிந்தது.
ஆணைக்குழுவின் ஆறிக்கை

ஆணைக்குழு தனது விசார­ணையை முடிக்கும் முன்னமே தனது இடைக்கால அறிக்கையை வெளியிட வேண்டியேற்பட்டதற்கு சில காரணங்­கள் உண்டு. குறிப்பாக அரசாங்கம் தனது உத்தேச அரசியல் திட்டத்தை பட்ஜட்டுக்கு முன்பு பாராளுமன்றத்­துக்கோ அல்லது நேரடியான சர்வஜன வாக்கெடுப்புக்கோ விடப்போவதாக அறிவித்திருந்ததே அதன் காரணம். எனவே தீர்வுத்திட்டத்தை முறியடிக்க அவசரஅவசரமாக தயாரிக்கப்பட்டதே ''சிங்கள ஆணைக்குழுவின் இடைக்­கால அறிக்கை”

இந்த அறிக்கை செப்டம்பர் மாதம் 17ந் திகதியன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது. அறிக்கையை யானையின் மேல் வைத்து (பெரஹர) ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பொரளை பௌத்த இளைஞர் காங்கிரசில் இருந்து பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள பௌத்த மகா சம்மேளனத்துக்கு கொண்டு வரப்பட்டது. பல பிக்குகள் உட்பட பெருந்திரளானோர் ஊர்வலமாக வர ஊர்வலத்தின் முன் அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது அமர்ந்தபடி (கண்டி நிலமே சீருடையில்) சிங்கள ஆணைக் குழுவின் செயலாளர் பத்மஷாந்த விக்கிரம சூரிய ஆணைக்­குழு அறிக்கையை ஏந்தியபடி வந்தார். கூட்டம் நிரம்பி வழிய பௌத்த சடங்கு முறைகளுடன் கூட்டம் நடந்தது. அறிக்கை சிங்களத்திலும், ஆங்கிலத்­திலும் அச்சிடப்பட்டு விற்கப்பட்டது. (ஆங்கிலம்: ரூ.150 சிங்களம்: ரூ. 125) அறிக்கையை நீண்ட வரிசையில் நின்று வாங்கினார்கள். மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிய ஏனையோர் மற்ற கட்டிடங்களிலும், வெளி மைதானத்தி­லும், பாதையிலும் நின்று ஒலிபெருக்கி­யில் கேட்டுக்­கொண்டிருந்தனர். தொலைக்காட்சிப்­பெட்டிகள் ஆங்கா­ங்கு வைக்கப்பட்டு மண்டபத்தில் நடப்பவை நேரடியாக காட்டப்பட்டுக் கொண்டிருந்தன.

ஆணைக்குழு அறிக்கையை வெளியிடு­வதற்கு செப்டம்பர் 17ம் திகதியை தெரிந்தெடுத்ததற்கு காரணம் அது அநகரிக்க தர்மபால­வின் சிரார்த்ததினம் என்பதே. அநகாரிக்க தர்மபால சிங்கள பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என சிங்கள பௌத்தர்கள் குறிப்பிடுவர். அவர் சிங்கள பௌத்த பேரினவாத­த்தை பரப்புவதில் எந்தளவு பங்காற்றி­யிருந்தார் என்பது சொல்லித் தெரிய வேண்டிய­தில்லை.

இந்தக் கூட்டத்திற்கு முன்னைநாள் எம்.பி. தினேஸ் குணவா;த்தன, ஸ்ரீமணி அத்துலத்முதலி மற்றும் அமைச்சர் தி.மு.ஜயரத்ன உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டதுடன் அமைச்சர் தி.மு.ஜயரத்ன அறிக்­கையை மகாசங்கத்தினரிடமிருந்து மேடையில் வைத்துப் பெற்றுக் கொண்டார்.

ஆணைக்குழுவின் உள்ளடக்­கத்தைப் பொறுத்தவரை­யில் அதில் முழுக்க முழுக்க தீர்வுத்திட்டத்துக்கு பதிலளிக்கும் வகையிலும், சிங்கள பௌத்தர்களுக்கு பிரயோசனப்படக் கூடிய வகையில் ஒற்றையாட்சித் தன்மையைப் பேணக்கூடிய, சிங்கள பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கக் கூடிய வகையிலும் சட்டப் புத்தகம் போல் தொகுக்கப்பட்டிருந்தது.

அன்றைய பத்திரிகைகளில் வெளியீட்டுச் செய்தியை விளம்பரங்கள், வாழ்துக்கள், செய்திகள் என அமர்க்களப்படுத்தியிருந்தன.

அடுத்தடுத்த நாட்களில் அறிக்கை முழுவதும் தொடராக திவய்ன, லங்காதீப, ஐலண்ட் ஆகிய பத்திரிகை­களில் வெளிவரத் தொடங்கின. ஆணைக்குழு அறிக்கைக்கு ஆதர வாக பொதுவாக அறிக்கைகள் பல பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தன. அதற்கு எதிராக எந்த குரலும் இருக்கவில்லை.

வரலாற்றுக் குப்பைக்கூடைக்குள்

சிங்கள பௌத்த சக்திகளை பகைத்துக் கொள்ள பலர் விரும்ப­வில்லை. ஆனால் இது பற்றி ஆளுங்கட்சியினதும் எதிர்க்கட்சியின­தும் அபிப்பிராயத்தை அறிய பலர் ஆர்வமாக இருந்தனர். செப்டம்பர் 25ம் திகதியன்று அமைச்சரவை தீர்மானங்­களை அறிவிக்கும் வாராந்த பத்திரிகையாளர் கூட்டம் நடந்தபோது ஒரு பத்திரிகையாளர் அமைச்சரவைப் பேச்சாளரான மங்கள சமரவீரவிடம் கேட்டு விட்டார். அவரும் உணர்ச்சி வசப்பட்ட­வ­ராக ''சிங்கள ஆணைக்­குழுவின் அறிக்கை வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தான் போடப்படும்” என அறிவித்து விட்டார். அன்றைய தொலைக்காட்சி, வானொலி செய்திகளில் இது கூறப்பட்டதோடு அடுத்த நாள் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் முன்பக்க முக்கிய செய்தியாக இது இடம் பெற்றது.

தமது தீர்வுத்திட்டத்துக்கு எதிராகவே திட்டமிட்டு முன்னெடுக்­கப்பட்ட அந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக பதிலளிக்க வேண்டும் எனும் நோக்கம் தான் இருந்ததேயொழிய சிங்கள பௌத்த பேரினவாத போக்குக்கு பதிலளிக்கும் தைரியம் மங்களவிடம் இருக்கவில்லை. எப்படி இருக்க முடியும்?பண்பில் இந்த இரு தரப்புக்குமிடையில் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்? எந்த அளவில் இருக்கக் கூடும்?

மங்களவின் ”குப்பைக் கூடை” கதைக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை போpனவாத சக்திகள் காட்டத் தொடங்கின. பௌத்த மகா சங்கத்தினர், இவை மகா சங்கத்தி­னரை அவமதிக்கும் ஒன்றெனக் கூறி பிரச்சாரம் செய்தனர். மகா சங்கத்தினரை அவமதிப்பதென்பது சிங்கள பௌத்தர்களைப் பொறுத்தள­வில் சாதாரண விடயமல்ல. பலர் மங்களவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டனர். (பார்க்க பெட்டி செய்தி) எதிர்ப்பு செய்தி சூடு பிடித்தது. செப்டம்பர் 30-ம் திகதியன்று கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் 1500க்கம் மேற்பட்ட பிக்குமார்கள் உட்பட பலர் ஒன்று கூடி எதிர்ப்பார்ப்பாட்டத்தை நடாத்தினர். உள்ள புத்தர் சிலைக்கு பூசை செய்துவிட்டு அங்கிருந்த அநகாரிக்க தர்மபாலவின் சிலைக்­கருகில் அமர்ந்து தமது எதிர்பார்ப்­பாட்டத்தை நடாத்தினர்.

அவ் வார்ப்பாட்டத்தில் ஆளுங் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கேசரலால் குணசேகர, ஐ.தே.க பா.உ. சுசில் முனசிங்க, முன்னாள் பா.உ.க்களான தினேஷ் குணவர்தன, எஸ்.எல்.குண­சேகர, சிங்களயே மகா சம்மத்த பூமி புத்திர பக்ஷ்ய” கட்சியினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். அமைச்சர் தனது அறிக்கையை வாபஸ் பெற 42 மணிநேர கெடு கொடுத்தனர். எந்த பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் மேலும் 72 மணி நேரம் வழங்கினர்.

அதே வேளை சகல விகாரைகளி­லும், மதச் சடங்குகளிலும் அமைச்சர் மங்கள சமரவீரவை நிராகரிக்கின்ற வகையில் ”பத்த நிக்குஜ்ஜன கர்ம” தண்டனையை விதிப்பதாக தேசிய பௌத்த மகா சங்கத்தினர் தீர்மான மெடுத்திருந்தனர். அந்த தீர்மானத்தின் படி ”மங்கள உட்பட நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் சதிகாரர்க­ளிட­மிருந்து நாட்டை பாதுகாக்க தெய்வத்துக்கு முறையிட்டு தெய்வ சந்நிதிகளில் ஆயிரம் தேங்காய்கள் உடைக்கவும் தீர்மானித்துள்ளோம் என மகா சங்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோஹித்த தேரர் அறிக்கை வெளியிட்டார்.

”பத்த நிக்குஜ்ஜன கர்மய”

இந்த தண்டனையை மங்களவுக்கு மகா சங்கத்தினர் அளித்துள்ளனர். இதன் படி மங்களவின் மதச் சடங்குகளில் மகாசங்கத்தினர் கலந்து கொள்ள­மாட்டார்கள் என்பதுடன் மங்களவின் பௌத்த கடமைகள் ஏற்றுக்­கொள்ளப்படமாட்டாது. இந்த தண்டனை வரலாற்றிலேயே இறுதியாக வழங்கப்பட்டது காசியப்பன் அரசனுக்கே.

காசியப்பன் தனது தகப்பன் தாதுசேனனை கொன்றுவிட்டு அரசமர்ந்தவன். ஒருமுறை காசியப்பன் அன்னதானத்துக்கென பிக்குமாரை அழைத்திருந்தான். பிக்குமார் அமர்ந்தனர். அன்னதானத்தை வழங்க முற்பட்டபோது அன்னப் பாத்திரத்தை பிக்குமார் திருப்பிக் கொண்டனர். ” தந்தையைக் கொன்ற தனயனின் அன்னதானம் எமக்கு தேவையில்லை என்றனர்...”

மங்கள சமரவீர அளித்திருந்த ஒரு பேட்டியில் ” காசியப்பனுக்குப்பின் தண்டனை பெறுவது மங்கள சமரவீர என்று வரலாற்றில் பதிவாவதானது எனக்கு மகிழ்ச்சியே” என தெரிவித்­திருந்தார்.

அரசாங்க சார்பு பிக்குவான ”ஸ்ரீ ரோஹணபிக்கு பெரமுன”வின் செயலாளர் கெட்டமான்னே தம்மாலங்­கார தேரர் தினமினவில் வெளியிட்ட அறிக்கையொன்றில்...

”பத்த நிக்குஜ்ஜன கர்மய'வை அமைச்சருக்கு எதிராக எப்படிவிதிக்க முடியும். இன்று அன்னப் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு எந்த பிக்கு போகிறார். அந்த தண்டனை விதிக்கப்பட்ட எவரேனும் அன்னமிட வந்தால் அவ் அன்னத்தை பெறாது பாத்திரத்தை திருப்பிக் கொள்ள வேண்டும். பௌத்த தர்மம் சொல்லிக் கொடுத்துள்ள 'நிக்குஜ்ஜன கர்மய' சரி என அவர்கள் எண்ணுவதாயின் பௌத்த தர்மத்தில் சொல்லப்பட்டுள்ளபடி பாத்திரமேந்தி பிச்சையெடுத்து பசி தீர்ப்பதையும் கடைப்பிடிக்க வேண்டும்.என்கிறார்.

”மங்களவுக்கு நீங்கள் என்ன தன்டனை விதிப்பது இதோ பாருங்கள்” எனும் தொணியில் 4ஆம் திகதியன்று வெளியான ஏரிக்கரை பத்திரிகையான தினமின (அரச கட்டுப்பாடு பத்திரிகை) மங்கள சமரவீர பௌத்த சடங்குகள் செய்வதை பெரிய படமாக போட்டு அமர்க்களப்படுத்தியிருந்தது.

விசாரமாகா தேவி ஆர்ப்பாட்டத்­துக்கு முன்னைய நாளான 29ஆம் திகதியன்றுஅமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பேசப்பட்டது. அதன் போது ஜனாதிபதி சந்திரிகா ”ஒரு அறிக்கையை வெளியிட்டு அதை வாபஸ் வாங்கி அந்த பிரச்சினைக்கு முடிவு காணுங்கள்” என கூறியதாக லங்காதீப பத்திரிகை தெரிவித்தி­ருந்தது. இதன் மூலம் அரசின் சரணடைவையே இங்கு வெளிப்படுத்து­வதைக் காணலாம். ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தாலும் அமைச்சர­வை­யைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் மங்களவிடம், ”அரசாங்க­த்தை பாதுகாக்கின்ற வகையில் அவ்வறிக்­கையை மங்களவின் 'சொந்தக் கருத்தாக­ஆக்கி' தனிப்பட்ட முறையில் தீர்க்குமாறு தொவித்ததைத் தொடர்ந்து மங்களவும் அதனை ஏற்றக்கொண்டுள்­ளார். அதன்படி மங்கள சமரவீர ஒக்டோபர் முதலாம் திகதியன்று பத்திரிகை அறிக்கையொ­ன்றை வெளியிட்டு தனது பேச்சு மகாசங்கத்தினரை புண்­படுத்தியிருந்­தால் அதற்காக தான் வருந்துவதாக தெரிவித்தார். ஆனால் மகாசங்கத்­தினர் அதனை ஏற்கவில்லை. சிங்கள மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதோடு தீர்வுத்­திட்டத்தையும் வாபஸ் வாங்க வேண்டுமென்றும் அறிவித்தனர். தொடர்ந்தும் தமது எதிர்ப்­பார்ப்பாட்டத்தை நாடுமுழுதும் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

அரசாங்கமோ இந்த எதிர்ப்புகள் தமது தீர்வுத்­திட்டத்துக்கு உலை வைக்கப்போகிறது எனப் பயந்ததில் வேறு சில பிக்குமாரையும் பௌத்த அமைப்புகளையும் சேர்த்துக்கொண்டு மகாசங்கத்தினரின் நடவடிக்கைக­ளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது. தொலைக்காட்சி செய்திகளில் அதிக நேரம் இந்த எதிர்ப்பிரச்சாரங்களுக்கு ஒதுக்கப்பட்டதுடன் பௌத்த பிக்குமாரைக் கொண்டே பதிலளித்தது. ஒக்டோபர் 7ஆம் திகதியன்று விகாரமகா­தேவி பூங்காவினருகில் அரசாங்கத்தின் தீர்வுத்திட்டத்தை ஆதரித்து ஒரு பெரும் ஆர்ப்பாட்ட­த்தை அரச சார்பு பௌத்த அமைப்பு­கள் நடத்தின. பெருமளவில் இதற்குக் கூட்டம் இருந்தது. பல அரச சார்பற்ற நிறுவனங்களும், புத்தி­ஜீவிகளும் ”பேரினவாதிகளுக்கு எதிராக” ஒன்று சேர வேண்டும் எனும் நோக்கில் அரசாங்கத்தை ஆதரித்து வருவது வேடிக்கையாக இருக்கம் அதே நேரம் தீர்வுத் திட்டத்தையும் ஆதரித்து தமது வேலைத்திட்டங்களை அமைத்து வருகின்றன. இந்த கண்மூடித்தனமான போக்கு ஒட்டுமொத்தத்தில் பேரினவாதத்துக்கு பலி கொடுக்கும் ஒரு போக்கேயன்றி வேறில்லை.

பேரினவாதிகளின் நடவடிக்கை­களுக்கு மறைமுகமாக நிதியளித்து அதரவளித்து வருவதாக ஐ.தே.க சார்பு சிங்கள வார பத்திரிகையொன்று தெரிவித்துள்ளதும் இங்கு கவனிக்கத்­தக்கது. ஆர்ப்பாட்டத்­தில் கலந்து­கொண்ட ஐ.தே.க.வினர் மீது ஒழுக் காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதெல்லாம் வெறும் கண்கட்டி­வித்தையே. ”சிங்கள ஆணைக்குழு­வின் அறிக்கை பற்றி அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் கூறியிருப்பதைக் கொண்டு அதன் உள்நோக்கத்தை அறியலாம். ஐ.தே.க. இது பற்றிய தனது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்க வில்லை. ஆனால் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு பூரணமாக உடன்பாடி­ல்லாவிடினும் ஒற்றையாட்சித் தன்மை மாறாதிருக்க வேண்டும். எனும் ஆணைக்குழுவின் அறிவிப்புக்கு தமக்கும் உடன்பாடு உள்ளது” என ரணில் தெரிவித்திருப்ப­தையும் கொண்டு அதன் உண்மையான சுயரூபத்தை அறியலாம்.

அரசாங்கத்தைப் பொறுத்தளவில் பேரினவாதிகளின் இந்த எதிர்ப்புகள் ஒரு பக்கம் தமக்கு வாய்ப்பானதே. ஏனெனில் ஏற்கெனவே அரசு சார்பற்ற அமைப்புகள், புத்திஜீவிகள் பலரையும் பேரின­வாதிகளைக் காட்டித்தான் தம்பக்கம் இழுத்துக்கொண்டது. அதே போல் பாராளுமன்ற தமிழ் அரசியல் சக்திகளையும் தம்பக்கம் இழுத்து­விடலாம். ”சின்ன, சின்ன பிழையிருந்­தாலும் அரசாங்கத்தை கவிழ்க்க விடமாட்டோம்.” எனும் பாராளு­மன்றஇடதுசாரிகளின் நிலைப்பாடும் இந்த வகையைச் சார்ந்ததே.

உண்மையில் பேரினவாதிகள் செய்யும் ஆர்ப்பாட்டத்­திலும் எந்த வித அர்த்தமுமில்லையென கூறலாம். அரசாங்கம் உண்மையில் தமிழ் மக்களுக்கும் எதையும் வழங்கிவிடாத பொதியையே முன்வைத்துள்ளது. அந்த வகையில் பேரினவாதிகளின் கடமையைத் தானே அரசாங்கமும் செய்துள்ளது.

பேரினவாதத்தை வளர்ப்பதில் அரசுக்கும், அரசியல் வாதிகளுக்கும் இருந்த பாத்திரம் பாரியது. அரசாங்­கங்களே வளர்த்துவிட்ட பேரினவாதப் போக்கானது குறிப்பிட்ட வளர்ச்சியின் பின் அரசே தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டாலும் கட்டுப்­படாதது மாத்திரமன்றி பேரினவாதமே அரசை வழிநடத்துமளவுக்கு சென்று­விடும். அந்த நேரம் அரசு கூட பேரினவாதத்திடம் மண்டியிட்டு, சமரசம் செய்துகொள்ளவும், சரணடையவும் நேரிடும் என்பதற்கு இந்த ஒரு சில போக்குகளே சிறந்த ஆதாரம்.

மங்கள சமரவீர லங்காதீபவுக்கு அறித்த பேட்டி இதற்கு நல்ல உதாரணம். அப்பேட்டியில்...

”சிங்கள ஆணைக்குழுவின் நோக்கமான சிங்கள மக்களக்கு நேர்ந்த அநீதிகளை ஒழிப்பது எனும் அதே இலக்கிலேயே அரசாங்கமும் செயற்பட்டு வருகிறது. யுத்தத்தினால் அதிகமாகக் கொல்லப்படுபவர்கள் எமது சிங்கள பௌத்த இளைஞர்களே. இது பற்றிய வருத்தம் இருப்பதாலேயே யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதி தீர்வுத்திட்டத்தை முன்வைத்துள்ளார். இன்று சிங்கள இனத்தைப் பாதுக்காக நாம் செய்யக்கூடிய உயரிய விடயம் யுத்தித்தினால் கொல்லப்படும் சிங்கள பௌத்த இளைஞர்களின் உயிர்களை பாதுகாப்பதே”

(லங்காதீப-5-10-97)

சிங்கள பௌத்த பேரினவாதத­்துக்கு நேருக்கு நேர் நின்று எதிர்­கொள்ள முடியாமல் தாஜா பண்ணு­வதையே இங்கு காண முடிகிறது.

இந்த நிலையில் தமிழ் முஸ்லிம் மலையக மக்களுக்கு இதுவரை சிங்கள ஆட்சியாளர்களினால் ஏற்பட்ட அநீதிகள் குறித்து விசாரணை செய்ய ஆணைக்குழு அமைத்தால் அதன் எதிரொலி என்னவாயிருக்கும்? முதலில் அப்படி­யொன்றை அனுமதித்து விடுவார்களா? மகா சங்கத்தினரைப் பற்றி எங்குமே அறிக்கையில் குறிப்பிடவோ அறிக்கையில் குறிப்பிடவோ அறிக்­கையை பொறுப்பேற்கவோ இல்லை. இல்லாத போது மகாசங்கத்தினரை அவமதித்ததாக எப்படி மகாசங்கத்தினர் கூறமுடியும்? அனுராதபுரத்தில் சிங்கள விசசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது அமைக்கப்படாத சிங்கள ஆணைக்குழு­தென்னிலங்கை­யில் 60,000க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட போது அமைக்கப்படாத ஆணைக்குழு, 600க்கும் மேற்பட்ட பிக்குகள் சிங்களத் தலைவராலேயே டயருக்கு இரையாகிய போது அமைக்கப்படாத ஆணைக்குழு இப்போது எங்கிருந்து வந்து முளைத்தது?
இனவாதத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?

பயங்கரவாத எதிர்ப்பியக்கம்: பேரினவாதத்தின் நவ வியூகம்?


என்.சரவணன்

”...சிங்கள மக்கள் இனவாதிகள் என்று கூறுகிறார்கள். இன்று சிங்கள மக்களுக்கென்று ஒரு சிங்களக் கட்சியாவது உண்டா, இருக்கின்ற கட்சிகளெல்லாம் தமிழர்களுக்குச் சார்பான கட்சிகள். ஆனால் சிங்கள மக்களை இனவாதக் கட்சிகள் எனக் கூறுகின்ற தமிழ்க் கட்சிகள் தமிழர்களுக்கா­கவே அமைத்துக் கொள்ளப்பட்ட கட்சிகள். தமிழீழம் கோரும் கட்சிகள். தமிழீழம் என்கின்ற சொல்லைத் தமது கட்சிப் பெயரில் கொண்டுள்ள கட்சிகள். இப்படிப்பட்ட நிலையில் தான் நாங்கள் சிங்கள பௌத்தர்களின் எதிர் காலத்தைப் பற்றி தீவிரமாகச் சிந்திக்க வேண்டி­யிருக்கிறது...”

இவ்வாறு கடந்த ஜனவரி 14ஆம் திகதியன்று கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் பயங்கரவாத ஒழிப்பியக்கத்தின் தலைவர் சம்பிக்க ரணவக்க உரையாற்றியிருந்தார்.

பயங்கரவாத எதிh;ப்பியக்கத்தினால் (National Movement Against Terrorism) அமைக்கப்பட்டுள்ள ”பயங்கர­வாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தேசிய செயற்திட்டம்” (National Plan of Action Against Terrorism) எனும் பிரகடனத்தை பகிரங்கமாக சிங்கள மக்களின் முன்வைப்­பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலேயே அவர் அவ்வாறு உரையாற்றியிருந்தார்.

வெற்றிகரமான கூட்டம்!

இக்கூட்டத்திற்கான பிரச்சாரங்கள் பாரிய அளவில் செய்யப்பட்டிருந்தன. திவய்ன, The Island போன்ற பத்திரிகைளிலும் விளம்ப­ரங்கள் செய்யப்பட்டிருந்தன. அது தவிர சட்டன, சிங்கள பௌத்தயா, ஹெல ருவண, சிங்க ஹண்ட போன்ற பேரினவாதப் பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்யப்பட்­டிருந்தன. ஒரு வாரத்துக்கு முன்னிருந்தே கொழும்­பிலும் அதற்கு வெளியிலும் பெருமளவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்­தன. அச்சு செய்யப்பட்ட 1.5 ஒ 2 அடி அளவிலான போஸ்டர்க­ளும் கையால் வரையப்பட்ட 4 ஒ 2 அடி அளவிலான போஸ்டர்களும் அருகருகே பெரு­மளவில் ஒட்டப்பட்டிருந்தன. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இப் போஸ்டர்கள் திருப்பித் திருப்பி ஒட்டப்பட்டன. கூட்டம் நடந்த அன்று மண்டபத்துக்கு அருகிலும், வெளிப் பாதைகளிலும் ”தாய் நாடு உன்னை அழைக்­கிறது” என்று அறைகூவும் பெரிய கட்டவுட்களும் காணப்பட்டன. மண்டபத்­துக்கு வெளியில் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் வெளியிடப்பட்­டுள்ள ”பயங்கரவாத ஒழிப்பு தேசியத் திட்டம்” என்ற பிரசுரமும் சிங்கள இனவாதப் பத்திரிகைகள் சிலவும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்டிய சிங்கள சாரி அணிந்த கையில் மொபைல் தொலைபேசிக­ளுடன் நின்று கொண்டிருந்த உயர் மத்திய தர வர்க்கப் பெண்கள் கூட துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பு, நூல், பத்திரிகைகள் விற்பனை என வீதிக்கு இறங்கி செயற்பட்டனர். வர்க்கம், பால், சாதி போன்ற நிலைகளைக் கடந்து -பேரினவாத- இனத்துவ நடவடிக்­கை­களின் செயற்பாட்டாளர்களாக இவர்கள் இருப்பதை இவை காட்டின.

பொலிஸ் பந்தோபஸ்தும் கொடுக்கப்­பட்­டிருந்தது. கூட்டத்துக்கு பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் ஏனையோர் மண்டபத்துக்கு வெளியில் உரையை மாத்திரம் கேட்டுக் கொண்டிருந்­தனர். கலந்து கொண்டி­ருந்த சிலரது வாகனங்கள் மண்டபத்துக்கு வெளியில் இருந்தன. அவற்றில் இராணுவ அதிகாரி ஒருவரது காரும் ஒன்று. சீருடை தரித்த அவரது சாரதி அக்காருடன் காத்திருந்தார். இவ் அமைப்புடன் முக்கிய படையதிகாரிகள் சிலர் செயற்பாட்டாளர்களாக இருப்பதாக எமக்கு ஏற்கெனவே தகவல் தெரிந்திரு­ந்ததால் அது எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தா­விட்டாலும் வந்திருப்பவர் யார் என்பதை அறிய கிடைக்கவில்லை. சென்ற வருடம் புலிகள் இயக்கத்தைத் தடை செய்யக் கோரி விகாரமகாதேவி பூங்காவிலிருந்து பிரித்தானிய தூதுவராலயத்துக்கு ஊர்வ­லமாகச் சென்று ஆர்ப்பாட்டம் செய்து தூதரகத்துக்கு மகஜர் சமர்ப்பித்த போது அதில் பிரிகேடியர் ஜானக்க பெரேராவும் சிவில் உடையில் கலந்து கொண்டிருந்தார். இவர்களின் இன்னுமொரு செயற்பாட்­டாளராக பிரிகேடியர் லக்கி அல்கமவும் இருக்கிறார் என்பதை இவர்களின் செயற்பாடுகளை அவதானித்து வருபவர்கள் அறிவர்.

பயங்கரவாத ஒழிப்பியக்கம்
பின்னணி

இவ்வியக்கம் கடந்த 1998 மார்ச் 05ஆம் திகதியன்று மருதானையில் வெடித்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். சென்ற வருடம் இலங்கையின் 50வது ஆண்டு சுதந்திரப் பொன்விழா கண்டியில் நடத்த திட்டமிருந்த போது கண்டி தலதா மாளிகையருகில் குண்டு வெடித்ததைத் தொடர்ந்து மேற்­கொள்­ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், வன்முறைச் சம்வங்க­ளுக்குப் பின்னால் இருந்த அமைப்புகள் முறைப்படியான வேலைத்­திட்டத்துடன் நிறுவன­மயப்பட்டு இருக்கவில்லை. ஆனால் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு விட்ட சிங்கள வீர விதான அமைப்பின் பல்வேறு துணை நிறுவனங்கள் அமைக்கப்­பட்டு வந்தன. ஆனால் அத்துணை நிறுவன­ங்களில் சிலவற்றைத் தான் சிங்கள வீர விதான இயக்கம் தனது துணை நிறுவ­னமென்று உரிமை பாராட்டியிருந்தது. சிலவற்றை உரிமை பாராட்டவில்லை. அப்படி உரிமை பாராட்டமல் அமைக்கப்பட்டது தான் ப.ஒ.இ. என்கிற அமைப்பு.

மருதானைக் குண்டு வெடிப்போடு பெரிய ஆர்ப்பாட்­டம், ஊர்வலம், துண்டுப் பிரசுர விநியோகம், மகஜர், கையெழுத்து வேட்டை, பொதுக் கூட்டங்கள் என ஆரவா­ரமாக ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்புக்கு சிங்கள வீரவிதான அமைப்பின் இரகசியத் தலைவர் எனக் கருதப்படும் சம்பிக்க ரணவக்கவே பகிரங்கத் தலைவராகச் செயற்படுகிறார்.

நவ பேரினவாதத்துக்கு தலைமை கொடுக்கும் சம்பிக்க

சம்பிக்க ரணவக்க முன்னர் ஜாதிக்க சிந்தனய அமைப்பினை வழி நடத்தியவர். அப்போது நளின் டி சில்வா, குணதாச அமரசேக்கர, எஸ்.எல்.குணசே­கர, மாதுலுவாவே சோபித்த தேரோ போன்ற­வர்கள் தனித்தனியான அணிக­ளாக இருந்தனர். இவர்களில் சம்பிக்க ரணவக்க அதற்கு முன்னர் ஜே.வி.பி. பின்னணியைக் கொண்டிருந்தார். சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு அரசியல் பொருளாதார வடிவம் கொடுத்து ”ஜாதிக்க சிந்தனய” எனும் பேரில் கோட்பாடாக உருவாக்கிக் கொடுத்தார் அவர். அப்போதெல்லாம் தனித்­தனி அணிகளாக இருந்தாலும் பேரினவாதப் நோக்கில் ஒருமித்த கருத்திருந்ததால் பல்வேறு செயற்பாடுகளை இவர்கள் சேர்ந்து செய்தனர். ஆனாலும் சம்பிக்கவின் சளைக்காத உழைப்புக்கு முன்னால் ஏனையோர் தாக்குப் பிடிக்கவி­ல்லை. எனவே தான் சிங்கள பௌத்த பேரினவா­தத்தை நிறுவனப்­படுத்தும் வேலையில் சம்பிக்கவால் வெற்றி காண முடிந்தது. ஏனையோர் தனிமைப்பட வேண்டியேற்ப­ட்டது.

சிங்கள வீரவிதான அமைப்பு இன்று பல்வேறு சிங்கள பௌத்த அமைப்புகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்துள்ள நிறுவனம். அதன் ஒரு பணியாகவே 1996 டிசம்பர் 18 அன்று சிங்கள ஆணைக்குழுவும் அமைக்கப்பட்டு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான வேலைத் திட்டங்கள் அறிவிக்கப்­பட்டன. இச் சிங்கள ஆணைக்குழுவை வீரவிதான அமைப்பு நேரடியாக நடத்தவில்லை. மாறாக 42 சிங்கள பௌத்த அமைப்பு­களை அணி திரட்டி தேசிய ஒருங்­கிணைப்புக் கமிட்டி எனும் அமைப்பைத் தொடங்கி அதன் தலைமையிலேயே சிங்கள ஆணைக்­குழு செயற்பட்டது.

நிறுவனமயப்படும் பேரினவாதம்

சிங்கள வீரவிதான அமைப்பு இன்று நாடளாவிய ரிதியில் மூலை முடுக்குகளாக கிளைகளை அமைத்து தீவிரமாகச் செயற்­பட்டு வரும் அமைப்பு. இன்று ஜே.வி.பி.க்கு அடுத்ததாக மிகவும் திட்டமிட்ட முறையில் அமைப்பை நாடு முழுவதும் மூலை முடுக்கு­களெங்கும் தொடக்கி, பரப்பி, பலப்படுத்தி வரும் அமைப்பு வீர விதான அமைப்பு தான். அதன் ஒரு கிளையாக அமைக்கப்பட்டுள்ள இந்த ப.ஒ.இ.வ கடந்த ஒன்பது மாதங்க­ளுக்குள் 12 முக்கிய பெரிய செயற்பா­டுகளைச் செய்து­விட்டிருப்­பதாக அறிவித்து­ள்ளது.

ஏற்கெனவே சரிநிகரில் சிங்கள பௌத்த போpனவாதம் நிறுவனமயப்­பட்டு பலப்படுத்தப்பட்டு வருவதை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தோம். அந்த நிலைமை இன்று மேலும் உறுதியாகியுள்ளது. பேரினவாதம் நிறுவனமயப்பட்டு வருகிற ஆபத்தை உணராத வரை தமிழ், முஸ்லிம் மக்கள் தங்களுக்கு நேரவிருக்கின்ற எதிர்கால ஆபத்தை தடுத்து நிறுத்த முடியாது.

இன்று பேரினவாதம் நிறுவன­மயப்பட்டுள்ள அளவு அதில் சிக்கி­யுள்ள ஒடுக்கப்படும் மக்கள் ஜனநாயக ரிதியில் நிறுவனமயப்படாதிருப்பது எதிர்காலம் குறித்த பீதியை மேலும் அதிகப்படுத்துகிறது என்றே கூறலாம்.

இன்று வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத தேசியத் திட்டம் வெறுமனே புலிகளுக்கு எதிரானது என்று கருதினால் அது தவறு. அது ஒட்டு மொத்தத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் சனநாயக கோரிக்கை­களுக்கும் அவர்களின் நிம்மதியான வாழ்வுக்கும் எதிரானது. இவ்வறிக்கை­யில் கூறப்பட்­டுள்ளவற்றை சாராம்சமாக அன்றைய பிரதம பேச்சாளர் சம்பிக்க உரையாற்றும் போது கூடியிருந்­தவர்கள் மிகவும் ஆழமாக அவதானித்தனர். அவ்வுரையைக் கேட்டுக் கொண்டிருந்த சில சிங்கள நண்பர்கள் அவ்வுரையைக் கேட்கும் எந்தச் சாதாரண சிங்களவரும் மூளைச் சலவைக்குள்ளாகிவிடுவர் என்றார். அவரின் உரைக்கு இடையில் அவ்வப்­போது கூடியிருந்தவர்கள் மத்தியில் இருந்து வந்த கரகோசம் எத்தனையோ விடயங்களை வெளிப்­படுத்தியது.

இக் கூட்டத்தில் உரையாற்றிய சம்பிக்க...

”...புலிகள் அமைப்பு பீரங்கிகள், மிசையில், விமானம் போன்றவற்றை வாங்குவது எம்மோடு விளையாடு­வதற்கல்ல. அவர்கள் இன்று ஏவுக­ணை­களைத் தயாரிக்கவும் முயற்சி செய்கின்றனர். இந்நிலைமையில் புலிகளை மேலும் விளையாடு­வதற்கு இடமளிக்க முடியாது. நாங்கள் அடிபணிய­வும் மாட்டோம். எனவே அரசியல்வாதிகள் ஆடிய ஆட்டம் போதும். அந்த ஆட்டங்களுக்குப் பதில் கொடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது. மக்களை அதற்காக நிறுவனமாக அணிதிரளும்படி கூறுகின்ற திட்டமே இதில் உள்ளது...”

திட்டம் என்ன?
ஆடுத்தது இராணுவ வடிவம்

அத்திட்டம் பிரதானமாக ஐந்து விடயங்களை உள்ளடக்கியது. (அருகிலுள்ள 9ஆம் பக்கத்தைப் பார்க்க)

அதன் சாராம்சம் என்னவென்றால் ”சிங்கள மக்களை தமிழீழ போராட்­டத்துக்கு எதிராக கோட்பாட்டு ரீதியில், அரசியல் ரீதியில் ஆயுத ரீதியில் தயார்படுத்துவது. போரின் மூலம் முற்றாக துடைத்­தெறிவது. இதற்கு சிங்கள மக்களை பலப்படுத்துவது. சிங்களப் படையைப் பலப்படுத்துவது. தமிழ் மக்களை தமது கோரிக்கைகளி­லிருந்து வாபஸ் பெறவைப்பது. தமிழ் ஈழப் போராட்­டத்தில் பங்கு­கொள்ளும் எவரும் பிடிபட்டால் அத்தண்டனையை அவரது குடும்பத்தவர்­களுக்கும் கிடைக்கச் செய்வது...” போன்றவற்றை உள்ளடக்கியதே இத்திட்டம்.

பேரினவாதம் இது வரைகாலமில்லாத அளவு நவ வடிவம் பெற்று வளர்வதற்கு இது ஆலோசனைகளைக் கூறுவதை இதைப் பார்ப்பவர்கள் அவதானிக்க முடியும்.

இதற்கு முன்னர் அதற்கு ஒரு உறுதியான கோட்பாட்டு வடிவம் இருக்கவில்லை. இதற்கு முன்னர் சாpயான நிறுவன வடிவம் இருக்கவில்லை. உறுதியான அரசியல் வடிவம் இருக்கவில்லை. இன்று அத்தனை­யையும் அது பெற்று வருவதையும் அவை பலப்படுத்தப்­படுவதையும் காண முடிகிறது. இனி பேரினவாதம் பெறவேண்டிய வடிவம் இராணுவ வடிவம் தான். அதற்குரிய காலம் தொலைவிலில்லை என்றே தெரிகிறது.

இது வரை காலம் சிங்கள பௌத்த பேரினவா­தத்துக்கு தலைமை கொடுத்த அரச கட்டமைப்பு இன்று சிங்கள சிவில் மக்கள் மத்தியிலும் ஊடுருவி பலமடைந்து வருகிறது. இதன் விளைவு எதிர்காலத்­தில் மோசமாக இருக்கப்­போகிறது என்பதைத் தான் அண்மைய போக்குகள் காட்டுகின்றன.

நவீன வியூகம்

இன்று சிங்கள சிவில் மக்கள் மத்தியில் தோன்றி, பலம் பெற்று வருகின்ற போpனவாத அமைப்புகளை நோக்குகின்ற போது அரசுக்கு வேலை மிச்சம். தமிழ் மக்களுக்கு எதிரான ஐதீகத்தை சிங்கள மக்கள் மத்தியில் வளர்த்தல், தமிழ் மக்களை ஒடுக்குதல், அதனை மூடிமறைத்தல், அதனை எதிர்த்து ஒலிக்கும் குரல்களை அடக்குதல். அக்குரல்கள் நீதியற்றவை என்று சர்வதேச பிரச்சாரம் செய்தல் என அரசு செய்து வந்த அனைத்து செயற்பாடுகளையும் இன்று சிவில் அமைப்புகள் செய்கின்றன.

அரசுக்கு வேலை மிச்சம் அரசு போpன­வாத குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பலாம். படையினரின் உள நிலையை வளர்த்தெடுக்க இனி அரசு அதிகம் சிரமம் படத்தேவை­யில்லை. அதனை சிங்கள சிவில் சமூகம் தானே பொறுப்பேற்று நடத்தும். தமிழ் மக்களை கண்காணிக்க, சந்தேகிக்க உளவுத்துறை தேவையில்லை. அதனையும் சிவில் சமூகம் செய்யும். சர்வதேச பிரச்சாரத்­தைக் கூட அரசு செய்யத் தேவையில்லை இவ்வமைப்புகளின் கிளைகள் அவற்றை செய்யும் அத்துடன் இன்று கணணியில் இன்டர்நெட் வெப் தளங்களை பல சிங்கள பேரின­வாத அமைப்புகள் வைத்துள்ளன அவற்றுக்கூடாக தமிழ் மக்களுக்­கெதிரான பிரசாரங்களைச் செய்கின்றன. அரசு அதனை சர்வதேசத்துக்கு சொன்னால் அது ஒருதலை­பட்சமாக இருக்கும். ஆனால் ஒரு சிவில் அமைப்பு ஒன்று அவ்வாறு கூறும் போது அதற்கு பலம் அதிகம்.

சர்வதேசப் பிரச்சாரம்

சிங்களப் பேரினவாத வெப் தளங்களாக Sinhaya.com மற்றும் voice of lanka.com போன்ற பல வெப் தளங்கள் இருக்கின்றன இதில் voice of lanka.net.home page.html எனும் வெப் தளத்துக்குப் போனால் அது பல சிங்கள பௌத்த வெப் தளங்களுடன் இணைப்பை ஏற்படுத்தியுள்ள­தைக் காணலாம். எனவே இந்தத் தளத்துக்குப் போனால் மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் சிங்கள அமைப்பான சமாதானம், ஐக்கியம், மனித உரிமைகள் என்பவற்றுக்கான இலங்கை அமைப்பு எனும் (SPUR-Society for Pace, Unity and Human Rights for Sri Lanka) அமைப்பு மற்றும் இலங்கை அரசின் பிரச்சாரத் தளங்களுக்கும் போகலாம். இதில் புலிகள் இதுவரை நடத்தியதாக பல குண்டு வெடிப்புகள், மக்கள் மீதான தாக்குதல்­கள், யுத்த நிலவரங்கள், அரசியல் நிலவரங்கள், செய்திகள் என பல்வேறு விபரங்களின் பட்டியல்­களைக் காணக் கூடியதாக இருக்கிறது. முன்னரெல்­லாம் ஈழப் போராட்டத்தை ஏகாதிபத்திய சதியென்­றும், போராளிக்குழுக்களை அமொpக்க சீ.ஐ.ஏ. கருவிகள் என்றும் அர்த்தம் கற்பித்த பேரினவாத சக்திகள் இன்று அப்படிக் கூறுவதில்லை. தந்திரோபாய ரிதியில் அவற்றை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதும் இன்று புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் சிலவற்றை செய்திருப்ப­தாகவும் அவை கருதுகின்றன. தங்களது வெப் தளங்களில் அமெரிக்கா பிரித்தானியா, கனடா போன்ற நாடுகள் புலிகளுக்கு எதிராக விடுத்துள்ள அறிக்கைகளை ஆதாரம் காட்டு­கின்றன. இந் நிலைமை அரசுக்கு பெரிதும் சாதகமானது. எனவே அரசே இரகசியமாக இவ்வமைப்புகளுக்கு பல்வேறு வழிகளில் ஆதரவு வழங்கினாலும் ஆச்சரியப்படு­வதற்கில்லை.

ஒரு புறம் தமிழ் மக்களின் மீதான ஒடுக்கு­முறையும் அதற்கெதிரான போராட்டத்தின் அவசியமும் அதிகரித்து வருகின்ற அதேவேளை மறுபுறம் அதற்கு நேரெதிரான போக்கை சிங்கள சமூகத்தின் மத்தியில் காண முடிகிறது. நம்பிக்கை இழக்க வைக்கின்ற நிலைமைகள் மேலும் அதிகரித்த வண்ணமுள்ளன. இவை துருவமயமான போக்குக்கு அடிகோலுபவையாக ஆகிவிடுகின்றன.

அந்த வகையில் இன்றைய பேரினவாதத்தின் நவீன வடிவத்திலான வியூகங்களை விளங்கிக் கொள்ளல் அவசியம்.

பயங்கரவாத எதிர்ப்பியக்கத்தின் தேசிய வேலைத்திட்டம்


என்.சரவணன்


இத்திட்டம் பிரதானமாக ஐந்து தலைப்புக்களை உள்ளடக்கியது.

அதன் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.

”...தமிழ் இனவாதத்தினால் வழிநடத்தப்­படும் பயங்கரவாதம் இன்று முழு ஸ்ரீலங்கா­வையும் விழுங்கிவிட்டுள்ளது. அதன் முதல் இலக்கு ஸ்ரீலங்காவின் வட கிழக்குப் பகுதிகளில் தமிழ் ஈழத்தை அமைத்துக் கொள்வது. இரண்டாவது முழு ஸ்ரீ லங்காவையும் கைப்பற்றுவது. அதன்பின் தென்னாசியாவை உலகின் தமிழ் அரசாக உருவாக்கி விடுவது. எனவே தான் இதற்காக இலங்கைக்­குள்ளும், இந்தியாவிலும் கிழக்கா­சியாவிலும் மேற்குலக நாடுகளிலும் கோட்­பாட்டு ரீதியில் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம் என்பவற்றுடன் சேர்த்து இராணுவ நடவடிக்­கை­களிலும் ஈடுபட்டு வருகின்றனர்....

...புராதனம் தொட்டு பல்வேறு ஆக்கிர­மிப்புகளுக்கு முகம்கொடுத்து வந்தாலும் எமது தனித்துவத்தைப் பாதுகாத்து வருகிறோம் நாம். தமிழ் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தலைமை கொடுப்போம். அதற்கு முன்நிபந்தனையாக தமிழ் இனவாதத்தையும் புலிப் பங்கர­வாதத்தையும் முற்றாக ஒழித்துக்­கட்டுவதற்­காகவே இன்று தேசிய திட்டமொன்றை முன்வைத்துள்ளோம்.

இது எமது கொள்கையை அடிப்­படை­யாக வைத்து அமைக்கப்­பட்டுள்ள திட்டம். ஆனால் இது எமது மூலோபாயம் தந்திரோபாயத் திட்டம் அல்ல. ஏனெனில் அவ்வாறான மூலோபாயம் தந்திரோபாயம் பற்றிய திட்டத்தை பகிரங்கப்படுத்தி விவாதிக்க முடியாது என்பதாலேயே....”

இந்தப் பந்தி அவர்களுக்கென்று இரகசியத் திட்டமும் திட்டமிட்ட வேலைமுறையும் உள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறது என்பதை வாசகர்கள் கவனிக்க.

இதில் உள்ள ஐந்து தலைப்புகளில் முதலாவது ”பயங்கரவாத ஒழிப்புத் தேசியத் திட்டம்.” அதில்...

”...புலிப் பயங்கரவாதத்துக்கு காரணம் தமிழ் மக்களுக்குள்ள விசேடப் பிரச்சினை என்பதை நாங்கள் உறுதியாக நிராகரிக்கி­றோம்.... தமிழ் மக்களை வென்றெடுப்பதற்­கான ஒரேயொரு வழி சமஷ்டி அரசியல­மைப்பு என்பதையும் நாங்கள் உறுதியாக நிராகரிக்கிறோம். புலிகளை பேரின் மூலம் தோற்கடித்து குறைந்தபட்ச தீர்வுக்கு பணிய வைக்க முடியும் என்கின்ற போலித்தனமான கற்பனையிலும் நாங்கள் இல்லை. 1983இன் பின்னர் சிங்கள மக்களுக்­கெதிரான 127 தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர். சொத்தக்களை நாசமாக்கியி­ருக்கின்றனர்...

போருக்குக் காரணம் புலிப் பயங்கரவா­தமே. புலிப் பயங்கர­வாதத்துக்கு அடிப்படை மிலேச்சத்­தனமே. அதற்கு வலுவூட்டியிருப்பது பாதாள உலகமே. புலிகளின் தலைவர் பாதாள உலகத்தின் வீரன். அவர்கள் நிதி பெறுவது ஆயுத மற்றும் போதைப் பொருள் கடத்தல் வியாபாரத்தின் மூலமே. அரசின் கவனமி­ன்மை காரணமாகவும் படையின் ஆயுதங்கள் பிலகளை அடைகின்றன. அது சிங்கள மக்க­ளின் பணம். அதை விட அரசின் வெளியுறவுக் கொள்கையில் உள்ள பலவீனம் காரணமா­கவும் புலிகள் அவ்வப்போது பலம் பெற்ற விடுகின்றனர். எனவே புலிப்பங்கரவாதத்­துக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெறுவது கட்டாயமாக உள்ளது. அதற்காக

- சிங்கள மக்களை யுத்தத்துக்கு பிரக்ஞையுடன் பங்குகொள்ளச் செய்வது.

-போர் வீரர்கள் சோர்வடையாமல் போரிடுவதற்காக உறுதிமிக்க கருத்தாக்கத்தை கட்டியெழுப்புவது.

-ஊழல்களில்லாத வகையில் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தம்வகையில் ஆயுதங்களை உற்பத்தி செய்வது.

-தமிழ் மக்களின் பிரச்சினை என்கின்ற ஐதீகத்துக்கு எதிரான கருத்தாக்கத்தை கட்டியெழுப்புவதனூடாக சர்வதேச சமூகத்தை வென்றெடுப்பது.

-ஈழம்வாத ஐதீகத்திலிருந்து தமிழ் மக்களை மீட்பது.”

என்கிறது. இரண்டாவது தலைப்­பான ”தேசத்திற்கான போர் இலக்கு” என்கின்ற பகுதியில் சாராம்சமாக

”...1. யுத்தத்துக்கு போதுமான பொருளாதார மற்றும் கருத்து நிலையை வளர்ப்பது. இதில் மக்களை பிரக்ஞைபூர்வ­மாக ஈடுபடுத்துவதற்கு மனித மற்றும் பொருள் வளங்களை பெறுவ­தற்காக அரச, தனியார், தொழில் நிலையங்கள் கல்வி நிலைய­ங்கள் என்பவற்றில் பயங்கரவாத எதிர்ப்புக் குழுக்களை உருவாக்­குதல். அதனை பாதுகாப்பு துறையுடன் இணைத்து உளவுப் பணிகளிலும் பாதுகாப்புப் பணிகளையும் மேற்கொள்­ளல். இதில் அரசியல் தலையீடுகளை சேராது தடுத்தல்....”

இத் தலைப்பின்கீழ், கீழ் வரும் உப தலைப்புகளில் விரிவாக பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அத்தலைப்புகள்...

”..2. புலிப்பயங்கரவாதத்தை ஒழிக்கின்ற நோக்குடன் சகல அரசியற் கட்சிகள் மற்றும் நிறுவனங்களை தேசிய ரிதியில் ஒருங்கிணைத்தல்.

3. பாடசாலை கல்வித் திட்டத்தை தேசாபிமானத்தை வலியுறுத்தும் வகையில் சீர்திருத்தம் செய்தல்.

4. தேசாபிமானம் மற்றும் உண்­மையான பிரச்ஞையுணர்வை உயர்த்தும் நோக்குடன் கலை நிகழ்ச்சிகளை விரிவாக்குதல்.

5. சகல தொடர்புசாதன நிறுவனங்­களுக்கூடாக புலியெ­திர்ப்பு போராட்டத்துக்கான பிரச்சார நடவடிக்கை­களை மேற்கொள்­ளல்.

6. புலிகள் அமைப்புக்கு எதிரான சட்டத்தை மேலும் திருத்தி அதற்கு துணைபுரியும் சகலரை­யும் கைது செய்து அடக்குதல்.

7. தெற்குக்கு இடம்பெயரும் தமிழர்களின் பயங்கரவாத எதிர்ப்புணர்வை உறுதிப்படுத்துவது.

8. தமிழ் மக்களை இல்க்காகக் கொண்ட திட்டமிட்ட கல்வி மற்றம் பிரச்சார நிகழ்ச்சிகளை உருவாக்கல்.

9. தமிழ் சமூகத்துக்கு இடையூறாக செயற்படும் சகல தமிழ் அமைப்புக­ளையும் சட்டவிரோத அமைப்புகளாக்கி அவற்றினை நிராயுதபாணிகளாக்கி கைது செய்து தடுத்துவைத்தல்.

10. புலிப் பயங்காரவாதத்துக்கும் பிரிவினை­வாதத்துக்கும் எதிராக தமிழ் சமூகத்தை மையப்படுத்த உச்ச அளவு துணை செய்தல்.

11. முஸ்லிம் மக்களை பிரிவினைவாதத்தி­லிருந்து மீட்கின்ற வேலைத்திட்டத்தை பரவலாக்கல்....”

இதை விட ”போர்க்களத்துக்கு தேவை­யான அளவு போர்வீரர்கள்.” எனும் மூன்றா­வது தலைப்பின் கீழ் உள்ள உப தலைப்புகளை மாத்திரம் இங்கு குறிப்பிடுகிறோம்.

”1. யுத்தத்துக்கான யுத்த நிகழச்சி நிரலொன்றினை தயாரித்தல்.

2. படைவீரர்களின் தேசாபிமான உள நிலையை பலப்படுத்­தல்.

3. போர்வீரர்களின் உளநிலையை வீழ்த்து­கின்ற நிகழச்­சிகளை தடுத்து நிறுத்துவது.

4. சேருகின்ற சகல படையினருக்கும் போர்ப் பயிற்சிக்கு அப்பால் கல்வித் தரத்தையும் உயர்த்தல்.

5. பாதுகாப்புத் துறையினருக்கு விசேட பயிற்சிகளை வழங்குவது.

6. படைக்கு ஆட்சேர்ப்புக்காக பல்கலைக்­கழகம், பாட­சாலை, இளைஞர் அமைப்பு­கள் என்பவற்றை இலக்காக வைத்த திட்டமிட்ட நிகழ்ச்சிகளை நடைமுறைப்­படுத்தல்.

7. சிவில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக புதிய பாதுகாப்பு பிரிவை ஆரம்பித்தல்.

8. வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்துதல் இதற்கு தமிழர் தாயக கோட்பாட்டை வலியுறுத்தும் எவரையும் அரசவிரோ­தியாகியாக்கி தண்டனையளித்தல்....” என்கின்றது.
நான்காவது தலைப்பான ”படையினருக்கு போதிய நவீன போர்த் தளபாடங்கள்” எனும் பகுதியின் உப தலைப்புகள் இவை...

1. ஆயுதம் தயாரித்தல்.

2. போர்த்தளபாடங்கள் பற்றிய ஆராய்ச்சி நிலையங்களை கட்டியெழுப்புதல்.

3. போர்த்தளபாடங்களை கொள்வனவு செய்வதை ஒழுங்காக திட்டமிடல்.
ஆகிய தலைப்புகளில் உள்ள­வற்றின் சாராம்சத்தில்..

”...இயலுமானவரை போர்த்தளபாடங்­களை உள்ளூரிலேயே தயாரிப்பது. அதற்கு தேவையான பயிற்சிகளை உள்ளூர் மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய தயாரிப்பு­களை செய்தல். புதிய போர்க் கருவிகளை கண்டுபிடிப்ப­தற்கான ஆராய்ச்சி நிலையங்களை உருவாக்கி ஊக்குவித்­தல். போர்த் தளபாட கொள்வனவை தனியாருக்கு வழங்காமல் அரசே மேற்கொள்வது” போன்ற­வற்றை வலியுறுத்தியுள்ளது.

ஐந்தாவது தலைப்பான புலிப் பயங்கரவா­தத்துக்கு எதிரான உலக அபிப்பிராயம் எனும் தலைப்பில் எட்டு விடயங்கள் குறிப்பிடப்பட்­டுள்ளன அதில் சுருக்கமாக..

”...கடல், தரைமார்க்க பயங்கரவாத போக்குவர­த்தைத் தடுக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்தல். ”திராவிடஸ்தான்” (“Dravizasthan”) அமைப்பதை எதிர்த்து பழைய ஆரிய தொடர்பை வலியுறுத்தி இந்தியாவுடன் உறவை பலப்படுத்தல். தென்னாசிய, கிழக்கு-தென்கிழக்கு ஆசிய பௌத்த நாடுகளில் பலிகளின் பொத்த எதிர்ப்பை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்தல். புலிகளுக்கு ஆணுச­ரணையாக இருக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர்களுக்கு எதிரான புலிகளின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தல், மேற்குநாடுகள், அமெரிக்க அவுஸ்திரேலிய நாடுகளில் வாழும் சிங்கள மக்களை நிறுவனப்படுத்தி புலியெதிர்ப்பு நடவடிக்­கைகளுக்கு ஆதரவு திரட்டல். தமிழ் மக்களுக்கு பிரச்சினை உண்டு என நம்பிக்கொண்டிருக்கும் உலக நாடுகளை இலக்காகக் கொண்டு புலிப்பயங்கர­வாதத்துக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ளல். தேவையேற்படின் புலிகள் அமைப்புக்கு எதிராக வெளிநாடுகளில் ஆயுத நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல்...”

என குறிப்பிட்டுள்ள இந்த தேசியத் திட்டத்தின் இறுதியில்

”...அதிகாரத்துக்கு வரும் எந்தவொரு சக்தியென்றா­லும் புலிகளை உண்மையிலேயே தோற்கடிப்பதாயின் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் வேண்டும். இதை விட வேறு வழியில்லை என நம்புகிறோம். இதனை தீர்ப்பதற்கு போலிப் பேச்சுவார்த்தைகள் மேலும் அழிவைத் தான் தரும். எனவே இதனை நடைமுறைப்படுத்தும்படி அனைவ­ரும் ஆணையி­டுவோம். தமிழ் இனவாதத்தை வேறோடு களைய எந்த துயர் வந்தபோதும், எந்த விலை கொடுத்தும், கருத்தியல் ரிதியாக, அரசியல் ரிதியாக, ஆயுத ரிதியாக முடிவுகட்கு கொண்டு வருவோம்...” என்கிறது.

சிங்கள வீரவிதான: தமிழ், முஸ்லிம் தேசங்களின் எதிர்காலம்?

என்.சரவணன்

சிங்கள வீரவிதான இயக்கம் குறித்து தற்போது அதிகள­வில் பேசப்படுகிறது. கடந்த மே 20ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்பியக்கத்தினால் நடத்தப்பட்ட ஊர்வலம், ஆர்ப்பாட்டம், கூட்டம், பிரச்சாரம் என்பன சிங்கள வீரவிதான இயக்கத்தின் நடவடிக்கை என்பது தெளிவாக தற்போது தெரிய வந்திருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே சரிநிகரில் வெளியிடப்பட்ட கட்டுரைகளில் பயங்கரவாத எதிர்ப்பியக்கமானது சிங்கள வீரவிதான இயக்கத்தின் ஒரு உப அமைப்பு என்பதுவும், இன்னும் பல பெயர்களில் அதற்கு இதுபோன்ற உப அமைப்புகள் உண்டு என்பதும் சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளன.

கடந்த 20ஆம் திகதி நடத்தப்பட்ட மேற்படி ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக­ளுக்குப் பின்னணியாக பல சம்பவங்கள் நடத்திருந்தன.

மே 20ஆம் திகதி நடத்தப்பட்ட கூட்டத்தில் ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முதலில் ஊர்வலம் கொழும்பு கலாபவனத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட பிக்குமார் கலந்து கொண்டனர்.

”முழு நாட்டையும் திராவிடஸ்தான் ஆக்கும் தமிழ் விஸ்தரிப்புவாதத்தைத் தோற்கடிப்போம்!”

”பிரபாகரனுக்கு தமிழீழம், அஸ்ரப்புக்கு, கிழக்கிஸ்தான், தொண்ட­மானுக்கு மலைநாடு!”

”கொழும்பில் 4 லட்சம் தமிழர்கள் குடியேறியுள்ளனர். தமிழ் விஸ்த­ரிப்பு வாதம் மேல்மாகாணத்தை அடைந்துள்ளது. அதனை விரட்டியடிப்போம்!”

”சிங்கள நாட்டைக் கட்டுப்படுத்தும் தமிழ் இனவாதத்தையும், அதற்குத் துணைபோகும் சிங்கள அரசியல் துரோகிகளையும் எதிர்த்துப் போராடுவோம்!”
”கொலைகாரப் புலியோடு பேச்சுவார்த்தை வேண்டாம்!”

”அந்நிய மத்தியத்துவம் எமக்கு வேண்டாம்.”

”சிங்களவர்களே விழித்தெழுங்கள் சிங்கள மல்லாதவர்க­ளிடமிருந்து சிங்கள நாட்டைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்”

என்பது போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன. இது போன்ற பல இனவாதத்தைக் கக்கும் பதாதைகளையும் தாங்கிய வண்ணம் பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தனர். ஊர்வலம் அனகரிக்க தர்மபால மாவத்தை வழியாக வந்து டி.எஸ்.சேனநாயக்க வீதி சுற்றுவட்டத்துக்கூடாக திரும்பி விகாரமகாதேவி பூங்காவை வந்தடைந்தது. அங்கு ஆர்ப்பாட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.

விகாரமகாதேவி பூங்காவின் அருகில் கூட்டம் நடந்தது. அந்­தக் கூட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பியக்கத்தின் தலைவரும் சிங்கள வீரவிதான இயக்கத்தின் மறைமுகத் தலைவருமான சம்பிக்க ரணவக்க, மற்றும் மடிகே பஞ்ஞாசீல மகாநாயக்க தேரோ உள்ளிட்ட பல முக்கிய இனவாத பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மடிகே பஞ்ஞாசீல தேரோ பேசுகையில் ”...இன்றைய இந்த நடவ­டிக்கை மிகவும் பெருமைப்படக்கூடிய ஒன்று. 10,000 ஆண்டுகளை விட அதிக கால வரலாற்றைக்கொண்டுள்ள சிங்கள இனத்துக்கு தொடர்ச்சியாக அநியாயங்கள் இழைக்கப்பட்டு வருகிறது. சிங்களவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க சிங்களமல்லாதவர்களை கடமைப்பட வைப்பது அரசினது கடமை. சிங்களவர்களே ஐக்கியப்படுவோம். சிங்கள நாட்டைப் பாதுகாப்போம் என்றார்...”

தேசிய சங்க சபையின் அமைப்பாளர் அத்துரலிய ரத்ன ஹிமி பேசுகையில்

”....1987இல் புலிகள் கோட்டையில் குண்டு வைத்தனர். சகலரும் மௌனித்திருந்தனர். ஆனால் அதிலிருந்து தொடர்ச்சியாக கொழும்பில் குண்டுகள் வெடித்தன. இன்று எமக்கு இந்த பயங்கரவாதத்தை முறியடிக்கும் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. அதனை தட்டிக் கழித்து விட்டுப் போக முடியாது. ஆப்கானிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா, சீனா, மத்தியகிழக்கு, ஜப்பான் போன்ற நாடுகளில் பௌத்த இயக்கங்கள் வன்முறையோடு இயங்கவில்லை. ஆனால் 10ஆவது நூற்றாண்டைத் தொடர்ந்து முஸ்லிம் விஸ்தரிப்புவாதத்தால் பௌத்த இயக்கங்கள் அழிக்கப்பட்டன. பௌத்த மக்கள் மிலேச்சத்தனமாக கொல்லப்பட்டனர். எனவே தான் அதற்கு எதிராக எமது பிக்குமார்கள் அணிதிரண்டு போராடத் தொடங்கினார்கள். தாம் போராடுவது சமாதானத்துக்­காகவே என்று கூறினார்கள். உண்மையில் எங்களால் ஒரு கொசுவைக் கூட கொல்லமுடிவதில்லை. ஆனால் பலிபீடத்துக்கு தலையைக் கொடுக்க முடியாது. லேக் ஹவுஸ் பத்திரிகைகளோ பௌத்தர்கள் அஹிம்சைவாதிகள் எனக் கூறி மக்களின் மூளையை சலவை செய்யப் பார்க்கின்றன. மகாபோதியைத் தாக்கும் போதும், தலதா போதியைத் தாக்குகின்ற போதும், திம்புலாகல ஹாமதுருவை கொல்கின்ற போதும் எங்களைச் சும்மா இருக்கவா சொல்கின்றன இந்த என்ஜீ.ஓக்கள். புலிகள் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல கொழும்பிலும் இருக்கிறார்கள். எங்களுக்கு பாரிய பொறுப்புள்ளது....”

சம்பிக்க ரணவக்க உரையாற்றுகையில்

”...போலி சர்வமத குழுக்களும், என்.ஜீ.ஓ.க்களும், வர்த்தகர் சம்மேளனமும், ஐ.தே.க.வும், குப்பைக்கூடைக்குள் விழுந்திருக்கும் இடது சாரி முன்னணிகளும் சந்திரிகாவின் ஆசீர்வாதத்துடன் புலிப்பயங்கரவாதிகளுடன் சமாதானப் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கும்படி கோருகின்றன. இவர்கள் எவருக்கும் புலிகளோடு பேசக்கோர உரிமை கிடையாது. இன்று 4 லட்சம் தமிழர்கள் கொழும்பு தலைநகரில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு கொழும்பில் வசிக்க உரிமை கிடைத்திருக்கிறது. ஆனால் சிங்கள முஸ்லிம்களை விரட்டிவிட்டு போலி தமிழ் விஸ்தரிப்புவாதத்தை நிறுவ முயற்சி செய்கின்றனர். தமிழ் குடியேற்றங்களை இங்கு அமைக்கும் தொலைநோக்கிலான திட்டமிட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். புலிகளோடு நேரடியாகப் பேசி உடன்பாடு காண்பதற்கூடாகவோ அல்லது புலிகளையும் தமிழ் மக்களையும் இரு வேறு தரப்பினர் என்று கருதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கூடாக இந்த பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரலாமென சிங்கள தலைவர்கள் செயற்பட்டனர். ஆனால் இது வரை 23,000க்கும் மேற்பட்ட மக்கள் பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.14,000 படையினர், 3500 சிங்கள மற்றும், சிங்களமல்லாதவர்கள், 550 முஸ்லிம்கள், கொல்லப்பட்டுள்ளனர். ஜே.ஆர் மாவட்ட அபிவிருத்தி சபையை அறிமுகப்படுத்தி சமாதானத்தை கொண்டு வரப்போவதாகப் பிதற்றினார். திம்பு பேச்சுவார்த்தை நடக்கும் போது தான் பாதுகாப்பு படையினரைச் சுற்றி நிலக்கண்ணிகள் வைக்கப்பட்டன. திம்பு பேச்சுவார்த்தையினால் நாங்கள் இழந்த யாழ்ப்பாணத்தை மீட்டெடுக்க 10 வருடங்களைச் செலவிட வேண்டி வந்தது. இன்று புளொட், டெலோ, ஈ.பி.டி.பி., ஈ.பி.ஆர்எல்;எப். போன்ற இயக்கங்ளுக்கு விசித்திரமான சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. எஙகளுக்கு சுதந்திரமில்லையேல் மீண்டும் காடடுக்குத் திரும்பிப்போவோம் என டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். 82இலிருந்து இவர்கள் டெலோவுக்கு சம்பளம் வழங்கி வருகின்றனர். ஏனைய இயக்கங்களுக்கும் கூட அரசாங்கம் சம்பளம் வழங்குகிறது. இதனை நிறுத்தி அனைத்து இயக்கங்களிடமிருந்தும் ஆயுதங்களை களைய அரசை நாங்கள் நிர்ப்பந்திக்கிறோம். மாவட்ட சபை முடிந்து 1987இல் இந்தோ-லங்கா உடன்படிக்கையின் மூலம் வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரு மாகாணமாக்கினார்கள். தமிழ் இனவாத இயக்கங்கள் இதன் மூலம் ஆயுதங்களை ஒப்படைத்து சமாதானத்தை கொண்டுவரப்போவதாக ஜே.ஆர் கூறினார் இந்த ஒப்பந்த்தினால் 72,000 சிங்களவர்கள் தென்னிலங்கையில் கொல்லப்பட்டனர். 667 பிக்குமார் கொல்லப்பட்டனர். இந்த உயிர்களுக்கு சகல அரசியற் தலைவர்களும் பொறுப்பெடுக்கவேண்டும்.

ரணிலுக்கும், டில்வினுக்கும், சந்திரிகாவுக்கும், பாகுவுக்கும் ஒன்றைக் கூறுகிறோம். சமாதானத்தைபற்றி மட்டும் அதிகம் கதைக்க வேண்டாம். அன்றைய பிணங்கள் மீண்டும் வெளியே வரும். பிரேம தாச பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியிருந்த போது 1238 படையினர் கொல்லப்பட்டிருந்தனர். பிரேமதாச காலத்தில் இத்தொகை 2679ஆக அதிகரித்தது. ரணில் போன்றோர் இதற்கு பொறப்பு கூற வேண்டும். சந்திரிகா பேச்சு வார்த் தையைத் தொடக்கி 4 மாதம் கூட ஆகவில்லை புலிப் பயங்கரவாதிகள் 3 ஆயுதக் கப்பல்களைக் கொண்டு வந்து சேர்த்தனர். ஒரு கப்பலில் வெடிமருந்து பொருட்கள் 60,000 தொன்கள் இருந்தன. சபுகஸ்கந்த, மருதானை, தெஹிவளை, சிறி தலதா மாளிகை என்பன தாக்கப் பட்டது இந்த வெடிமருந்துகளாலேயே.

இப்போது இந்தப் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை, சமாதானம் என்றெல்லாம் பிதற்றப் படுகிறது. ஜீ.எல்.பீரிஸின் பொதி வரலாற்றுத் துரோ கம். அந்தத் துரோக அரசியலுகுக்குப் பதிலளிக்க மக்கள் தயார்.

ஜீ.எல்லுக்குஒன்றைக் குறிப்பிடவிரும்புகிறோம். முடிந்தால் பொதியை மக்களின் முன் வைக்கட்டும். புலிகளை யுத்த ரீதியிலும், அரசியல் ரிதியிலும், கருத்து ரிதியிலும் தோற்கடிக்கும் ஆற்றல் எங்களுக்கு உண்டு.

1971இன் தொகைமதிப்பீட்டின்படி வன்னியில் வாழ்ந்த தோட்டப்புற தமிழர்களின் எண்ணிக்கை 61,000 மட்டும் தான் இருந்திருக்கிறது. அதுவே 81 ஆகும் போது 141,000 ஆக ஆகியிருக்கிறத. இது போல குடியேற்றங்கள் தோற்றுவிக்கப்படுவது எதனால்? எங்களது போலி சமாதானத் தூதுவர்களிடம் கேட்கிறேன். இது போன்ற தமிழ் குடியேற்றங்களை அமைக்க புலிகள் எத்தனை கோடி ரூபாய்களை செலவிட்டிருக்கிறார்கள். எதிர்வரும் ஓகஸ்டுக்கு முன்னர் இந்த தேசிய இயக்கம் இராட்சத பாய்ச்சலொன்றை பாய வேண்டும். பயங்கரவாத எதிர்ப்பியக்கத்தைத் தேசிய சக்தியாக ஆக்கிக் காட்ட வேண்டும். தற்போது பத்திரிகைகளுக்கூடாக எம்மைத் தாக்குகின்றனர். அவற்றிற்கு பதிலளிப்பதில் பிரயோசனமில்லை. அது காலவிரயம். செயலில் காட்டுவோம்.

எஸ்.எல்.குணசேகர உரையாற்றுகையில்

'புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் விடுதலைக்கான அமைப்­பல்ல. அவர்கள் அதிகாரத்தின் மீது கொண்டுள்ள பேராசையினாலேயே இந்த யுத்தத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் மதத் தலங்களை அழித்து வருகிறார்கள். சகல சமாதானப் பேச்சுவார்த்தை காலங்களிலும் புலிகள் தங்களை பலப்ப­டுத்திக்கொள்வதற்காகவே அதனைப் பயன்படுத்தி வந்துள்ளனர். எனவே இனிமேலும் பேச்சுவார்த்தையென்று ஒன்று நடக்குமாயிருந்தால் அது புலிப் பயங்கரவாதிகளை மேலும் பலப்படுத்தத்தான் பயன்படும். யுத்தம் மேலும் நீடிக்கும். பெரும் அழிவுகள் தொடரும் எனவே பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கக்கூடாது.

இந்தக் கூட்டத்தின் இறுதியில் படையைச் சேர்ந்த சிலரைத் தொpவு செய்து அவர்களின் வீரப்பிரதாபங்களுக்காக விருதுகள் வழங்கப்பட்டன.

நுவரெலியா நகரில் இ.தொ.கா. இம்முறை மே தினத்தை நடத்துவதற்கு தீர்மானித்தது தொட்டு வீரவிதானவும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியிருக்கிறது. நுவரெலியாவில் இருந்து கிடைக்கின்ற தகவல்களின்படி மே தினத்துக்கு முதல் நாளான ஏப்ரல் 30ஆம் திகதி சிங்கள பேரினவாத சக்திகளை உற்சாகப்படுத்தும் நோக்கிலும், அடுத்த நாளைய மேதின கூட்டத்தை குழப்புவதற்கு ஒழுங்கமைப்பதற்குமென 30ஆம் திகதி வீரவிதான இயக்கத்தால் ஒரு கூட்டம் நுவரெலியா பொது நூலக சபையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்திருக்கிறது. புலியைத் தோற்கடிப்பதற்கானத் திட்டம் எனும் பேரில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்துக்கான பிரச்சார சுவரொட்டிகளில் தோட்ட மக்களுக்கு எதிராக இனவாதத்தை கக்குகின்ற வாசகங்கள் எழுதப் பட்டிருந்திருக்கின்றன. இ.தொ.க. ஆதரவாளர்களால் மேதின பிரச்சார சுவரொட்கள் கொண்டு அவை மூடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சில கைகலப்புகள் நடந்திருக்கின்றன. பொலிஸ் அதிகாரி வரை இப்பிரச்சினை போயுள்ளது. தொண்டமானுக்கு எதிராக நுவரெலியா மாவட்ட சில அரசியல் சக்திகளும் இந்த தருணத்தை உபயோகித்து வீரவிதானவுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இவை எல்லாம் சேர்ந்து அடுத்த நாள் மேதினத்தன்று ஊ அடித்தல், சத்தமிட்டு கேலி செய்தல் எனப் பல ஆத்திரமூட்டல்கள் நடந்துள்ளன. சில கைகலப்புகளும் நடந்திருக்கின்றன. இ.தொ.க. அரசியல் பிரமுகர்கள் கூறுவதைப்போல தோட்டத்தொழிலாளர்களை அன்று கட்டுப்படுத்தாமல் போயிருந்தால் அன்றைய கைகலப்புகள் இனவன்முறை என்கிற அளவுக்கு மேலெழும்பியிருக்கும்.

பயங்கரவாத ஒழிப்பு இயக்கம் இச் சம்பவத்தைத் தொடர்ந்து பத்திரிகைகளில் பெரும் தொண்டமான் எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தது. தொண்டமான் மலைநாடு அமைக்க அறைகூவியதை எதிர்த்தே 30ஆம் திகதி கூட்டம் ஒழுங்கமைக்கப்­பட்டிருந்ததாக சம்பிக்க ரணவக்க 3ஆம் திகதி வெளிவந்த லங்காதீப பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார்.

சிங்கள வீரவிதான இயக்கம் மிகவும் தீவிரமாகவும், திட்டமிட்டும், நிறுவனமயப்பட்டும் செயற்பட்டு வருவதை தொடர்ந்து அதனை ஆழமாக அவதானிப்போரால் அறியமுடியும். தென்னிலங்கையில் ஜே.வி.பி. தவிர்ந்த எந்த இயக்கமும் வீரவிதானவின் அமைப்பு பலத்துக்கு முன்னாள் தூசு என்றே கூறலாம். இவ்வமைப்பின் அமைப்பு வடிவமும், சித்தாந்த பலப்படுத்தலுக்கான வேலைத்திட்டமும், சிறு சிறு சேரிகள் வரை சென்று அமைப்புகளை உருவாக்கி வருவதும், அதன் உள்ளூர், வெளியூர் அமைப்பு வலைப்பின்னலும் எளிமைப்படுத்தி மதிப்பிடக் கூடியவை அல்ல. தாங்கள் குழப்ப நினைக்கும் எந்தவொரு கூட்டத்தையும் குழப்புவதற்கு கூட தனியான அணிகளை உருவாக்கி வைத்துள்ளனர். (கடந்த வருடம் டிசம்பர் 11ஆம் திகதி கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடத்தப்பட்ட சமாதானக் கூட்டமும் இவர்களாலேயே குழப்பப்பட்டன என்பதும், அவர்கள் அடிதடிக்கும் தயாராக வந்திருந்தனர் என்பதும் பலர் அறிந்த விடயம்.) தமது செயற்பாடுகளை புரட்சிகர இயக்கங்களைப் போல தலைமறைவு வேலை முறையையும் கொண்டியங்கி வருகின்றனர். தமிழ் மக்களுக்கு எதிராகவும், போராட்டத்துக்கு எதிராகவும், பிரச்சார நடவடிக்கைகளுக்கு மாத்திரம் தற்போது பல பெயர்களில் இன்டர்நெட் வெப் தளங்களை நிறுவியிருக்கின்றனர்.

தென்னிலங்கையில் சிங்கள மக்களை சிங்களபௌத்த பேரினவாத மயப்படுத்துவதில் திட்டமிட்டு செயற்பட்டு வருவதில் வீரவிதானவுக்கு நிகர் வீரவிதான தான். இந்தப் போக்கு காலப்போக்கில் பாசிசத்தை உறுதியாக நிறுவினாலும் ஆச்சிரியப்படு­வதற்கில்லை. ஏற்கெனவே இந்த நிலைமைகளுக்கு காரணமான சிங்கள அரச கட்டமைப்பும், அரசாங்கங்களும் இனி தமது வழியை மாற்றிக் கொண்டாலும் அதனால் பிரயோசனம் ஏற்படப் போவதில்லை என்பதை மற்றும் உணரமுடிகிறது. எழுச்சியுற்று வரும் சிங்கள பேரினவாத சக்திகளின் பிடியிடம் இருந்து அவையும் தப்பப் போவதில்லை.

தென்னிலங்கை பாராளுமன்ற சிங்கள அரசியல் சக்திகளைப் பொறுத்தவரை அவை ஒன்றில் முழுமையாக தம்மை மாற்றிக் கொண்டு அரசியல் செய்ய வேண்டும். இல்லையேல் தற்போதைய பேரினவாதத்திடம் முழுமையாக சரணடையவோ அல்லது அந்த பேரினவாதத்துக்கு தலைமைதாங்கவோ வேண்டிவரப்போகிறது. அவ்வாறு செய்யாவிட்டால் தற்போதைய நிலைமையில் அவை இருப்புக் கொள்வது அவ்வளவு சுலபமான காரியமல்ல.

கூட்டம் பார்க்கப் போன ந.ச.ச.க உறுப்பினர் கைது! புலிகளின் உழவாளி என்று சந்தேகமாம்!


என்.சரவணன்
மலையகத்தில் மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட பழனிமுத்து பஞ்சவர்ணம் கடந்த 15 வருடங்களாக கொழும்பில் வசித்து வருபவர். நவ சமசமாஜக்கட்சியின் உறுப்பினராகவும், அக்கட்சியின் தமிழ்ப் பத்திரிகையான புதிய சமதர்மம் பத்திரிகையின் குழுவில் ஒருவராகவும் இருந்து வருகிறார். 20ஆம் திகதியன்று வீரவிதான கோஷ்டியினரால் கைது செய்து பொலிஸாரிடம் தான் ஒப்படைக்கப்பட்டமை குறித்து அவர் இப்படிக் கூறுகிறார்.

அன்று கட்சி வேலையாக சலாகாவில் போட்டோக்களை பெற்று வருவதற்காகப் போயிருந்தேன். அருகில் டவுன் ஹோலில் ஆர்ப்பாட்டம் நடப்பதைக் கேள்விப்பட்டு அதனையும் பார்த்து வரலாம் என்று போயிருந்தேன். அந்த ஆர்ப்பாட்டம், ஊர்வலம், கூட்டம் என்பனவற்றைப் பார்த்துவிட்டு பஸ் ஏறி வரும் போது கொம்பனி வீதியிலுள்ள சோதனை அரணுக்கு அருகிலுள்ள பஸ் நிலையத்தில் பஸ் நின்றது. அப்போது சுமாராக 3 மணி இருக்கும். பஸ்ஸில் வைத்து இருவர் சாரதியிடம் எதையோ சொல்லிவிட்டு இறங்கிச்சென்று காலரணில் உள்ள பொலிஸாரிடம் எதையோ கதைத்து விட்டு திரும்பி வந்தனர். என்னை இறங்கச் சொல்லிவிட்டு பஸ்ஸை அனுப்பி வைத்தனர். நான் இறக்கப்பட்டு பொலிஸ் அதிகாரியொருவரால் விசாரிக்கப்பட்டேன்.

அப்போது தான் என்னால் உணர முடிந்தது, என்னை ஆரம்பத்திலிருந்தே இரு சிங்கள இளைஞர்கள் பின் தொடர்­ந்து வந்திருக்கிறார்கள் என்பதும், அவர்களின் நிர்ப்பந்தத்தாலேயே இறக்கி விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதையும்.

அவர்கள் இருவரும் தாங்கள் மருத்துவக் கல்லூhp மாணவர்கள் என்றும், வீரவிதான வின் உறுப்பினர்கள் என்றும், பயங்கரவாத எதிர்ப்பியக்கத்தின் கூட்டத்தை வேவு பார்க்க வந்த புலி­களின் உளவாளி நான் என்றும் பொலிஸாரிடம் தெரிவித்தனர். பொலிஸார் என்னை விசாரித்தனர். நான் நவ சமசமாஜக்கட்சியின் உறுப்பினர் என்றும், கட்சி வேலையாக வெளியில் வந்ததையும், கூட்டத்தையும் பார்த்துவிட்டு திரும்பிப் போகும் வழியிலேயே இவ்வாறு நடந்தது என்பதையும் தெரிவித்தேன். பொலிஸார் என்னுடன் அந்தளவு மோசமாக நடந்து கொள்ளவில்லை. ஆனால் அவ்விளைஞர்கள் இருவரும் தொடர்ந்தும் பொலிஸாருடன் தர்க்கித்தனர். தாங்கள் பின்தொடர்ந்து கண்காணித்து வந்த சந்தேகத்துக்கிடமான ஒரு நபரை சுலபமாக விடுவிக்க வேண்டாம் என்றும் என்னை கைது செய்து விசாரிக்கும்படியும் கூறினர்.

அங்கிருந்த பொலிஸ் அதிகாரியும் பொலிசுக்கு தகவல் அனுப்பி ஒரு வாகனத்தை வரவழைத்து என்னையும் அந்த இளைஞர்கள் இருவரையும் ஏற்றி பொலிசில் போய் பார்த்துக்கொள்ளும்படி கூறி அனுப்பினார்.

பொலிஸ் வந்ததும் அங்கும் விசாரணை நடந்தது. அந்த இருவ­ரும் என்னை உளவாளி என்று முடிவே செய்திருந்தார்கள். என்னை உள்ளே தள்ளாமல் போகமாட்டேன் என்றிருந்தார்கள். 5 மணியளவில் நான் அத்தனையையும் கூறியதன் பின்னரும் எனது வாக்குமூலத்தை உறுதி செய்வதற்காக நவசமசமாஜ கட்சி காரியாலயத்துக்கு என்னை அழைத்து வந்தனர். அங்கு தோழர் திருநாவுக்கரசு உள்ளிட்ட கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் பலர் இருந்தனர். அவர்கள் என்னைப் பற்றி உறுதிபடுத்தினார்கள். ஆனாலும் ஒரு வாக்குமூலத்தை எடுத்துவிட்டு விடுகிறோம் என்று கூறி மீண்டும் என்னை பொலிசுக்கு அழைத்துச் சென்றார்கள். அவ்விளைஞர்கள் இருவரும் முறைப்பாடு எழுதி கொடுத்ததினாலேயே வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொண்டு விடுவித்து விடுவதாகக் கூறிய பொலிஸார் பின்னர் அங்கேயே தடுத்து வைத்து விட்டனர். அன்று இரவு 8 மணிக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வந்து என்னை விசாரணை செய்தனர்.அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் வீட்டிலிருந்து யாரும் வரவில்லையா என்று கேட்டனர். ஆனால் அதுவரை வீட்டுக்கும் பொலிஸார் தகவல் அனுப்பி வைத்திருக்கவில்லை. கட்சி உறுப்பினர்கள் தான் வீட்டுக்கு தகவல் தெரிவித்திருந்தனர். மீண்டும் என்னிடம் வாக்குமூலம் ஒன்றினை எடுத்தனர். எனது முழு விபரத்தையும் வாக்குமூலமாகப் பெற்றுக் கொண்டனர். எனது பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, தொழில், கொழும்பு வந்ததன் நோக்கம், நவசமசமாஜக்கட்சியில் இணைந்ததற்கான காரணம். அதில் எனது பொறுப்புக்கள் என பல கேள்விகளைக் கேட்டதோடு, வீரவிதானவின் கூட்டத்தை பார்க்கப் போனதன் காரணத்தையும் கேட்டனர். இந்த நாட்டின் பிரஜை என்கின்ற முறையில் ஒரு பகிரங்கக் கூட்டமொன்றை காணச் சென்றேன் என்று பதிலளித்தேன்.

பின்னர் சிங்களத்தில் எழுதப்பட்ட அறிக்கையைக் காட்டி அதில் கையெழுத்து இடும்படி கேட்டனர். சிங்களத்தில் எழுதப்­பட்டிருந்த அதில் கையெழுத் திட்டேன். எனக்கு அதில் இருந்த சிங்களம் தெரியாது.

பின்னர், கட்சியிலிருந்து யாரையாவது வரச்சொல்லி பிணை வழங்கினால் என்னை விடுவித்துவிடுவதாகக் கூறினார்கள். ஆனால் அதற்கு உள்ளே இருக்கும் எனக்கு வாய்ப்பு இருக்கவில்லை. அதற்குள் 12 மணியளவில் என்னை நீதிமன்றத்தில் ஒப்படைத்து விடுவிப்பதாகக் கூறி அழைத்துச் சென்றனர். கொம்பனி வீதியிலுள்ளகோட்டை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற போது அங்கு நீதிவான் இருக்கவில்லை. பின்னர் என்னை மகசின் சிறைச்சாலைக்கு கொண்டு சென்று அடைத்து விட்டனர். அடுத்த நாள் சனி, ஞாயிறு இரு தினங்களும் நீதிமன்றங்கள் இயங்காது. எனவே திங்கள் வரை உள்ளே அடைந்திருக்க நேரிட்டது. முதலில் கொம்பனி வீதி பொலிஸில் வியாழக்கிழமையும், மகசின் சிறைச்சாலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களும் இருந்தேன். மகசின் சிறைச்சாலையில் ஒரு பெரிய அறையில் 130 பேருக்கு மேல் அடைத்து வைக்கப்­பட்டிருந்தனர். சிங்களம் பேசத்தெரியாத ஒரு தமிழ் இளைஞனை அந்த ஒரே காரணத்­துக்காக சிறைக்காவலர்கள் தாக்கியது, தண்டனை பெற்ற குற்றவாளிகளின் சண்டித்தனம், வெறும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து கொண்டு வரப்பட்டிருந்த­வர்களின் அவலம் என பலவற்றையும் காணக் கிடைத்தது.

24ஆம் திகதி திங்கள் மீண்டும் கோட்டை நீதிமன்றத்துக்கு என்னைக் கொண்டுவந்து குற்றங்கள் எதுவுமின்றி விடுவித்தனர்.

தளத்தின் உள்ளடக்கம்.

இந்தத் தளத்தில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உருவாக்கம், விரிவாக்கம், கருத்தாக்கம், அதன் வடிவம், அதன் நிறுவனமயமாக்கம், அதன் திசைவழி குறித்து சரிநகர், ஆதவன், நிகரி, விடிவு, பறை, இனி போன்ற பதிப்புகளில் வெளிவந்த என்.சரவணனின் கட்டுரைகள் மறுபிரதியிடப்படுகின்றன.

சுவடி

Template by - Abdul Munir - 2008 - layout4all