Saturday, January 31, 2009

சிறில் மெத்தியுவின் அன்றைய தளம் சிங்கள வீரவிதானவின் இன்றைய தளம்

என்.சரவணன்

இன்றைய பேரினவாதம் பாசிச வடிவமெ­டுத்து வருவதும், அது சிங்கள சிவில் சமூகத்தினர் மத்தியில் பாசிசமயப்படுத்தப்பட்டு வருவதும் வேகமாக இடம்பெற்று வருவதை நாமெல்லோரும் உணர்வோம். இவற்றை வெளிக்கொணர்கிற வகையில் சரிநிகரில் பல கட்டுரைகள் தொடர்ச்­சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. மேற்தோற்­றத்தில் இதனோடு சம்பந்தப்பட்ட செய்திகள், தகவல்கள் வெறும் சம்பவங்களாக தோற்றமளிக்­கின்ற போதும் அதன் இயங்கியலையும், வரலாற்­றுப் பின்னணியையும், போக்கின் திசைவழியை­யும் நுணுக்கமாக பார்க்கும் எவராலும் இன்னும் தெளிவாக இதனை உணர முடிகிறது.

மக்கள் மயப்படுத்தப்பட்டு வரும் இந்த ஆபத்தான போக்கிற்கு வரலாற்றில் பல சக்திகள் மற்றும் பிரிவினர் பங்களித்துள்ளனர். இவை குறித்த விபரங்கள் சரிநிகரில் ஆங்காங்கு வெளிப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இம்முறை ”சிறில் மெத்தியூ” ஆற்றிய பாத்திரம் இங்கு வெளிக்கொணரப்படுகிறது.

இன்று சிங்கள வீரவிதான இயக்கத்தின் முக்கிய தளமாக இருக்கின்ற கிரிபத்கொட பிரதேசமானது களனி தேர்தற் தொகுதியில் அமைந்திருக்கிறது. இந்த களனி தொகுதியில் பேரினவாதம் வளர்த்­தெடுக்கப்பட்டதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. வரலாற்று சிறப்பு மிக்க களனி விகாரை இங்கு உள்ளது. ஹரிச்சந்திர விஜேதுங்காவின் சிங்களயே ”மஹா சம்மத்த பூமி புத்திர பக்ஷ்ய” கட்சியின் தலைமையகமும் இங்கு தான் உள்ளது. தமிழ், முஸ்லிம் மக்கள் அங்கு போய் வர அல்லது வாழப் பயப்படும் பிரதேசம் அது. இனத்துவேசம் மிகுந்த அந்தப் பகுதியில் நீண்ட காலமாக இருக்கின்ற அருந்ததியர்களின் குடியி­ருப்பொன்றுக்கு சமீபத்தில் போக நேரிட்டது. அங்கு என்னை அழைத்துச் சென்றவர்கள் அக்குடியி­ருப்பைச் சேர்ந்தவர்கள், பஸ்ஸை விட்டு இறங்கியதிலி­ருந்து குடியிருப்பை அடையும் வரை என்னுடன் தமிழில் பேசவில்லை. சிங்களத்தில் உரையாடிக் கொண்டு வந்தார்கள். அக்குடியிருப்­பில் உள்ள நகரசுத்தித் தொழிலாள குடும்பங்களில் உள்ள சிறார்கள் அப்பகுதியைச் சேர்ந்த சிங்களப் பாடசாலைகளுக்கே செல்கிறார்கள். இளம் சந்ததியினருக்கு தமிழில் பேச வரும். ஆனால் சிங்களத்தில் தான் எழுத வரும்.

கடந்த வருடம் கிரிபத்கொடையில் ஒரு முஸ்­லிம் வர்த்தகர் வாடகைக்கு எடுத்து நடத்திக் கொண்டிருந்த கடையை விட்டுப் போகச் சொல்லி ஐக்கிய வர்த்தகர் சங்கம் (நாடெங்கிலும் நூற்றுக் கணக்கான கிளைகளையடைய வீரவிதானவின் அமைப்பு) ஒப்புக் கொள்ளாத நிலையில் அக்கடை குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இத்தகவல் பத்திரிகைகளில் ”இனந்தெரியாதோரால்” என்று வெளிவந்த போதும் அது குறித்து அறிந்தவர்­களுக்கு இது பற்றி தெரியும். ஜே.வி.பி.யின் உத்தி­யோகபூர்வ பத்திரிகையான ”நியமுவா”விலும் இது குறித்த நடுப்பக்க கட்டுரை சென்ற வருடம் வெளியாகியிருந்தது. அதே கட்டுரை ஜே.வி.பி.­யின் உத்தியோகபூர்வ தமிழ் ஏடான ”செஞ்சக்தி”யிலும் வெளியாகியிருந்தது.

கிரிபத்கொடவில் எந்தவொரு கடை அல்லது நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளிலும் தமிழ் இருக்கக்கூடாது என்று கட்டளை இட்டிருக்கிறா­ர்கள். தமிழர்களால் குத்தகைக்கு எடுக்கப்பட்டி­ருந்த கடைகளை அவற்றின் சொந்தக்காரர்களைக் கொண்டு மீளப் பெறுமாறு நிர்ப்பந்தித்திருக்­கிறார்கள். அவ்வாறு மீள பெறுவதற்கான நிதியுத­விகளையும் கடன்களையும் வீரவிதான வழங்கி­யிருக்கிறது. இந்த களனி தொகுதியில் தான் பியகம சுதந்திர வர்த்தக வலயமும் இருப்பதால் ஜே.வி.பி.யின் தமது தொழிற்சங்கக் காரியாலயத்­தின் தலைமையகத்தையும் இந்த கிhpபத்கொட பகு­தியில் நிறுவியிருந்தனர். அக்காரியாலயத்துக்கு சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் அவர்கள் பெயர்ப்பலகையை போட்டிருந்த போது வீரவி­தானவைச் சேர்ந்த­வர்கள் தமிழை அழிக்கச் சொல்லி மிரட்டவே அவர்களும் அதனை எடுத்து விட்டனர். ஆனானப்பட்ட ஜே.வி.பி.யே இதன் போக்குக்கு சரணடைய நேரிட்டது என்றால் இதன் பலத்தைப் பற்றி வேறென்ன சொல்ல. அண்மையில் களுத்துறை மாவட்ட ஜே.வி.பி. முக்கியஸ்தர் ஒருவரைச் சந்தித்து இது குறித்து உரையாடிய போது இது தந்திரோபாயமான பின்வாங்கல் என்றும், போர்ட் இல்லாமலும் சிக்கலில்லாமல் அந்த இடத்தில் வெற்றிகரமாக அரசியலை நடத்திச் செல்ல அதுவே வழி என்றும் அரசியல் நியாயம் கற்பித்தார் அவர். இன்றைய அரசியலில் பூர்ஷ்வா கட்சிகள் மட்டுமல்லாமல் புரட்சிகர கட்சிகளின் செயற்பாடுகளில் கூட தலையிடும் அளவுக்கும், சரணடையச் செய்கின்ற அளவுக்கும் சிங்கள வீரவிதானவின் வளர்ச்சி கவனத்துக்­குரிய­தாகியுள்ளது.

அப்பேர்பட்ட களனி தொகுதி தான் சிறில் மெத்தியூவின் அரசியற் தளமாக 70களிலும் 80களின் ஆரம்பத்திலும் இருந்தது. (இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகாவுக்கு ஆதரவ­ளிப்பதாகக் கூறி ஐ.தே.க.விலிருந்து சென்ற 35 போpல் ஒருவரும், முன்னாள் இளைஞர் விவகார அமைச்சராக இருந்தவரும், பிரேமதாச காலத்தில் ”சூரியகந்த” படுகொலைகளுடன் தொடர்புடைய­வர் என்றும் பேசப்பட்டவருமான நந்தா மெத்தியூ தான் சிறில் மெத்தியூவின் மகன்.)

இந்த களனி தொகுதியானது சிங்கள மொழி மட்டும் சட்டம் கொண்டு வரப்படுவதில் முக்கிய பாத்திரமாற்றிய ஒன்றெனவும் குறிப்பிடலாம். 1953 ஹர்த்தாலைத் தொடர்ந்து டட்லி சேனநா­யக்காவின் அரசு கவிழ்ந்தது. அதனைத் தொடர்­ந்து ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் பிரதமராக பதவி வகித்தவர் டட்லியின் மைத்து­னரான ஜோன் கொத்தலாவல. அவர் யாழ்ப்­பாணம் சென்றிருந்த போது சிங்களத்தையும், தமிழையும் அரச கரும மொழியாக ஆக்குவதாக கூறியதைத் தொடர்ந்து தென்னிலங்கையில் சிங்கள பௌத்­தர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. இவ்வெதிர்ப்பினால் எதிர்வரும் தேர்தலில் சிங்கள வாக்குகள் தமக்குக் கிடைக்காது போகும் என்ற அச்சம் ஐ.தே.க.வுக்கு வரவே அது சிங்களம் மட்டும் தேசிய மொழியாக கொள்ளப்படும் என்கிற பிரகடனத்தை 1956 பெப்ரவரியில் நடத்­தப்பட்ட 8வது வருடாந்த மாநாட்டில் வெளி­யிட்டதும் இதே களனி தொகுதியில் வைத்துத் தான். இதேவேளை பண்டாரநாயக்கா தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த ”சுதேசியவாதம்” எனும் கருத்தாக்கமும் சிங்கள­மயப்­படுத்தலை இலக்காகக் கொண்டி­ருந்தது. அது போல 1956ம் ஆண்டு என்பது 2500வது பௌத்த ஆண்டாகும். அந்த சமயத்தில் பௌத்தத்தைத் தூக்கிப்பிடிப்பது என்பது முக்கிய அரசியல் போட்டியாகவும் அமைந்திருந்தது. பண்டார­நாயக்காவுடன் கூட்டமைத்திருந்த மக்கள் ஐக்கிய முன்னணியில் இணைந்திருந்த கட்சிகளும் அது வரை சிங்கள மொழியை தேசிய மொழியாக ஆக்குவதற்கான நிர்ப்பந்தங்களை கொடுத்துக் கொண்டிருந்தன. ஐ.தே.க.வின் ”சிங்கள மொழி மட்டும்” எனும் களனி பிரகட­னமானது 1956 தேர்தலில் இரு பிரதான கட்சிக­ளுக்குமான சிங்கள வாக்குகளைக் கைப்பற்றும் ஒரு கருவியாக ஆனது. இதன் விளைவாக பண்டாரநாயக்காவும் ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்தில் சிங்கள மொழியை தேசிய மொழியாக அமுலாக்குவதாக வாக்குறுதி அளித்ததும், அது போலவே செய்து காட்டியதும் நிகழ்ந்தது. இந்தப் போக்கானது வர­லாற்றில் தமிழ் சிங்கள தேசங்­களுக்கிடையிலான இடைவெளியை அதிகரித்­ததில் முக்கிய பாத்திர­மாற்றியிருந்ததுடன். இதன்விளைவாக நடந்த பல்வேறு சம்பவங்களின் விளைவாக 1958 கலவ­ரமும் நடந்து முடிந்தது என்பது பலரும் அறிந்ததே.

அப்பேர்ப்பட்ட களனித் தொகுதி தான் ஜே.ஆரின் சொந்தத் தொகுதியாகவும் இருந்தது. 70களில் அத்தொகுதியில் சிறில் மெத்தியூ ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதுடன், களனியில் பல பேரினவாத அமைப்புகளின் அலுவலகங்க­ளும் இயங்கின.

முக்கியமாக சிங்கள மக்கள் முன்னணி (சிங்­கள மஹாஜன பெரமுன) எனும் அமைப்பும் இங்கு தான் இயக்கியது. இதன் ஆரம்பகர்த்தாவான சிறில் மெத்தியூ அப்போதும் ஐ.தே.க.வின் அமைச்சரவையில் விஞ்ஞான கைத்தொழில் அமைச்சராகவும் இருந்து கொண்டிருந்தார். வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்த விகாரைகளை புதிதாக அமைப்பது, புன­ருத்தாபனம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டார். (இலங்கையின் 10வது பாராளு­மன்றம்- லேக் ஹவுஸ் வெளியீடு -1995)

இந்த சிங்கள மக்கள் முன்னணியின் ஆரம்பத்தை இந்த இடத்தில் அறிந்து கொள்வது அவசியம். 1977 கலவரத்தைத் தொடர்ந்து அக்கலவரத்தின் பின்னணிகளை ஆராய்வதற்காக சன்சோனிக் கமிஷன் அமைக்கப்பட்டது தெரிந்­ததே. (இக்கலவரம் 1983 இனப்படுகொலைக­ளுக்காக பேரினவாதிகள் செய்த ஒத்திகை என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது) இக்கலவரத்தின் போது தான் ஜே.ஆர். போரென்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்கிற பிரகடனத்தைச் செய்திருந்தார். கண்கட்டி வித்தைக்காக அமைக்­கப்பட்ட அந்த ஆணைக்குழுவின் முடிவில் அக்கலவரத்துக்கு தமிழ் அரசியல் தலைவர்களே காரணமெனக் குற்றம் சாட்டப்பட்டதுடன், அக்கல­வரத்துக்குக் காரணமான எவரும் தண்டிக்கப்பட­வுமில்லை. இந்த ஆணைக்குழு அமைக்கப்­பட்டதும் தமிழர்கள் தான் இத்தனைக்கும் காரணமென்றும், 'தமிழர்களால் தான் சிங்கள மக்கள் கொல்லப்பட்டார்கள், சேதமுற்றார்கள், அகதிகளானார்கள்' என்றும் போலியாக நிறுவி, போலி ஆணைக்குழுவின் அறிக்கையை தயாரிப்­பதற்கு சிங்களத் தரப்புக்கு போலிச் சாட்சியங்கள் தேவைப்பட்டன. அவ்வாறு தயாரிக்கப்பட்டவை அனைத்தும் தொகுக்கப்பட்டு எல்லே குணவங்ச தேரோவால் ”சன்சோனிக் கொமிஷன் அறிக்கை இல-1” மற்றும் 2 என நூல்களாக வெளிவந்தன.


சன்சோனி ஆணைக்குழுவுக்கு போலி ஆதாரங்களை சமர்ப்­பிப்பதற்காக உருவாக்­கப்பட்டது தான் சிங்கள மக்கள் முன்னணி. அவ்வமைப்பு ஆரம்­பிக்­கப்பட்டதன் பின்னணி குறித்து சிங்கள மக்கள் முன்னணியின் உத்தி­யோகபூர்வ பத்திரிகையாக அன்று வெளிவந்த ”மாத்ரு பூமி” (அன்னை பூமி) பத்திரிகையின் முதலாவது இதழில் காணலாம். அதில் ”...இவ்வா­ணைக்குழுவுக்கு நாடெங்கிலும் உள்ள சிங்கள­வர்களை சாட்சிக்கு கொண்டு வரும் வேலையைத் தொடங்கியிருக்கிறோம். இதற்கு நிதிப்பிரச்சினை ஒரு பெரும் தடையாக இருந்தா­லும் சில வள்ளல்களின் உதவியால் அதனை மேற்கொள்ள முடிகிறது.... இதிலிருந்து எமது கடமைகளை ஆரம்பிக்கிறோம். ஆனால் தமிழ் இனவாதத்துக்கு எதிராக நீண்டதூரம் நாங்கள் செல்ல வேண்டி­யிருக்கிறது....” (”மாத்ரு பூமி”-1979 பெப்ரவரி)

இப்படித் தொடக்கப்பட்ட இந்த அமைப்பும், அதன் பத்திhpகையும் அதன் பின் அவை ஆற்றிய பாத்திரம் குறித்து மேலோட்டமாக எம்மில் பலர் அறிந்திருப்பர். 1979 பெப்ரவரியில் இதன் முதலாவது இதழ் வெளிவந்தது. 1980 ஏப்ரலில் இப்பத்திரிகை நின்று போனது. மாதாந்தம் வெளிவந்த இப்பத்திரிகை மொத்தம் 14 இதழ்கள் கிரமமாக வெளிவந்து கொண்டிருந்தது என்பது சுவடிகூடத் திணைக்கள காப்பகத்திலிருந்து இது குறித்து தேடிய போது அறியக் கிடைத்தது. மொத்­தம் 8 பக்கங்களை மட்டுமே கொண்டிருந்தாலும் இப்பத்திரிகை முழுவதும் இனவெறியைத் தூண்டும் ஆக்கங்களைத் தவிர வேறு எதுவும் இருந்ததில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயற்பாடுகள், அதன் பத்திரிகையான ”சுதந்தி­ரன்” மற்றும் துண்டுப்பிரசுரங்களை மாத்ருபூமியில் முன்பக்கத்தில் படமாக வெளியிட்டு அதனைத் திரிபுபடுத்தி இனவாத கருத்தேற்றம் செய்து கொடுப்பது மாத்ருபூமியின் முக்கிய பணியாக இருந்தது. முதலாவது இதழில் முன்பக்கத்தில் சுதந்திரன் பதிப்பகத்தில் கோப்பாய் தொகுதி உறுப்பினர் சீ.கதிரவே­லுப்பிள்ளையால் பிரசுரிக்­கப்பட்ட ”சுதந்திரத் தமிழீழம் மலர்க” எனும் தலைப்பிட்டு அதில் இலங்கையில் தமிழீழத்தை வேறு பிரித்துக் காட்டி அதில் வடகிழக்கைச் சேர்ந்த பாராளு­மன்ற உறுப்பினர்களின் புகைப்­படங்களைப்பிரசுரித்து இலங்கைப் பாரா­ளு­மன்றத்தின் தமிழீழ உறுப்பி­னர்கள் என்று குறிப்பிட்டிருந்த அந்த துண்டுபிரசுரம் அப்பயே பிரசுரிக்கப்பட்டிருந்தது­டன் இதனை மீள பிரசுரிக்கும்படி வாசகர்கள் கோரியதால் அதன் 1979 ஏப்ரலில் வெளியான மூன்றாவது இதழிலும் அது பிரசுரிக்கப்பட்­டிருந்தது.

”...சிங்கள நாட்டின் 7இல் 5 பகுதியைத் தமிழர்கள் பிரித்தெடுக்கப் போகிறார்கள், சிங்களவர்கள் கடலில் தள்ளப்படப் போகிறார்கள். ஒரே ஒரு பௌத்த நாடு இல்லாமல் ஆக்கப்படப்­போகிறது, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் இதற்கு ஆதரவு. தமிழ்நாட்டோடு ”ஈழத்தை இணைத்து” சிங்களவர்களை அழிக்கப்­போகிறார்கள், சிங்கள பௌத்த விகாரைகள் வடக்கு கிழக்கில் அழிக்கப்படுகிறது...”

இவை போன்றவற்றை பேரினவாத கருத்திய­லாக புனைவதிலும், திரிபுபடுத்துவதிலும் நிறுவுவதில் இப்பத்திரிகை ஆற்றிய பாத்திரம் லேசானவை அல்ல. பின்னர் வந்த பேரினவாதிகள் இந்தத் தளத்தின் மேலிருந்து இனவெறியைக் கூர்மைப்படுத்த இலகுவாக்கியது சிறில் மெத்­தியூவின் பாத்திரம். இது வெறும் சிங்கள பேரின­வாத சித்தாந்தம் மட்டுமல்ல அதன் வடிமும், அதன் தளமும் தான். இன்று பேரினவாதம் பலர் நம்பிக் கொண்டிருப்பதைப் போல கிராமியத்­திலிருந்து தொடங்கி விசாலிக்கவில்லை அது நகர்ப்புறங்­களில் தோன்றி அங்கேயே மையப் படுத்தப்பட்டு வலைப்பின்னல்களாக கிராமங்­களுக்குள் விரிவா­கிச் செல்கிறது. இது ஒரு முக்கியமான போக்கு.

சிறில் மெத்தியூ எழுதிய ”கவுத கொட்டியா” (யார் புலி-1980-சிங்கள மக்கள் முன்னணி வெளியீடு) எனும் நூலை எவரும் இலகுவில் மறக்கமாட்டர்கள். குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் அதிலுள்ளவர்கள் என்போர் எப்படி சிங்கள நாட்டைக் கைப்பற்ற தமிழ் இளைஞர்களை அணிதிரட்டிக் கொண்டிருக்­கிறார்கள் என்றும், சிங்கள இனம் ஒன்றும் தெரியாத அப்பாவிகளாக இருக்கிறார்கள் என்பதுமே அந்நுhலின் சாராம்சம். அது போல அவர் இன்னும் பல நூல்களையும் எழுதி­யிருக்கிறார். சிங்கள­யாகே அதிசி சத்துரா” (சிங்களவர்களின் உடனடி எதிரி-1970) எனும் தலைப்பில் சிறில் மெத்திவ் எழுதிய நூல் மலையக மக்கள் ஆக்கிரமிப்­பாளர்கள் என்றும், நாட்டிலுள்ள சிங்கள பௌத்தர்களின் சொத்துக்களை இந்தியாவுக்கு அள்ளிச் செல்கிறார்கள் என்றும் இந்தியா தமிழீழம் அமைவதற்கு அனைத்து ஆதரவையும் வழங்கி வருகிறது என்றும் உடனடி எதிரிகள் இவர்கள் தான் என்பதுமாக அதன் சாராம்சம் அமைகிறது. இந் நூல் குறித்த சில தகவல்களை குமாரி ஜயவர்தனா தனது இலங்­கையின் இனவர்க்க முரண்பாடுகள் எனும் நூலிலும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதில் இது யாரால் எழுதப்பட்டது என்து பற்றியோ அதன் சாராம்சம் பற்றியோ தெளிவாக குறிப்பிடப்பட்டி­ருக்கவில்லை.

1977 தேர்தலில் முதன்முறையாக தமிழ் கட்சி (கூட்டணி) பிரதான எதிர்க்கட்சியாக வந்ததானது பாராளுமன்றத்தில் ஐ.தே.க.வுக்கு இருந்த ஒரே இடைஞ்சலாக அது ஆனது. அதற்கு பாடம் படிப்பிக்கும் வேலையையும், சிங்கள பௌத்­தர்களை திருப்தி படுத்தும் வேலையையும், சிங்கள பேரினவாதத்தை மக்கள் மயப்படுத்தும் வேலை­யையும் தனது கட்சியை நேரடியாக சம்பந்தப்­படாமல் கட்சியைச் சேர்ந்த சேர்ந்த ஒரு அமைச்சர் அக்கடமைகளைச் செய்வதற்கு ஐ.தே.க. இடம­ளித்­திருந்தது. மாத்ரு பூமியில் வெளிவந்த தகவல்­களைப் பார்க்கின்ற போது வெறும் சிறில் மெத்தியூ அல்லது அவரின் அமைப்பால் மட்டும் அவற்றைப் பெற்றிருக்க வாய்ப்பில்லை. நிச்சயம் அது அரசின் புலனாய்வுப்பிரிவினரின் தகவல்கள் என்பதை விளங்கிக் கொள்வது கடினமில்லை. 1979 பெப்­ரவரி 14ஆம் திகதி ”மாத்ரு பூமி” பத்திரிகைக்கு இரகசிய பொலிஸார் புகுந்து விசாரணை செய்ததாக மார்ச் மாத இதழில் கட்டுரையொன்று வெளியாகி­யிருக்கிற போதும் இது வெறும் கண்துடைப்­பாகவே இருக்குமெனத் தோன்றுகிறது. ஏனெனில் அதன் பின்னர் ஒரு வரு­டமாக அப்பத்திரிகை அதனை விட மோசமான இனவெறியைத் தூண்டுகிற வகையில் வெளிவந்துகொண்டு தான் இருந்திருக்கிறது.

”மாத்ரு பூமி” பத்திரிகையில் வந்த சில தலைப்புகளைப் பார்ப்போம்.

-சிங்களவாpன் கழுத்தில் சுருக்கி­டப்படும் காலம் அருகில்! (79-பெப்), -எமது இனத்தை தூஷிக்க இடம் கொடுப்போமோ? (79-பெப்), ஈழம் தமிழ் நாடு பூட்டு! (79-மார்ச்), தமிழ்நாடுக்கே ஓடுங்கடா! (79-மார்ச்), இனம் இனிமேலும் மிஞ்சுமா?(79-மார்ச்), பூசாரிகள் கொழும்பில் இரகசிய கூட்டம் (79-ஏப்ரல்), எம்.ஆர்.-அப்பாபிள்ளை குசுகுசுக்­கிறார்கள். (79-ஏப்ரல்), சிங்கள ஒற்றுமையே தேசத்தின் விடிவு (79-ஏப்ரல்), கஸ்ட்மஸ் திணைக்களம் இனவாதிகளின் குகை! (79-ஏப்ரல்), பாலஸ்தீன விடுதலை இயக்கமும் பின்னணியில் (79-மே), வவுனியாவில் புராதன விகாரைகள் அழிக்கப்­படுகின்றன (79 டிச), மட்டக்களப்பில் அரச நிர்வாகம் சிங்களத்தில் இல்லை! (79-டிசம்பர்), தமிழுக்கும் அரச கௌரவம்! (79-பெப்ரவரி), ஈழம் கோரிக்கைக்கு வாசு-விஜேவீர ஒத்துழைப்பு! (79-ஏப்ரல்)

இவ்வாறு ”மாத்ரு பூமி” பத்திரிகை பேரினவாதத்தைப் பரப்பியதில், கருத்துருவாக்கத்தை புனைவதில் ஆற்றிய பாத்திரம் முக்கியமானது. அது போல சிங்கள மக்கள் முன்னணிக்குப் பின்னால் திரண்ட மக்களை தனது அரசியல் செல்வாக்கால் தக்க­வைத்துக் கொள்வதிலும் தமது நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதிலும் சிறில் மெத்தியூ முக்கிய பாத்திரமாற்றியிருந்தார். தமிழ் மக்கள் பற்றிய மோசமான அவதூறு­களைப் பரப்பியதும், எதிரிகளாக சித்திரித்ததும் தான் 1983 கலவரத்தைக் கொண்டு நடத்த இலகுவாக ஆனது. 83 இனப்படுகொலைச் சம்பவத்தில் சிறில் மெத்தியூ தமது சகாக்களைப் பயன்படுத்தி தமிழர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்களை பட்டியலிட்டுச் சென்று திட்டமிட்டு அழித்ததும், விரட்டியடித்ததும் தெரிந்ததே. அது போல 1981இல் யாழ் நூலக எரிப்­பினை மேற்கொண்டவர் சிறில் மெத்­தியூ என்பது இன்று சகலரும் அறிந்த விடயம்.

சிங்களப் பேரினவாதத்தின் தொடர்ச்சியை மாறி மாறி கையேற்று முன்னெடுத்துச் செல்ல வரலாற்றில் பலர் வந்து போயிருக்கிறார்கள். அவர்களை வெறும் நபர்களாக மட்டும் பார்க்கத் தேவையில்லை. அதற்குப் பின்னால் பல்வேறு நலன்களைச் சார்ந்த சக்திகளும் இருந்து வந்திருக்கிறார்கள். வெளித்தோற்றத்தில் இந்த நபர்கள் மட்டுமே தெரிவார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் சிறில் மெத்தியூ. சிறில் மெத்தியூவின் காலம் முடிந்தது. அவரால் வழிநடத்தப்பட்ட சிங்கள மக்கள் முன்னணியின் காலமும் முடிந்­தது. ஆனால் அவர் பலப்படுத்தி­விட்டுச் சென்ற சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தம் மட்டும் மிஞ்சியது மட்டு­மன்றி மேலும் கூர்மைப்படுத்தப்பட்டு இன்று பாசிச வடிவம் எடுத்து வருகி­றது. அந்த சித்தாந்­தத்தை மக்கள் மயப்­படுத்துவதற்கு பல்வேறு பேரினவாத அமைப்புகளும் ஒனறிணைந்து ஒரு குடையின் கீழ் மையப்பட்டு, வலைப்­பின்னல்களைக் கொண்டு உறுதியான நிறுவன வடிவம் பெற்று தொழிற்­புரிகின்ற காலத்தை வரலாற்றில் இப்­போது தான் பார்க்கிறோம் என்பதை நினைவிற் கொள்வோம்.

இந்த பேரினவாதம் மக்கள்மயப்பட மக்கள்மயப்பட தமிழ் சிங்கள இன விரிசல் விரிவடைந்து கொண்டே செல்கிறது. சந்தேகங்கள், நம்பிக்கை­யின்­மைகள் அதிகரித்து சிந்தனைகள் துருவமயப்பட்டு செல்கின்றன. அதனைச் செய்வதற்கு இன்று அரசு, தொடர்புசாதனங்கள், சிவில் அமைப்­புகள், கல்வி (அமைப்பும் நிறுவனமும்) எல்லாமே சாதகமாக இருக்கின்றன. சேர்ந்து வாழலாம் என்பது வெறும் வாய்ப்பேச்சாக மட்டுமே ஆகிவிட்டி­ருக்கிறது.

0 comments:

தளத்தின் உள்ளடக்கம்.

இந்தத் தளத்தில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உருவாக்கம், விரிவாக்கம், கருத்தாக்கம், அதன் வடிவம், அதன் நிறுவனமயமாக்கம், அதன் திசைவழி குறித்து சரிநகர், ஆதவன், நிகரி, விடிவு, பறை, இனி போன்ற பதிப்புகளில் வெளிவந்த என்.சரவணனின் கட்டுரைகள் மறுபிரதியிடப்படுகின்றன.

சுவடி

Template by - Abdul Munir - 2008 - layout4all