Saturday, January 31, 2009

சமவாய்ப்புச் சட்டமும் பேரினவாதமும்! பாசிசத்தின் கூறுகள் தெரிகின்றன?

என்.சரவணன்

இன்றைய அரசியல் மற்றும் பேரினவாதச் சூழலில் முக்கிய சூடுபறக்கும் பேசுபொருளாக சமவாய்ப்புச் சட்டம் ஆகிவிட்டிருக்கிறது.

- சமவாய்ப்புச் சட்டத்துக்கு எதிராக ஆனந்தா, நாலந்தா, தர்மராஜா, விசாகா போன்ற நாட்டின் முன்னணி சிங்கள பௌத்த பாடசாலைகளின் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

- அஷ்ரப் தான் இதற்கு காரணமென்று கூறி அஸ்ரப்புக்கு எதிராகப் பல கண்டன அறிக்கைகள்.

- இச்சட்டத்துக்கு அரசாங்கத்துக்குள்ளேயே ஆதரவு இல்லை.

- சமவாய்ப்புச் சட்டம் பற்றிய இனவாத பீதியைக் கிளப்புகின்ற கட்டுரைகள், செய்திகள், விவாதங்கள்.

- ஒக்டோபர் 14ஆம் திகதி 23 அமைப்புகள் ஒன்றிணைந்து இச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

- சமவாய்ப்புச் சட்டத்தினை ”லங்காதீப” ஒக்டோபர் 8ம் திகதியிலிருந்து தினசரி, பகுதிபகுதியாக மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறது.

- இச்சட்டத்துக்கு எதிராக ஒக்டோபர் 8ஆம் திகதி பௌத்த இளைஞர் காங்கிரஸ் மாநாடு நடத்தியது.

பொ.ஐ.மு. அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னரிலிருந்து இப்போது வரை பஞ்சமில்லாத­வகையில் ஆணைக் குழுக்களை அமைத்து வருவதும் எந்தவொரு ஆணைக்குழுவும் இந்த ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் தனது விசாரணைகளை முடித்து அவற்றிற்கான தீர்வு கண்டதாக இல்லை.

முன்னைய வாக்குறுதிகளுக்கு என்ன பதில்?

இந்த நிலையில் பொ.ஐ.மு அரசு தனது ஆயுளை முடிக்கப் போகும் தறுவாயில் முன்வைத்திருக்கும் புதிய திட்டம் இந்த சமவாய்ப்புச் சட்டம் ஆகும். அரசாங்கம் சமவாய்ப்புச் சட்டம் என்று புதிதாக எதனையும் கொண்டு வருவதற்கு முன்னர் அது தனது முன்னைய வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதா எனப் பார்த்ததாகத் தெரியவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது மட்டுமன்றி நேரெதிரான நடவடிக்கைகளை செய்து முடித்திருப்பது குறித்தும் புதிதாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஏற்கெனவே அரசு தான் வழங்கியிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் புதிது புதிதாக மேலும் வாக்குறுதிகளை வழங்கிக்­கொண்டே காலம் தள்ளுவது அதன் போக்காகப் போய் விட்டது. இந்த ஐந்து வருட காலத்தில் இப்படிப்பட்ட வாக்குறுதிகளைக் கண்டு புளித்துப் போய்விட்ட நிலையிலேயே இந்த சமவாய்ப்புச் சட்டம் பற்றிய போலி நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறது.

அரசின் இந்தச் சட்டம் அரச நிர்வாகத்தில் செல்லுபடியற்றதென்பதும், வெறுமனே தனியார் துறையினர் மீது மட்டுமே செல்லுபடியாகின்ற வகையிலேயே இது தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதனை முதலாளிமார் சம்மேளனம் எதிர்த்­திருக்கிறது. ஏற்கெனவே தொழிலாளர் சாசனம், பெண்கள் சாசனம் என எந்தவொரு சாசனத்தைக் கூடக் கொள்கையளவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற இயலாத இந்த அரசாங்கம் எப்படி ஒரு சட்டத்தை இயற்றிவிட முடியும். தொழிலாளர் சாசனத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற இயலாத வகையில், முதலாளிமார் சம்மேளனம் அதனை எதிர்த்து, அரசை எச்சரித்ததோடு அதனை கிடப்பில் போட்டு விட்டது. இந்த அரசு ஆட்சியலமர்ந்ததும் பெரும் பிரச்சாரத்தோடு தொடக்கிய ”ஒம்புட்ஸ்மன்” பதவியும் ஒன்றுக்கும் பிரயோசனமற்ற ஒன்றாக ஆனமை பற்றியும் தெரிந்ததே.

முதலில் பௌத்திற்கு முன்னுரிமை
கைவிடத்தயரா?

எனவே அரசு உண்மையில் இதயசுத்தியோடு­தான் இவ்வகைச் சட்டங்களை இயற்றினாலும் கூட அதனை கருவிலேயே அழிக்கக்கூடிய சக்திகள் அரசைவிட வலுவானதாக உருவாகியிருக்கிறது என்பது தெரிந்ததே. பெண்கள் சாசனத்துக்கு சட்ட அந்தஸ்து கொடுக்கத் தயாரில்லாமல் ஆணாதிக்க அரச யந்திரம் என்ற ஒன்று எப்படி இருக்கிறதோ, அது போல தொழிலாளர் சாசனத்துக்கும் சட்ட அந்தஸ்து கொடுக்க முடியாதபடி அரசு முதலாளிமாரின் நலனில் தங்கியிருக்கிறது.

அது மட்டுமன்றி குறைந்தபட்சம் உத்தேச அரசியலமைப்பில் பௌத்தத்துக்கு முன்னுரிமை­யளிப்பதை மீளவும் உறுதிப்படுத்தியிருக்கிற அரசு இந்த சமவாய்ப்புப் பற்றிப் பேசுவது நகைப்புக்­குரியது. 1972ஆம் ஆண்டு கொண்டு­வரப்பட்ட இல­ங்கையின் முதலாவது குடியரசு அரசியல­மைப்பில் இதே ஸ்ரீலங்கா அரசு தலைமையிலான அரசு தான் வரலாற்றில் பௌத்தத்துக்கு முன்னு­ரிமை அளிக்கின்ற ஏற்பாட்டை நடைமுறைக்குக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் ஐ.தே.க. அரசில் 1978 இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு கொண்டு வரப்பட்ட போது ஐ.தே.க விரும்பினாலும் அதனை நீக்க முடியாதிருந்தது. அப்படி நீக்கியிருந்தால் சிங்கள பௌத்தர்களின் கடும் எதிர்ப்பை ஐ.தே.க. அரசு எதிர்நோக்கி­யிருக்க வேண்டி இருந்திருக்கும். எனவே ஐ.தே.க.வும் தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்த அவ் ஏற்பாட்டை சமாதானம், ஐக்கியம், சௌஜன்யம் என்ற போர்வையில் ஆட்சிக்கமர்ந்த பொ.ஐ.மு. அரசு ”சமாதானத்துக்­கான யுத்தம்” என்று இன அழிப்பை தொடர்ந்த­தைப் போலவே ”தீர்வு யோசனை” என்கிற போர்வையில் மதசார்பு அரசொன்றை உறுதி செய்யத் துணிந்திருக்கிறது. ஐ.தே.க. அரசாங்­கத்தில் ஏனைய சிறுபான்மை மதங்களுக்கு இருந்த அரை அமைச்சுக்களைக் கூட (இந்து, முஸ்லிம் ராஜாங்க அமைச்சுக்கள்) பொ.ஐ.மு அரசாங்கம் பதவிக்கு அமர்ந்ததும் அவற்றை இல்லாமல் செய்ததுடன் அவற்றை திணைக்க­ளங்களாகச் சுருக்கியது. ஆனால் பௌத்த சாசன அமைச்சினை முழு அமைச்சாக தொடர்ந்து வைத்திருப்பதுடன் புத்த சாசன அமைச்சை நேரடியாக ஜனாதிபதியே பொறுப்பேற்றார். இரண்டாயிரமாம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 14 கோடி ரூபா பௌத்த சாசன அமைச்சுக்கு ஒதுக்கியுள்ளதும் இங்கு குறிப்பிடத்­தக்கது. இன்றைய ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சர் மட்டுமல்ல அவர் புத்த சாசன அமைச்சரும் கூட. இந்தப் பின்னணியில் பார்க்கின்ற போது இன்றைய சமவாய்ப்புச் சட்டத்தை கொண்டுவர முன்னர் இலங்கையை மதசார்பற்ற அரசாக முதலில் பிரகடனப்படுத்­தியிருக்க வேண்டும். இந்த அரசால் அதனைச் செய்ய முடியாமல் போனது ஏன்?

எச்சரிக்கை

இது வரை எந்த அரசாங்கமும் வழங்காத அளவுக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய அரசாங்கமும் இது தான். அது போல கொடுத்த வாக்குறுதிகளை அளவுக்கதிகமாக மீறிய அரசாங்கமும் இது தான். அரசாங்கத்தின் காலத்தை கடத்தவும், உள்ளூரிலும் சர்வதேச அரங்கிலும் பிரச்சாரம் செய்யவும் நாளுக்கொரு நாள் புதிய புதிய காகிதச் சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் பீரிசுக்கு நிகர் பீரிசே தான்.

ஒரு போதும் நடைமுறைக்கு வராத இந்தச் சட்டம் குறித்து நுணுக்கமாக ஆராய்வது காலவிரயச் செயல். ஏனெனில் தீர்வுப் பொதி குறித்து நடக்காத விவாதமா? ஆராயாத வல்லுனர்களா? அது போல இதுவும் எதனையும் சாதிக்கப் போவதில்லை.

உண்மையில் அரசின் இந்தப் போலி முனைப்புகள் ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் சிங்கள பௌத்த போpனவாத தரப்பில் இதனைப் பார்க்கும் விதத்தை அறிந்தால் ஆச்சரியப்­படுவீர்கள். சமீப காலமாக சிங்களப் பத்திரி­கைகளில் நடக்கும் விவாதம் இந்தச் சட்டம் சிங்களவர்களுக்கு இல்லாத உரிமைகளை தமிழர்­களுக்கும், முஸ்லிம்களுக்கும் வழங்கப்­போவதாகவும், ஏற்கெனவே சிங்கள பௌத்தர்­களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற இவ்வினங்கள் இதனால் விசேட சலுகைகளை அனுபவிக்கப் போவதாகவும் இதனை தடுத்து நிறுத்தாவிடில் சிங்கள இனம் அழிந்து விடும் என்றும் எச்சரிக்கின்றன.

கடந்த 3ஆம் திகதி ”திவயின” ஞாயிறு இதழில் தலைப்புச் செய்தியாக ”சமவாய்ப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டால் நீதிமன்றம் செல்ல ஒரு கூட்டம் தயாராகிறது” என்கிற செய்தி வெளியானது. இதன் உள்ளடக்கத்தில், இச்சட்டம் கொண்டு வரப்படுமானால் அது அரசியலமைப்­பின் பல பிரிவுகளுக்கு முரணாகும் என்றும் ஏதேனும் ஒரு அடிப்படை உரிமை அல்லது மொழி சம்பந்தப்பட்ட விடயங்கள் குறித்த சிக்கலைத் தீர்க்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கே உரியது என்றும் அவ்வாறான அடிப்படை உரிமைகள் குறித்த விடயங்களைப் பற்றிய தீர்மானிக்கும் அதிகாரத்தை வேறு நிறுவனங்களுக்கு வழங்கு­வதன் மூலம் 126வது பிரிவு மீறப்படுவதாகவும் இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லத் தயாராகி வருவதாகவும்,கூறப்பட்டிருந்தது.

தற்செயலாக சமவாய்ப்பு பற்றிய ஆணைக்­குழுவுக்கு நியமிக்கப்படும் ஆணையாளராக அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் நியமிக்­கப்பட்டால் சிங்கள பௌத்தர்களுக்கு நியாயம் கிடைக்காது போகுமென்றும் தெரிவிக்­கின்ற அவர்கள் இச்சட்டம் அரசியலமைப்பின் 12வது பிரிவுக்கு முரணானது என்றும் தெரிவிக்கின்றனர்.

இது நடைமுறைக்கு வந்தால் பௌத்த பாடசாலைகளில் 20 வீதம் அல்லது அதற்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லிம் மாணவர்கள் சேர்க்கப்­பட்டால் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்­கின்ற அரசியலமைப்பின் 9வது பிரிவுக்கும் அது முரணானதாக அமையுமெனவும் தெரிவித்துள்­ளனர்.

கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பிரதே­சத்திற்குள் தமிழ் முஸ்லிம்களின் சனத்தொகை 70வீதமாக இருப்பதாகவும் இச்சட்டம் அமுலுக்கு வந்தால் சிங்கள-பௌத்த பாடசாலைகளின் தனித்துவத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக ஆக வாய்ப்புண்டெனவும் தெரிவிக்கின்றனர்.

இது தவிர இச்சட்டம் கொண்டுவரப்பட்டால் இந்நாட்டிலுள்ள ”சாதி” எனும் சமூகக் கட்டமைப்­புக்கு சில தனித்துவங்கள் காக்கப்படுமெனவும் அவ்வாறு செய்யப்பட்டால் சிங்களவர்கள் சாதி ரீதியாக பிளவுபட்டு அழிந்து விடுவார்கள் என்றும் தொழில் வாய்ப்புகளிலும் விகிதாசாரம் பின்பற்­றப்படுமானால் சிங்களவர்களுக்கு அது பாதகமாக அமையுமெனவும் இதனைக் கருத்திற் கொண்டு தாமதிக்காது இதற்கெதிராக சட்ட நடவடிக்கை­களை மேற்கொள்ள தயாராகி வருவதாக அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொண்டா ரெஸ்ட்
அஷ்ரப் பிஸி

இதே நாளைய ”திவயின” பத்திரிகையில் ”சமவாய்ப்புச் சட்டத்தின் ஆபத்து!” என்ற தலைப்பில் சானக்க லியனாராச்சி என்பவர் எழுதி­யுள்ள கட்டுரை முழுக்க முழுக்க முஸ்லிம்க­ளுக்கும் அமைச்சர் அஷ்ரப்புக்கும் எதிராக எழுதப்பட்டிருக்கிறது. சமீப காலமாக பேரினவா­தத்தின் தாக்குதலுக்கு அதிகளவு அகப்பட்டிருப்­பவர் அஷ்ரப் என்பது கவனிக்கத்தக்கது. அச்செய்தியில்,

”...சிறுபான்மை இனங்களுக்கு நாட்டின் உயர்ந்த இடத்திலிருக்கும் சிங்கள பௌத்த பாடசாலைகளில் உயர்ந்தபட்ச கோட்டாவை கேட்கிறார். சாஹிரா கல்லூரி போன்ற பாடசா­லைகளில் இடப்பற்றாக்குறை காரணமாக அவர் இப்படிக் கேட்கிறார் என்றால் அதனை சிங்கள பௌத்த மாணவர்களின் வாய்ப்புகளை பறிப்பதற்­கூடாகவா செய்ய வேண்டும்... இன விகிதாசாரத்­தின்படி தான் இந்தக் கோரிக்கை விடுக்கப்படுகிற­தென்றால் இந்த நாட்டில் 70 வீத சிங்கள பௌத்தர்களுக்கு சாஹிராவில் கோட்டா வழங்க அஷ்ரப்பால் முடியுமா...?

எனவே நாங்கள் தெளிவாகக் கூற விரும்பு­வது, பௌத்த பாடசாலைகளுக்குள் முஸ்லிம்கள் நுழைந்து முஸ்லிம்களின் கலாசார தனித்துவ­ங்களை பௌத்த பாடசாலைகளுக்குள் நுழைக்க அஷ்ரப் திட்டமிட்டு வருகிறார் என்பதே. அவருக்குத் தேவைப்படுவதெல்லாம் தற்போதைய நெருக்கடிகளை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தனது அரசியல் இலக்கை அடைவதே.

...எனவே இந்த நிலைமையை விளங்கிக் கொண்டு சரியான சிங்களத் தலைமை உருவாக்­கப்பட வேண்டும்.” எனக் கோருகிறது அந்தக் கட்டுரை.
பேரினவாதமயப்படுத்தப்படும் மக்கள்

20வீத இட ஒதுக்கீட்டை அஷ்ரப் கோரிய­தாக முதலில் செப்டம்பர் 19ஆம் திகதி ஞாயிறு ”திவயின” பத்திரிகையின் தலைப்புச் செய்தியி­லேயே வெளியானது. பின்னர் 21ஆம் திகதி வெளியான ”திவயின”வில் ஆசிரியர் தலையங்­கத்­திலும் இதே விடயத்துக்காக அஷ்ரப்பைத் தாக்கி எழுதப்பட்டிருந்தது. இல்லாத ஒன்றை சோடித்து இனவாதத்தைத் பரப்புவதற்காக வெளியான இச்செய்தியையே ஆதாரமாகக் கொண்டு தான் பல பேரினவாதக் கட்டுரைகள் வெளியாகத் தொடங்கின. புனையப்படும் ஒரு செய்தி நிறுவனமயப்பட்ட பேரினவாதத்தால் எப்படி வேகமாக நம்பவைக்கப்படும் என்பதற்கும். இலகுவாக அதற்குள் விழுமளவுக்கு பேரினவாதம் எந்தளவு மக்கள்மயப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கும் நல்ல உதாரணம்.

ஒக்டோபர் 7ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய போது அமைச்சர் அஷ்ரப் தான் கூறாத ஒன்றைப் பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகக் கூறவேண்­டியதாயிற்று. டீ.என்.எல். தொலைக்­காட்சி சேவையில் அஷ்ரப்பிடம் எடுக்கப்பட்ட பேட்டியிலும் இது பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டன.

இப்படித்தான் கடந்த 1998 ஜனவரி 18ஆம் திகதியன்று வெளியான திவயின பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில், அஷ்ரப் ஆயுதம் தாங்கிய நபர்களுக்கு ஆதரவளித்து வருகிறார் என்றும், பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ள பிரிவினைவாத சக்திக­ளுக்கும், திவயினவுக்கு எதிராக இருப்போருக்கும் ஆதரவளிப்பதாக எழுதப்பட்டிருந்ததை எதிர்த்து 25 கோடி ரூபா நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இவ்வாறு ஒரு பக்கம் பேரின­வாதம், இன்னொருபுறம் முதலாளிமார் இவ்விரு சாராரும் இன்றைய இனப்பி­ரச்சினை மாத்திரமல்ல நாட்டில் எந்த அடக்கப்படும் பிரிவினரதும் உரிமை­களை வழங்கவிடப் போவதில்லை என்பதற்கு தீர்வுப் பொதி தொடங்கி, தொழிலாளர் மற்றும் பெண்கள் சாச­னங்கள் ஈறாக இன்றைய சமவாய்ப்புச் சட்டம் வரை சிறந்த உதாரணங்கள்.

வீரவிதானவின் அறிக்கை

இந்த சமவாய்ப்புச் சட்டத்துக்கு எதிராக சிங்கள வீரவிதான இயக்கம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு. (திவயின ஒக்டோபர் 8)

”...சர்ச்சைகள் தோன்ற வழியில்லாத சந்தர்ப்பங்களிலும், தேர்தல் போன்ற தீர்மான­கரமான நிலைமைகளிலும் சிறுபான்மையோர் செய்தது அரசின் பதவிகளை கைப்பற்­றும் எத்தனிப்பையே. அல்லது அரசை விரல்நீட்டி தோப்புக்கரணம் போட வைப்பதே.

...குறைந்த வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு குறைந்த எண்ணிக்­கையே இருக்கின்ற இருவர்கள் அரசை அமைப்பதில் கலந்து கொண்டு பின் அரசையே பிணைக்­கைதிகளாக ஆக்கி நாட்டிலுள்ள சிங்களவர்களின் உரிமை­களையும், இறைமையையும் வரலாறு முழுக்கச் சுரண்டி வந்துள்ளனர். அர­சாங்கத்தின் பதவிக்காலம் முடிவ­டைகையில் தமக்கு சலுகை­கள் தந்து வாழவழிவிட்ட அரசாங்கத்தோடு மோதி எதிர்க்கட்சிக்கு தாவும் வரலாற்­றையும் அவர்கள் கொண்டிருக்­கிறார்கள்...

1. எனவே சிறுபான்மையினங்கள் மக்களின் அரசாங்கத்தை மிரட்டுவதை, நிர்ப்பதிப்பதை கண்டிப்போம்!

2. நாட்டின் அரச யந்திரத்தை முடக்க முயற்சி செய்யும் சிறுபான்மை இனவாதிகளை-பொம்மைத் தலை­வர்களுக்கு இடம்கொட­வேண்டாம்.

3. நாட்டின் அனைத்து தேசபக்தி கொண்ட­வர்கள்-கட்சிகள் ஆகியன, இது இனத்துக்கும், இனஐக்கியத்துக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து என்பதை கருத்திற்கொண்டு மிகவும் கவன­மாகவும், முன்யோசனையுடனும் செயற்­­படுமாறும் கட்சி பேதமற்று இனத்துக்காக ஐக்கியப்படுமாறும் கேட்டுக்கொள்கிறோம்...!”

77 படுகொலைகளுக்கு
காரணம் தமிழர்கள்?

சமவாய்ப்புச் சட்டத்துக்கு எதிராக பௌத்த இளைஞர் காங்கிரஸ் ஒக்­டோபர் 8ஆம் திகதி ஏற்பாடு செய்­திருந்த மாநாட்டில் மகா சங்கத்தின் தலைவர் மடிகே பஞ்ஞானசீல உட்பட பல பிக்குமாரும், இன்னும் பல பேரினவாதிகளும் உரையாற்றியதோடு மண்டபம் வழிய பலர் கலந்து கொண்டிருந்தனர். மடிகே பஞ்ஞான­சீலர் பேசும்போது, ”...1977 ஓகஸ்ட் 23இல் யாழ்ப்பாணத்தில் சிங்களக் கடைகளை உடைத்து, அழித்து மகா கலவரத்தை உண்டுபண்ணி 23,ஆயிரம் சிங்களவர்கள் அனாதை­களாக்­கப்­பட்டார்கள். யாழ்ப்பாணத்தில் புராதன பெரிய விகாரைகள் மட்டும் 21 இருந்தது. இன்று அவை என்ன ஆனது? ஈழ வரைபடத்தில் உள்ளடக்­கப்படுகிற கடற்பகுதியில் மூன்றில் இரண்டு பகுதி சிங்களமல்லாத­வர்களின் கைகளுக்காம். அப்படி நடந்தால் மீன்பிடித் தொழிலிலுள்ள 74 வீத சிங்கள மீனவர்களின் கதி என்ன? ...இப்படி சிங்களவர்களின் உரிமை­களை பறித்து விட்டிருக்கிற நிலையில் இப்போது இந்த சமவாய்ப்புச் சட்டம்...” என்றிருக்கிறார்.

அரசு எப்படி சரணடைந்தது?

எப்படியோ 7ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் விவாதிக்­கப்படவிருந்த இந்த சமவாய்ப்புச் சட்டமூலம் அன்று நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருக்கக்கூட இல்லை. எனவே பேரினவாதத்தின் திட்டமிட்ட எதிர்ப்புகள் அரசை எப்படி சரண­டையச் செய்தது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

இதெல்லாவற்றையும் விட இம்­முறை இது சிங்கள மாணவர்­களுக்கு பாதகமான ஒன்று என்ற பிரச்சாரத்தை கட்டவிழ்த்து ஆனந்தா, நாலந்தா, தர்மராஜ ஆகிய பாடசாலை மாண­வர்கள், பெற்றோர்கள் சிங்கள அமைப்­புகள் எல்லாவற்றையும் சேர்த்து பெரும் ஆர்ப்பாட்டமொன்றை 7ஆம் திகதி­யன்று மருதானையில் நடத்தியிருந்­தனர். 9ஆம் திகதி விசாகா மகளிர் வித்தியாலயத்தின் பழைய மாணவிகள் சங்கத்தினரைக் கொண்டு பம்பலப்­பிட்டியில் ஒரு ஆர்ப்பாட்­டத்தை நடத்தினர்.

நிறுவனமயப்படும் பாசிசம்

பாசிசம் நிறுவனமயப்படும் போது அது அரசதிகாரம், அரச நிர்வாகம், படை, வெகுஜன இயக்கங்கள், மத நிறுவனங்கள், நீதித்துறை என சகல இடங்களிலும் இரகசியமாக காலூன்­றும். இன்று அந்த காலூன்றல் பாட­சாலை உள்ளிட்ட கல்வித்­துறையிலும் விதைக்கப்படத் (planting) தொடங்கி விட்டன. அதன் முக்கிய ஆரம்பம் தான் இந்த நிலைமையைப் பயன்­படுத்தி சிங்கள பௌத்த மாணவர் மத்தியில் சென்று அவர்களை வீதிக்கு இறக்கி ஆர்ப்பாட்டத்துக்கு தயார் படுத்தியமை.

மேலோட்டமாகப் பார்த்தால். இவை வெறும் சம்பவங்கள், செய்திகள் தான். உன்னிப்பாகவும், எச்சரிக்கை கண்காணிப்புடனும், தூரநோக்குடனும் இதனைப் பார்க்கத் துணிபவர்களுக்கு எதிர்காலம் பற்றிய அச்சத்தையும், அதன் ஆபத்தையுமே உணர்த்தும். இங்கு கூறப்படும் அமைப்புகள் வெவ்வேறான அமைப்புகளாகத் தோன்றினாலும், இன்று அதற்கு ஒரே நிகழ்ச்சி நிரலின் கீழ் அணிதிரளக்கூடிய பேரினவாதச் சித்தாந்தமும், அதற்கான நிறுவனமயப்பட்ட அமைப்பு வடிமும் உண்டு. அரசு அதற்குக் கட்டுப்பட்டு இருக்கிறது. தீர்மானிக்கும் ஆற்றல் படிப்படியாக பாசிச சக்திகளிடம் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது. பாசிசம் மக்கள் மயப்பட்டுக் கொண்டி­ருக்கிறது என்பதை மட்டும் தற்­போதைக்குக் கூறலாம்.

0 comments:

தளத்தின் உள்ளடக்கம்.

இந்தத் தளத்தில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உருவாக்கம், விரிவாக்கம், கருத்தாக்கம், அதன் வடிவம், அதன் நிறுவனமயமாக்கம், அதன் திசைவழி குறித்து சரிநகர், ஆதவன், நிகரி, விடிவு, பறை, இனி போன்ற பதிப்புகளில் வெளிவந்த என்.சரவணனின் கட்டுரைகள் மறுபிரதியிடப்படுகின்றன.

சுவடி

Template by - Abdul Munir - 2008 - layout4all