Saturday, January 31, 2009

குமார் பொன்னம்பலத்தின் படுகொலையும் பாசிசத்தின் செய்தியும்

என்.சரவணன்

நேற்று இலங்கை நேரப்படி நண்பகல் 11.15 மணியளவில் வெள்ளவத்தை இராமகிருஸ்ண வீதியில் பெற்றோல் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் வைத்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும் பிரபல சட்டத்தரணியுமான குமார் பொன்னம்பலம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் குமார் பொன்னம்பலம் பிரபலமான சட்டத்தரணி ஜி.ஜி. பொன்னம்பலத்தின் புதல்வராவார். 1938ம் ஆண்டு ஆவணி மாதம் 12ம் திகதி பிறந்த குமாருக்கு இறக்கும் போது வயது 61. றோயல் கல்லூரியில் கல்விகற்ற இவர் பின்னர் சட்டக்கல்வி கற்று 1974 ஆண்டு பரிஸ்ரர் ஆனார். சிறுவயது முதலே தந்தையின் பாசறையில் அரசியலில் ஈடுபாடு கொண்ட இவர் 1966ம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இளைஞர் அணியின் தலைவர் ஆனார். 1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணத்தொகுதியில் போட்டியிட்டார், பின்னர் 1982ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டார், இதுவரை காலமும் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்ட ஒரேஒரு தமிழர் குமார் பொன்னம்பலம் ஆவார். குமார் பொன்னம்பலத்திற்கு இரு பிள்ளைகள் உண்டு. குமாரின் மனைவி யோகலட்சுமி இலங்கையில் பிரபல இருதய சத்திர சிகிச்சை நிபுணராவார்.

குமாரின் படுகொலை குறித்து இலங்கையில் தமிழ் செய்தி ஊடகங்கள் பல இப்படுகொலைக்கு பின்னால் அரசு நிற்கிறது என்றும் இவர் அரசுக்கு தான் கடும் சவாலான நபராகவும் தொடர்ந்தும் எரிச்சல் ஊட்டும் நபராகவும் உலகுக்கு அரசை அம்பலப்படுத்துவதில் தீவிர அக்கறை காட்டி வந்தவராகவும் இருந்தார். அதனால் தொடர்பு சாதனவியலாளர்கள் எதிர்க்கட்சியினர் மற்றும் தமது அரசை விமர்சிக்கும் கண்டிக்கும் அனைத்து சக்திகளையும் வேட்டையாடி வரும் அரச நடவடிக்கையின் ஒரு அங்கமே குமாரின் படுகொலை என்றும் தென்னிலங்கை தமிழ் ஊடகங்கள் கூறி வருகின்றன. புலம் பெயர் நாடுகளிலுள்ள வானொலிகள் மற்றும் ஏனைய ஊடகங்கள் அமைப்புகள் என்பனவும் இதே வகையான கருத்துக்களையே பிரச்சாரம் செய்து வருகின்றன. அதே வேளை புளொட் மற்றும் இ.பி.டி.பி. இயக்கம் போன்றன இதனை புலிகளின் செயலாக எதிர்ப்பிரச்சாரம் செய்து முழு சம்பவத்தையும் முடிமறைக்கவும் திசைதிருப்பவும் முயற்சி செய்கின்றன. ஆனால் இப்பிரச்சாரங்கள் எல்லாமே அரசுக்கும் புலிகள் இயக்கத்தும் சாதகமாகவும் எதிராகவும் பயன்படுத்த மட்டுமே பயன்படுமே ஒழிய இவை உண்மையான அரசியலை விளங்கிக் கொள்ள பயன்படப் போவதில்லை. இப்படுகொலையின் பின்னால் அரசு இருப்பதாகக் கூறுவது எமக்கு வசதியானதும் சாதகமானதும் தான். ஆனால் இலங்கையில் தற்போது நிலவும் சுழலில் வேறு நிலமைகளையும் கவனத்திற்கொண்டாக வேண்டும். ஏனெனில் குமார் வெறும் சிறி லங்கா அரசுக்கு மட்டும் எதிரியாக இருக்கவில்லை. அவர் ஒட்டுமொத்த சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கும் எதிரியாக இருந்தார்.

இலங்கையில் கடந்த முன்று வருட காலமாக தலைதூக்கி வரும் பாசிச இயக்கமான சிங்கள வீர விதான இயக்கம் தொடர்ச்சியாக குமாரை கண்காணித்தும் அவரைக் கண்டித்தும் வந்ததுடன் குமாருடன் தொலைகாட்சி நிகழ்ச்சி பலவற்றில் விவாதம் செய்திருந்தனர். அந்த விவாதங்களிலெல்லாம் குமாரின் தர்க்க நியாயங்களுக்கு முன் இடுகொடுக்க அவ்வியக்கத்துக்கு முடியாமல் இருந்தது. இந்த இயக்கத்தினர் அம்பாந்தோட்டை காலி மாத்தறை போன்ற பகுதிகளில் அவர்களின் இயக்கத்தினருக்கு ஆயதப்பயிற்சி வழங்கி வருவதுடன் கடந்த வருடம் நடந்த இரத்தினபுரி கலவரம் உட்பட தமிழ் மக்களுக்கு எதிரான பல சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்த இயக்கம். தலைமறைவு மற்றும் பகிரங்க செயற்பாடுகளில் இடுபட்டு வரும் இவ்வியக்கத்தில் பல இன்றைய மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகளும் பல அரசியற் தலைவர்களும் பல தொழிலதிபர்களும் இருக்கின்றனர். தமிழ் மக்களை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் இவ்வியக்கத்தினரின் செயற்பாடுகளுக்கு முன்னால் இலங்கையில் உள்ள எந்த அமைப்பும் இடுகொடுக்காது என்று கூறுகின்றனர். இன்று இலங்கையில் புலிகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அதற்கடுத்ததாக வேகமும் தீவரமும் மிக்க இயக்கமாக இருப்பது இவ்வியக்கம் என்பதை இலங்கையில் பல ஆய்வாளர்கள் எச்சரித்து வந்திருக்கின்றனர்.

குமார் பொன்னம்பலம் நேற்று காலை கொலை செய்யப்படுவதற்கு முன்னர் குமாரின் வீட்டுக்கு வந்த சாந்த என்ற பெயர் கொண்ட நபர் குமாரோடு சிங்களத்தில் உரையாடிவிட்டுச் சென்றதாகவும் அந்த நபர் தான் குமாரை கொலை செய்ததாகவும் குமார் கொலை செய்யப்படும் போது அவருடன் காரில் இருந்த சிறுவன் குறிப்பிட்டுள்ளான். புளொட் இயக்கத்தினரோ இந்த சாந்த என்ற பெயரை சாந்தன் என்று திரித்து ஆகவே அவன் புலிகள் இயக்கத்தவன் என்று நிறுவி புலிகளைக் கண்டித்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

குமார் தமிழர்களுக்கெதிரான பல படுகொலைச் சம்பவங்கள் கைது மற்றும் ஏனைய மனித உரிமை மீறல் வழக்குகளை இலவசமாக செய்து கொடுத்து வந்துள்ளதுடன் அதனை உள் நாட்டிலும் வெளிநாடுகுளிலும் பிரச்சாரமாக செய்து அரசையும் பேரினவாதத்தையும் அம்பலப்படுத்தி அவர்களுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர். இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தமிழ் இழத்தையும் பகிரங்கமாக ஆதரித்து வந்த ஒரே முதுகெழும்புள்ள தமிழராக இருந்தவர் அவர். அதற்கு அவரது சட்ட நிபுனத்துவமும் பணச்செல்வாக்கும் முக்கியகாணமாக இருந்தன. அவ்வப்போது அரசையும் சனாதிபதியையும் கண்டித்து அவர் விட்ட அறிக்கைகள் சந்திரிகாவை ஆத்திரமுட்டுபவையாக இருந்து வந்திருக்கின்றன என்றால் அது மிகையாகாது. கொலை செய்யப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன்னர் அவர் சனாதிபதிக்கு எழுதியிருந்த கடிதம் ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. அதன் சில பகுதிளை தருகிறோம்.

ஒருதமிழ் ஈழவன் என்ற வகையில் உங்களுக்கு எழுதுகிறேன் ஆனால் அதைவிட முக்கியமாக விடுதலைப்புலிகளின் அரசியல் தத்துவத்தின் சஞ்சலமேதுமில்லாத உறுதியான ஒரு ஆதரவாளன் என்ற வகையிலும் அந்த நம்பிக்கையுடன் தெற்கில் வாழும் ஒருவன் என்ற வகையிலும் இதைஎழுதுகிறேன். உங்கள் பேச்சு சமாதானம் என்ற சொல்லினால் நிரம்பிவழிகிறது, ஆனால் உங்களது பேச்சின் உள்ளடக்கமும் தொனியும் எந்த வகையிலுமே இணக்கப்போக்கையோ சமாதானத்தையோ சமிக்கை காட்டுவதாக இல்லை.

நீங்கள் இந்த வகையாக சொற்சிலம்பம் ஆடுவதில் ஈடுபடுகின்றீர்கள் ஏனென்றால் அது உங்களைப்பாதிக்க நேரிட்ட காரணத்தால். தமிழ்ஈழத்திலே ஆணிரக்கணக்கான விதவைகளுக்கு சில குறிப்பிட்ட இரவுகள் அவர்களது சொந்த வாழ்வில் தாங்கள் ஆயதபடைகளின் பிரதம தளபதி என்ற வகையில் உங்கள் நடவடிக்கைகளால் உருவான இருளின் கரங்களால் தொடரப்பட்ட இரவுகளாக அமைந்ததை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?

விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்ட நீங்கள் விரும்புகிறீர்கள். தயவு செய்து அதை உங்களால் முடிந்தால் அதை செய்யுங்கள், அத்துடன் இந்த நாட்டில் நிரந்தர சமாதானத்திற்கான சகல வாய்ப்புகளுமே அடியோடு அற்றுப்போய்விடும் .

தமிழ்ஈழவர் மாத்திரமல்ல மலையகத்தமிழ் மக்களும் கூட உங்களை விரும்பவில்லை என்பது மாத்திரமல்ல உங்களை நம்பவும் தயாராக இல்லை. உங்களிடமிருந்து ஒரு அரசியல் தீர்வை விரும்பவும் இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன. நிரந்தர சமாதானத்தைக் காண்பதற்கு விரும்புவதாக நீங்கள் காட்டும் பாசாங்குகள் மீதான ஒரு தீர்ப்பே இது.

எதிரி இந்த மண்ணில் சுதந்திரமாக நடமாடுவதை வெகுதெளிவாக காண்பதாக நீங்கள் கூறியிருக்கிறீர்கள். வெறுப்புணர்வுதான் அந்த எதிரி என்று கூறியிருக்கிறீர்கள். இல்லை இந்த நாட்டில் நீங்கள் காணும் எதிரிகள் தமிழர்கள் தான்.

ஆண்டவனுக்கு நன்றி சொல்லவேண்டும் தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் உங்களை எதிரியாகவே கருதுகிறான், தேர்தல் முடிவுகள் அதை துல்லியமாக்குகின்றன.

உங்கள் மீதோ அல்லது உங்கள் தீர்வுப்பொதிகளிலோ தங்களுக்கு அக்கறை இல்லை என்பதை தமிழர்கள் எந்தவிதமான சந்தேகத்­திற்கு இடமில்லாதவகையில் வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

உண்மையில் தமிழர்கள் தன்மானமுள்ளவர்களாக இருந்தால் உங்களால் கொடுக்கப்படும் எதையம் அவர்கள் விரும்பமாட்டார்கள். எதற்காக அவர்கள் அவ்வாறு செய்யவேண்டும்.

தமிழர்களும் சிங்களவர்களும் தனித்தனியான பிராந்தியங்களில் வாழ்ந்து தங்கள் தங்கள் அலுவல்களை தாங்களே பார்க்ககூடியதாக இருந்தால் மாத்திரமே இருதரப்பினரும் இத்தீவில் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழமுடியும் என்பதே எனது உறுதியான அபிப்பிராயமும் நம்பிக்கையுமாகும்.
அத்தகைய ஏற்பாடு ஒன்று மாத்திரமே நீங்கள் உங்கள் உரையில் குறிப்பிட்ட சமாதானம் தொடர்பான மகத்தான மேற்கோள் பொருத்தமானது என்பதை நிரூபிக்கும்.

சமாதானம் என்பது ஒருபோராட்­டம். சமாதானம் என்பது ஒருபொ­ழுதுமே வெறுமனே கொடுக்கப்படுவ­தில்லை, ஒருபோதுமே அபகரிக்கப்­படுவதும் இல்லை. மற்றவர்களுக்கு மதிப்பளிப்பதன் மூலமும் தைரி­யத்தின் முலமுமே சமாதானம் வெற்றி கொள்ளப்படுகிறது சமாதானத்­தைக்­காண ஒவ்வொருவரிடமும் விழிப்புணர்வும் பற்றுறதியும் தேவை.

இவ்வாறு அந்த கடிதத்தில் இருந்தது.

எவ்வாறு இருந்த போதும் குமாருக்காக கண்ணீர் வடிக்கும் பல லட்சக்கணக்கான தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இது தான். இதனை அரசு செய்திருந்தாலும் ஏனைய பேரினவாத சக்திகள் செய்திருந்தாலும் இப்படுகொலை எமக்கு உணர்த்தும் சமிக்ஞை பயங்கரமானது என்பது தான். இலங்கையில் நசுக்கப்படும் தமிழ் மக்களுக்கும் நசுக்கப்படும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இயங்கும் நபர்களுக்குமான எச்சரிக்கைதான் இது. ஆக குமாரின் படுகொலை ஒரு முடிவல்ல. அது ஒரு தொடாச்சியின் அங்கம்.

யூன-2000 தமிழ்நாதம்

0 comments:

தளத்தின் உள்ளடக்கம்.

இந்தத் தளத்தில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உருவாக்கம், விரிவாக்கம், கருத்தாக்கம், அதன் வடிவம், அதன் நிறுவனமயமாக்கம், அதன் திசைவழி குறித்து சரிநகர், ஆதவன், நிகரி, விடிவு, பறை, இனி போன்ற பதிப்புகளில் வெளிவந்த என்.சரவணனின் கட்டுரைகள் மறுபிரதியிடப்படுகின்றன.

சுவடி

Template by - Abdul Munir - 2008 - layout4all