புனைவுகளும் பாசிசமும்!
”...இது சிங்கள பௌத்த நாடு, ஏனையோர் வந்தேறுகுடிகள், நாட்டைத் துண்டாடி அபகாpக்கப் பார்க்கின்றார்கள், தமிழ்நாட்டோடு இணைத்து எதிர்காலத்தில் பரந்த தமிழ்நாடாக முழு இலங்கையையும் ஆக்கப்போகிறார்கள், தமிழர்களுக்கு நாடு உண்டு, சிங்களவர்களுக்கு உலகில் எந்த நாடும் இல்லை. மிச்சமுள்ள இதனை சூறையாட விடக்கூடாது, தமிழீழம் அமைந்தால் சிங்களவரின் நிலத்தில் மூன்றில் ஒரு பகுதியும், கடற்பகுதியில் 6இல் 4 பகுதியும் பறிபோய்விடும், தமிழ், முஸ்லிம்கள் எல்லோரும் சேர்ந்து சகல தொழிற்துறையையும் கைப்பற்றியிருக்கிறார்கள். சிங்களவர்களை சுரண்ட இனியும் அனுமதியோம், இந்திய வம்சாவழி எனும் ”கள்ளத்தோணிகள்” நாட்டின் செல்வத்தை சுரண்டுபவர்கள், அதில் பலர் சிங்களவரை சுரண்டி இந்தியாவுக்கு சொத்துக்களை கொண்டுபோய் குவிப்பவர்கள். இவர்கள் எல்லோரும் கணக்கு வழக்கில்லாமல் பிள்ளைபெற்று இனத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள், சிங்களவர்கள் மீது திட்டமிட்டு மலட்டுத்தனத்தை உருவாக்குகிறார்கள். சகல அரசாங்க தொழிலையும் கைப்பற்றி இருக்கிறார்கள். இவர்களுக்காக சிங்களவரின் சொத்துக்கள் முழுதும் அரசால் செலவளிக்கப்படுகிறது....”
இந்த புனைவுகள் அடிப்படையானவை. இதனை ஆதாரமாகக் கொண்டு பல்வேறு போலிப் பிரச்சாரங்கள், புனைவுகள், கற்பிதங்கள், வரலாற்றுத் திரிபுகள் என்பவை தொடர்ச்சியாக செய்யப்படுகின்றன. இவை திருப்பிச் திருப்பிச் சொல்லப்படுகின்றன. இவற்றால் சிங்கள மக்களை பீதியுறச் செய்து தேசியவெறி ஊட்டப்படுகிறது. இவை இன்று உண்மை என நம்பவைக்கப்பட்டுள்ளன. கிரெம்ஷியின் அர்த்தத்தில் சொன்னால் ”மக்களின் நியாயமான குறைகளையும், பயங்களையும் தங்களுக்கு சாதகமான வகையில் வார்த்தை ஜாலங்களால் திருப்பி விடுவது பாசிசத்திற்கே உரித்தான அம்சமாகும்.” இதனடிப்படையில் பாசிசத்தின் அடிப்படையான அம்சமான இனத்தூய்மை, அதனடிப்படையில் அமைந்த ஏனைய இனங்களை இனச்சுத்திகரிப்பு செய்தல், இனக்களையெடுப்புக்கு துணிதல், இனப்படுகொலைகளை நியாயப்படுத்தல், இனக்கலப்பு செய்து எதிரி இனத்தின் மீது தூய்மையை கெடுத்தலும், தம்மின பெண்கள் மீது இனப்பெருக்கத்துக்கு நிர்ப்பந்தித்தலும், மற்றைய இனங்கள் மீது இனப்பெருக்கத்துக்கான வாய்ப்புகளை அகற்றுதல் என்பன போன்றவற்றை இங்கு படிப்படியாகக் காண்கிறோம்.
”மண்ணின் மைந்தர்கள்” என்கிற கருத்தாக்கம், அன்றைய ஜெர்மன், இத்தாலி, ஜப்பான், இன்றைய இஸ்ரேல் உள்ளிட்ட பல உதாரணங்களைக் காணலாம். இலங்கையில் கூட வெறும் இனவாத சக்திகள் மாத்திரமல்ல அரசாங்கமும் கூட படைக்கு ஆட்திரட்டுகின்ற போது இதே சுலோகத்தைத் தூக்கிப்பிடித்தது நினைவிருக்கலாம். பிற்போக்குத் தலைமைகளைக் கொண்ட தேசியவாதத்தின் அதீத தூய்மைவாதம் பாசிசத்தில் போய் தான் முடிந்திருக்கிறது என்பதற்கு உலகில் பல வரலாறுகள் உண்டு. ”..தங்களை தேசியவாதிகளாகவும், ஜனநாயகவாதிகளாகவும், பெரும்பான்மையோரை பிரதிநித்துவப்படுத்துவதாகவும், சிறுபான்மைகள் நாட்டிற்கு வெளியிலிருந்து வந்தவர்களென்றும், தேசத்தின் கலாசாரத்தை சிதைப்பவர்கள், துரோகிகள், அவர்கள் ”மண்ணின் மைந்தாகள்” தான் மண்ணைக் காக்க வேண்டுமென்றும் எல்லாவித பழமைவாதக் கருத்துக்களையும் பரப்பி பெண்களுக்கு பாரம்பரியம் வரையறுத்த இடத்தினை திணித்து பாசிசத்தை நிலைநிறுத்துவார்கள்...” என்கிறார் கிரெம்ஷி
மேலும் கிரெம்ஷி கூறுகிறார் ”..பாசிஸ்டுகள் தங்களின் சக்தியையும், ஸ்தாபனத் திறமையையும் பறையடித்துக்காட்டி ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியை தங்களுக்கு ஆதரவளிக்குமாறு செய்து விடுவார்கள். அதிலும் மிதவாத ஆளும் வர்க்கத் தலைமை நம்பகத் தன்மையை இழந்து வருகிறதோ அல்லது ஸ்திரமற்றதான சூழல் உருவாகி வருகிறதோ, அந்த இடைவெளியை பாசிஸ்டுகள் கைப்பறற்றிவிடுகிறார்கள்....இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் குழப்பியடிக்கப்பட்டு பலவீனப்படும் போது பாசிசம் தலைதூக்கிவிடுகிறது...”
”...வர்க்க எல்லைகளையும் தாண்டி கணிசமான பகுதி மக்கள் பாசிசத்தை ஒப்புக்கொண்டது ஏன்..” என இத்தாலிய அனுபவத்திலிருந்து கிரெம்ஷி எழுப்பிய கேள்வி இங்கும் பொருந்தும். ”...எப்போதெல்லாம் வளமான சிந்தனைகளும் ஜனநாயகத் தன்மைகளும் முடங்குகிறதோ- எப்போதெல்லாம் முதலாளித்துவ தேசியவாதம் தோல்வியைத் தழுவுகின்றதோ- அப்போது பழமைவாதம் பாசிசத்துக்கான தளத்தை உருவாக்கிக் கொள்கிறது..” என்பதுடன் ”...பாசிசம் பெருமுதலாளிகளால்லோ நிலப்பிரபுக்களாலோ உருவாக்கப்படுவதல்ல. குட்டி பூர்சுவாக்களாலும் வியாபாரிகளாலும் உருவாக்கப்படுவது..” என்கிறார்.
0 comments:
Post a Comment