Saturday, January 31, 2009

இன்டெர்நெட் (Internet) வரை பாசிசம்



என்.சரவணன்
சிங்களப் பேரினவாதம் எடுத்து வரும் நவ பாசிச வடிவம் குறித்த உரையாடல் தற்போது மேலெ­ழுந்துள்ளன. இன்று சிங்கள வீரவிதா­னவை மையப்படுத்தி ஏனைய சகல இனவாத அமைப்புகளும் அதனைச் சுற்றி வலைப்பின்னல்களாக வகுத்தி­ருப்பதையும், அணிவகுத்து வருவது குறித்தும் பேசி வருகிறோம். அது சகல தளங்களிலும் தன்னை நிறுவி வருவ­தையும், ஊடுறுவி வருவதையும் கூட வெளிப்படுத்தி வருகிறோம்.

இன்றைய நிலையில் சித்தாந்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்த ஊடகங்­களைக் கைப்பற்றல் என்பது கட்டாய நிபந்தனையாக ஆகியிருக்கிற நிலை­யில் பாசிசம் அதனையும் கவனமாக கைப்பற்றத் தொடங்கியிருப்பதையும் நேரடியாகக் கண்டு வருகிறோம். அந்த வகையில் இணையம் (இன்டர்நெட்) தளங்களை ஏற்படுத்தி தமது பிரச்சாரங்களையும், சித்தாந்தங்­களை­யும் நிலைநாட்டுவது என்கிற விடயத்­தில் பேரினவாதமும் மிக நுணுக்கமாக தொழிற்பட ஆரம்பித்திருக்கிறது.

இன்று சிங்கள வீரவிதான இயக்­கத்­துக்கு என இணையத்தளம் (web site) உண்டு. scc.org எனும் இந்த இணையத் தளத்தில் தேசிய செய்திகள், கட்டுரைகள், வீரவிதான செய்திகள், அறிக்கைகள், இணைப்புகள் (links) தமக்கு சார்பான அல்லது தமது துறை­யைச் சார்ந்த இணைத்­தளங்­களுக்கு இது அழைத்துச் செல்லும்) இதனைத் தவிர சிங்கள வீரவிதானவின் இங்கி­லாந்துக் கிளை மற்றும் ஜெர்மன் கிளைகளின் வெப் தளத்திற்குமான இணைப்புகளும் இந்த தளத்தில் இருக்கின்றன. www.sinhala.de/ எனும் விலாசத்தில் ஜேர்மனியக் கிளையின் தளத்திற்குச் செல்லலாம். வீரவிதான­வின் தோற்றம் அவற்றின் வடிவம், மற்றும் அவற்றின் செயற்பாடுகள், நிலைப்பாடுகள் என்பன குறித்து அவை பகிரங்கமாக முன்வைப்பன மட்டுமே இந்த தளத்தில் காணலாம். மேலும் பயங்கரவாத ஒழிப்பு தேசிய இயக்கத்­துக்கும் (NMAT) தமக்கும் இடையில் எந்தவிதத் தொடர்பும் கிடையாது என்று கூறி வரும் வீரவிதானவின் வெப் தளத்தில் NMATயின் வேலைத்திட்டம் செயற்­பாடுகள் என்பனவற்றையும் நாம் காணலாம். சமீபத்தில் சமவாய்ப்புச் சட்டம் குறித்து அமைச்சர் அஷ்ரப்பின் மீது வீண் பழியைச் சுமத்தி செய்யப்­பட்ட பிரச்சாரத்தோடு சம்பந்­தப்பட்ட அறிக்கைகளையும் இதில் காணக் கிடைக்கின்றன.

கடந்த நான்கு வருடங்களாக தமிழ்த் தேசப்போராட்டத்துக்கான சர்வதேசப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டதில் இணையத்திற்கு முக்கிய பாத்திரம் உண்டு. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பல்வேறு இணையத் தளங்கள் இருக்கின்றன. சில இணை­யத்­தளங்கள் வேறு ஆதரவு அமைப்பு­களைக் கொண்டு மேற்கொள்ளப்­படுகின்றன. உடனடிச் செய்திகள், தனித் தனியான தலைப்­புகள் அமைந்த செய்திகள், கட்டுரைகள், விசேட குறிப்­புகள், படங்கள், பாடல்­கள், கவிதைகள் என பலவற்றையும் உள்ளடக்கிய இணையத்­தளங்களை உலகம் முழுவ­தும் எங்கிருந்தும் காணக் கிடைத்து வருகிறது.

எந்த செய்தித் தணிக்கையை ஏற்படுத்தினாலும் இதனை தணிக்கை செய்ய அரசால் முடியாத நிலையில் இதற்கான ஒரே வழி எதிர்ப்பிரச்சாரம் செய்வதே அதற்கு தாமே சில இணைத் தளங்களை ஏற்படுத்தியாக வேண்டும். இந்த சவாலான நெருக்­கடிக்குள் சிக்கிய நிலையில் சமீபத்தில் தான் தகவல் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு என்பன தமக்கான இணைத்தளங்களை நிறுவிக் கொண்டன என்றபோதும் அவை போதி தகவல்களை உள்ளடக்கி­யவை அல்ல. மேலும் அவற்றை கணி­ணியில் இறக்க (download செய்ய) எடுக்கும் நேர­மும் அதிகம். இவ­ற்றை ஒரே தளத்திற்கு சென்று பார்வையிட www.lacnet. எனும் தளத்­திற்குச் செல்லாம். அதிலிருந்து மேற்படி தள­ங்களுக்குச் செல்­லலாம்.

இப்படியான நிலை­யில் தான் பேரினவாத சக்திகளுக்கு தமிழீழ போராட்டம் குறித்த எதிர்ப்­பிரச்சாரங்களை நடத்த இணை­யத்தளங்­களை ஏற்படுத்தும் தேவை ஏற்பட்டது. இப்படியான நிலையில் முதன் முதலில் பேரின­வாதத்தரப்பி­லிருந்து தோன்றிய இணையத் தளம் நளின் டி சில்வாவின் www.kalaya.com எனும் இணையத்­தளம். இந்த தளத்தில் நளின் டி சில்வா ஐலண்டில் எழுதி வரும் கட்டுரைகள் பத்திகள், திவய்ன பத்திரிகையில் வெளியான கட்டுரைக­ளின் ஆங்கில வடிவம் என்பன கிடைக்கின்றன.

இதனைத் தவிர www.spur.asn.au. எனும் தளத்தை முக்கியமான தளமாகக் கொள்ளலாம். இது அவுஸ்திரேலி­யாவிலிருந்து இயக்கப்படுகிறது. இத் தளத்தில் புலிகளுக்கெதிராக ஆங்கிலப் பத்தி­ரிகை­களில் வெளிவரும் கட்டு­ரைகள் எல்லாவற்றையுமே அடக்கி­யுள்ளனர். அதை விட சிங்களக் கட்டு­ரைகளின் ஆங்கில வடித்தையும் காணலாம். இத்தளம் சிங்கள வீரவி­தானவின் தளத்துக்கு முன்னமேயே தொடக்கப்­பட்டுவிட்டது. ஏகப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய இத்தளத்தில் இது வரை புலிகளால் சிவில் மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்க­ளின் அட்டவணையொன்று உள்ளடக்­கப்­பட்டிருக்கிறது. அதில் 132 சம்ப­வங்கள் அடக்கப்பட்டுள்ளன. 1984 இலிருந்து 1999 செப்டம்பர் வரை அதில் உள்ளடங்குகிறது. சம்பவம் நடந்த நாள், இடம், கொல்லப்பட்டோர், காய­மடைந்தோர். சொத்துக்கள் என்பன உள்ளிட்ட விடயங்கள் அட்ட­வணைப்­படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த செப்டம்பர் மாதம் கோணகல கிராமத்தில் கொல்லப்பட்ட சம்பவம் பற்றிய முழுமையான கட்டுரை­யொன்று பிரசுரிக்கப்­பட்டிருப்பதுடன் புலிகள் பற்றியும், புலிகள் சர்வதேச பயங்கரவாதிகளாக இருக்கிறார்கள் என்பதற்கான அமெரிக்க அரச திணைக்கள அறிக்கைகள் தொடக்கம் வேறு நாடுகளின் அறிக்கைகள், சர்வ­தேச மன்னிப்புச்சபை அறிக்கைகள் என்பனவற்றையும் அதில் உள்ளடக்கி­யிருக்கிறார்கள். கோணகல சம்பவம் பற்றி பத்திரிகைகளில் வெளியான 60 கட்டுரைகளின் தலைப்புகளை ஒரே பார்வையில் காட்டியிருக்கிறார்கள். இதிலுள்ள முக்கியத்துவம் என்ன­வெனில் அந்த ஒவ்வொரு கட்டுரை­யையும் மவுஸால் கிளிக் செய்து கிளிக் செய்து 60 கட்டுரைகளையும் முழுமை­யாகப் பார்க்கலாம் என்பது தான். அது தவிர ராஜீவ் கொலை பற்றிய கட்டு­ரைகள், இது வரை நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகள் என்பன பற்றியும் கட்டுரைகளும் உள்ளடங்குகின்றன.

இதனை விட www.sinhaya.com எனும் தளமும் www.Lankaweb.com எனும் தளமும் www.voice of lanka.net அதுதவிர www.sinhalanet.org எனும் தளமும் www.members.tripod.com/ spsl/massac.htma மற்றும் www. Lankaweb.com/news/latest.html என்பன போன்ற இணையத்தளங்க­ளும் இருக்கின்றன.

இது தவிர மக்கள் ஐக்கிய முன்ன­ணியின் www.mep.net எனும் தளமும் இருக்கின்றன. இதில் அவர்களின் அரசியல் கொள்கை, வேலைத்திட்டம், என்பனவற்றைக் காணக்கிடைக்கும்.

இந்த வெப்தளங்களின் முக்கிய இலக்காக இருப்பது புலிகளை அம்பலப்படுத்துவது என்பது. புலிகள் பயங்கரவாதிகள். ஆகவே இது பயங்­கரவாதப் போராட்டம் என்பதை நிறுவு­வதற்கான தளங்கள் இவை. புலிகளை பயங்கரவாதிகளாக சித்திரி­ப்பதன் மூலம் அவர்கள் நிறுவ வருவது ஒட்டுமொத்தத்தில் தமிழர்கள் இனவாத யுத்தத்தை நடத்துகிறார்கள் என்றும், சர்வதேசத்துக்கே ஆபத்தை விளைவிக்­கக்கூடிய சக்திகள் என்றும், சிங்கள இனச்சுத்திகரிப்பைச் செய்து வருகி­றார்கள் என்றும் ஆகவே சர்வதேச ஆதரவை அனைத்து நாடுகளும் விலக்கிக்­ கொள்ளும்­படியும், தமக்கு அந்த ஆதரவை வழங்கும்படி கோரு­வதுமே இந்த பிரச்சாரங்களின் சாரா­ம்சமாக இருக்கின்றன. இந்த இணை­யத்தைப் பொறுத்த வரையில் பாசிசம் காலூன்றியது, உள்நாட்டவர்களை இலக்காக வைத்தல்ல. அது சர்வதேச சமூகத்தை இலக்காக வைத்தே என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் நுணுக்­கமாகவும், திட்டமிட்டும் இவை தயா­ரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இவை இன்று பேரினவாத அமைப்புகள் அனைத்தும் வீரவிதானவைச் சுற்றி ஒன்றிணைக்கப்பட்டு வருவதைப்போ­லவே இந்த இணையத் தளங்களும் வீரவிதானவுக்கு பக்கபலமாக ஒன்றிணைவதைக் காண முடிகிறது.

இன்றைய பேரினவாதத்தின் நவ வடிவம் என்பது பாசிசம் தான் என்­பதை இன்று சகலரும் உணரத்தொட­ங்கியிருக்கிற நிலையில் அவற்றின் சாமர்த்தியமான, நுணுக்க­மான அணுகு­முறைகள் குறித்து விழிப்­பு­டனும், கண்காணிப்புடனும் இருப்ப­தும் அவை குறித்த எச்சரிக்கைகளை ஏற்படுத்து­வதும், அதன்படி அதிலிருந்து விடுபட எத்தனிப்பதும், அதற்காக அணிதிரள்­வதன் அவசியமும் அதிகரித்து வருகி­ன்றன என்பதை சொல்லித் தெரியத் தேவையில்லை.

0 comments:

தளத்தின் உள்ளடக்கம்.

இந்தத் தளத்தில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உருவாக்கம், விரிவாக்கம், கருத்தாக்கம், அதன் வடிவம், அதன் நிறுவனமயமாக்கம், அதன் திசைவழி குறித்து சரிநகர், ஆதவன், நிகரி, விடிவு, பறை, இனி போன்ற பதிப்புகளில் வெளிவந்த என்.சரவணனின் கட்டுரைகள் மறுபிரதியிடப்படுகின்றன.

சுவடி

Template by - Abdul Munir - 2008 - layout4all