Friday, January 30, 2009

சிங்கள பாசிச சக்திகளின் திரிபீடக வியூகம்

என்.சரவணன்

தற்போதைய இலங்கை சூழ்நிலை குறித்து எவராலும் எதிர்வுகூறமுடியாத நிலைமை தோன்றியிருக்கிறது. ரஜதந்திர உறவுகள், அரசியல் கட்சிகள் நிலைப்பாடுகள், போர் தந்திரோபாயங்கள், புத்திஜீவித்துவ கணிப்புகள், புலனாய்வுத்துறை ஆராய்வுகள் எதனையுமே உறுதியாக கூறிவிடாதபடி வேகமாக நிலைமைகள் மாறி வரும் காலம் வரலாற்றில் நெருக்கடி மிகுந்த காலங்களில் தான் காணமுடியும்.

வடக்கில் புலிகள் கண்ட வெற்றிகளும், அரசு கண்ட தோல்விகளும் துரிதகதியில் இந்நிலைமைகளை மாற்றங்காணச் செய்ததோடு பல சக்திகளை அம்பலப்படுத்தியுள்ளது.

பேரினவாத சக்திகள் யு திருப்பம் (U turn) என்று வர்ணிக்கப்படும் அளவிற்கு தங்களது தந்திரோபாயங்களை மாற்றிக்கொண்டுள்ளனர். இந்தியாவை வரலாற்று எதிhpயாக சித்திhpத்து வந்த போpனவாதம் தமிழ் மக்களின் போராட்டத்தை எதிர்க்க ”இந்தியவிஸ்தாpப்புவாதம்”, ”ஈழத்தை இணைத்த தமிழ்நாடு”, ”இந்தியத் தலையீடு”, ”இந்திய ஆக்கிரமிப்பு” போன்ற போன்ற காரணங்களை புனைந்து, பரப்பி வந்த பேரினவாதம் இந்தியாவை நம்பி தலையீட்டை அல்லது உதவியை நாடி நிற்கிறதென்றால் அதனை குட்டிக்கரணம் என்று தானே சொல்லலாம்.

இந்தியா தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பாக கொண்டிருக்கிற மூலோபாயங்கள் அல்லது அரச கொள்கைள் மாறியதில்லை. அது தமிழ் மக்களின் போராட்டதிற்கெதிரான நிலைப்பாட்டில் கொண்டிருக்கிற உறுதியான கொள்கையை சமகால நிகழ்வுகளைக் கொண்டு கூட உறுதி செய்யலாம். பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் சக்திகளும் ஈழப்போராட்டத்திற்கு (ஏன் விடுதலைப் புலிகளுக்கு என்று கூட சொல்லலாம்.) ஆதரவான சக்திகளாக இருந்த போதும் அவர்களால் இந்தியாவின் அரச கொள்கையை மாற்றும் வல்லமை அவர்களிடத்தில் இல்லை. அவர்களால் இந்திய அரச கொள்கையை கட்டுப்படுத்த முடியாதென்பதையும் மாறாக அரச கொள்கையே அவர்களையும் கட்டுப்படுத்தி வருகிறது என்பது தெட்டத் தெளிவாக வெளிப்பட்ட விடயம். இந்தியா மூலோபாயங்களை ஒரு வைகோவோ அல்லது வாஜ்பாயோ மாற்றிவிடமுடியாது என்பதை கண்முன் காணகிடைத்த சந்தர்ப்பம் இது. இந்திய வரலாற்றில் கூட தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவான இந்தளவு சக்திகளின் தலைமையை கொண்ட அரசாங்கத்தை கண்டிருக்க மாட்டோம் அப்படியிருந்தும் ஒரு யுத்த முனையில் தாங்கள் ஆதரவு வழங்கும் போராட்திற்கு எதிரான எதிரிக்கு உதவி வழங்க முன்வந்தது எப்படி? இதனை நாம் கவனமாக நோக்க வேண்டும்.

இலங்கை காஸ்மீர்பிரச்சினையில் இந்தியாவுக்கு ஆதரவாக இல்லை. அது போல இலங்கை பாகிஸ்தானிய ராதந்திர உறவுகள் இந்திய உறவுகளைக் காட்டிலும் பலமானது. போருதவிகள் கூட பாகிஸ்தானிடமிருந்து தொடர்ந்து இலங்கை பெற்று வருகிறது. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.க்கு இலங்கை உதவி வருவதாகவும், இந்தியாவில் ஐ.எஸ்.ஐ யினால் நடத்தப்படுவதாக நம்பப்படும் பல சதிவேலைகளுக்கு இலங்கை பின்னணியில் இருப்பதாக இந்திய உளவு ஸ்தாபனங்கள் நம்பி வருகின்றன. சேதுசமுத்திர திட்டம் தொடர்பாக இலங்கை காட்டி காட்டி வந்த எதிர்ப்புகள் இந்தியாவுக்கு எரிச்சலை ஊட்டியவை. இந்திய அமைதிகாக்கும் படையை விரட்டியதில் இலங்கை தொடர்பாகவும் சிங்கள மக்கள் தொடர்பாகவும் இந்தியா கொண்டிருக்கும் அதிருப்திகள் நீங்கவில்லை. இந்திய மீனர்வகள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவது அதிகரிக்கப்படுவது குறித்து ஆத்திரமடைந்து வந்துள்ளது. இப்படி இலங்கைக்கு எதிராக இந்தியா கொண்டுள்ள எதிர்ப்புணர்வகளை சம்பவங்களாக அடுக்கிக்கொண்டே போகலாம். அப்படியிருந்தும் ஏன் இந்தியா இலங்கைக்கு ஆதரவு வழங்க முன்வந்தது. வடக்கில் அடக்குமுறை இராணுவமொன்றுக்கு உதவ முன்வந்துள்ள இந்தியா வடக்கில் மருந்திண்றி, உணவின்றி, உயிருக்கு, உடமைகளுக்கு உத்தரவாதமின்றி தவிக்கும் மக்களுக்கு உதவமுடியாமல் போனது ஏன்? எனவே இந்தியா இந்தியா தான். இந்தியாவை நம்பும் கனவான்கள் இன்னமும் தமிழ் தரப்பில் இறுக்கமாகவே உள்ளன.

தற்போதைய பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலை அரசு நடைமுறைப்படுத்துகிறது என்றால் அது மிகையில்லை. அரசு எங்கிருந்து தொடங்குவது என்றிருக்கையில் சமயத்தில் மகாசங்கத்தினர் இந்தியத்தூதுவராலயம் சென்று தூதுவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது அரசுக்கு சாதகமாக அமைந்தது. முழு நாடுமே யுத்தமயப்படுத்தப்பட்டு வரலாறு காணாத அடக்குமுறை சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் எதிர்ப்புகள் எங்கே கிளம்பின. ஓரிருவர் புலம்பிக்கொண்டிருக்க மட்டுமே முடிகிறது. சிங்களப், ஆங்கில தினசரிப் பத்திரிகைகள் அனைத்தும் பத்திரிகைத் தணிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. அதனை நியாயப்படுத்துகின்றன. வெளிநாட்டு உதவியை அனைத்து சக்திகளும் வரவேற்கின்றன. ஜே.வி.பி. கூட சத்தமின்றி இருக்கின்றது. 1987இல் இந்தியப் படை வந்த போது அதனை எதிர்த்து கலகம் செய்த சிங்கள மக்களுக்கு ஜே.ஆர் ”பேயிடம் கிடைக்காவிட்­டால், பேயின் பாட்டியிடமாவது உதவிபெறுவேன். வரலாறு அதற்கு பதில் தரும்!” என்றார்.

பிரேமதாசா பதவிக்கு வந்ததில் அவர் இந்திய எதிர்ப்பில் காட்டிய தீவிரம் முக்கியமானது. இன்று ஜே.ஆரின் நியாயங்கள் சிங்களவர்க­ளால் உயிர்ப்பிக்கப்படுகின்றன.

எழுச்சியுற்றுவரும் பேரினவாதத்­தின் தலைமை சக்தியாக இருக்கும் சிங்கள வீரவிதானவின் god father என்றழைக்கப்­படும் சம்பிக்க ரணவக்க இரு மாதங்க­ளுக்கு முன் லங்காதீபவில் கும்பகர்ண எனும் பெயரில் எழுதிவரும் பத்தியில் இந்தியா பற்றிய பார்வைகளை மாற்ற வேண்டிய அவசியத்தையும், இந்தியாவை கவனமாக கையாள்வதற்கூடாக உறவுகளை பலப்­படுத்தவேண்டுமென்றும், தமிழ் போராட்டத்­திற்கு எதிரான அதன் நிலைப்பாட்டை சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பட்ட போது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அதன் அர்த்தத்தை இப்போது தெளிவாகக் காண முடிகிறது.

நெருக்கடி நிலையில் வடக்கில் சிக்­குண்டு கிடக்கும் படையினரை பாதுகாப்­பாக வெளியேற்றவும், அவர்களுக்கான சில மனிதாபிமான விநியோக உதவிகளையுமே இலங்கை அரசு இந்தியாவிடம் கேட்டிருந்­தது. 8ஆம் திகதி விடுதலைப் புலிகள் ”பாதுகாப்பாக படையினர் வெளியேற யுத்த நிறுத்தம் செய்வதாக ஒப்புக்கொண்ட பின்னர், சிங்கள அரசு அதனை நிராகரித்­தற்கு உண்மையில் இந்தியா தகுந்த பதிலளித்திருக்க வேண்டும். படையினர் பாதுகாப்பாக வெளியேற உத்தரவாத­மளித்தபின்பும் இந்தியாவின் உதவி ஏன் அவசியப்படவேண்டும் என்கிற கேள்வியை கேட்க ஒருநாதியும் இல்லையென்றாகி விட்டது.

ஈழப்போராட்டத்தின் மீது தமிழ்நாட்டு மக்கள் கொண்டுள்ள ஆதரவினை தமது அரசியல் பிழைப்புக்காகப் பயன்படுத்தி வரும் தமிழ்நாட்டு அரசியற் கட்சிகள் இந்திய அரச கொள்கையை ”புண்படுத்­தாத ”வகையில் நடந்துகொள்வதில் கவனமாக இருக்கின்றன. விடுதலைப்புலிக­ளின் மீதான தடை நீடிப்பு தொடக்கம், ஆனையிரவு வெற்றி குறித்து தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு தடைசெய்யப்பட்டு நெடுமாறன் உள்ளிட்டதலைவர் தொடக்கம், சுவரொட்டிகளை அச்சிட்ட, ஒட்டிய தொணடர்கள் வரை கைது செய்து அடைக்கப்பட்ட சம்பவம் வரை அக்கட்சிகளின் கடைபிடித்த போக்கை இனங்கண்டாக வேண்டும்.

பிரேமதாசவின் வலது கையாக இருந்த சிறிசேனகுரேவோ இந்த நெருக்கடி நிலைமையை சமாளிக்க சார்க் அமைதி காக்கும் படையை வரவழைக்க வேண்டும் என்று கோருகிற அதே வேளை எந்த நாட்டையாவது அழைத்து புலிகளை அழித்தொழிக்க வேண்டும் எனும் கோரிக்கையை சிங்கள பேரினவாத சக்திகள் விடுத்துள்ளன. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவராலயம் தொடக்கம்? ஐரோப்பிய நாடுகளின் ராதந்திரிகள் வரை தற்போதைய நிலைக்கு தங்களின் முழு ஆதரவு வழங்க தயாரென்று உத்தரவாதமளித்த போதும் இந்தியா தான் இப்போதைக்கு நேரடியாக உதவக்கூடிய ஒரே ஒரு நாடு என்று தெரிவித்ததாக சிங்களப் பத்திரிகைகள் அனைத்தும் செய்தி வெளியிட்டிருந்தன. எனவே தான் இந்தியா முதலில் உதவிக்கு மறுத்த போதும் இந்தியாவை சீண்டவென பாகிஸ்தானிடம் இராணுவ உதியையும், இஸ்ரேலிடம் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதையும் காட்டி மீண்டும் இந்தியாவை மறுபரிசீலனை செய்ய நிர்ப்பந்தித்தது மட்டுமல்லாமல் நினைத்தபடி இந்தியாவை வழிக்கு கொண்டுவரமுடிந்தது. தென்னாசியப் பிராந்திய நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளின் தந்திரோபாயங்களுக்கு சோதனைக்காலமாக ஆய்வாளர்கள் பலர் குறிப்பிடுமளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

அது மட்டுமன்றி உலகநாடுகளின் கவனத்தையும் தற்போதைய நிலைமை தோற்றுவித்தது. இஸ்ரேல் ராஜதந்திர உறவை உடனடியாகவே ஏற்றுக்கொண்டதும்,காலம் தாழ்த்தாமல் நிபுணர் குழுவை அனுப்பி வைத்ததும், இதனை ஆதரித்து அமெரிக்கா கருத்து வெளியிட்டதும், (அமெரிக்காவின் அடியாள் எனும் பட்டம் இஸ்ரேலுக்கு உண்டு என்பது நினைவிற்கொள்ளத்தக்கது.) ரஸ்யாவும் தனது பங்குக்கு இலங்கைக்கு தாமும் உதவி வழங்குவதாக கூறி அதிகாரிகளை அனுப்பிவைத்ததும் மிக வேகமாக நடந்து முடிந்த விடயங்கள்.

இலங்கையை முழு அளவிலான போருக்கு தயார் படுத்துவது, மக்களை யுத்தமயப்படுத்துவது, உள்நாட்டிலேயே ஆயுத உற்பத்தியை தொடங்குவது, சர்வதேச ரீதியில் எந்த பேயுடனுதம் கூட்டு சேருவது என்பன எழுந்து வரும் சிங்களப் பாசிச சக்திகள் பகிரங்கமாக வெளியிட்ட நிகழ்ச்சிநிரல் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அரசு அதன் நிகழ்ச்சி நிரலை கொண்டு நடத்துகிறது. இதனைத் தான் முன்னைய கட்டுரைகளிலும் குறிப்பிட்டிருந்தோம். எதிர்வரும் காலத்தில் ஒன்றில் பாசிச சக்திகள் கையோங்கி பிரதான கட்சிகள் ஓரங்கட்டப்படும் அல்லது அதன் நிகழ்ச்சி நிரலை அரசு கையேற்கும் என்பது. அதனை இப்போது நேரடியாக களத்தில் சந்திக்கிறோம். இதே விடயத்தை புதிய விதிகளை பிரகடனப்படுத்திய அன்று பி.பி.சி.க்கு பேட்டியளித்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவும் கூறியிருந்தார்.

இனி அரசு தமிழ் மக்கள் மீது நடத்தப்போகும் நரவேட்டையை சட்டஅங்கீகாரத்துடன் கொண்டு நடத்தப் போகிறது. அபிவிருத்தி செலவுகள் யுத்தத்திற்கு குவிக்கப்பட்டு, சிங்களக் கட்சிகளை ஓரணியில் திரட்டி, அடக்குமுறைகள் வெளிவராத வண்ணம் தண்க்கையை முழு அளவில் ஏற்படுத்தி, முழு நாட்டினரது அக்கறையையும், பேரில் ஒன்று குவித்து இனஅழிப்புப் போரை கொண்டு நடத்தப்போகிறது.

எதிர்க்கட்சியோ, ஜே.வி.பி. உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகளோ கூட இந்த நிலைமைக்கு எதிராக ஏதேனும் மேற்கொள்ள எத்தனித்தால் சிங்கள மக்களிடமிருந்து ஓரங்கட்டப்படும் விதத்­தில் நிலைமைகள் கட்டமைக்கப்பட்டுள்­ளன. அதனால் தான் ரணில் பி.பி.சிக்கு வழங்கிய பேட்டியில் நாட்டை முழு அளவில் யுத்த நிலைமைக்கு கொண்டுவந்தது சரியென்றும், ஆனால் இறுதியாக தன்னோடு ஜனாதிபதி உரையாடிய சந்தர்ப்பத்தில் இதனை தன்னிடமும் கூறியிருக்கலாம் என்று கூறியிருந்தார். ரணலின் பிரச்சினை கூட தன்னிடம் கேட்டிருந்தால் தானும் சம்மதித்திருப்­பேனே, என்னை மதிக்கவில்லையே என்கிற பொருள்படத்தான் இருந்தது. அது போல அரசாங்காத்தின் பங்காளிக்கட்சியான லங்கா சமசமாஜக்கட்சியின் பொதுச் செயலாளர் பெட்டி வீரக்கோன் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்பன தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இன்றைய நிலையில் சிங்கள பாசிச சக்திகள் கோhpயதைப் போல அரசு, மதம், சிவில் சமூகம் என்கிற நிறுவனங்கள் முக்கோண (திரிபீடக) வடிவில் மையப்படுத்தப்பட்டு ஒரு அழிப்புக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். தமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரு கண்களும் போக வேண்டும் என்கிற நிலையில் இந்த ”திரிபீடக” எந்தவொரு ஜனநாயகமற்ற நிலைமையை எதிர்கொள்ளத்தயார், தமிழ் மக்களின் ஜனநாயகங்களை அழித்தொழிக்க.

சரிநிகர் - 195

0 comments:

தளத்தின் உள்ளடக்கம்.

இந்தத் தளத்தில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உருவாக்கம், விரிவாக்கம், கருத்தாக்கம், அதன் வடிவம், அதன் நிறுவனமயமாக்கம், அதன் திசைவழி குறித்து சரிநகர், ஆதவன், நிகரி, விடிவு, பறை, இனி போன்ற பதிப்புகளில் வெளிவந்த என்.சரவணனின் கட்டுரைகள் மறுபிரதியிடப்படுகின்றன.

சுவடி

Template by - Abdul Munir - 2008 - layout4all