Saturday, January 31, 2009

தீர்வுத்திட்டம்: அம்பலப்படுத்த அரசின் இரு நூல்கள்!

என்.சரவணன்

”18 அத்தியாயங்க­ளைக் கொண்ட தீர்வுத் திட்டம் முன்வைக்­கப்பட் டுள்ளது.”

”பட்ஜட்டுக்கு முன், குறிப்பாக நவம்பரில் உத்தேச அரசியல் தீர்வுத் திட்டம் பாராளுமன்ற த்துக்கு கொண்டு வரப்படும்.”

-”தீர்வு யோசனையை இது வரை எதிர்த்துவந்த அரசாங்க கட்சிகளில் ஒன்றான ஜ.ஐ.தே.மு. வின் தலைவி அமைச்சரவையில் இருந்து நீக்கம்.”

-”தீர்வு யோசனையை நிறை வேற்றும் முயற்சியில் ரணிலுடன் சந்திரிகா ஆரம்ப உடன்பாடுகள் கண்டுள்ளனர்.”

தீர்வுத்திட்டம் பற்றி உத்தியோக­பூர்வமாக அரசினால் வெளியிடப்பட்டு­வரும் தகவல் இவைதான். தீர்வுத்­திட்டம் குறித்து அரசின் நேர்மையை இவ்வாறு வெளியுலகுக்கு காட்ட அரசு மிகுந்த உற்சாகமெடுத்துவரும் இவ் வேளையில், அரசின் போலித்தனைத்­தையும் பம்மாத்தையும் விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சிங்கள நூலில்...

”அதிகாரப்பரவலாக்கமும் காணி அதிகாரங்களும்” எனும் நூலொன்று நீதி அமைச்சின் கீழ் இயங்கும் ”அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும் ஆய்வுத்தகவல் நிலைய”த்தினால் வெளியிடப்பட்டுள்ளது. (இது தவிர அதிகாரப்பரவலாக்கம் பற்றி இன்னும் பல நூல்கள் வெளியிடப்பட்­டுள்ளன. இவற்றில் பல சிங்களத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பி­டத்தக்கது.) தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலில் சிங்களத்தில் கூறப்பட்டுள்ள விடயமும் தமிழ்ல் கூறப்பட்டுள்ள விடயமும் நேரெதி­ரானவை. மொழிபெயர்ப்பில் கோளாறு இருக்கக்கூடுமோ என எண்ணவும் இடமில்லை. ஏனெனில் நூலின் பெயர் ஒன்றே தவிர உள்ளே உள்ள தலைப்புகள் விடயங்கள் என்பன எல்லாமே வேறானவை. இரு மொழி வெளியீடுகளையும் இப்படி துருவி ஒப்பிட்டு பார்க்கப்போவது யார் என அரசு எண்ணியிருக்கக்கூடும். சுருக்­கமாக கூறப்போனால் தமிழ் மக்களிடம் (காணி அதிகாரம் தொடர்பாக) ”எங்களிடமும் ஒருக்கால் சொல்லி போட்டு எதையும் செய்யலாம்.” என்ற தொனியிலும்சிங்கள மக்களிடம் ”எங்களின் அனுமதியில்லாமல் அவர்க­ளால் எதையும் செய்து விட முடியாது” என்ற தொனியிலுமே கூறப்பட்டுள்ளன. சிங்கள நூலில் கூறப்பட்டுள்ளவற்றை இங்கு நோக்குவோம்.

”...ஸ்ரீ லங்கா இறைமையுள்ள ஒரு ஒற்றையாட்சி அரசு. ஸ்ரீ லங்காவின் நிலத்தின் மீதான அதிகபட்ச உரிமை­யை அரசே கொண்டிருப்பதால் பிரிவி­னைக்கு இடமில்லை. அவ்வாறு ஏதேனுமொரு இனக்குழுமம் பிரிவினை வாத அரசியலில் ஈபடுமாக இருந்தால் அதனை அடக்க இலங்கை அரசின் சகல அதிகாரமும் பிரயோகிக்க ப்படும்....”

”...மத்திய அரசின் கீழ் காணி அதிகாரங்கள் இருந்து வருவதை, பிரிவினைவாத அரசியலானது தன்னை நிலைநிறுத்துவதற்காக கண்டித்து வருகிறது...”

”...ஆனாலும் பிராந்திய சபைக்கு காணியாpமை அளிக்கப்பட்டாலும் பிராந்திய சபைக்கு உயர்ந்தபட்ச அதிகாரம் வழங்கப்போவதில்லை... அது மட்டுமின்றி மத்திய அரசாங்கத்­தின் அதிகாரத்தின்படி பிராந்தியங்க­ளில் உள்ள காணிகளின் மீது அதிகாரம் செலுத்த முடியும்...”

”...ஓதுக்கப்பட்ட பட்டியலின்படி பிராந்தியங்களுக்கு காணி மற்றும் காணிப்பயன்பாடு பற்றி தனித்த முடிவு எடுக்க முடியாது. இது தொடர்பில் மத்திய அரசுடன் சேர்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும்...”

”...உத்தேச அதிகாரப் பரவலாக்க­த்­தி­ன்படி பிராந்தியமொன்று அதன் அபிவிருத்தி நடவடிக்கையை மேற்கொ­ள்வதற்கு தேவையான வளங்களை அப்பிராந்தியம் தேடிக் கொண்ட வளங்களைக்கொண்டே செய்ய முடியும்....”

”...பிராந்தியமொன்றின் காணி மத்திய அரசின் தேவையொன்றிற்காக அப்பிராந்தியத்திடமிருந்து கேட்டுப்பெறலாம். இதன் மூலம் அதிகாரப்பரவலாக்கம் அர்த்தமுள்ள­தாக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு அவ்வாறு கோருகையில் பிராந்திய சபை அதனை நிராகரிக்க முடியாது. மத்திய அரசுக்க தேவை யேற்படின் காணியை தரும்படி ஆணையிடமுடியும். பிராந்திய சபையும் அவ் ஆணையின்படி ஒழுகவேண்டும். இப்போதும் இலங்கையில் பல பிரதேசங்களின் காணிகள் மத்திய அரசின் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த காணிகள் தொடர்ந்தும் அவ்வாறே இருப்பதுடன் பிராந்திய சபையினால் அதனை இல்லாது செய்யும் அதிகார­மில்லை.

மத்திய அரசாங்கத்தினால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தற்போது இயங்கிவரும் படைமுகாம்களும் தொடர்ந்து இருக்கும்..

...ஏதாவதொரு பிராந்தியம் இலங்­கையின் இறைமைக்கு சவாலாக செயற்படுமாயின் அந்த சபை கலைக்க­ப்பட்டு மத்திய அரசின் கீழ் அது கொண்டுவரப்படும். அந்த சந்தர்ப்­பத்தில் அப்பிராந்தியத்தின் காணி அதிகாரம் அனைத்தையும் மத்திய அரசாங்கம் கொண்டிருக்கும்....”

”...தற்போதைய தீர்வு யோசனை­யின்படி அரசின் காணிப்பகிர்வின்போது முதலில் மாவட்டத்தைச் சேர்ந்தவர்க­ளுக்கும் பின்னர் பிராந்தியத்தைச் சார்ந்தவர்களுக்குமே முனன்னுரிமை வழங்கப்படும்...ஆனால் இலங்கையில் இறுதியாக எடுக்கப்பட்ட குடிசன­மதிப்பீட்டின் பிரகாரமே (1981) விகிதாசார அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும்...

...இதுவரை இலங்கை அரசு காணிப்பகிர்வை மேற்கொண்ட சந்தர்ப்­பங்களிலெல்லாம் அந்த பிரதேசம், மாவட்டம், மாகாணம் என்ற ஒழுங்கி­லேயே முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதன்படி பார்த்தால் தீர்வு யோசனை கூட ஏற்கெனவே நடை­முறை­யிலுள்ளதையே செய்யப் போகிறது...
...இந்த யோசனையின் பிரதான இலக்குகள் இரண்டு.

1. இலங்கையின் இறைமையை பாதுகாப்பது.

2.பிராந்தியங்களுக்கு அதிகாரத்­தைப் பரவலாக்குவது....”

சுருக்கமாக இவ்வளவையும் நேரடியாக கூறுவதெனில் முழு காணி அதிகாரங்களும் எம்மிடமே இருக்கும். எம்மைக் கேட்காமல் எதையும் செய்யக்கூடாது. நாங்கள் கேட்டால் அதனை மறுக்கும் அதிகாரம் உங்களு­க்கு இல்லை. ஏற்கெனவே இருந்த குடியேற்றங்கள்,முகாம்கள் போன்­றவை அப்படியே இருக்கும். அத்தனை ஆதிக்கத்தையும் பிராந்தியத்தின் மீது செலுத்துவோம். ஆனால் உங்கள் அபிவிருத்திகளை உங்களுக்கு கிடைப்பதைக்கொண்டே பார்த்துக் கொள்ளுங்கள். இது எவை பற்றியும் கேள்வி எழுப்ப கூடாது. மீறி பிரிவினைவாதம் என்று சென்றீர்களோ இருந்ததையும் பறித்தெடுத்துவிட்டு எங்கள் முழு அதிகாரத்தையும் கொண்டு நசுக்கி விடுவோம்.”

இதில் உள்ள வேடிக்கை என்னவெ­ன்றால் இந்த கைநூலில் பல இடங்க­ளில் ஒரு வசனம் வருகிறது. அதாவது ”...இவ்வாறு பிராந்தியங்களுக்கு அதிகாரங்களை அளிப்பதன் மூலம் காலப்போக்கில் பிராந்தியங்கள் தாமாகவே முன்வந்து போட்டி போட்டுக்கொண்டு பிராந்தியத்தின் காணியை மத்தியஅரசுக்கு வழங்கும்” என்கிறது.

சிங்கள மக்களிடம் சொன்னதை தமிழ் மக்களிடமும் இது தான் எமது நிலைப்பாடு என சொல்லலாமே. அதுதான் இல்லை. தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ள நூலில் மேற்படி எதுவும் இல்லை. மாறாக நேரெதிரான கருத்துக்கள் நிறைந்து கிடக்கின்றன. தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டு­கின்றதொனியில், தமிழ் மக்களை ஈர்க்கின்ற வகையிலேயே அவை சொல்லப்பட்டுள்ளன.

தமிழ் நூலில் இன்னொன்று

”கோரிக்கைகள் அனைத்திலும் பிரதான இடத்தை வகிப்பது காணியில்­லாப் பிரச்சினையே. முன்னிருந்த எந்த அரசாங்கமும் சரியான தீர்வை வழங்கவில்லை. எனவேதான் தமிழ் மக்களின் விரக்தி சுவாலை விட்டு எரிந்தது....”

...பொறுப்பு வாய்ந்த அரசு என்ற வகையில் விவசாயிகளின் பிரச்சினை­யை தீர்க்க வேண்டி கடப்பாடு எம்மீது உள்ளது. இதனை விட்டு நழுவவோ புறந்தள்ளவோ அரசாங்கத்தினால் முடியாது. காணிப்பிரச்சினையே இந்தத் துன்ப துயரங்களுகளில் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

எனவேதான் காணி தொடர்பான அதிகாரத்தை வழங்க அரசு நேர்மை­யோடு முன்வந்துள்ளது. இனிமேல் வடக்கு கிழக்கு பிரதேசக்காணிப் பிரச்சினை முற்றாகத் தீர்க்கப்படும். இனிமேல் அவர்களது பாரம்பரியமதா­னதும் நவீனமயமானதுமான விவசாய முறைகளில் பண்புரீதியான முன்னேற்­றமும் ஏற்படும். அனுகூலம் தரத்தக்க­தாக இப்பிரச்சினை தீர்க்கப்படுவதால் தனிநாடு கோருவதற்கான ஏதுக்களும் இல்லாதொழிந்துவிடும்...”

இவ்வாறு முழுக்க முழுக்க நேரெ­தி­ரான விதத்தில் தமிழ் மக்ளுக்கு நம்பிக்கையூட்டிச் செல்கிறது தமிழ் நூல்.

”பெருந்தன்மையோடு இவ்வளவை­யும் வழங்க இருக்கின்ற அரசே நாம்!” என்பதை பல இடங்களில் வெளிப் படுத்த முயல்கிறது இந்நூல்.

தமிழ் மக்களிடம் தைரியமாக கூறுவதை சிங்கள மக்களிடம் கூற முடியாதது ஏன்? சிங்கள மக்களிடம் கூறியதை தமிழ் மக்களிடம் தைரிய­மாக கூற முடியாதது ஏன்? இரு சமூகத்தவருக்கும் நேரெதிரான கருத்தைக் கூற வேண்டியதன் அவசியம் என்ன? உண்மையில் அரசின் உறுதியான நிலைப்பாடாக இதில் எதைக் கொள்வது? இதுவரைகால அணுகுமுறைகளைக் கொண்டு இத்திட்டம் பின்னோக்கி போவதாகக் கொள்ளலாமா?
அடிவருடிகள்?

அரசு நேர்மையாகவே தீர்வு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக பல புத்திஜீவிகள், அரசசார்பற்ற நிறுவன­த்தவர்கள் சிலரும் நம்பி வருவதானது அவர்களது அப்பாவித்தனத்தை குறிக்கிறதா அல்லது அடிவருடித்த­னத்தை குறிக்கிறதா தெரியவில்லை.

யோசனையை ஐ.தே.க. ஒருவேளை எதிர்த்தால் பாராளுமன்றத்துக்கு கூட முன்வைக்காது நேரடியாக கருத்துக் கணிப்புக்கு விடப்போவதாக நீதியமை ச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூட சில வாரங்க ளுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

அவ்வாறு ஒரு கருத்துக்கணிப்பு வைக்கப்படும்பட்சதத்தில் அதனை ஆதாpக்கவே வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இவர்கள் இருந்து வருகிறார்கள். ”அதில் குறைபாடுகள் இருந்தபோதும் சிங்கள மக்கள் முதன்முறையாக அங்கீகரித்திருக்கிற ஒன்றாக இருப்பதால் இதனை ஊக்குவிக்கவேண்டும்.” என்பதே அவர்களது கருத்து. அதற்காக பல லட்சங்கள் செலவளித்து பிரச்சாரம் செய்தும் வருகின்றார்கள். ஆனால் அதில் உள்ள குறைபாடுகள் குறித்து அரசிடம் ஒரு போதும் கேள்வி எழுப்பியது கிடையாது. அது மட்டுமன்றி குறைபாடுகள் என்ன என்பதைப்பற்றி தேடும் முயற்சிகள் எதுவும் கூட செய்ததாக தெரியவில்லை. பொதுப்புத்தி மட்டத்திலேயே குறைபாடுகள் இருப்பதாக உள்ளள வில் கருதி வருகின்றனர். அவர்கள் தரப்பில் பார்த்தால் கூட சிங்கள மக்களிடம் ”ஆதரவளியுங்கள்” எனக்கோரும் செயற்திட்டமொன்று (Agenda) இருந்தால் அரசிடம் ”இது போதாது” எனக்கோரும் செயற்திட்டம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே சிங்கள பேரினவாத அரசுக்கு துணை போகும் வேலையையே செய்கிறார்கள். கண்மூ­டி­த்தனமான இந்த போக்கானது, இதனை விமர்சிப்பவர்களைக் கூட கடும் எதிரிகளாக காணவே இவர்க­ளைத் தூண்டுகிறது. நிச்சயம் இன்றைய இத்திட்டம் தமிழ் மக்களின் அவநம்பிக்கையையும் விரக்தியையும் அதிகரிக்காது விடும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

0 comments:

தளத்தின் உள்ளடக்கம்.

இந்தத் தளத்தில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உருவாக்கம், விரிவாக்கம், கருத்தாக்கம், அதன் வடிவம், அதன் நிறுவனமயமாக்கம், அதன் திசைவழி குறித்து சரிநகர், ஆதவன், நிகரி, விடிவு, பறை, இனி போன்ற பதிப்புகளில் வெளிவந்த என்.சரவணனின் கட்டுரைகள் மறுபிரதியிடப்படுகின்றன.

சுவடி

Template by - Abdul Munir - 2008 - layout4all