Saturday, January 31, 2009

கங்கொடவில சோமஹிமி:பேரினவாதத்தின் புதிய குறியீடு

என்.சரவணன்

கங்கொடவில சோம ஹிமி எனும் பிக்கு பற்றி இன்று தமிழ் பேசுவோருக்கு கூட தெரியும். மிகவும் சொற்ப காலத்தில் ஊடகங்களால் ஊதிப்பெருப்பிக்கப்­பட்டு இலங்கையிலேயே பிரபலமான ஒருவராக ஆகிவிட்டிருப்பவர் அவர்.

ஏறத்தாழ ஒரு வருடத்திற்குட்பட்ட காலமாக அவரது ”தர்ம தேசனா” (போதனை உரை) வானொலி தொலைக்காட்சிகளில் ஒலி’­ஒளிபரப்பட்டு வருகின்றன. வரலாற்றில் எந்த ஒரு பிக்குவும் இத்தனை குறுகிய காலத்தில் இந்தளவு பிரபலமானதாக, இந்தளவு சர்ச்சைக்குள்ளானதாக இல்லை.

இவரை ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தியது டீ.என்.எல். தொலைக்காட்சி சேவை. அது ரணில் விக்கிரமசிங்கவின் சகோதரரின் தொலைக்காட்சி நிறுவனம். டீ.என்.எல் தொடக்கப்பட்ட 1994 காலப்பகுதி தேர்தற் காலமாகையால் அரசியல் தலைவர்களுக்கிடையில் முதற்தடவையாக அரசியல் விவாதங்களை நடத்திக் காட்டி புகழ் பெற்றது. அதே காலத்தில் தான் அதே சேவையில் இனவாதிகள் என அழைக்கப்பட்ட பலருக்கு இனவாதம் பற்றிக் கடுமையாகப் பேச இது வாய்ப்பும் அளித்தது.

தொடர்ச்சியாக சிங்கள வீரவிதானவின் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பல நிகழ்ச்சிக­ளுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டு மணித்தியாலக் கணக்கில் விளம்பரங்களின்றி தமது நிகழ்ச்சியாக ஒளிபரப்பியும் வந்திருக்கிறது டீ.என்.எல்.

ஒவ்வொரு பௌர்ணமி போயா தினங்களி­லும் சகல தொலைக்காட்சி சேவைகளிலும் பிக்குமாரைக் கொண்டு ”தர்ம தேஷனா” மற்றும் பௌத்த கருத்துரைகள், கலந்துரையாடல்கள், விசேட விவரண நிகழ்ச்சிகளும் இதனால் ஒளிபரப்பப்படுவதுண்டு.

ஒவ்வொரு தொலைக்காட்சி சேவையும் போட்டிபோட்டு பிரபல­மான பிக்குவைக் கொண்டு ”தர்ம­தேஷனா” நடத்த முனைப்பு காட்­டுவது வழக்கம். இந்த நிலையில் தான் அவுஸ்திரேலியாவில் ஒரு விகாரையில் சில காலம் பணிபுரிந்து விட்டு இலங்கை வந்த கங்கொ­டவில சோம ஹிமி தற்செயலாக டீ.என்.எல் நிகழ்ச்சியில் ஒரு கலந்துரையாடலில் அறிமுகமாகி­யதும் கவர்ச்சிகரமான அவரது உரை­யைக் கேட்டதில் அவர் புகழ்பெற்றதும், அதனைத் தொடர்ந்து அவருக்கு தொலைக்காட்சி சேவைகள் அனைத்துமே போட்டிபோட்டு கருத்துரை வழங்கக் கோரியதும் நடந்தது.

சோம ஹிமி சகல தொலைக்காட்சி சேவைக­ளையும் பௌர்ணமி நாட்களில் ஆக்கிரமித்ததுடன் நிற்கவில்லை. ஏனைய பத்திரிகை, வானொலி போன்ற ஊடகங்களிலும் இவரது கட்டுரைகள், பேட்டிகள், இவரைப் பற்றிய சர்ச்சைகள் என தொடர்ந்தது.

பௌத்த கருத்துரையைப் பொறுத்தவரை இவரின் அணுகு முறை ஏனையோரின் அணுகுமு­றைகளை விட வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக பல்வேறு மூட நம்பிக்கைகள், மூட கருத்துக்களுக்கு சாட்டையடி கொடுத்தார். பௌத்த புராணங்களையும், சூத்திரங்களைப் பற்றியும் விரல்நுனியில் தகவல்களைக் கொண்டிருந்த இவர் பௌத்தத்தின் பெயரால் நாட்டில் நடக்கும் பல்வேறு மூடக் கருத்துக்கள், செய்கைகளை கண்டித்து, அவ்வாறான செய்கை­களை செய்யும் பிக்குமாரை சவாலிட்டார். பௌத்ததில் எங்கு இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதைத் தெரிவியுங்கள் என்று.

விஜயன் என்பவனின் வழித்தோன்றல் என்றும் விஜயன் வழிவந்தவர்கள் சிங்களவர்கள் என்றும், அவனிடம் புத்தர் தமது மதத்தை பரப்பும் பணியினை ஒப்படைத்திருந்தார் என்றும் கூறப்பட்டதைக் கண்டித்து அது பொய்யென்றும் விஜயன் என்பவனின் அட்டுழியங்கள் தாங்காது அந்நாட்டு மக்களாலேயே விரட்டப்பட்டு வந்து சேர்ந்தவன் அந்தக் காலத்தில் உலகின் பெரிய பயங்கரவாதியாக இருந்திருக்க வேண்டுமென்றும் அப்படியொருவரிடம் பௌத்தத்தை பரப்பும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்க முடியாது என்றும் இவ்வாறான புனைவுகளை கூறிவரும் பிக்குமாரை வம்புக்கிழுத்தார்.

பௌத்த விகாரைகளில் பௌத்தத்தின் பெயரால் பில்லி, சூனியங்கள் செய்யப்படுவ­தையும், அதுவும் அவற்றை பிக்குமார் செய்வ­தையும் கண்டித்து பௌத்தத்தில் எங்கு அவ்வாறு செய்யும்படி கூறப்பட்டிருக்கிறது எனக் கேள்வி எழுப்பினார். நாட்டிலுள்ள பௌத்த விகாரை­களில் பெருமளவானவை ”தேவாலய” (அதாவது இந்துக் கடவுள்களையும் கொண்ட விகாரைகள்) ங்களாக இருப்பதாகவும் அந்த இந்து மதக் கோட்பாடுகளுக்கும், பௌத்தத்துக்கும் அடிப்­படையில் எந்த ஒற்றுமையும் இல்லை என்பது குறித்தும் கூட பல உரைகள் செய்திருக்கிறார். முதலில் அவை இரண்டையும் வேறுபடுத்த வேண்டுமென்றார். குறிப்பாக ”தூய பௌத்தம்” இது தான் என்று கூறினார்.

பலர் இவரது வளர்ச்சி குறித்து பலவாறாக பேசிக்கொண்டார்கள். ஒரு சாரார் இனவாதி என்றனர். ஒரு சாரார் நல்ல பௌத்த பகுத்தறி­வாளர் என்றனர். இன்னும் சிலர் நடுநிலை­யானவர் என்றனர். சிங்கள வீரவிதானவின் தலைமறைவு பிக்குமாரில் ஒருவர் தான் இவர் என்கின்ற கதையும் உலவியது.

சிங்கள பேரினவாதமயப்பட்ட சூழலில் இவரை அணுகிய பல ஊடகங்களும், பிரமுகர்களும் புகழ்பெற்ற இவரின் ஊடாக இனப்பிரச்சினை குறித்தும் சிங்கள இனம் குறித்தும், தமிழினவாதம் குறித்தும் பேசவைத்தனர். புகழ் உச்சியில் இருந்த சோம ஹிமியும் இந்த பெருங்கதையா­டலுக்குள் சிக்கிக்கொண்டார். சிங்களப் பேரினவாத­மயப்பட்ட சூழலை திருப்திப்­படுத்த இவரும் பேரினவாதத்தை படிப்படியாகக் கக்கத் தொடங்கினார்.

அப்படிக் கூறப்பட்ட பேரினவாதக் கருத்துக்களில் முக்கியமானது சமீபத்தில் குறிப்பாக கடந்த ஒகஸ்ட் 30ஆம் திகதி டீ.என்.எல். (அவரை அறிமுகப்படுத்திய-ஊதிப்பெருப்பித்த- சிங்கள வீரவிதா­னவின் ஊதுகுழலாக ஆகிவிட்டிருக்கிற தொலைக்­காட்சி சேவை) தொலைக்காட்சி சேவையில் தீகவாபி விகாரைக்குச் சொந்தமான காணியை அஷ்ரப் புல்டோசர் போட்டு மட்டப்படுத்தி, முஸ்லிம்களுக்கு ஒதுக்கிக் கொடுத்தார் என்கிற சர்ச்சை பற்றிய விவாதம் அமைச்சர் அஷ்ரப்புக்கும், சோம ஹிமிக்கும் இடையில் நடந்தது. (இந்த விவாதம் பற்றி விவாதம் பின் வந்த நாட்களில் பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரை­கள் வெளியாகின.) அவ்விவாதத்தில் அமைச்சர் அஷ்ரப்பின் அணுகுமுறை குறித்து பொதுவாக சிங்கள மக்கள் மத்தியில் கூட பாராட்டு உண்டு.

அமைச்சர் அஷ்ரப் அவ்விவாதத்துக்கு மிகுந்த தயாரிப்புடனும், குறிப்பாக காணியின் வரைபடம், அக்காணி வழங்கப்பட்டதாகக் கூறப்படும் கல்வெட்டு குறித்த நூல், அக்காணி குறித்த புதைபொருள் திணைக்கள ஆவணங்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் என சகலவற்றையும் கொண்டு வந்திருந்தார். அவ்வளவையும் காட்டி சோம ஹிமியின் வாயை அடைத்தார். அவ் ஆவணங்களை கையில் எடுத்து வந்திருந்த அமைச்சர் ”காலான சூத்திர” எனும் பௌத்த சூத்திரத்தை மாத்திரம் தனது சட்டைப் பையில் இருந்து எடுத்தார். (அதற்கு எத்தனை மரியாதை கொடுத்து கவனமாக கொண்டு வந்திருக்கிறார் என பின்னர் பரவலாக பேசப்பட்டதை கேட்க முடிந்தது. அது அஷ்ரப்பின் வெற்றி) அதில் உள்ள ஒரு பகுதியை சுட்டிக்காட்டி -எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அரிது எனும் குரளை ஒத்தது அது- உங்களுக்கு இந்த சூத்திரம் நன்றாகப் பாடம் இருக்கும். எவர் என்ன கூறினாலும் நீங்கள் அதனை நன்றாக ஆராயமல் வந்து விட்டீர்களே என்று ஒரு போடு போட்டார் அஷ்ரப். சோம ஹிமி அந்த விவாதத்தில் ஆத்திரம் கொண்டு இனவாதத்தைக் கக்கி அவர் யார் என்பதையும் அப்பட்டமாக இனங்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து பல சிங்களப் பத்திரிகைகளில் சோம ஹிமி பற்றியும் அஷ்ரப் பற்றியும் கட்டுரைகள் பல வெளியாகின. பெரும்­பாலும் அஷ்ரப்பை தாக்கியும் அவர் கூறியவை அனைத்தும் பொய் என்கிற கட்டுரைகள் தான் அதிகம். குறிப்பிட்ட தொலைக்காட்சி விவாதத்தில் ”அஷ்ரப் தான் வென்றார்” என்று புத்திஜீவிகள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது.

இந்த விவாதங்கள் மேலும் சோம ஹிமியை பிரபல்யப்படுத்தின. இவ்விவாதத்தில் சோம ஹிமி இனவாதியாக அம்பலப்பட்டதால் அரச ஊடக­ங்களில் அவருக்கு இடம் தரக்கூடாது என்று சில முயற்சிகள் நடந்திருக்கின்றன. அதனைத் தொடர்ந்து அரச தொலைக்காட்சி சேவையான சுயாதீன தொலக்காட்சி சேவை (ITN) இல் சோம ஹிமிக்கு இடம் தருவதில்லையென தீர்மானிக்கப்­பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

டீ.என்.எல். அஷ்ரப்பை மடக்குவதற்­கென்றே ஒழுங்கு செய்திருந்த அந்த விவாதத்தில் சோம ஹிமி வாங்கிக் கட்டிக்கொண்டார் என்பதை ஜஹரணிக்க முடியாத டீ.என்.எல். சேவை செப்டம்­பர் 27 ஆம் திகதி ஒரு தொலைக்காட்சி விவாதத்தை ஒழுங்கு செய்திருந்தது. இதில் கங்கொடவில சோம ஹிமி உள்ளிட்ட மூன்று பிக்குமாறும், ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாரத்னவும், சிங்கள இனவாதப் பத்திரிகைகளைச் சேர்ந்த ஒரு சில பத்திரிகையாளர்களும், புதைபொருள் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொள்ளச் செய்யப்பட்டிருந்தனர்.

அதில் சகலருமாக அமைச்சர் அஷ்ரப்பை தாக்கு தாக்கென்று தாக்கினர். அஷ்ரப் கூறியவை அனைத்தும் பொய்யென்று நிறுவ பல முனைகளில் பல முயற்சிகள் செய்யப்பட்டன. இவ்விவாதம் இரவு 9.05க்கு ஆரம்பாகி இரவு 12க்கு பத்து நிமிடம் இருக்கையில் முடிந்தது இங்கு கவனிக்­கத்தக்கது. இவ்விவாதத்தின் இறுதியில் உரை­யாற்றிய சோம ஹிமி ”அஷ்ரப் எதையெல்லாம் காட்டி மழுப்பினாரோ அவையெல்லாம் பொய்யென்று நிரூபணமாகி விட்டன. கடைசியில் நான் அன்று கூறியவை தான் சரியென இப்போது உறுதியாகியிருக்கின்றன. இது சிங்கள நாடு சிங்கள மக்களுக்கு என்று இருப்பது இந்த ஒரு நாடு தான். தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வேறு நாடுகள் இருக்கின்றன. சிறுபான்­மையோரை நாங்கள் இங்கு வாழ வேண்டாம் என்று கூற­வில்லை. அவர்கள் வாழும் வரை பெரும்பான்­மையினரை அனுசரித்து வாழச் சொல்லித் தான் கேட்கிறோம். பெரும்பான்மையி­னரின் உரிமைக­ளுக்கு இடங்கொடுத்து வாழ அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மற்றும்படி யுத்தத்துக்கு யுத்தத்தால் தான் பதில் சொல்ல முடியும்.” என்ற போர்ப் பிரகடனத்துடன் முடித்தார்.

இன்று சோம ஹிமி தன்னை முழுமையாக இன்னார் தான் என வெளிக்காட்டியுள்ளார். இது வெறுமனே அவருக்குள் இருந்து வந்த பேரின­வாதம் அல்ல. அவரைச் சூழ இயங்குகின்ற பேரின­வாதமயப்படுத்தப்பட்ட சூழலால் கவனமாக கட்டமைக்கப்பட்டவர் அவர். எனவே இந்த சூழ­லில் பல்வேறு சக்திகளும் பல்வேறு நலன்களும் ஒன்று சேர்ந்து ஒருவர் எப்படி தயாராக்கப்படு­கிறார், எப்படி நிலைநிறுத்­தப்படுகிறார் என்பதற்கு இவர் ஒரு நல்ல உதாரணம்.

அஷ்ரப்புக்கும் சோம ஹிமிக்குமிடையிலான விவாதத்தின் போது சோம ஹிமி இன்னுமொரு முக்கிய பிரச்சினையை கிளப்பியிருந்தார். அது சிங்கள மக்களின் சனத்தொகை குறைகிறது என்றும், முஸ்லிம்கள், தமிழர்கள் போன்றோரின் சனத்தொகை அதிகரிக்கின்றது என்பதுமாகும். திட்டமிட்டு சிங்கள சனத்தொகை குறைக்கப்படு­வதாகவும், எனவே சிங்களப் பெண்களை அதிக குழந்தைகள் பெறுமாறும் அவர் அதில் கூறியிருந்­தார். இதே பிரச்சினையை அவர் 27ஆம் திகதி நடந்த டீ.என்.எல். கலந்துரை­யாடலிலும் கூறினார்.

வெறுமனே சோம ஹிமி விவகாரம் என்றல்ல பொது­வாக சிங்களப் பேரின­வாதம் எடுத்துவரும் நவீன வடிவங்க­ளையும், அது தன்னை நிலை­நாட்ட எடுத்து வரும் முயற்சி­களையும், அதன் திட்டமிட்ட சாமர்த்தியமான அணுகுமு­றைகளையும் சரியா­கக் கணித்­தால் அதன் முக்கிய பண்­பொன்று புலப்படும். கடந்த கால பாசிசத்தின் வடிவம், திசைவழி, பண்பு என்பவற்றை ஒரு மறுவாசிப்பு செய்தால், இங்கு அதன் வெளிப்­பாடுகளை இனங்காணலாம். இனி பேரினவாதம், பேரின­வாதிகள் என்கிற பதங்க­ளுக்கு விடைகொடுத்து விட்டு இனி பாசிசம், பாசிஸ்டுகள் என்கிற பதப்­பிரயோகங்களை பயன்படுத்த வேண்டிவரப்­போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று மட்டும் தற்போதைக்கு சொல்லி வைக்கலாம்.

0 comments:

தளத்தின் உள்ளடக்கம்.

இந்தத் தளத்தில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உருவாக்கம், விரிவாக்கம், கருத்தாக்கம், அதன் வடிவம், அதன் நிறுவனமயமாக்கம், அதன் திசைவழி குறித்து சரிநகர், ஆதவன், நிகரி, விடிவு, பறை, இனி போன்ற பதிப்புகளில் வெளிவந்த என்.சரவணனின் கட்டுரைகள் மறுபிரதியிடப்படுகின்றன.

சுவடி

Template by - Abdul Munir - 2008 - layout4all