Friday, January 30, 2009

நோர்வேயின் முயற்சிகளும் பேரினவாத எதிர்புகளும்



என்.சரவணன்

ஃ சிங்கள வீரவிதானவின் கூட்டுக்கு வெளியில் இதுவரை இருந்துவந்த சிங்களயே மஹாசம்மத்த பூமி புத்திர பக்ஷய (சிங்கள மண்ணின் மைந்தர்களின் கட்சி) உட்பட பல பேரினவாத அமைப்புகள் ஏலவே ஒரு குடையின் கீழ் திரண்டிருக்கிற சிங்கள வீரவிதானவின் கீழ் அணிசேர்ந்துள்ளன. நாடாளவ ரீதியில் ஆர்ப்பாட்ங்களை ஒழுங்கு செய்து வருகின்றன. அது இது வரை இல்லாத அளவுக்கு எழுச்சியுற்று வருகின்றன.

ஃ ஐ.தே.க. மற்றும் (ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான) பொ.ஐ.மு. ஆகிய இரு பிரதான சிங்கள கட்சிகளும் தமது ஏனைய பிரச்சினைகளை ஓரங்கட்டிவிட்டு பேரினவாத்தை சட்ட ரீதியில் அமுலாக்க கைகோர்த்து செயற்படும் கட்டத்துக்கு வந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பின் இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்து இயங்கும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க முதற்சந்தர்ப்பம் என பல அவதானிகள் சுட்டிக்காட்டுமளவுக்கு இது இருக்கிறது.

ஃ வடக்கில் தமது தோல்வியை தாங்க முடியாமல் சாதாரண அப்பாவி பொதுமக்கள் மீது தமது கையாளாகத்தனமான தாக்குதல்களை சிங்கள ஆக்கிரமிப்புப் படை மேற்கொண்டு வருகிறது. இந்த அரச பயங்கரவாதத்துக்கு இம்முறை நேரடியாகவே தலைமை தாங்குபவர் ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சரும், முப்படைகளின் தளபதியுமான சந்திரிகா அவர்கள்.

ஃ தென்னிலங்கையில் தமிழ் மக்கள் மீதான பேரினவாத இம்சைகளும், தாக்குதல்களும் அதிகரித்துவருவதாக செய்திகள் வெளிவந்தவ ண்ணமிருக்கின்றன.

இந்த நிலைமையில் தான் பேச்சுவார்த்தை சமாதானம் என்பன போன்ற மாயை அரசினால் பரப்பப்பட்டு வருகின்றன. சமாதானம் பற்றிய மாயை பரப்பி உலகையும் தமிழ் மக்களையும் நம்பச் செய்தும், யுத்த வெற்றிகளைக் காட்டி (யுத்தச் செலவு அதிகாpப்பு, படை நடவடிக்கைகள், தமிழர் கைது, சித்திரவதை போன்றன) சிங்கள பெரும்பான்மை மக்களை நம்பச் செய்து எதிர்வரும் ஓகஸ்டில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான வாக்குவேட்டைக்கு தயார்படுத்துவதே அரசின் உள்நோக்கமாக இருந்துவந்தது. ஆனால் சமீபத்திய போர்க்கள தோல்விகளினாலும், அதனை வைத்து சிங்கள பாசிச சக்திகள் அரசுக்கு எதிராக சிங்கள மக்களை திரட்ட வருவதனாலும் கதிகலங்கிய ஆளுங்கட்சிக்கு சிங்கள மக்களை ஆறுதல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது. எனவே தான் சந்திhpகா அம்மையார் ”வடக்கிலிருந்து இராணுவத்தை வாபஸ் பெறப்போவதுமில்லை, ஆயுதங்களை கீழே வைத்து விட்டு வந்தால் தான் பேச்சு” என்பன போன்ற வாய்ச்சவாடல் விட்டிருந்தார். தற்போதைய பேச்சுவார்த்தை சூழ்நிலையில் எதிர்கட்சியை ஆறுதல்படுத்தும்வகையில் நடந்துகொள்கின்ற வகையில் கூட முக்கிய தேசியப்பிரச்சினையில் பொறுப்போடு நடந்துகொள்ளவில்லை.

இன்றைய நிலையில் ஆளுங்குழுமங்களுக்கு தேசியப்பிரச்சினையானது வெறுமனே தேர்தல் தயாரிப்புகள் மாத்திரம். தேர்தல் வரை இதனை எழுத்தடித்தால் போதுமானது. அதன் பின்னர் என்ன ஆனாலும் சரி.

மேலும் மகா சங்கத்தினர் உள்ளிட்ட பேரினவாத சக்திகளுடன் தற்போதைய சமாதான முயற்சிகள் பற்றி பேச்சுவார்த்தை நடாத்த ஜனாதிபதி சம்மதித்துள்ளார். கடந்த காலங்களில் இதே சக்திகளுடன் பேச்சுவார்த்தைகளோடு ஒட்டித் தான் தீர்வு யோசனைகளில் குறைப்புகள் செய்யப்பட்டன என்பது தெரிந்ததே. ”கடந்த ஐந்து வருடங்களுக்குள் புத்தசாசன அமைச்சுக்கு மாத்திரம் 2,200 மல்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, பௌத்த மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரச நிர்வாக கட்டமைப்பையுடைய ஒரு நாடு இது” என்றும் அவர் பெருமையாகக் கூறியிருந்தார் (அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணைத்தளமான http://www.riu.gov.lk/ இல் 31 ஜனவரி அறிக்கையில் இச் செய்தியுள்ளது). கடந்த ஜனவாp மாதம் அம்பன்வல பன்னசேகரதேரரை மல்வத்த பீடாதிபதியாக நியமனம்பெற்றது தொடர்பான சம்பிரதாயபூர்வமான உரையின் போதே இத்தகவலை அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அரசாங்கம் பதியிலமர்ந்ததும் இந்து சமய மற்றும் முஸ்லிம் சமய அமைச்சுகளை அகற்றியது. புத்தசாசன அமைச்சு ஒரு முழு அமைச்சாக இயங்கிக்கொண்டிருக்க இந்நு மற்றும் முஸ்லிம் அமைச்சுகள் கூட அதுவரை இராஜாங்க அமைச்சுகளாக மட்டுமே இருந்தது. அவற்றை வெறும் திணைக்களங்களாக மாற்றி அவற்றுக்கான நிதியொதுக்கீடுகளையும் குறைத்த பொ.ஐ.மு. அரசு புத்தசாசன அமைச்சை முழு அமைச்சாகவே தொடர்ந்த அதே நேரம் ஜனாதிபதி சந்திரிகாவே அதன் அமைச்சராகவும் இருந்தார். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாகச் சொல்லிக்கொண்ட ஜனாதிபதி உத்தேச அரசியலமைப்பில் பௌத்த மதமே அரச மதம் என்பதையும் வலியுறுத்தினார். இப்படி சிங்களப் பேரினவாதத்துடன் கைகோர்த்தும், அதனைத் திருப்திப்படுத்துவதற்காக தமிழ் மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுத்தும், மறுத்தும் வருகிறது. இந்தப் பின்னணிகளோடு தான் இன்றைய சமாதான முயற்சிகள் குறித்த விடயங்களையுதம் சந்தேகிக்க வேண்டியுள்ளது. பேச்சுவார்த்தைக்கு முன் அதிக விட்டுக்கொடுப்புகளையும், தமது நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்தும் தார்மீக பொறுப்பு அரசுக்கே அதிகம் உள்ள நிலையில் தமிழ் தரப்பை நோக்கி நிபந்தனைகள் விதிப்பது அரசின் பேரினவாத பக்கச்சார்பை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

நோர்வே அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜக்லான்ட் கடந்த மார்ச் 30ஆம் திகதியன்று இலங்கை விவகாரத்தை கவனிப்பதற்கென விசேட ஆலோசகர் ஒருவரை எதிர்வரும் 6 மாதங்களுக்கு நியமித்தது. அவர் எரிக் சுல்ஹைன் (Erik Solheim). சோசலிச இடது (socialist venstre) கட்சியின் தலைவராக இருந்த இவர் சமீபத்தில் பதவி கவிழ்ந்த கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். சோசலிச இடது கட்சியின் வெளிவிவகார கமிட்டிக்கு தற்போது பொறுப்பாக இருப்பவர். இக்கட்சி தம்மை இடது அழைத்துக்கொண்டதற்கு அது இதுவரைகாலம் வலது கட்சியாகவே செயற்பட்டு வந்திருக்கிறது. தாராளவாதத்திற்கு ஆதரவான இந்தக்கட்சியோடு ஒப்பிடுகையில் AKP மற்றும் NKP போன்ற கட்சிகள் இடதுசாரிக்கொள்கையில் சற்று தீவிரமான கட்சிகள் எனலாம்.

இவரைத் தெரிவு செய்தற்கான காரணமாக கூறப்படுவது யாதெனில் இவரது கட்சியானது ”All Party Solidarity Group for Sri Lanka” எனும் அமைப்புடன் நீண்டகாலமாக சேர்ந்தியங்கிவந்த அமைப்பு. இவ்வமைப்பு 1993இல் மானுவேல் பிள்ளை என்பவாpன் தலைமையில் மேலும் 7 நோர்வேஜியர்களை இணைத்து நோர்வேயில், பேர்கன் எனும் இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. (இதில் ஆர்னே சியொடொப்ட் என்பவரும் ஒருவர். இவர் முன்னாள் சோசலிச இடது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர். இவர் இலங்கையில் சீனோர் எனும் மீன்பிடி திட்டத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியின் போது அமைத்தவர்களில் ஒருவர். மேலும் றுழசடன ஆநனயை ஏநைற எனும் அமைப்புக்கு தலைவராக இருக்கிறார். இதன் கிளை தற்போது கொழும்பிலும் இயங்குகிறது.) இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் இலங்கை சமாதான முயற்சிகளில் ஆரம்பத்தில் ஈடுபட்டுவந்தனர். இலங்கையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டிலுள்ள விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள், மற்றும் என்.ஜீ.ஓ.க்களைச் சேர்ந்த பிரமுகர்கள் என்போரை அப்போது நோர்வே அழைத்து கருத்தரங்குகள் ஏற்பாடு செய்திருந்ததும் இவர்களே. ஆரம்பத்தில் ஜாதிபதி சந்திரிகாவின் மைத்துனர் குமார் ரூபசிங்கவும் இவ்வமைப்புடன் சேர்ந்து பணிபுரிந்தார். இவ்வமைப்போடு நெருங்கிப் பணிபுரிந்த சோசலிச இடது கட்சியின் அப்போதைய தலைவரையே இப்போதைய ஆளுங்கட்சியான தொழிற்கட்சி தெரிவு செய்திருக்கிறது. ஆனால் இவர் அதற்கு உகந்த நபர் அல்ல எனும் கருத்து பரவலாக உள்ளது.

மேற்படி All Party Solidarity Grohp for Sri lanka அமைப்பு புலிகளின் முன்னணி அமைப்பு என்று நோர்வேயில் உள்ள திவய்ன பத்திரிகையின் நிருபர் திவய்னவுக்கு எழுதி வருகிறார். இப்போது நடக்கும் பேச்சுவார்த்தையின் பின்னணியில் இவ்வமைப்பும் கணிசமான பாத்திரத்தை ஆற்றிவருவதாக பேசப்படுகிறது.

இலங்கைக்கான நோர்வே தூதுவர் இலங்கையிலிருந்து பேச்சுவார்த்தைக்கான சாதக பாதகங்களை விளக்குவதற்கென நோர்வே வந்தடைந்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் இந்தப் பேச்சுவார்த்தையின் வெற்றியை இந்தியாவின் ஆசீர்வாதமின்றி சாத்தியமாகாது என்று நோர்வே கருதி வருகிறது.

பேச்சுவார்த்தைக்கு முன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி தமது பேரம் பேசும் ஆற்றலைப் பெருப்பித்ததன் பின்னரே புலிகள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்கிற கருத்து பரவலாக இருக்கின்ற நிலையில் அரசு கலங்கிப் போயுள்ளது.

தமிழ் தரப்பை மெதுவாக சமரசத்திற்கு கொண்டுவந்து படிப்படியாக கீழ்படியவைத்து ஒட்டுமொத்தமாக சரணடையச்செய்யும் முயற்சியை செய்துவரும் அரசின் தந்திரோபாயத்திற்கு அகப்படாமல் தப்பி தேசத்தின் நலனிலிருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் நோக்க வேண்டிய தருணம் இது.


சரிநிகர் - 194

0 comments:

தளத்தின் உள்ளடக்கம்.

இந்தத் தளத்தில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உருவாக்கம், விரிவாக்கம், கருத்தாக்கம், அதன் வடிவம், அதன் நிறுவனமயமாக்கம், அதன் திசைவழி குறித்து சரிநகர், ஆதவன், நிகரி, விடிவு, பறை, இனி போன்ற பதிப்புகளில் வெளிவந்த என்.சரவணனின் கட்டுரைகள் மறுபிரதியிடப்படுகின்றன.

சுவடி

Template by - Abdul Munir - 2008 - layout4all