Saturday, January 31, 2009

கங்கொடவில சோமஹிமி:பேரினவாதத்தின் புதிய குறியீடு

என்.சரவணன்

கங்கொடவில சோம ஹிமி எனும் பிக்கு பற்றி இன்று தமிழ் பேசுவோருக்கு கூட தெரியும். மிகவும் சொற்ப காலத்தில் ஊடகங்களால் ஊதிப்பெருப்பிக்கப்­பட்டு இலங்கையிலேயே பிரபலமான ஒருவராக ஆகிவிட்டிருப்பவர் அவர்.

ஏறத்தாழ ஒரு வருடத்திற்குட்பட்ட காலமாக அவரது ”தர்ம தேசனா” (போதனை உரை) வானொலி தொலைக்காட்சிகளில் ஒலி’­ஒளிபரப்பட்டு வருகின்றன. வரலாற்றில் எந்த ஒரு பிக்குவும் இத்தனை குறுகிய காலத்தில் இந்தளவு பிரபலமானதாக, இந்தளவு சர்ச்சைக்குள்ளானதாக இல்லை.

இவரை ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தியது டீ.என்.எல். தொலைக்காட்சி சேவை. அது ரணில் விக்கிரமசிங்கவின் சகோதரரின் தொலைக்காட்சி நிறுவனம். டீ.என்.எல் தொடக்கப்பட்ட 1994 காலப்பகுதி தேர்தற் காலமாகையால் அரசியல் தலைவர்களுக்கிடையில் முதற்தடவையாக அரசியல் விவாதங்களை நடத்திக் காட்டி புகழ் பெற்றது. அதே காலத்தில் தான் அதே சேவையில் இனவாதிகள் என அழைக்கப்பட்ட பலருக்கு இனவாதம் பற்றிக் கடுமையாகப் பேச இது வாய்ப்பும் அளித்தது.

தொடர்ச்சியாக சிங்கள வீரவிதானவின் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பல நிகழ்ச்சிக­ளுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டு மணித்தியாலக் கணக்கில் விளம்பரங்களின்றி தமது நிகழ்ச்சியாக ஒளிபரப்பியும் வந்திருக்கிறது டீ.என்.எல்.

ஒவ்வொரு பௌர்ணமி போயா தினங்களி­லும் சகல தொலைக்காட்சி சேவைகளிலும் பிக்குமாரைக் கொண்டு ”தர்ம தேஷனா” மற்றும் பௌத்த கருத்துரைகள், கலந்துரையாடல்கள், விசேட விவரண நிகழ்ச்சிகளும் இதனால் ஒளிபரப்பப்படுவதுண்டு.

ஒவ்வொரு தொலைக்காட்சி சேவையும் போட்டிபோட்டு பிரபல­மான பிக்குவைக் கொண்டு ”தர்ம­தேஷனா” நடத்த முனைப்பு காட்­டுவது வழக்கம். இந்த நிலையில் தான் அவுஸ்திரேலியாவில் ஒரு விகாரையில் சில காலம் பணிபுரிந்து விட்டு இலங்கை வந்த கங்கொ­டவில சோம ஹிமி தற்செயலாக டீ.என்.எல் நிகழ்ச்சியில் ஒரு கலந்துரையாடலில் அறிமுகமாகி­யதும் கவர்ச்சிகரமான அவரது உரை­யைக் கேட்டதில் அவர் புகழ்பெற்றதும், அதனைத் தொடர்ந்து அவருக்கு தொலைக்காட்சி சேவைகள் அனைத்துமே போட்டிபோட்டு கருத்துரை வழங்கக் கோரியதும் நடந்தது.

சோம ஹிமி சகல தொலைக்காட்சி சேவைக­ளையும் பௌர்ணமி நாட்களில் ஆக்கிரமித்ததுடன் நிற்கவில்லை. ஏனைய பத்திரிகை, வானொலி போன்ற ஊடகங்களிலும் இவரது கட்டுரைகள், பேட்டிகள், இவரைப் பற்றிய சர்ச்சைகள் என தொடர்ந்தது.

பௌத்த கருத்துரையைப் பொறுத்தவரை இவரின் அணுகு முறை ஏனையோரின் அணுகுமு­றைகளை விட வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக பல்வேறு மூட நம்பிக்கைகள், மூட கருத்துக்களுக்கு சாட்டையடி கொடுத்தார். பௌத்த புராணங்களையும், சூத்திரங்களைப் பற்றியும் விரல்நுனியில் தகவல்களைக் கொண்டிருந்த இவர் பௌத்தத்தின் பெயரால் நாட்டில் நடக்கும் பல்வேறு மூடக் கருத்துக்கள், செய்கைகளை கண்டித்து, அவ்வாறான செய்கை­களை செய்யும் பிக்குமாரை சவாலிட்டார். பௌத்ததில் எங்கு இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதைத் தெரிவியுங்கள் என்று.

விஜயன் என்பவனின் வழித்தோன்றல் என்றும் விஜயன் வழிவந்தவர்கள் சிங்களவர்கள் என்றும், அவனிடம் புத்தர் தமது மதத்தை பரப்பும் பணியினை ஒப்படைத்திருந்தார் என்றும் கூறப்பட்டதைக் கண்டித்து அது பொய்யென்றும் விஜயன் என்பவனின் அட்டுழியங்கள் தாங்காது அந்நாட்டு மக்களாலேயே விரட்டப்பட்டு வந்து சேர்ந்தவன் அந்தக் காலத்தில் உலகின் பெரிய பயங்கரவாதியாக இருந்திருக்க வேண்டுமென்றும் அப்படியொருவரிடம் பௌத்தத்தை பரப்பும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்க முடியாது என்றும் இவ்வாறான புனைவுகளை கூறிவரும் பிக்குமாரை வம்புக்கிழுத்தார்.

பௌத்த விகாரைகளில் பௌத்தத்தின் பெயரால் பில்லி, சூனியங்கள் செய்யப்படுவ­தையும், அதுவும் அவற்றை பிக்குமார் செய்வ­தையும் கண்டித்து பௌத்தத்தில் எங்கு அவ்வாறு செய்யும்படி கூறப்பட்டிருக்கிறது எனக் கேள்வி எழுப்பினார். நாட்டிலுள்ள பௌத்த விகாரை­களில் பெருமளவானவை ”தேவாலய” (அதாவது இந்துக் கடவுள்களையும் கொண்ட விகாரைகள்) ங்களாக இருப்பதாகவும் அந்த இந்து மதக் கோட்பாடுகளுக்கும், பௌத்தத்துக்கும் அடிப்­படையில் எந்த ஒற்றுமையும் இல்லை என்பது குறித்தும் கூட பல உரைகள் செய்திருக்கிறார். முதலில் அவை இரண்டையும் வேறுபடுத்த வேண்டுமென்றார். குறிப்பாக ”தூய பௌத்தம்” இது தான் என்று கூறினார்.

பலர் இவரது வளர்ச்சி குறித்து பலவாறாக பேசிக்கொண்டார்கள். ஒரு சாரார் இனவாதி என்றனர். ஒரு சாரார் நல்ல பௌத்த பகுத்தறி­வாளர் என்றனர். இன்னும் சிலர் நடுநிலை­யானவர் என்றனர். சிங்கள வீரவிதானவின் தலைமறைவு பிக்குமாரில் ஒருவர் தான் இவர் என்கின்ற கதையும் உலவியது.

சிங்கள பேரினவாதமயப்பட்ட சூழலில் இவரை அணுகிய பல ஊடகங்களும், பிரமுகர்களும் புகழ்பெற்ற இவரின் ஊடாக இனப்பிரச்சினை குறித்தும் சிங்கள இனம் குறித்தும், தமிழினவாதம் குறித்தும் பேசவைத்தனர். புகழ் உச்சியில் இருந்த சோம ஹிமியும் இந்த பெருங்கதையா­டலுக்குள் சிக்கிக்கொண்டார். சிங்களப் பேரினவாத­மயப்பட்ட சூழலை திருப்திப்­படுத்த இவரும் பேரினவாதத்தை படிப்படியாகக் கக்கத் தொடங்கினார்.

அப்படிக் கூறப்பட்ட பேரினவாதக் கருத்துக்களில் முக்கியமானது சமீபத்தில் குறிப்பாக கடந்த ஒகஸ்ட் 30ஆம் திகதி டீ.என்.எல். (அவரை அறிமுகப்படுத்திய-ஊதிப்பெருப்பித்த- சிங்கள வீரவிதா­னவின் ஊதுகுழலாக ஆகிவிட்டிருக்கிற தொலைக்­காட்சி சேவை) தொலைக்காட்சி சேவையில் தீகவாபி விகாரைக்குச் சொந்தமான காணியை அஷ்ரப் புல்டோசர் போட்டு மட்டப்படுத்தி, முஸ்லிம்களுக்கு ஒதுக்கிக் கொடுத்தார் என்கிற சர்ச்சை பற்றிய விவாதம் அமைச்சர் அஷ்ரப்புக்கும், சோம ஹிமிக்கும் இடையில் நடந்தது. (இந்த விவாதம் பற்றி விவாதம் பின் வந்த நாட்களில் பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரை­கள் வெளியாகின.) அவ்விவாதத்தில் அமைச்சர் அஷ்ரப்பின் அணுகுமுறை குறித்து பொதுவாக சிங்கள மக்கள் மத்தியில் கூட பாராட்டு உண்டு.

அமைச்சர் அஷ்ரப் அவ்விவாதத்துக்கு மிகுந்த தயாரிப்புடனும், குறிப்பாக காணியின் வரைபடம், அக்காணி வழங்கப்பட்டதாகக் கூறப்படும் கல்வெட்டு குறித்த நூல், அக்காணி குறித்த புதைபொருள் திணைக்கள ஆவணங்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் என சகலவற்றையும் கொண்டு வந்திருந்தார். அவ்வளவையும் காட்டி சோம ஹிமியின் வாயை அடைத்தார். அவ் ஆவணங்களை கையில் எடுத்து வந்திருந்த அமைச்சர் ”காலான சூத்திர” எனும் பௌத்த சூத்திரத்தை மாத்திரம் தனது சட்டைப் பையில் இருந்து எடுத்தார். (அதற்கு எத்தனை மரியாதை கொடுத்து கவனமாக கொண்டு வந்திருக்கிறார் என பின்னர் பரவலாக பேசப்பட்டதை கேட்க முடிந்தது. அது அஷ்ரப்பின் வெற்றி) அதில் உள்ள ஒரு பகுதியை சுட்டிக்காட்டி -எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அரிது எனும் குரளை ஒத்தது அது- உங்களுக்கு இந்த சூத்திரம் நன்றாகப் பாடம் இருக்கும். எவர் என்ன கூறினாலும் நீங்கள் அதனை நன்றாக ஆராயமல் வந்து விட்டீர்களே என்று ஒரு போடு போட்டார் அஷ்ரப். சோம ஹிமி அந்த விவாதத்தில் ஆத்திரம் கொண்டு இனவாதத்தைக் கக்கி அவர் யார் என்பதையும் அப்பட்டமாக இனங்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து பல சிங்களப் பத்திரிகைகளில் சோம ஹிமி பற்றியும் அஷ்ரப் பற்றியும் கட்டுரைகள் பல வெளியாகின. பெரும்­பாலும் அஷ்ரப்பை தாக்கியும் அவர் கூறியவை அனைத்தும் பொய் என்கிற கட்டுரைகள் தான் அதிகம். குறிப்பிட்ட தொலைக்காட்சி விவாதத்தில் ”அஷ்ரப் தான் வென்றார்” என்று புத்திஜீவிகள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது.

இந்த விவாதங்கள் மேலும் சோம ஹிமியை பிரபல்யப்படுத்தின. இவ்விவாதத்தில் சோம ஹிமி இனவாதியாக அம்பலப்பட்டதால் அரச ஊடக­ங்களில் அவருக்கு இடம் தரக்கூடாது என்று சில முயற்சிகள் நடந்திருக்கின்றன. அதனைத் தொடர்ந்து அரச தொலைக்காட்சி சேவையான சுயாதீன தொலக்காட்சி சேவை (ITN) இல் சோம ஹிமிக்கு இடம் தருவதில்லையென தீர்மானிக்கப்­பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

டீ.என்.எல். அஷ்ரப்பை மடக்குவதற்­கென்றே ஒழுங்கு செய்திருந்த அந்த விவாதத்தில் சோம ஹிமி வாங்கிக் கட்டிக்கொண்டார் என்பதை ஜஹரணிக்க முடியாத டீ.என்.எல். சேவை செப்டம்­பர் 27 ஆம் திகதி ஒரு தொலைக்காட்சி விவாதத்தை ஒழுங்கு செய்திருந்தது. இதில் கங்கொடவில சோம ஹிமி உள்ளிட்ட மூன்று பிக்குமாறும், ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாரத்னவும், சிங்கள இனவாதப் பத்திரிகைகளைச் சேர்ந்த ஒரு சில பத்திரிகையாளர்களும், புதைபொருள் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொள்ளச் செய்யப்பட்டிருந்தனர்.

அதில் சகலருமாக அமைச்சர் அஷ்ரப்பை தாக்கு தாக்கென்று தாக்கினர். அஷ்ரப் கூறியவை அனைத்தும் பொய்யென்று நிறுவ பல முனைகளில் பல முயற்சிகள் செய்யப்பட்டன. இவ்விவாதம் இரவு 9.05க்கு ஆரம்பாகி இரவு 12க்கு பத்து நிமிடம் இருக்கையில் முடிந்தது இங்கு கவனிக்­கத்தக்கது. இவ்விவாதத்தின் இறுதியில் உரை­யாற்றிய சோம ஹிமி ”அஷ்ரப் எதையெல்லாம் காட்டி மழுப்பினாரோ அவையெல்லாம் பொய்யென்று நிரூபணமாகி விட்டன. கடைசியில் நான் அன்று கூறியவை தான் சரியென இப்போது உறுதியாகியிருக்கின்றன. இது சிங்கள நாடு சிங்கள மக்களுக்கு என்று இருப்பது இந்த ஒரு நாடு தான். தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வேறு நாடுகள் இருக்கின்றன. சிறுபான்­மையோரை நாங்கள் இங்கு வாழ வேண்டாம் என்று கூற­வில்லை. அவர்கள் வாழும் வரை பெரும்பான்­மையினரை அனுசரித்து வாழச் சொல்லித் தான் கேட்கிறோம். பெரும்பான்மையி­னரின் உரிமைக­ளுக்கு இடங்கொடுத்து வாழ அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மற்றும்படி யுத்தத்துக்கு யுத்தத்தால் தான் பதில் சொல்ல முடியும்.” என்ற போர்ப் பிரகடனத்துடன் முடித்தார்.

இன்று சோம ஹிமி தன்னை முழுமையாக இன்னார் தான் என வெளிக்காட்டியுள்ளார். இது வெறுமனே அவருக்குள் இருந்து வந்த பேரின­வாதம் அல்ல. அவரைச் சூழ இயங்குகின்ற பேரின­வாதமயப்படுத்தப்பட்ட சூழலால் கவனமாக கட்டமைக்கப்பட்டவர் அவர். எனவே இந்த சூழ­லில் பல்வேறு சக்திகளும் பல்வேறு நலன்களும் ஒன்று சேர்ந்து ஒருவர் எப்படி தயாராக்கப்படு­கிறார், எப்படி நிலைநிறுத்­தப்படுகிறார் என்பதற்கு இவர் ஒரு நல்ல உதாரணம்.

அஷ்ரப்புக்கும் சோம ஹிமிக்குமிடையிலான விவாதத்தின் போது சோம ஹிமி இன்னுமொரு முக்கிய பிரச்சினையை கிளப்பியிருந்தார். அது சிங்கள மக்களின் சனத்தொகை குறைகிறது என்றும், முஸ்லிம்கள், தமிழர்கள் போன்றோரின் சனத்தொகை அதிகரிக்கின்றது என்பதுமாகும். திட்டமிட்டு சிங்கள சனத்தொகை குறைக்கப்படு­வதாகவும், எனவே சிங்களப் பெண்களை அதிக குழந்தைகள் பெறுமாறும் அவர் அதில் கூறியிருந்­தார். இதே பிரச்சினையை அவர் 27ஆம் திகதி நடந்த டீ.என்.எல். கலந்துரை­யாடலிலும் கூறினார்.

வெறுமனே சோம ஹிமி விவகாரம் என்றல்ல பொது­வாக சிங்களப் பேரின­வாதம் எடுத்துவரும் நவீன வடிவங்க­ளையும், அது தன்னை நிலை­நாட்ட எடுத்து வரும் முயற்சி­களையும், அதன் திட்டமிட்ட சாமர்த்தியமான அணுகுமு­றைகளையும் சரியா­கக் கணித்­தால் அதன் முக்கிய பண்­பொன்று புலப்படும். கடந்த கால பாசிசத்தின் வடிவம், திசைவழி, பண்பு என்பவற்றை ஒரு மறுவாசிப்பு செய்தால், இங்கு அதன் வெளிப்­பாடுகளை இனங்காணலாம். இனி பேரினவாதம், பேரின­வாதிகள் என்கிற பதங்க­ளுக்கு விடைகொடுத்து விட்டு இனி பாசிசம், பாசிஸ்டுகள் என்கிற பதப்­பிரயோகங்களை பயன்படுத்த வேண்டிவரப்­போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று மட்டும் தற்போதைக்கு சொல்லி வைக்கலாம்.

சமவாய்ப்புச் சட்டமும் பேரினவாதமும்! பாசிசத்தின் கூறுகள் தெரிகின்றன?

என்.சரவணன்

இன்றைய அரசியல் மற்றும் பேரினவாதச் சூழலில் முக்கிய சூடுபறக்கும் பேசுபொருளாக சமவாய்ப்புச் சட்டம் ஆகிவிட்டிருக்கிறது.

- சமவாய்ப்புச் சட்டத்துக்கு எதிராக ஆனந்தா, நாலந்தா, தர்மராஜா, விசாகா போன்ற நாட்டின் முன்னணி சிங்கள பௌத்த பாடசாலைகளின் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

- அஷ்ரப் தான் இதற்கு காரணமென்று கூறி அஸ்ரப்புக்கு எதிராகப் பல கண்டன அறிக்கைகள்.

- இச்சட்டத்துக்கு அரசாங்கத்துக்குள்ளேயே ஆதரவு இல்லை.

- சமவாய்ப்புச் சட்டம் பற்றிய இனவாத பீதியைக் கிளப்புகின்ற கட்டுரைகள், செய்திகள், விவாதங்கள்.

- ஒக்டோபர் 14ஆம் திகதி 23 அமைப்புகள் ஒன்றிணைந்து இச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

- சமவாய்ப்புச் சட்டத்தினை ”லங்காதீப” ஒக்டோபர் 8ம் திகதியிலிருந்து தினசரி, பகுதிபகுதியாக மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறது.

- இச்சட்டத்துக்கு எதிராக ஒக்டோபர் 8ஆம் திகதி பௌத்த இளைஞர் காங்கிரஸ் மாநாடு நடத்தியது.

பொ.ஐ.மு. அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னரிலிருந்து இப்போது வரை பஞ்சமில்லாத­வகையில் ஆணைக் குழுக்களை அமைத்து வருவதும் எந்தவொரு ஆணைக்குழுவும் இந்த ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் தனது விசாரணைகளை முடித்து அவற்றிற்கான தீர்வு கண்டதாக இல்லை.

முன்னைய வாக்குறுதிகளுக்கு என்ன பதில்?

இந்த நிலையில் பொ.ஐ.மு அரசு தனது ஆயுளை முடிக்கப் போகும் தறுவாயில் முன்வைத்திருக்கும் புதிய திட்டம் இந்த சமவாய்ப்புச் சட்டம் ஆகும். அரசாங்கம் சமவாய்ப்புச் சட்டம் என்று புதிதாக எதனையும் கொண்டு வருவதற்கு முன்னர் அது தனது முன்னைய வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதா எனப் பார்த்ததாகத் தெரியவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது மட்டுமன்றி நேரெதிரான நடவடிக்கைகளை செய்து முடித்திருப்பது குறித்தும் புதிதாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஏற்கெனவே அரசு தான் வழங்கியிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் புதிது புதிதாக மேலும் வாக்குறுதிகளை வழங்கிக்­கொண்டே காலம் தள்ளுவது அதன் போக்காகப் போய் விட்டது. இந்த ஐந்து வருட காலத்தில் இப்படிப்பட்ட வாக்குறுதிகளைக் கண்டு புளித்துப் போய்விட்ட நிலையிலேயே இந்த சமவாய்ப்புச் சட்டம் பற்றிய போலி நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறது.

அரசின் இந்தச் சட்டம் அரச நிர்வாகத்தில் செல்லுபடியற்றதென்பதும், வெறுமனே தனியார் துறையினர் மீது மட்டுமே செல்லுபடியாகின்ற வகையிலேயே இது தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதனை முதலாளிமார் சம்மேளனம் எதிர்த்­திருக்கிறது. ஏற்கெனவே தொழிலாளர் சாசனம், பெண்கள் சாசனம் என எந்தவொரு சாசனத்தைக் கூடக் கொள்கையளவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற இயலாத இந்த அரசாங்கம் எப்படி ஒரு சட்டத்தை இயற்றிவிட முடியும். தொழிலாளர் சாசனத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற இயலாத வகையில், முதலாளிமார் சம்மேளனம் அதனை எதிர்த்து, அரசை எச்சரித்ததோடு அதனை கிடப்பில் போட்டு விட்டது. இந்த அரசு ஆட்சியலமர்ந்ததும் பெரும் பிரச்சாரத்தோடு தொடக்கிய ”ஒம்புட்ஸ்மன்” பதவியும் ஒன்றுக்கும் பிரயோசனமற்ற ஒன்றாக ஆனமை பற்றியும் தெரிந்ததே.

முதலில் பௌத்திற்கு முன்னுரிமை
கைவிடத்தயரா?

எனவே அரசு உண்மையில் இதயசுத்தியோடு­தான் இவ்வகைச் சட்டங்களை இயற்றினாலும் கூட அதனை கருவிலேயே அழிக்கக்கூடிய சக்திகள் அரசைவிட வலுவானதாக உருவாகியிருக்கிறது என்பது தெரிந்ததே. பெண்கள் சாசனத்துக்கு சட்ட அந்தஸ்து கொடுக்கத் தயாரில்லாமல் ஆணாதிக்க அரச யந்திரம் என்ற ஒன்று எப்படி இருக்கிறதோ, அது போல தொழிலாளர் சாசனத்துக்கும் சட்ட அந்தஸ்து கொடுக்க முடியாதபடி அரசு முதலாளிமாரின் நலனில் தங்கியிருக்கிறது.

அது மட்டுமன்றி குறைந்தபட்சம் உத்தேச அரசியலமைப்பில் பௌத்தத்துக்கு முன்னுரிமை­யளிப்பதை மீளவும் உறுதிப்படுத்தியிருக்கிற அரசு இந்த சமவாய்ப்புப் பற்றிப் பேசுவது நகைப்புக்­குரியது. 1972ஆம் ஆண்டு கொண்டு­வரப்பட்ட இல­ங்கையின் முதலாவது குடியரசு அரசியல­மைப்பில் இதே ஸ்ரீலங்கா அரசு தலைமையிலான அரசு தான் வரலாற்றில் பௌத்தத்துக்கு முன்னு­ரிமை அளிக்கின்ற ஏற்பாட்டை நடைமுறைக்குக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் ஐ.தே.க. அரசில் 1978 இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு கொண்டு வரப்பட்ட போது ஐ.தே.க விரும்பினாலும் அதனை நீக்க முடியாதிருந்தது. அப்படி நீக்கியிருந்தால் சிங்கள பௌத்தர்களின் கடும் எதிர்ப்பை ஐ.தே.க. அரசு எதிர்நோக்கி­யிருக்க வேண்டி இருந்திருக்கும். எனவே ஐ.தே.க.வும் தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்த அவ் ஏற்பாட்டை சமாதானம், ஐக்கியம், சௌஜன்யம் என்ற போர்வையில் ஆட்சிக்கமர்ந்த பொ.ஐ.மு. அரசு ”சமாதானத்துக்­கான யுத்தம்” என்று இன அழிப்பை தொடர்ந்த­தைப் போலவே ”தீர்வு யோசனை” என்கிற போர்வையில் மதசார்பு அரசொன்றை உறுதி செய்யத் துணிந்திருக்கிறது. ஐ.தே.க. அரசாங்­கத்தில் ஏனைய சிறுபான்மை மதங்களுக்கு இருந்த அரை அமைச்சுக்களைக் கூட (இந்து, முஸ்லிம் ராஜாங்க அமைச்சுக்கள்) பொ.ஐ.மு அரசாங்கம் பதவிக்கு அமர்ந்ததும் அவற்றை இல்லாமல் செய்ததுடன் அவற்றை திணைக்க­ளங்களாகச் சுருக்கியது. ஆனால் பௌத்த சாசன அமைச்சினை முழு அமைச்சாக தொடர்ந்து வைத்திருப்பதுடன் புத்த சாசன அமைச்சை நேரடியாக ஜனாதிபதியே பொறுப்பேற்றார். இரண்டாயிரமாம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 14 கோடி ரூபா பௌத்த சாசன அமைச்சுக்கு ஒதுக்கியுள்ளதும் இங்கு குறிப்பிடத்­தக்கது. இன்றைய ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சர் மட்டுமல்ல அவர் புத்த சாசன அமைச்சரும் கூட. இந்தப் பின்னணியில் பார்க்கின்ற போது இன்றைய சமவாய்ப்புச் சட்டத்தை கொண்டுவர முன்னர் இலங்கையை மதசார்பற்ற அரசாக முதலில் பிரகடனப்படுத்­தியிருக்க வேண்டும். இந்த அரசால் அதனைச் செய்ய முடியாமல் போனது ஏன்?

எச்சரிக்கை

இது வரை எந்த அரசாங்கமும் வழங்காத அளவுக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய அரசாங்கமும் இது தான். அது போல கொடுத்த வாக்குறுதிகளை அளவுக்கதிகமாக மீறிய அரசாங்கமும் இது தான். அரசாங்கத்தின் காலத்தை கடத்தவும், உள்ளூரிலும் சர்வதேச அரங்கிலும் பிரச்சாரம் செய்யவும் நாளுக்கொரு நாள் புதிய புதிய காகிதச் சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் பீரிசுக்கு நிகர் பீரிசே தான்.

ஒரு போதும் நடைமுறைக்கு வராத இந்தச் சட்டம் குறித்து நுணுக்கமாக ஆராய்வது காலவிரயச் செயல். ஏனெனில் தீர்வுப் பொதி குறித்து நடக்காத விவாதமா? ஆராயாத வல்லுனர்களா? அது போல இதுவும் எதனையும் சாதிக்கப் போவதில்லை.

உண்மையில் அரசின் இந்தப் போலி முனைப்புகள் ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் சிங்கள பௌத்த போpனவாத தரப்பில் இதனைப் பார்க்கும் விதத்தை அறிந்தால் ஆச்சரியப்­படுவீர்கள். சமீப காலமாக சிங்களப் பத்திரி­கைகளில் நடக்கும் விவாதம் இந்தச் சட்டம் சிங்களவர்களுக்கு இல்லாத உரிமைகளை தமிழர்­களுக்கும், முஸ்லிம்களுக்கும் வழங்கப்­போவதாகவும், ஏற்கெனவே சிங்கள பௌத்தர்­களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற இவ்வினங்கள் இதனால் விசேட சலுகைகளை அனுபவிக்கப் போவதாகவும் இதனை தடுத்து நிறுத்தாவிடில் சிங்கள இனம் அழிந்து விடும் என்றும் எச்சரிக்கின்றன.

கடந்த 3ஆம் திகதி ”திவயின” ஞாயிறு இதழில் தலைப்புச் செய்தியாக ”சமவாய்ப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டால் நீதிமன்றம் செல்ல ஒரு கூட்டம் தயாராகிறது” என்கிற செய்தி வெளியானது. இதன் உள்ளடக்கத்தில், இச்சட்டம் கொண்டு வரப்படுமானால் அது அரசியலமைப்­பின் பல பிரிவுகளுக்கு முரணாகும் என்றும் ஏதேனும் ஒரு அடிப்படை உரிமை அல்லது மொழி சம்பந்தப்பட்ட விடயங்கள் குறித்த சிக்கலைத் தீர்க்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கே உரியது என்றும் அவ்வாறான அடிப்படை உரிமைகள் குறித்த விடயங்களைப் பற்றிய தீர்மானிக்கும் அதிகாரத்தை வேறு நிறுவனங்களுக்கு வழங்கு­வதன் மூலம் 126வது பிரிவு மீறப்படுவதாகவும் இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லத் தயாராகி வருவதாகவும்,கூறப்பட்டிருந்தது.

தற்செயலாக சமவாய்ப்பு பற்றிய ஆணைக்­குழுவுக்கு நியமிக்கப்படும் ஆணையாளராக அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் நியமிக்­கப்பட்டால் சிங்கள பௌத்தர்களுக்கு நியாயம் கிடைக்காது போகுமென்றும் தெரிவிக்­கின்ற அவர்கள் இச்சட்டம் அரசியலமைப்பின் 12வது பிரிவுக்கு முரணானது என்றும் தெரிவிக்கின்றனர்.

இது நடைமுறைக்கு வந்தால் பௌத்த பாடசாலைகளில் 20 வீதம் அல்லது அதற்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லிம் மாணவர்கள் சேர்க்கப்­பட்டால் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்­கின்ற அரசியலமைப்பின் 9வது பிரிவுக்கும் அது முரணானதாக அமையுமெனவும் தெரிவித்துள்­ளனர்.

கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பிரதே­சத்திற்குள் தமிழ் முஸ்லிம்களின் சனத்தொகை 70வீதமாக இருப்பதாகவும் இச்சட்டம் அமுலுக்கு வந்தால் சிங்கள-பௌத்த பாடசாலைகளின் தனித்துவத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக ஆக வாய்ப்புண்டெனவும் தெரிவிக்கின்றனர்.

இது தவிர இச்சட்டம் கொண்டுவரப்பட்டால் இந்நாட்டிலுள்ள ”சாதி” எனும் சமூகக் கட்டமைப்­புக்கு சில தனித்துவங்கள் காக்கப்படுமெனவும் அவ்வாறு செய்யப்பட்டால் சிங்களவர்கள் சாதி ரீதியாக பிளவுபட்டு அழிந்து விடுவார்கள் என்றும் தொழில் வாய்ப்புகளிலும் விகிதாசாரம் பின்பற்­றப்படுமானால் சிங்களவர்களுக்கு அது பாதகமாக அமையுமெனவும் இதனைக் கருத்திற் கொண்டு தாமதிக்காது இதற்கெதிராக சட்ட நடவடிக்கை­களை மேற்கொள்ள தயாராகி வருவதாக அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொண்டா ரெஸ்ட்
அஷ்ரப் பிஸி

இதே நாளைய ”திவயின” பத்திரிகையில் ”சமவாய்ப்புச் சட்டத்தின் ஆபத்து!” என்ற தலைப்பில் சானக்க லியனாராச்சி என்பவர் எழுதி­யுள்ள கட்டுரை முழுக்க முழுக்க முஸ்லிம்க­ளுக்கும் அமைச்சர் அஷ்ரப்புக்கும் எதிராக எழுதப்பட்டிருக்கிறது. சமீப காலமாக பேரினவா­தத்தின் தாக்குதலுக்கு அதிகளவு அகப்பட்டிருப்­பவர் அஷ்ரப் என்பது கவனிக்கத்தக்கது. அச்செய்தியில்,

”...சிறுபான்மை இனங்களுக்கு நாட்டின் உயர்ந்த இடத்திலிருக்கும் சிங்கள பௌத்த பாடசாலைகளில் உயர்ந்தபட்ச கோட்டாவை கேட்கிறார். சாஹிரா கல்லூரி போன்ற பாடசா­லைகளில் இடப்பற்றாக்குறை காரணமாக அவர் இப்படிக் கேட்கிறார் என்றால் அதனை சிங்கள பௌத்த மாணவர்களின் வாய்ப்புகளை பறிப்பதற்­கூடாகவா செய்ய வேண்டும்... இன விகிதாசாரத்­தின்படி தான் இந்தக் கோரிக்கை விடுக்கப்படுகிற­தென்றால் இந்த நாட்டில் 70 வீத சிங்கள பௌத்தர்களுக்கு சாஹிராவில் கோட்டா வழங்க அஷ்ரப்பால் முடியுமா...?

எனவே நாங்கள் தெளிவாகக் கூற விரும்பு­வது, பௌத்த பாடசாலைகளுக்குள் முஸ்லிம்கள் நுழைந்து முஸ்லிம்களின் கலாசார தனித்துவ­ங்களை பௌத்த பாடசாலைகளுக்குள் நுழைக்க அஷ்ரப் திட்டமிட்டு வருகிறார் என்பதே. அவருக்குத் தேவைப்படுவதெல்லாம் தற்போதைய நெருக்கடிகளை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தனது அரசியல் இலக்கை அடைவதே.

...எனவே இந்த நிலைமையை விளங்கிக் கொண்டு சரியான சிங்களத் தலைமை உருவாக்­கப்பட வேண்டும்.” எனக் கோருகிறது அந்தக் கட்டுரை.
பேரினவாதமயப்படுத்தப்படும் மக்கள்

20வீத இட ஒதுக்கீட்டை அஷ்ரப் கோரிய­தாக முதலில் செப்டம்பர் 19ஆம் திகதி ஞாயிறு ”திவயின” பத்திரிகையின் தலைப்புச் செய்தியி­லேயே வெளியானது. பின்னர் 21ஆம் திகதி வெளியான ”திவயின”வில் ஆசிரியர் தலையங்­கத்­திலும் இதே விடயத்துக்காக அஷ்ரப்பைத் தாக்கி எழுதப்பட்டிருந்தது. இல்லாத ஒன்றை சோடித்து இனவாதத்தைத் பரப்புவதற்காக வெளியான இச்செய்தியையே ஆதாரமாகக் கொண்டு தான் பல பேரினவாதக் கட்டுரைகள் வெளியாகத் தொடங்கின. புனையப்படும் ஒரு செய்தி நிறுவனமயப்பட்ட பேரினவாதத்தால் எப்படி வேகமாக நம்பவைக்கப்படும் என்பதற்கும். இலகுவாக அதற்குள் விழுமளவுக்கு பேரினவாதம் எந்தளவு மக்கள்மயப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கும் நல்ல உதாரணம்.

ஒக்டோபர் 7ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய போது அமைச்சர் அஷ்ரப் தான் கூறாத ஒன்றைப் பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகக் கூறவேண்­டியதாயிற்று. டீ.என்.எல். தொலைக்­காட்சி சேவையில் அஷ்ரப்பிடம் எடுக்கப்பட்ட பேட்டியிலும் இது பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டன.

இப்படித்தான் கடந்த 1998 ஜனவரி 18ஆம் திகதியன்று வெளியான திவயின பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில், அஷ்ரப் ஆயுதம் தாங்கிய நபர்களுக்கு ஆதரவளித்து வருகிறார் என்றும், பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ள பிரிவினைவாத சக்திக­ளுக்கும், திவயினவுக்கு எதிராக இருப்போருக்கும் ஆதரவளிப்பதாக எழுதப்பட்டிருந்ததை எதிர்த்து 25 கோடி ரூபா நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இவ்வாறு ஒரு பக்கம் பேரின­வாதம், இன்னொருபுறம் முதலாளிமார் இவ்விரு சாராரும் இன்றைய இனப்பி­ரச்சினை மாத்திரமல்ல நாட்டில் எந்த அடக்கப்படும் பிரிவினரதும் உரிமை­களை வழங்கவிடப் போவதில்லை என்பதற்கு தீர்வுப் பொதி தொடங்கி, தொழிலாளர் மற்றும் பெண்கள் சாச­னங்கள் ஈறாக இன்றைய சமவாய்ப்புச் சட்டம் வரை சிறந்த உதாரணங்கள்.

வீரவிதானவின் அறிக்கை

இந்த சமவாய்ப்புச் சட்டத்துக்கு எதிராக சிங்கள வீரவிதான இயக்கம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு. (திவயின ஒக்டோபர் 8)

”...சர்ச்சைகள் தோன்ற வழியில்லாத சந்தர்ப்பங்களிலும், தேர்தல் போன்ற தீர்மான­கரமான நிலைமைகளிலும் சிறுபான்மையோர் செய்தது அரசின் பதவிகளை கைப்பற்­றும் எத்தனிப்பையே. அல்லது அரசை விரல்நீட்டி தோப்புக்கரணம் போட வைப்பதே.

...குறைந்த வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு குறைந்த எண்ணிக்­கையே இருக்கின்ற இருவர்கள் அரசை அமைப்பதில் கலந்து கொண்டு பின் அரசையே பிணைக்­கைதிகளாக ஆக்கி நாட்டிலுள்ள சிங்களவர்களின் உரிமை­களையும், இறைமையையும் வரலாறு முழுக்கச் சுரண்டி வந்துள்ளனர். அர­சாங்கத்தின் பதவிக்காலம் முடிவ­டைகையில் தமக்கு சலுகை­கள் தந்து வாழவழிவிட்ட அரசாங்கத்தோடு மோதி எதிர்க்கட்சிக்கு தாவும் வரலாற்­றையும் அவர்கள் கொண்டிருக்­கிறார்கள்...

1. எனவே சிறுபான்மையினங்கள் மக்களின் அரசாங்கத்தை மிரட்டுவதை, நிர்ப்பதிப்பதை கண்டிப்போம்!

2. நாட்டின் அரச யந்திரத்தை முடக்க முயற்சி செய்யும் சிறுபான்மை இனவாதிகளை-பொம்மைத் தலை­வர்களுக்கு இடம்கொட­வேண்டாம்.

3. நாட்டின் அனைத்து தேசபக்தி கொண்ட­வர்கள்-கட்சிகள் ஆகியன, இது இனத்துக்கும், இனஐக்கியத்துக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து என்பதை கருத்திற்கொண்டு மிகவும் கவன­மாகவும், முன்யோசனையுடனும் செயற்­­படுமாறும் கட்சி பேதமற்று இனத்துக்காக ஐக்கியப்படுமாறும் கேட்டுக்கொள்கிறோம்...!”

77 படுகொலைகளுக்கு
காரணம் தமிழர்கள்?

சமவாய்ப்புச் சட்டத்துக்கு எதிராக பௌத்த இளைஞர் காங்கிரஸ் ஒக்­டோபர் 8ஆம் திகதி ஏற்பாடு செய்­திருந்த மாநாட்டில் மகா சங்கத்தின் தலைவர் மடிகே பஞ்ஞானசீல உட்பட பல பிக்குமாரும், இன்னும் பல பேரினவாதிகளும் உரையாற்றியதோடு மண்டபம் வழிய பலர் கலந்து கொண்டிருந்தனர். மடிகே பஞ்ஞான­சீலர் பேசும்போது, ”...1977 ஓகஸ்ட் 23இல் யாழ்ப்பாணத்தில் சிங்களக் கடைகளை உடைத்து, அழித்து மகா கலவரத்தை உண்டுபண்ணி 23,ஆயிரம் சிங்களவர்கள் அனாதை­களாக்­கப்­பட்டார்கள். யாழ்ப்பாணத்தில் புராதன பெரிய விகாரைகள் மட்டும் 21 இருந்தது. இன்று அவை என்ன ஆனது? ஈழ வரைபடத்தில் உள்ளடக்­கப்படுகிற கடற்பகுதியில் மூன்றில் இரண்டு பகுதி சிங்களமல்லாத­வர்களின் கைகளுக்காம். அப்படி நடந்தால் மீன்பிடித் தொழிலிலுள்ள 74 வீத சிங்கள மீனவர்களின் கதி என்ன? ...இப்படி சிங்களவர்களின் உரிமை­களை பறித்து விட்டிருக்கிற நிலையில் இப்போது இந்த சமவாய்ப்புச் சட்டம்...” என்றிருக்கிறார்.

அரசு எப்படி சரணடைந்தது?

எப்படியோ 7ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் விவாதிக்­கப்படவிருந்த இந்த சமவாய்ப்புச் சட்டமூலம் அன்று நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருக்கக்கூட இல்லை. எனவே பேரினவாதத்தின் திட்டமிட்ட எதிர்ப்புகள் அரசை எப்படி சரண­டையச் செய்தது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

இதெல்லாவற்றையும் விட இம்­முறை இது சிங்கள மாணவர்­களுக்கு பாதகமான ஒன்று என்ற பிரச்சாரத்தை கட்டவிழ்த்து ஆனந்தா, நாலந்தா, தர்மராஜ ஆகிய பாடசாலை மாண­வர்கள், பெற்றோர்கள் சிங்கள அமைப்­புகள் எல்லாவற்றையும் சேர்த்து பெரும் ஆர்ப்பாட்டமொன்றை 7ஆம் திகதி­யன்று மருதானையில் நடத்தியிருந்­தனர். 9ஆம் திகதி விசாகா மகளிர் வித்தியாலயத்தின் பழைய மாணவிகள் சங்கத்தினரைக் கொண்டு பம்பலப்­பிட்டியில் ஒரு ஆர்ப்பாட்­டத்தை நடத்தினர்.

நிறுவனமயப்படும் பாசிசம்

பாசிசம் நிறுவனமயப்படும் போது அது அரசதிகாரம், அரச நிர்வாகம், படை, வெகுஜன இயக்கங்கள், மத நிறுவனங்கள், நீதித்துறை என சகல இடங்களிலும் இரகசியமாக காலூன்­றும். இன்று அந்த காலூன்றல் பாட­சாலை உள்ளிட்ட கல்வித்­துறையிலும் விதைக்கப்படத் (planting) தொடங்கி விட்டன. அதன் முக்கிய ஆரம்பம் தான் இந்த நிலைமையைப் பயன்­படுத்தி சிங்கள பௌத்த மாணவர் மத்தியில் சென்று அவர்களை வீதிக்கு இறக்கி ஆர்ப்பாட்டத்துக்கு தயார் படுத்தியமை.

மேலோட்டமாகப் பார்த்தால். இவை வெறும் சம்பவங்கள், செய்திகள் தான். உன்னிப்பாகவும், எச்சரிக்கை கண்காணிப்புடனும், தூரநோக்குடனும் இதனைப் பார்க்கத் துணிபவர்களுக்கு எதிர்காலம் பற்றிய அச்சத்தையும், அதன் ஆபத்தையுமே உணர்த்தும். இங்கு கூறப்படும் அமைப்புகள் வெவ்வேறான அமைப்புகளாகத் தோன்றினாலும், இன்று அதற்கு ஒரே நிகழ்ச்சி நிரலின் கீழ் அணிதிரளக்கூடிய பேரினவாதச் சித்தாந்தமும், அதற்கான நிறுவனமயப்பட்ட அமைப்பு வடிமும் உண்டு. அரசு அதற்குக் கட்டுப்பட்டு இருக்கிறது. தீர்மானிக்கும் ஆற்றல் படிப்படியாக பாசிச சக்திகளிடம் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது. பாசிசம் மக்கள் மயப்பட்டுக் கொண்டி­ருக்கிறது என்பதை மட்டும் தற்­போதைக்குக் கூறலாம்.

சிங்கள வீரவிதான: பாசிசம் ஜாக்கிரதை!

என்.சரவணன்

”தேசிய இயக்கத்தில் பாசிசப் போக்கு வரத்தொடங்கியுள்ளது...”


இவ்வாறு கூறியவர் வேறு யாருமல்ல சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு கோட்பாட்டு உருவம் கொடுப்பதில் பெரும் பங்கு வகித்து வந்தவரும் ”ஜாதிக்க சிந்தனைய” அமைப்பின் தலைவருமான நளின் டி சில்வா தான். திவய்ன பத்திரிகையில் தான் தொடர்ந்து எழுதி வரும் பத்தியில் (16 மே 1999) சிங்கள வீரவிதான பற்றி அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

”வீரவிதானவின் தலைவர் சம்பிக்க ரணவக்க ஒரு சிங்கள பௌத்த பாசிஸ்ட்”

இதனைக் கூறியவர் அமைச்சர் மங்கள சமரவீர கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இந்த இரு கூற்றுக்களையும், அதனைக் கூறியவர்களையும் கவனமாகப் பாருங்கள். முன்னையவர் சிங்கள பௌத்த பேரினவாத வெறிக்கு சித்தாந்த வடிவம் கொடுப்பதில் முன்னின்று வருபவர். இரண்டாமவர் சிங்கள பௌத்த அரச கட்டமைப்புக்கு தற்போது தலைமை ஏற்றிருக்கும் அரசாங்கத்­தின் தற்போதைய பேச்சாளராக இருப்பவர். இந்தச் சக்திகளே இப்படி ஒரு இடத்தை வந்தடைந்திருக்கின்றன என்றால் தற்போதைய அடக்கப்படும் தமிழ், முஸ்லிம், மலையக தேசங்கள் இது குறித்து எவ்வளவு விழிப்புடன் இருக்க, செயற்பட வேண்டியிருக்­கிறது என்பதை விளங்கிக் கொள்வோம்.

இன்றைய பேரினவாதம் பாசிச வடிவமெடுக்­கத் தொடங்கி விட்டது. கடந்த கால இனக்­கலவரங்கள், மற்றும் ஏனைய இன­ங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எதற்கும் ஒரு ஒரு நிறுவ­னமயப்பட்ட அமைப்போ, சமூக கட்டமைப்போ, அதற்கான ஸ்தூலமான சித்தாந்தமோ இருந்தது கிடையாது. அவை சித­றுண்ட சித்தாந்தமாகவும், நிறுவனங்களாகவும், தனி நபர் வெறியாகவுமே இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைய பேரினவாதம் அப்படிப்­பட்டதல்ல. அதற்கு என்று இன்று சிங்கள வீர விதான எனும் ”அமைப்பு” வந்து விட்டது. சிதறியிருந்த சிங்கள பௌத்த சித்தாந்தம் ஒன்று மையப்படுத்தப்பட்டு அதற்கு கோட்பாட்டுருவம் கொடுக்கப்பட்டாகி விட்டது. அதற்குத் தெளிவான அரசியல் வடிமும் கூட இருக்கிறது. அது இனி எடுக்க வேண்டிய வடிவம்? இராணுவ வடிவம் தான் என்கிற நிலையை உணர்த்தி நிற்கிறது. சமீப காலமாக வீரவிதானவுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் இறக்கப்பட்டிருப்பதா­கவும், இது வரை 200 பேருக்கும் மேற்பட்ட இளைஞர்­களுக்கு முன்னாள் இராணுவத்தினரைக் கொண்டு பயிற்சி அளிக்கப்­பட்டிருப்பதாகவும் கூட அரசாங்க தரப்பைச் சேர்ந்தவர்களே கூறித் திரிகிறார்கள்.

இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என்று கூறப்படும் அனகாரிக்க தர்மபால சிங்கள பௌத்தர்களல்­லாதவர்கள் மீது ஏற்படுத்திய (அவர் நடத்திய ”சிங்கள பௌத்­தயா” பத்திரிகை 1997இல் 100 வருட நிறைவைக் கொண்டாடி­யது) இனக்குரோதம் மற்றும் புனைவுகள், கற்பிதங்கள், ஐதீக­ங்கள் என்பவை பின்னர் வளர்க்கப்பட்ட சிங்கள பௌத்த தூய்மைவாதத்துக்கு பலம் சேர்த்தன. அதன் பின்னர் அரசியல் கட்சிகள் தொடக்கம், வெகுஜன இயக்கங்கள் வரை பல சிங்களத் தூய்மையைப் பாதுகாப்­ப­தற்கான இயக்கங்கள் தொடக்கப்­பட்டன.

70களின் பிற்பகுதி மற்றும் 80களின் முற்பகுதி தமிழ்த் தேசப் போராட்டம் முனைப்பு பெற்றதும், அது ஆயுதப் போராட்டத்­துக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட சூழலும் தென்னிலங்கையில் அரசியல் கட்சிகள் போட்டிக்கு பேரினவாதம் பேசத் தொடங்கின. பேரினவாதம் பேசாமல் அரசியலில் இருப்புக் கொள்ள முடியாத நிலை தோன்றியது. பேரினவாத­மயமாக்கல் என்பது மிகவும் நுணுக்கமாகவும், சாமர்த்தியமாகவும் வளர்ந்து வேறூன்றத் தொடங்கியது.

ஆரம்பத்தில் பாஷா பெரமுன, தேசப்பிரேமி பிக்கு பெர முன, தேசிய விடுதலை முன்னணி, போன்ற அமைப்புகள் அரசியலில் ஈடுபட்டன. அதன் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் ”ஹெல உருமய” எனும் இனவாத அமைப்பு இயங்­கத் தொடங்கியது. களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்­பினர் திலக் கருணாரத்ன (1994இல் ஐ.தே.க.வில் இணைந்தார்) தலைமையிலான இந்த அணியில் தற்போதைய ஜனாதிபதி சந்திரிகாவின் சகோதரனும், முன்னாள் எதிர்க்கட்சித் தலை­வரும் இன்றைய ஐ.தே.க. பிரமுகருமான அனுர பண்டாரநா­யக்கவும் இருந்தார். 70களின் பிற்பகுதி மற்றும் 80களின் ஆரம்ப காலகட்டங்களில் ஐ.தே.க.வுக்குள் இருந்த முக்கிய அணி மாத்ரு பூமிய குழுவினர். இதனை நடத்தியவர் களனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், 1983 கலவரத்தில் முக்கிய பங்காற்றியவருமான சிறில் மெத்திவ். இவர் ”மாத்ரு பூமிய” எனும் இனவெறியைத் தூண்டும் பத்திரிகையை அன்று நடத்தி வந்தார். இது இரு வருடங்கள் வெளிவந்து நின்று போனாலும், பொய் புனைவுகளையும் பேரின­வாதத்தையும் பரப்பி அப்பத்திரிகை ஆற்றிய பாத்திரம் முக்கியமானது.

அதன் பின்னர் கூட நூற்றுக்கணக்கான இனவாத அமைப்­புகள் தோன்றின. ஆனால் அவற்றில் எதுவும் தொடர்ச்சியாக நிலைபெற­வில்லை. ஆனாலும் 80களில், 90களில் பேரின­வாத கட்சிகளாகவே பகிரங்கமாக அடையாளம் காணப்பட்ட கட்சிகள் மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் ”சிங்களயே மகா சம்மத்த பூமி புத்திர பக்ஷய” (சிங்கள மண்ணின் மைந்தர்கள் கட்சி) 1989 தேர்தலில் பராளுமன்றத்துக்கு 2 உறுப்பினர்கள் தெரிவான ம.ஐ.மு. 1994இல் படு­தோல்வி அடைந்தது. இதற்கு­ரிய காரணமாக தென்னிலங்கை புத்திஜீவிகள் மத்தியில் ”இனவாதத்துக்கு சிங்கள மக்கள் கொடுத்த சாட்டை அடி” என்ற போதும் அது அல்ல ஐ.தே.க. மீது தென்னிலங்கை சிங்கள மக்கள் கொண்டிருந்த வெறுப்பும் அந்த எதிரிக்கு எதிரான சக்தியை (பொ.ஐ.மு.­வை) பலப்படுத்த வேண்டும் என்கிற அவாவும் தான் காரண­மாகின. மண்ணின் மைந்தர் கட்சியைப் பொறுத்த­வரை அது அவ்வளவு செல்வாக­்கைப் பெறவில்லை. அதற்கான காரணம் அது பாராளு­மன்ற அரசியலை இலக்காக மட்டுமே கொண்டு இனவாதம் பேசத்­தொடங்­கியமை தான். இந்த இடத்தில் தான் சிங்கள வீரவிதானவோடு தொடர்புறுத்தி பார்க்க வேண்டும். வீரவிதான இன்று வரை பாராளுமன்ற அர­சியலில் அக்கறை காட்டவில்லை. அரசியல்வாதிகளை கடு­மை­யாக எதிர்க்கிறார்கள், தேர்தற் காலங்களில் அவர்களும் சமாந்தரமாக இயங்கு­கிறார்கள். ”சிங்கள பௌத்தர்களின் துரோகிகள்” என்று ஏனைய கட்சிகளை அம்பலப்படுத்த அந்தக் காலங்களை நன்றாக பயன்படுத்திக்­கொள்கிறார்கள். அவர்க­ளின் மூலோபாயம் சிங்கள பௌத்த அரசை கட்டியெழுப்புவ­தற்காக அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக இருந்தாலும் அவர்களின் தந்திரோபாயத்தின்படி அவர்கள் தற்போதைக்கு தாங்கள் இந்த பாராளுமன்ற அரசியலில் இல்லை என்பதை தமது நடவடிக்கைகளின் மூலம் வெளிக்காட்டி வருகின்றனர்.

வீரவிதான இயக்கம் 1995 யூலை 7ஆம் திகதி ஆரம்பிக்­கப்பட்டது. அதனை ஒரு இரகசிய இயக்கமாகவே ஆரம்பித்­தனர் என்ற போதும் இதனை சமூக சேவைகள் திணைக்களத்தில் ”ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகவே” பதிவு செய்தி­ருந்தார்கள். பதிவு செய்வதற்காக அவர்களின் கொள்கை, செயல்திட்டம், யாப்பு, என்பவை கொடுக்கப்பட வேண்டும். அதனைக் கொடு­த்­­தார்கள். ஆனால் அதில் உள்ளவை அல்ல பின் வந்த நாட்களில் அவர்கள் முன்வைத்த செயற்திட்டங்களும், கொள்கைகளும். இதன் ஆரம்பகர்த்தாவான சம்பிக்க ரணவக்க முன்னர் ஜே.வி.பி.யின் ஆரவாளராக இயங்கிவந்தவர். அதன்பின் ”ஜனத்தா மித்துரோ” (மக்கள் தோழர்) எனும் அமைப்பை நிறுவி இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு பற்றிய பல கருத்தாக்கங்களைப் பற்றி ஆராய்ந்தனர். ஏகாதிபத்திய எதிர்ப்பின் அவசியம் பற்றி அதிகம் இவ்வமைப்பால் பேசப்­பட்டது. 90களின் ஆரம்ப அரை தசாப்தகாலமாக இயங்கிய பல்வேறு இனவாத அமைப்புகள் உதிரி உதிரியாக பல்வேறு செயற்பாடுகளை செய்தனர். நளின் டி சில்வா, குணதாச அமசேகர, மாதுலுவாவே சோபித்த ஹிமி, எஸ்.எல்.குணசேகர, பெங்கமுவே நாலக்க ஹிமி, மடிகே பஞ்ஞானசீல தேரோ போன்றோர் இதனை வழிநடத்தியவர்களில் முக்கியமான­வர்கள்.

ஆனால் சம்பிக்கவின் சளைக்காத செயற்திறன், வேகம் என்பவற்றுக்கு முன்னால் அவர்களால் நின்று பிடிக்க முடியவில்லை. சம்பிக்க மெதுமெதுவாக இவ்வமைப்புகளில் தனது சகாக்களை ஊடுருவ வைத்தும் நேரடியாக அனைவ­ரையும் ”சேர்த்து சிங்கள ஆணைக்­குழு”வை ஏற்படுத்தியும் செயற்பட்டதுடன், சகல அமைப்புகளிலும் இருந்தவர்களில் பெரும்பாலா­னவர்களை தனது பக்கம் சேர்த்துக் கொள்ள முடிந்தது. அவர்களில் பெரும்பாலானோரை இன்று வீரவிதா­னவோடு இணைத்து அவர்களின் முன்னைய அமைப்புகளை அப்படியே தனது கட்டுப்பாட்டுக்குள்- ஒரே குடையின் கீழ்- கொண்டுவர சம்பிக்கவால் முடிந்தது.

சிங்கள வீரவிதானவின் கீழ் பல்வேறு நிறுவனங்­களை பினாமி பெயர்களில் தொடக்கி­னார்கள். ”ஸ்ரீ லங்கா ஐக்கிய வர்த்தகர் சங்கம்” இதில் முக்கியமானது. (ஆரம்பத்தில் சிங்கள வர்த்தகத்தின் வளர்ச்சிக்காகவே இது தோற்று­விக்கப்பட்டதாக அதன் தேசியக் கமிட்டி உறுப்பினர் குலதுங்க ராஜபக்ஷ குறிப்பிடுகிறார் -”ஹெலருவன” செப் 99) இதன் நூற்றுக்­கணக்கான கிளைகள் இன்று நாடளாவிய ரிதியில் ஆரம்பிக்­கப்பட்டிருக்கிறது. சிங்களவர் மட்டும் உற்பத்தியில் ஈடுபட­ வேண்டும், ஏனைய இனத்தவரிடமிருந்து விவசாய மற்றும் தொழிற்துறையை படிப்படியாக கைப்பற்றுவது என்பவை தான் வழிமுறை. கிரிபத்கொடவில் கடந்த வருடம் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான ”கிறிஸ்தம்பு பார்ம்” கடையை கைவிடச் சொன்னதும், கேட்காத நிலையில் அதனை குண்டு வீசி தகர்த்ததும், இந்த அடிப்படைகளில் தான். அது போல நுவரெலியா, கண்டி, பொரல்லை போன்ற இடங்களில் தமிழர்களின் கடைகளில் ஒன்றும் வாங்க வேண்டாம் என்று துண்டுப்பிரசுரம் விநியோகித்த­தும், சிங்களவர்கள் என்னென்ன பொருட்களை நுகரலாம் எவற்­றை­யெல்லாம் வாங்கக்கூடாது என்ற பட்டியலைத் தயாரித்து துண்டுப்பிரசுரமாக வெளியிட­்டதும், (இந்தப் பிரசுரமும் பட்டியலும் ”சித்திஜய” எனும் சஞ்சிகையின் ஓகஸ்ட் இதழில் வெளியாகி­யுள்ளது) சகல வங்கிகளிலும் தமிழர்களின் கணக்­குகளைப் பற்றிய தரவுகளைச் சேகரித்துக் கொண்டிருக்கி­றார்கள். இந்த வர்த்தகர் சங்கத்தால் சிங்கள மாணவர்க­ளுக்கென புலமைப்பரிசில் திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களை செய்து வருவதுடன், வர்த்தகர்கள் பலரை உலக நாடுகள் பல­வற்றுக்கு அவரவர் சார்ந்த துறை பற்றி அறிய­வும் பயிற்சி பெற­வும் உறுப்பினர்களை அனுப்பு­தல். எவரெவர் இப்படி போய் வந்திருக்கி­றார்கள் என்பதை வீரவி­தானவின் உத்தியோகபூர்வ பத்திரிகையில் படங்களுடன் பிரசுரிக்கிறார்கள்.

இதனை விட ”வீர­விதான பெண்கள் இயக்­கம்” எனும் இயக்கம் பெண்கள் மத்தியில் இய­ங்கி வருகிறது. பெண்­களை இலக்காகக் கொண்ட அணி­திரட்­ட­லுக்கும் வீரவி­தானவின் நிகழ்ச்சிகள், கூட்டங்கள், ஆர்ப்பாட்­டங்கள், ஊர்வலங்கள் என்பவற்றின் போது பெண்­களைக் கொண்டு செய்விக்கின்ற ”பணி­விடை­களை” செய்விக்கின்­றார்கள். செப்டம்பர் 17ஆம் திகதி அனகாரிக்க தர்மபாலவின் 135வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு படையினருக்கு ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி­யொன்றை அவிஸ்ஸாவெல்ல ஸ்ரீ சுதர்மராம பிரிவேனா விகாரையில் ஒழுங்கு செய்திருந்தது பெண்கள் இயக்கமே என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தது முக்கியமான ஒன்று பயங்கரவாத ஒழிப்பு தேசிய இயக்கம் (NMAT) இது கடந்த 1998 மார்ச் 5ஆம் திகதி மருதானை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து உருவாக்கப்பட்­டதாக அது அறிவிக்­கிறது. இவ்வருடம் ஜனவரி 14ஆம் திகதி இவ்வமைப்பின் வேலைத்திட்டம் முன்வைக்கப்­பட்டது. பெரும் கூட்டமொன்றை ஏற்பாடு செய்து முன்வைக்கப்பட்ட இக்கூட்டத்தில் உரையாற்றிய சம்பிக்க ரணவக்க ”இந்த வேலைத்திட்டத்தை அரசு ஏற்றுக் கொண்டால் படைக்கு ஒரு லட்சம் இளைஞர்களை நாம் தருவோம்” என்றார். (இந்த அறிக்கை பற்றிய முழு விபரமும் பெப்ரவரி சரிநிகரில் வெளி­வந்தது.) தமிழ் மக்களை எப்படி நிரந்தர கண்காணிப்புக்குள் வைத்திருப்பது, ”பயங்கரவாதிகளை” எப்படி ஒழிப்பது என்பதற்கான அவர்களின் திட்டம் அதில் தெளிவாக இருந்தது. இவ்வமைப்பை சிங்கள வீரவி­தானவின் கீழ் இயங்குகின்ற அமைப்பாக அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் வீர­விதானவின் தலைவர்களில் பெருமளவானோர் (சம்பிக்க உட்பட) இதில் உள்ளனர். வீர­விதானவின் வெப் தளத்தில் NMATயின் கொள்கை, வேலைத்­திட்டம் என்பவற்றையும் உள்ளடக்கியிருக்கிறார்கள்.

பாசிசத்தின் முக்கிய தந்திரோ­பாயங்களில் ஒன்று அது முக்கிய சகல தளங்களிலும் ஊடுருவி தன்னை நிலைநிறுத்தி, காலப்போக்கில் கைப்பற்றி, கட்டுபடுத்தும். இன்று வீரவிதான ஊடுருவாத தளங்கள் இல்லையெனலாம். பிரதான அரசியற் கட்சிகளை எடுத்துக்­கொண்டால் ஐ.தே.க.வின் முன்னாள் மேல்மாகாண முதலமைச்சர் சுசில் முனசிங்க இதில் ஒரு அங்கத்தவர், அது தவிர ஐ.தே.க.வின் தற்போதைய தலைமை மட்டத்தில் உள்ள பிரபல நடிகர் ரவீந்திர ரந்தெனிய வீரவிதான கூட்டங்களில் முக்கிய பேச்சாளராகக் கலந்து கொண்டு வருகிறார். (பார்க்க ஹெலருவன-ஜனவரி 99) அம்பாறை­யிலுள்ள பிரேதச சபைத் தலைவர் தயா கொப்ரல் (ஐ.தே.க.) என்பவர் இதன் அமைப்பாளராக உள்ளார். இவரது காரில் வீரவிதானவின் கொடியை மாட்டிக்கொண்டு தான் செல்கிறார். ஆனால் பலாங்கொடயில் ஒக்டோபரில் நடத்தப்பட்ட கூட்டமொன்றில் ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர் காமினி அத்துகோரல ”..வீரவிதான இயக்கத்துடன் ஐ.தே.க. தொடர்பு வைத்திருந்தால் தகவல் தாருங்கள்” எனப் பேசியிருக்கி­றார். உண்மைதான் தலைமை முழுவதும் வீரவிதானவிடம் இதுவரை சரணடையவில்லை. ஆனால் இன்றைய நிலை­மையில் அதற்­கான காலமும் வெகுதூ­ரத்தில் இல்லை.

பொ.ஐ.மு.வைப் பொறுத்த­வரை ஏற்கெனவே ஸ்ரீ.ல.சு.க. என்பது சிங்களப் பேரினவாதத்தின் மீது தான் அது அரசியல் நடத்தி வந்துள்ளது. சிங்கள பௌத்தத்தை நிறுவனமயப்­படுத்துவதில் அதற்கு ஒரு பாரம்பரியம் உண்டு. கள்ளத்­தோணிகள் என்று இந்தியா வம்சாவழியினரை நாடு­கடத்தி­யது, பௌத்த மதத்தை அரச மதமாக்கியது, சிங்களம் மட்டும் சட்டத்தை கொண்டு வந்தது போன்ற பலவற்றை அடுக்கிக்­கொண்டு போகலாம். இன்று அது ”செத்துப்போன” பாரம்பாpய இடதுசாரி கட்சிகளை வைத்துக்­கொண்டு முற்போக்கு முகமூடி போட்டுக்­கொண்­டிருந்தாலும் அதிலுள்ள பலர் வீரவிதான­வுடன் தொடர்புடையவர்களாக இருக்கின்றார்கள். ”சிங்கள ஆணைக்குழு” விசாரணை நடத்திய­போது அதில் சிங்கள மக்கள் தமிழ், முஸ்­லிம்களால் அழிக்­கப்பட்டு வருவதாக சாட்சியம் கூறி­யவர் பொ.ஐ.மு.­வின் குரு­நாகல் மாவட்ட பாராளு­மன்ற உறுப்பினர் ஜயசேன ராஜகருணா. 1998 மே 26ஆம் திகதி இவர் அந்த சாட்சி­யத்தை அளித்திருந்­தார். இன்று தீர்வுப்பொதி தொட­ங்கி, சமவாய்பபுச் சட்டம் வரை பாசிசத்துக்கு விட்டுக்­கொடுத்­தமை வெறும் அதன் சரணடை­வையோ, இயலா­மையையோ மட்டும் காட்ட­வில்லை. பொ.ஐ.­மு.வுக்குள்­ளேயே எத்தனை எதிர்ப்புகள் இருந்தன என்பதை­யும் சேர்த்து அம்பலப்படுத்தின. அச்சக்திகள் யார்?

படையிலிருந்து ஓய்வு­பெற்றவர்கள், மற்றும் இன்றும் களத்தில் இருக்கும் படைத்தலைவர்களும் வீரவிதானவின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள். உதாரணத்திற்கு மேஜர் ஜெனரல் லக்கி அல்கம இதன் அமைப்­பாளர்களில் ஒருவர், அதுபோல மேஜர் ஜெனரல் ஆனந்த வீரசேகர வீரவிதானவின் நிறைவேற்றுச் செயலாளராக இருக்கிறார். பிரேமதாச காலத்தில் ஜே.வி.பி. இளைஞர்களை புனருத்தாபனம் செய்யும் பொறுப்பில் இவர் இருந்தார். (அந்த முகாம்களில் தான் பெரும் சித்திரவதைகள், கொலைகள் நடந்தன என்பது தொpந்ததே.) ”ஹெலருவன” செப்டம்பர் இதழில் தீர்வுப்பொதிக்கு எதிரான இவரது கட்டுரையொன்றும் பிரசுரமாகியிருக்கிறது. இவர் கடந்த 17 ஒக்டோபர் லங்காதீப பத்திரிகைக்கு வீரவிதானவின் சார்பாக அளித்துள்ள பேட்டியின் போது அரசியலில் ஈடுபடுமா வீரவிதான என்று கேட்ட கேள்விக்கு

”எங்களின் நோக்கம் சிங்கள இனத்தை அணிதிரட்டி இடிந்துபோன சிங்கள பொருளதாரத்தை தூக்கி நிலை­நிறுத்துவதே. சகல பேதங்களையும் கடந்து சிங்களவர்களை அணி­திரட்டுவதே.

அப்படியென்றால் அமுக்கக்­குழுவா?

அமுக்கக் குழுவென்பது வெறும் கிளர்ச்சிகர வடிவமல்லவா? அரச யந்திரத்தில் துருப்பிடித்த பக்கங்களை சுத்தப்படுத்துவதே எமது வழிமுறை.” எனப் பதிலளித்துள்ளார்.

சில மாவட்டங்களில் பொலிஸ் அதிகாரிகள் இதன் அமைப்பாளர்­களாக இருப்பது வீரவிதானவின் பத்திhpகைகளிலும் வெளியாகி­யிருந்தது.

இன்றைய தொடர்புசாதன உலகில் பெரும்போக்கு எதுவோ அதனை பின்தொடர்ந்து செல்பவர்­கள் தான் முதலாளித்துவ சந்தையில் நிலைக்க முடிகிறது. அந்த வகையில் இன்று சிங்களப் போpனவாதத்தை உயர்த்திப் பிடிப்பதில் சிங்கள தொடர்பு சாதனங்களுக்கிடையில் போட்டா போட்டி நிலவுகிறது. அச்சு ஊடகங்கள், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட இலத்திரனியல் ஊடகங்கள் சகலதற்கும் இது பொருந்தும். திவய்ன (அதன் சகோதரப் பத்திரிகை வுhந ஐளடயனெ) இலங்கையில் அதி கூடிய விற்பனை உள்ள பத்திரிகையாக இருப்பது இதனால் தான். தொலைக்காட்சி சேவைகளிலேயே டீ.என்.எல். அதிக இனவாதம் கக்கும் ஒன்றாகும். அதுபோல ”சிரச”, ”சவன” இரண்டும் இந்த வகையறாக்களைச் சேரும். வீரவிதான­­வின் செய்திகளுக்கு இவை அதிக முக்கி­யத்துவம் வழங்கி வருகின்றன.

கடந்த சில மாத­ங்­­களுக்கு முன்­னர் லங்காதீப பத்திரிகைக்குச் சென்ற சம்பிக்க ரணவக்க அது சிங்களவர்களுக்கு எதிரான பத்திரிகையென்றும் சிங்கள இனத்தவருக்கு எதிரான இதனை மக்கள் தகர்ப்பார்களென்றும் மிரட்டியிருக்கிறார். பின்னர் அவரை ”விஜய” வெளியீடு நிறுவனத்தின் நிர்வாகம் அழைத்து இருத்தி அவரையே இனி எழுதும்படி கேட்டுக் கொண்டதன் பின்னர். ஞாயிறு Sunday Times இல் எழுத வைத்தி­ருக்கிறது. ”கும்பகர்ண” எனும் பேரில் எழுதப்படும் இந்த வாரா­ந்த பத்தி உடனடியாக சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு லங்காதீபவிலும் வெளியாகி வருகிறது. வீரவிதானவுக்கு இவ்வருடத்திலிருந்து வெப் தளத்தையும் நிறுவியுள்ளது. http//www.svv.org எனும் இத்தளத்தில் பெருமளவு கட்டுரைகள், கொள்கை விளக்கங்கள், வேலைத்திட்டம், அறிக்கைகள் எல்லாம் உள்ளடக்கப்­பட்டுள்ளன. 'கும்பகர்ண'வின் கட்டு­ரைகளும் இதில் அடக்கப்­பட்டுள்ளன. ஐ.தே.க., ஸ்ரீ.ல.சு.க., ஜே.வி.பி.க்கு கூட வெப் தளங்கள் இருக்கின்றன. ஆனால் இலங்கையில் எந்த அரசியற் கட்சிக்கோ அல்லது எந்த சமூக இயக்கங்களுக்கோ இப்படிப்பட்ட ஒரு பெரிய வெப்தளம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வீரவிதானவின் ”தேசியக்கொள்கை வெளியீடு” யூலை 12 அன்று காலை ”சுபநேரத்தில்” மல்வத்த அஸ்கிரி மகாநாயக்கர், கண்டி தலாதா மாளிகை நிலமே நிரஞ்சன் விஜேரத்ன ஆகியோர் முன்னி­லையில் வெளியிடப்­பட்டிருந்தது. இதுவும் இந்த வெப்தளத்தில் கிடைக்கிறது. மாதாந்தம் வெளிவரும் வீரவிதானவின் உத்தியோகபூர்வ பத்திரிகையான ”ஹெலருவன” வீரவிதா­ன­வின் விரிந்து பரந்த செயற்­பாடுகளை தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றன. செப்டம்பர் இதழில் வீரவிதானவின் தேசியக் கமிட்டி உறுப்பினர் பீ.ஏ.மகிபால ”ஊருக்கு 15 பேர் எங்களுடன் இணைந்­தால் எமது இலக்கை சுலபமாக எட்டி விடலாம்” என்கிறார். கங்கொடவில சோம ஹிமியை வீரவிதான வளைத்துப்போட்டுக் கொண்டு விட்டது. ஆரம்பத்தில் வீரவிதானவை திட்டிக் கொண்டிருந்த சோமஹிமி இப்பத்­திரிகைக்கு அளித்தி­ருக்கிற பேட்டியில் ”சிங்கள இனம் மலட்டுத்தனத்துக்கு உள்ளாகி அருகி வருகிறது. சிங்களவர் 2-3 பிள்ளைகள் பெறுகின்ற போது தமிழ் முஸ்லிம்கள் 7-8 பிள்ளைகளைப் பெற்று பெருகி வருகிறார்கள்” என்றெல்லாம் அதில் பேட்டியளித்துள்ளார். அதே பத்திரிகையில் ”203 பாடசாலைகள் மேல்மாகணத்தில் மூடப்பட இருக்கிறது. சிங்கள இனத்தவர் குறைந்து மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளதா­லுமே இந்நிலைமை...” என ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது. (பக்கம் 16)

பல்கலைக்கழகங்கள், பாடசாலை என்பனவற்றில் ஏலவே ஊடுருவி கைப்பற்றத் தொடங்கி விட்டனர். பெருமளவான பல்கலைக்கழகங்களில் ஜே.வி.பி.யின் மாணவர் அமைப்பு தான் பலமானதாக இருந்து வரும் நிலையில் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு தேர்தல்களில் வீரவிதானவுக்கு பெருத்த தலைவலியாக இருப்பது ஜே.வி.பி. அடிக்கடி இவை இரண்டும் மோதிக்­கொள்கின்றன. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பெரும் சண்டை இவ்விரு தரப்பினருக்கிடை­யிலேயே இடம்பெற்றிருந்தது குறிப்­பிடத்தக்கது. இன்று தமிழ் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கும் பல்கலைக் கழகங்களில் அம்மாணவர்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதும், அவர்களை புலிகள் என்றும் அவர்களை பல்கலைகழக விடுதிகளிலில் இருந்து வெளியேற்ற வேண்டுமென்றும் எத்தனித்து வருகின்றனர். இந்தப் போக்கின் அபாயம் குறித்து சமீப காலமாக மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருவதைக் காணமுடிகிறது.

மேலும் முக்கியமாக பௌத்த உயர் பீடங்களுக்குள் ஊடுருவி அதனைக் கட்டுப்படுத்தி வருகிறது என்றால் அது மிகையில்லை. இலங்கையில் சிங்கள பௌத்தர்கள் எல்லோரையும் விகாரை­களுக்கூடாக வலைப்பின்னலாக மையப்­படுத்தி­யிருப்பது இந்த பௌத்த மகா சங்கம். என்பது கவனிக்கத்தக்கது.
வீரவிதான கிராமிய மக்களையும் நகர்ப்புற வர்த்தகர்க­ளையும் இலக்கு வைத்து தான் இயங்குகிறது. அதனால் தான் கிராமப்புற இளைஞர்களில் செல்வாக்கு செலுத்தி வரும் ஜே.வி.பி.­யுடன் அது கடுமையாக மோதி வருகிறது. அதுபோல வீரவிதானவின் சாதியப் பின்னணியைப் பொறுத்தவரை அதன் தலைமையில் இருப்பவர்களில் பெருமள­வில் சலாகம சாதியினராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிங்கள வீரவிதானவின் அமைப்பு வடிவமும், அதன் செயல்வேகத்துக்கும் முன்னால் தென்னிலங்கையில் எந்த அமைப்பும் கிடையாது. ஒவ்வொரு நாளும் ஏதாவது செய்து கொண்டி­ருக்­கிறார்கள். போஸ்டர்களை அடிப்பது, கூட்டம் கூடுவது, நூல் வெளியிடுவது, அறிக்கை வெளியிடுவது, என்பன­வற்றோடு ஒவ்வொரு நாளைய முக்கிய அரசியல் நிகழ்வுகளுக்கும் உடனடியாக தங்களின் நிலைப்­பாட்டை வைத்து விடுகிறார்கள். (வீரவிதானவின் நான்காவது ஆண்டு நிறைவை கண்டியில் யூலை 11 அன்று நடத்திய போது பேசிய சம்பிக்க ரணவக்க ”அதன் நான்கு வருட சாதனைகளில் ஒன்றாக தீர்வுப் பொதியை கைவிடச்­செய்தமை”யை­யும் குறிப்பிடுகிறார்.) அரச கட்டமைப்பு அதற்கு சாதகமாக இருக்கிறது.

அண்மையில் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த மனித உரிமையாளர் ஒருவர் இப்படிக் கூறினார். ”...நாங்கள் தமிழ் மக்களின் உரிமை, போரெதிர்ப்பு, சமாதானம், அரசியல் தீர்வு, என்று ஒரு புறம் கொண்டு சென்ற கருத்தாடலை திசைதிருப்பி சிங்கள பௌத்த மீட்பு, போரே வழி, என்று அதற்கான கருத்தாக்கங்களை நிறுவிவிட்டுள்ளனர் வீரவிதானவினர். இப்போது எங்களைப் போன்ற சமாதானவாதிகளுக்கும் என்ன நேர்ந்திருக்கிறது என்றால் முன்னைய அந்த தமிழ் மக்கள் உhpமை என்பதெல்லாம் பேசவிடாமல் செய்யப்பட்டு, வீரவிதான­வுக்கு பதிலளிப்பதில் எமது கவனம் முழுக்க குவிந்து விட்டுள்ளது. இது ஆபத்தான போக்கு என்பதை இப்போது தான் உணர்கிறோம். வீரவிதான இந்த இடத்தில் தான் வெற்றியீட்டியுள்ளது...”

பாசிசமயமாக்கல் மிக வேகமாக நடந்து வரும் நிலையில், இன்றைய பாராளு­மன்ற அரசியல் கட்டமைப்பில் இயங்கி வரும் பிரதான கட்சிகள் ஒன்றில் தாங்கள் பாசிசத்தை கைப்­பற்ற வேண்டும் அல்லது பாசிச சக்திகள் அக்கட்சிகளை கைப்பற்றிவிடும் நிலை தோன்றி வருகிறது. இடதுசாரி சக்திகள் இதனைக் கிஞ்சித்தும் அடையாளம் காணாமல் வெற்று வர்க்க சூத்திரத்தோடு தங்கள் அரசியலைக் குறுக்கிக் கொண்டுள்ளது தான் பெரும் துயரம்.

வீரவிதானவின் ஊத்தியோகபூர்வ பத்திரிகை




என்.சரவணன்

புனைவுகளும் பாசிசமும்!

”...இது சிங்கள பௌத்த நாடு, ஏனையோர் வந்தேறுகுடிகள், நாட்டைத் துண்டாடி அபகாpக்கப் பார்க்கின்றார்கள், தமிழ்நாட்டோடு இணைத்து எதிர்காலத்தில் பரந்த தமிழ்நாடாக முழு இலங்கையையும் ஆக்கப்போகிறார்கள், தமிழர்களுக்கு நாடு உண்டு, சிங்களவர்களுக்கு உலகில் எந்த நாடும் இல்லை. மிச்சமுள்ள இதனை சூறையாட விடக்கூடாது, தமிழீழம் அமைந்தால் சிங்களவரின் நிலத்தில் மூன்றில் ஒரு பகுதியும், கடற்பகுதியில் 6இல் 4 பகுதியும் பறிபோய்விடும், தமிழ், முஸ்லிம்கள் எல்லோரும் சேர்ந்து சகல தொழிற்துறையையும் கைப்பற்றியிருக்கிறார்கள். சிங்களவர்களை சுரண்ட இனியும் அனுமதியோம், இந்திய வம்சாவழி எனும் ”கள்ளத்தோணிகள்” நாட்டின் செல்வத்தை சுரண்டுபவர்கள், அதில் பலர் சிங்களவரை சுரண்டி இந்தியாவுக்கு சொத்துக்களை கொண்டுபோய் குவிப்பவர்கள். இவர்கள் எல்லோரும் கணக்கு வழக்கில்லாமல் பிள்ளைபெற்று இனத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள், சிங்களவர்கள் மீது திட்டமிட்டு மலட்டுத்தனத்தை உருவாக்குகிறார்கள். சகல அரசாங்க தொழிலையும் கைப்பற்றி இருக்கிறார்கள். இவர்களுக்காக சிங்களவரின் சொத்துக்கள் முழுதும் அரசால் செலவளிக்கப்படுகிறது....”

இந்த புனைவுகள் அடிப்படையானவை. இதனை ஆதாரமாகக் கொண்டு பல்வேறு போலிப் பிரச்சாரங்கள், புனைவுகள், கற்பிதங்கள், வரலாற்றுத் திரிபுகள் என்பவை தொடர்ச்சியாக செய்யப்படுகின்றன. இவை திருப்பிச் திருப்பிச் சொல்லப்படுகின்றன. இவற்றால் சிங்கள மக்களை பீதியுறச் செய்து தேசியவெறி ஊட்டப்படுகிறது. இவை இன்று உண்மை என நம்பவைக்கப்பட்டுள்ளன. கிரெம்ஷியின் அர்த்தத்தில் சொன்னால் ”மக்களின் நியாயமான குறைகளையும், பயங்களையும் தங்களுக்கு சாதகமான வகையில் வார்த்தை ஜாலங்களால் திருப்பி விடுவது பாசிசத்திற்கே உரித்தான அம்சமாகும்.” இதனடிப்படையில் பாசிசத்தின் அடிப்படையான அம்சமான இனத்தூய்மை, அதனடிப்படையில் அமைந்த ஏனைய இனங்களை இனச்சுத்திகரிப்பு செய்தல், இனக்களையெடுப்புக்கு துணிதல், இனப்படுகொலைகளை நியாயப்படுத்தல், இனக்கலப்பு செய்து எதிரி இனத்தின் மீது தூய்மையை கெடுத்தலும், தம்மின பெண்கள் மீது இனப்பெருக்கத்துக்கு நிர்ப்பந்தித்தலும், மற்றைய இனங்கள் மீது இனப்பெருக்கத்துக்கான வாய்ப்புகளை அகற்றுதல் என்பன போன்றவற்றை இங்கு படிப்படியாகக் காண்கிறோம்.

”மண்ணின் மைந்தர்கள்” என்கிற கருத்தாக்கம், அன்றைய ஜெர்மன், இத்தாலி, ஜப்பான், இன்றைய இஸ்ரேல் உள்ளிட்ட பல உதாரணங்களைக் காணலாம். இலங்கையில் கூட வெறும் இனவாத சக்திகள் மாத்திரமல்ல அரசாங்கமும் கூட படைக்கு ஆட்திரட்டுகின்ற போது இதே சுலோகத்தைத் தூக்கிப்பிடித்தது நினைவிருக்கலாம். பிற்போக்குத் தலைமைகளைக் கொண்ட தேசியவாதத்தின் அதீத தூய்மைவாதம் பாசிசத்தில் போய் தான் முடிந்திருக்கிறது என்பதற்கு உலகில் பல வரலாறுகள் உண்டு. ”..தங்களை தேசியவாதிகளாகவும், ஜனநாயகவாதிகளாகவும், பெரும்பான்மையோரை பிரதிநித்துவப்­படுத்துவதாகவும், சிறுபான்மைகள் நாட்டிற்கு வெளியிலிருந்து வந்தவர்களென்றும், தேசத்தின் கலாசாரத்தை சிதைப்பவர்கள், துரோகிகள், அவர்கள் ”மண்ணின் மைந்தாகள்” தான் மண்ணைக் காக்க வேண்டுமென்றும் எல்லாவித பழமைவாதக் கருத்துக்களையும் பரப்பி பெண்களுக்கு பாரம்பரியம் வரையறுத்த இடத்தினை திணித்து பாசிசத்தை நிலைநிறுத்துவார்கள்...” என்கிறார் கிரெம்ஷி

மேலும் கிரெம்ஷி கூறுகிறார் ”..பாசிஸ்டுகள் தங்களின் சக்தியையும், ஸ்தாபனத் திறமையையும் பறையடித்துக்காட்டி ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியை தங்களுக்கு ஆதரவளிக்குமாறு செய்து விடுவார்கள். அதிலும் மிதவாத ஆளும் வர்க்கத் தலைமை நம்பகத் தன்மையை இழந்து வருகிறதோ அல்லது ஸ்திரமற்றதான சூழல் உருவாகி வருகிறதோ, அந்த இடைவெளியை பாசிஸ்டுகள் கைப்பறற்றிவிடுகிறார்கள்....இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் குழப்பியடிக்கப்பட்டு பலவீனப்படும் போது பாசிசம் தலைதூக்கிவிடுகிறது...”

”...வர்க்க எல்லைகளையும் தாண்டி கணிசமான பகுதி மக்கள் பாசிசத்தை ஒப்புக்கொண்டது ஏன்..” என இத்தாலிய அனுபவத்திலிருந்து கிரெம்ஷி எழுப்பிய கேள்வி இங்கும் பொருந்தும். ”...எப்போதெல்லாம் வளமான சிந்தனைகளும் ஜனநாயகத் தன்மைகளும் முடங்குகிறதோ- எப்போதெல்லாம் முதலாளித்துவ தேசியவாதம் தோல்வியைத் தழுவுகின்றதோ- அப்போது பழமைவாதம் பாசிசத்துக்கான தளத்தை உருவாக்கிக் கொள்கிறது..” என்பதுடன் ”...பாசிசம் பெருமுதலாளிகளால்லோ நிலப்பிரபுக்களாலோ உருவாக்கப்படுவதல்ல. குட்டி பூர்சுவாக்களாலும் வியாபாரிகளாலும் உருவாக்கப்படுவது..” என்கிறார்.

தீர்வுத்திட்டம்: அம்பலப்படுத்த அரசின் இரு நூல்கள்!

என்.சரவணன்

”18 அத்தியாயங்க­ளைக் கொண்ட தீர்வுத் திட்டம் முன்வைக்­கப்பட் டுள்ளது.”

”பட்ஜட்டுக்கு முன், குறிப்பாக நவம்பரில் உத்தேச அரசியல் தீர்வுத் திட்டம் பாராளுமன்ற த்துக்கு கொண்டு வரப்படும்.”

-”தீர்வு யோசனையை இது வரை எதிர்த்துவந்த அரசாங்க கட்சிகளில் ஒன்றான ஜ.ஐ.தே.மு. வின் தலைவி அமைச்சரவையில் இருந்து நீக்கம்.”

-”தீர்வு யோசனையை நிறை வேற்றும் முயற்சியில் ரணிலுடன் சந்திரிகா ஆரம்ப உடன்பாடுகள் கண்டுள்ளனர்.”

தீர்வுத்திட்டம் பற்றி உத்தியோக­பூர்வமாக அரசினால் வெளியிடப்பட்டு­வரும் தகவல் இவைதான். தீர்வுத்­திட்டம் குறித்து அரசின் நேர்மையை இவ்வாறு வெளியுலகுக்கு காட்ட அரசு மிகுந்த உற்சாகமெடுத்துவரும் இவ் வேளையில், அரசின் போலித்தனைத்­தையும் பம்மாத்தையும் விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சிங்கள நூலில்...

”அதிகாரப்பரவலாக்கமும் காணி அதிகாரங்களும்” எனும் நூலொன்று நீதி அமைச்சின் கீழ் இயங்கும் ”அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும் ஆய்வுத்தகவல் நிலைய”த்தினால் வெளியிடப்பட்டுள்ளது. (இது தவிர அதிகாரப்பரவலாக்கம் பற்றி இன்னும் பல நூல்கள் வெளியிடப்பட்­டுள்ளன. இவற்றில் பல சிங்களத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பி­டத்தக்கது.) தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலில் சிங்களத்தில் கூறப்பட்டுள்ள விடயமும் தமிழ்ல் கூறப்பட்டுள்ள விடயமும் நேரெதி­ரானவை. மொழிபெயர்ப்பில் கோளாறு இருக்கக்கூடுமோ என எண்ணவும் இடமில்லை. ஏனெனில் நூலின் பெயர் ஒன்றே தவிர உள்ளே உள்ள தலைப்புகள் விடயங்கள் என்பன எல்லாமே வேறானவை. இரு மொழி வெளியீடுகளையும் இப்படி துருவி ஒப்பிட்டு பார்க்கப்போவது யார் என அரசு எண்ணியிருக்கக்கூடும். சுருக்­கமாக கூறப்போனால் தமிழ் மக்களிடம் (காணி அதிகாரம் தொடர்பாக) ”எங்களிடமும் ஒருக்கால் சொல்லி போட்டு எதையும் செய்யலாம்.” என்ற தொனியிலும்சிங்கள மக்களிடம் ”எங்களின் அனுமதியில்லாமல் அவர்க­ளால் எதையும் செய்து விட முடியாது” என்ற தொனியிலுமே கூறப்பட்டுள்ளன. சிங்கள நூலில் கூறப்பட்டுள்ளவற்றை இங்கு நோக்குவோம்.

”...ஸ்ரீ லங்கா இறைமையுள்ள ஒரு ஒற்றையாட்சி அரசு. ஸ்ரீ லங்காவின் நிலத்தின் மீதான அதிகபட்ச உரிமை­யை அரசே கொண்டிருப்பதால் பிரிவி­னைக்கு இடமில்லை. அவ்வாறு ஏதேனுமொரு இனக்குழுமம் பிரிவினை வாத அரசியலில் ஈபடுமாக இருந்தால் அதனை அடக்க இலங்கை அரசின் சகல அதிகாரமும் பிரயோகிக்க ப்படும்....”

”...மத்திய அரசின் கீழ் காணி அதிகாரங்கள் இருந்து வருவதை, பிரிவினைவாத அரசியலானது தன்னை நிலைநிறுத்துவதற்காக கண்டித்து வருகிறது...”

”...ஆனாலும் பிராந்திய சபைக்கு காணியாpமை அளிக்கப்பட்டாலும் பிராந்திய சபைக்கு உயர்ந்தபட்ச அதிகாரம் வழங்கப்போவதில்லை... அது மட்டுமின்றி மத்திய அரசாங்கத்­தின் அதிகாரத்தின்படி பிராந்தியங்க­ளில் உள்ள காணிகளின் மீது அதிகாரம் செலுத்த முடியும்...”

”...ஓதுக்கப்பட்ட பட்டியலின்படி பிராந்தியங்களுக்கு காணி மற்றும் காணிப்பயன்பாடு பற்றி தனித்த முடிவு எடுக்க முடியாது. இது தொடர்பில் மத்திய அரசுடன் சேர்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும்...”

”...உத்தேச அதிகாரப் பரவலாக்க­த்­தி­ன்படி பிராந்தியமொன்று அதன் அபிவிருத்தி நடவடிக்கையை மேற்கொ­ள்வதற்கு தேவையான வளங்களை அப்பிராந்தியம் தேடிக் கொண்ட வளங்களைக்கொண்டே செய்ய முடியும்....”

”...பிராந்தியமொன்றின் காணி மத்திய அரசின் தேவையொன்றிற்காக அப்பிராந்தியத்திடமிருந்து கேட்டுப்பெறலாம். இதன் மூலம் அதிகாரப்பரவலாக்கம் அர்த்தமுள்ள­தாக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு அவ்வாறு கோருகையில் பிராந்திய சபை அதனை நிராகரிக்க முடியாது. மத்திய அரசுக்க தேவை யேற்படின் காணியை தரும்படி ஆணையிடமுடியும். பிராந்திய சபையும் அவ் ஆணையின்படி ஒழுகவேண்டும். இப்போதும் இலங்கையில் பல பிரதேசங்களின் காணிகள் மத்திய அரசின் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த காணிகள் தொடர்ந்தும் அவ்வாறே இருப்பதுடன் பிராந்திய சபையினால் அதனை இல்லாது செய்யும் அதிகார­மில்லை.

மத்திய அரசாங்கத்தினால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தற்போது இயங்கிவரும் படைமுகாம்களும் தொடர்ந்து இருக்கும்..

...ஏதாவதொரு பிராந்தியம் இலங்­கையின் இறைமைக்கு சவாலாக செயற்படுமாயின் அந்த சபை கலைக்க­ப்பட்டு மத்திய அரசின் கீழ் அது கொண்டுவரப்படும். அந்த சந்தர்ப்­பத்தில் அப்பிராந்தியத்தின் காணி அதிகாரம் அனைத்தையும் மத்திய அரசாங்கம் கொண்டிருக்கும்....”

”...தற்போதைய தீர்வு யோசனை­யின்படி அரசின் காணிப்பகிர்வின்போது முதலில் மாவட்டத்தைச் சேர்ந்தவர்க­ளுக்கும் பின்னர் பிராந்தியத்தைச் சார்ந்தவர்களுக்குமே முனன்னுரிமை வழங்கப்படும்...ஆனால் இலங்கையில் இறுதியாக எடுக்கப்பட்ட குடிசன­மதிப்பீட்டின் பிரகாரமே (1981) விகிதாசார அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும்...

...இதுவரை இலங்கை அரசு காணிப்பகிர்வை மேற்கொண்ட சந்தர்ப்­பங்களிலெல்லாம் அந்த பிரதேசம், மாவட்டம், மாகாணம் என்ற ஒழுங்கி­லேயே முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதன்படி பார்த்தால் தீர்வு யோசனை கூட ஏற்கெனவே நடை­முறை­யிலுள்ளதையே செய்யப் போகிறது...
...இந்த யோசனையின் பிரதான இலக்குகள் இரண்டு.

1. இலங்கையின் இறைமையை பாதுகாப்பது.

2.பிராந்தியங்களுக்கு அதிகாரத்­தைப் பரவலாக்குவது....”

சுருக்கமாக இவ்வளவையும் நேரடியாக கூறுவதெனில் முழு காணி அதிகாரங்களும் எம்மிடமே இருக்கும். எம்மைக் கேட்காமல் எதையும் செய்யக்கூடாது. நாங்கள் கேட்டால் அதனை மறுக்கும் அதிகாரம் உங்களு­க்கு இல்லை. ஏற்கெனவே இருந்த குடியேற்றங்கள்,முகாம்கள் போன்­றவை அப்படியே இருக்கும். அத்தனை ஆதிக்கத்தையும் பிராந்தியத்தின் மீது செலுத்துவோம். ஆனால் உங்கள் அபிவிருத்திகளை உங்களுக்கு கிடைப்பதைக்கொண்டே பார்த்துக் கொள்ளுங்கள். இது எவை பற்றியும் கேள்வி எழுப்ப கூடாது. மீறி பிரிவினைவாதம் என்று சென்றீர்களோ இருந்ததையும் பறித்தெடுத்துவிட்டு எங்கள் முழு அதிகாரத்தையும் கொண்டு நசுக்கி விடுவோம்.”

இதில் உள்ள வேடிக்கை என்னவெ­ன்றால் இந்த கைநூலில் பல இடங்க­ளில் ஒரு வசனம் வருகிறது. அதாவது ”...இவ்வாறு பிராந்தியங்களுக்கு அதிகாரங்களை அளிப்பதன் மூலம் காலப்போக்கில் பிராந்தியங்கள் தாமாகவே முன்வந்து போட்டி போட்டுக்கொண்டு பிராந்தியத்தின் காணியை மத்தியஅரசுக்கு வழங்கும்” என்கிறது.

சிங்கள மக்களிடம் சொன்னதை தமிழ் மக்களிடமும் இது தான் எமது நிலைப்பாடு என சொல்லலாமே. அதுதான் இல்லை. தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ள நூலில் மேற்படி எதுவும் இல்லை. மாறாக நேரெதிரான கருத்துக்கள் நிறைந்து கிடக்கின்றன. தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டு­கின்றதொனியில், தமிழ் மக்களை ஈர்க்கின்ற வகையிலேயே அவை சொல்லப்பட்டுள்ளன.

தமிழ் நூலில் இன்னொன்று

”கோரிக்கைகள் அனைத்திலும் பிரதான இடத்தை வகிப்பது காணியில்­லாப் பிரச்சினையே. முன்னிருந்த எந்த அரசாங்கமும் சரியான தீர்வை வழங்கவில்லை. எனவேதான் தமிழ் மக்களின் விரக்தி சுவாலை விட்டு எரிந்தது....”

...பொறுப்பு வாய்ந்த அரசு என்ற வகையில் விவசாயிகளின் பிரச்சினை­யை தீர்க்க வேண்டி கடப்பாடு எம்மீது உள்ளது. இதனை விட்டு நழுவவோ புறந்தள்ளவோ அரசாங்கத்தினால் முடியாது. காணிப்பிரச்சினையே இந்தத் துன்ப துயரங்களுகளில் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

எனவேதான் காணி தொடர்பான அதிகாரத்தை வழங்க அரசு நேர்மை­யோடு முன்வந்துள்ளது. இனிமேல் வடக்கு கிழக்கு பிரதேசக்காணிப் பிரச்சினை முற்றாகத் தீர்க்கப்படும். இனிமேல் அவர்களது பாரம்பரியமதா­னதும் நவீனமயமானதுமான விவசாய முறைகளில் பண்புரீதியான முன்னேற்­றமும் ஏற்படும். அனுகூலம் தரத்தக்க­தாக இப்பிரச்சினை தீர்க்கப்படுவதால் தனிநாடு கோருவதற்கான ஏதுக்களும் இல்லாதொழிந்துவிடும்...”

இவ்வாறு முழுக்க முழுக்க நேரெ­தி­ரான விதத்தில் தமிழ் மக்ளுக்கு நம்பிக்கையூட்டிச் செல்கிறது தமிழ் நூல்.

”பெருந்தன்மையோடு இவ்வளவை­யும் வழங்க இருக்கின்ற அரசே நாம்!” என்பதை பல இடங்களில் வெளிப் படுத்த முயல்கிறது இந்நூல்.

தமிழ் மக்களிடம் தைரியமாக கூறுவதை சிங்கள மக்களிடம் கூற முடியாதது ஏன்? சிங்கள மக்களிடம் கூறியதை தமிழ் மக்களிடம் தைரிய­மாக கூற முடியாதது ஏன்? இரு சமூகத்தவருக்கும் நேரெதிரான கருத்தைக் கூற வேண்டியதன் அவசியம் என்ன? உண்மையில் அரசின் உறுதியான நிலைப்பாடாக இதில் எதைக் கொள்வது? இதுவரைகால அணுகுமுறைகளைக் கொண்டு இத்திட்டம் பின்னோக்கி போவதாகக் கொள்ளலாமா?
அடிவருடிகள்?

அரசு நேர்மையாகவே தீர்வு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக பல புத்திஜீவிகள், அரசசார்பற்ற நிறுவன­த்தவர்கள் சிலரும் நம்பி வருவதானது அவர்களது அப்பாவித்தனத்தை குறிக்கிறதா அல்லது அடிவருடித்த­னத்தை குறிக்கிறதா தெரியவில்லை.

யோசனையை ஐ.தே.க. ஒருவேளை எதிர்த்தால் பாராளுமன்றத்துக்கு கூட முன்வைக்காது நேரடியாக கருத்துக் கணிப்புக்கு விடப்போவதாக நீதியமை ச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூட சில வாரங்க ளுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

அவ்வாறு ஒரு கருத்துக்கணிப்பு வைக்கப்படும்பட்சதத்தில் அதனை ஆதாpக்கவே வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இவர்கள் இருந்து வருகிறார்கள். ”அதில் குறைபாடுகள் இருந்தபோதும் சிங்கள மக்கள் முதன்முறையாக அங்கீகரித்திருக்கிற ஒன்றாக இருப்பதால் இதனை ஊக்குவிக்கவேண்டும்.” என்பதே அவர்களது கருத்து. அதற்காக பல லட்சங்கள் செலவளித்து பிரச்சாரம் செய்தும் வருகின்றார்கள். ஆனால் அதில் உள்ள குறைபாடுகள் குறித்து அரசிடம் ஒரு போதும் கேள்வி எழுப்பியது கிடையாது. அது மட்டுமன்றி குறைபாடுகள் என்ன என்பதைப்பற்றி தேடும் முயற்சிகள் எதுவும் கூட செய்ததாக தெரியவில்லை. பொதுப்புத்தி மட்டத்திலேயே குறைபாடுகள் இருப்பதாக உள்ளள வில் கருதி வருகின்றனர். அவர்கள் தரப்பில் பார்த்தால் கூட சிங்கள மக்களிடம் ”ஆதரவளியுங்கள்” எனக்கோரும் செயற்திட்டமொன்று (Agenda) இருந்தால் அரசிடம் ”இது போதாது” எனக்கோரும் செயற்திட்டம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே சிங்கள பேரினவாத அரசுக்கு துணை போகும் வேலையையே செய்கிறார்கள். கண்மூ­டி­த்தனமான இந்த போக்கானது, இதனை விமர்சிப்பவர்களைக் கூட கடும் எதிரிகளாக காணவே இவர்க­ளைத் தூண்டுகிறது. நிச்சயம் இன்றைய இத்திட்டம் தமிழ் மக்களின் அவநம்பிக்கையையும் விரக்தியையும் அதிகரிக்காது விடும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

சிறில் மெத்தியுவின் அன்றைய தளம் சிங்கள வீரவிதானவின் இன்றைய தளம்

என்.சரவணன்

இன்றைய பேரினவாதம் பாசிச வடிவமெ­டுத்து வருவதும், அது சிங்கள சிவில் சமூகத்தினர் மத்தியில் பாசிசமயப்படுத்தப்பட்டு வருவதும் வேகமாக இடம்பெற்று வருவதை நாமெல்லோரும் உணர்வோம். இவற்றை வெளிக்கொணர்கிற வகையில் சரிநிகரில் பல கட்டுரைகள் தொடர்ச்­சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. மேற்தோற்­றத்தில் இதனோடு சம்பந்தப்பட்ட செய்திகள், தகவல்கள் வெறும் சம்பவங்களாக தோற்றமளிக்­கின்ற போதும் அதன் இயங்கியலையும், வரலாற்­றுப் பின்னணியையும், போக்கின் திசைவழியை­யும் நுணுக்கமாக பார்க்கும் எவராலும் இன்னும் தெளிவாக இதனை உணர முடிகிறது.

மக்கள் மயப்படுத்தப்பட்டு வரும் இந்த ஆபத்தான போக்கிற்கு வரலாற்றில் பல சக்திகள் மற்றும் பிரிவினர் பங்களித்துள்ளனர். இவை குறித்த விபரங்கள் சரிநிகரில் ஆங்காங்கு வெளிப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இம்முறை ”சிறில் மெத்தியூ” ஆற்றிய பாத்திரம் இங்கு வெளிக்கொணரப்படுகிறது.

இன்று சிங்கள வீரவிதான இயக்கத்தின் முக்கிய தளமாக இருக்கின்ற கிரிபத்கொட பிரதேசமானது களனி தேர்தற் தொகுதியில் அமைந்திருக்கிறது. இந்த களனி தொகுதியில் பேரினவாதம் வளர்த்­தெடுக்கப்பட்டதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. வரலாற்று சிறப்பு மிக்க களனி விகாரை இங்கு உள்ளது. ஹரிச்சந்திர விஜேதுங்காவின் சிங்களயே ”மஹா சம்மத்த பூமி புத்திர பக்ஷ்ய” கட்சியின் தலைமையகமும் இங்கு தான் உள்ளது. தமிழ், முஸ்லிம் மக்கள் அங்கு போய் வர அல்லது வாழப் பயப்படும் பிரதேசம் அது. இனத்துவேசம் மிகுந்த அந்தப் பகுதியில் நீண்ட காலமாக இருக்கின்ற அருந்ததியர்களின் குடியி­ருப்பொன்றுக்கு சமீபத்தில் போக நேரிட்டது. அங்கு என்னை அழைத்துச் சென்றவர்கள் அக்குடியி­ருப்பைச் சேர்ந்தவர்கள், பஸ்ஸை விட்டு இறங்கியதிலி­ருந்து குடியிருப்பை அடையும் வரை என்னுடன் தமிழில் பேசவில்லை. சிங்களத்தில் உரையாடிக் கொண்டு வந்தார்கள். அக்குடியிருப்­பில் உள்ள நகரசுத்தித் தொழிலாள குடும்பங்களில் உள்ள சிறார்கள் அப்பகுதியைச் சேர்ந்த சிங்களப் பாடசாலைகளுக்கே செல்கிறார்கள். இளம் சந்ததியினருக்கு தமிழில் பேச வரும். ஆனால் சிங்களத்தில் தான் எழுத வரும்.

கடந்த வருடம் கிரிபத்கொடையில் ஒரு முஸ்­லிம் வர்த்தகர் வாடகைக்கு எடுத்து நடத்திக் கொண்டிருந்த கடையை விட்டுப் போகச் சொல்லி ஐக்கிய வர்த்தகர் சங்கம் (நாடெங்கிலும் நூற்றுக் கணக்கான கிளைகளையடைய வீரவிதானவின் அமைப்பு) ஒப்புக் கொள்ளாத நிலையில் அக்கடை குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இத்தகவல் பத்திரிகைகளில் ”இனந்தெரியாதோரால்” என்று வெளிவந்த போதும் அது குறித்து அறிந்தவர்­களுக்கு இது பற்றி தெரியும். ஜே.வி.பி.யின் உத்தி­யோகபூர்வ பத்திரிகையான ”நியமுவா”விலும் இது குறித்த நடுப்பக்க கட்டுரை சென்ற வருடம் வெளியாகியிருந்தது. அதே கட்டுரை ஜே.வி.பி.­யின் உத்தியோகபூர்வ தமிழ் ஏடான ”செஞ்சக்தி”யிலும் வெளியாகியிருந்தது.

கிரிபத்கொடவில் எந்தவொரு கடை அல்லது நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளிலும் தமிழ் இருக்கக்கூடாது என்று கட்டளை இட்டிருக்கிறா­ர்கள். தமிழர்களால் குத்தகைக்கு எடுக்கப்பட்டி­ருந்த கடைகளை அவற்றின் சொந்தக்காரர்களைக் கொண்டு மீளப் பெறுமாறு நிர்ப்பந்தித்திருக்­கிறார்கள். அவ்வாறு மீள பெறுவதற்கான நிதியுத­விகளையும் கடன்களையும் வீரவிதான வழங்கி­யிருக்கிறது. இந்த களனி தொகுதியில் தான் பியகம சுதந்திர வர்த்தக வலயமும் இருப்பதால் ஜே.வி.பி.யின் தமது தொழிற்சங்கக் காரியாலயத்­தின் தலைமையகத்தையும் இந்த கிhpபத்கொட பகு­தியில் நிறுவியிருந்தனர். அக்காரியாலயத்துக்கு சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் அவர்கள் பெயர்ப்பலகையை போட்டிருந்த போது வீரவி­தானவைச் சேர்ந்த­வர்கள் தமிழை அழிக்கச் சொல்லி மிரட்டவே அவர்களும் அதனை எடுத்து விட்டனர். ஆனானப்பட்ட ஜே.வி.பி.யே இதன் போக்குக்கு சரணடைய நேரிட்டது என்றால் இதன் பலத்தைப் பற்றி வேறென்ன சொல்ல. அண்மையில் களுத்துறை மாவட்ட ஜே.வி.பி. முக்கியஸ்தர் ஒருவரைச் சந்தித்து இது குறித்து உரையாடிய போது இது தந்திரோபாயமான பின்வாங்கல் என்றும், போர்ட் இல்லாமலும் சிக்கலில்லாமல் அந்த இடத்தில் வெற்றிகரமாக அரசியலை நடத்திச் செல்ல அதுவே வழி என்றும் அரசியல் நியாயம் கற்பித்தார் அவர். இன்றைய அரசியலில் பூர்ஷ்வா கட்சிகள் மட்டுமல்லாமல் புரட்சிகர கட்சிகளின் செயற்பாடுகளில் கூட தலையிடும் அளவுக்கும், சரணடையச் செய்கின்ற அளவுக்கும் சிங்கள வீரவிதானவின் வளர்ச்சி கவனத்துக்­குரிய­தாகியுள்ளது.

அப்பேர்பட்ட களனி தொகுதி தான் சிறில் மெத்தியூவின் அரசியற் தளமாக 70களிலும் 80களின் ஆரம்பத்திலும் இருந்தது. (இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகாவுக்கு ஆதரவ­ளிப்பதாகக் கூறி ஐ.தே.க.விலிருந்து சென்ற 35 போpல் ஒருவரும், முன்னாள் இளைஞர் விவகார அமைச்சராக இருந்தவரும், பிரேமதாச காலத்தில் ”சூரியகந்த” படுகொலைகளுடன் தொடர்புடைய­வர் என்றும் பேசப்பட்டவருமான நந்தா மெத்தியூ தான் சிறில் மெத்தியூவின் மகன்.)

இந்த களனி தொகுதியானது சிங்கள மொழி மட்டும் சட்டம் கொண்டு வரப்படுவதில் முக்கிய பாத்திரமாற்றிய ஒன்றெனவும் குறிப்பிடலாம். 1953 ஹர்த்தாலைத் தொடர்ந்து டட்லி சேனநா­யக்காவின் அரசு கவிழ்ந்தது. அதனைத் தொடர்­ந்து ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் பிரதமராக பதவி வகித்தவர் டட்லியின் மைத்து­னரான ஜோன் கொத்தலாவல. அவர் யாழ்ப்­பாணம் சென்றிருந்த போது சிங்களத்தையும், தமிழையும் அரச கரும மொழியாக ஆக்குவதாக கூறியதைத் தொடர்ந்து தென்னிலங்கையில் சிங்கள பௌத்­தர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. இவ்வெதிர்ப்பினால் எதிர்வரும் தேர்தலில் சிங்கள வாக்குகள் தமக்குக் கிடைக்காது போகும் என்ற அச்சம் ஐ.தே.க.வுக்கு வரவே அது சிங்களம் மட்டும் தேசிய மொழியாக கொள்ளப்படும் என்கிற பிரகடனத்தை 1956 பெப்ரவரியில் நடத்­தப்பட்ட 8வது வருடாந்த மாநாட்டில் வெளி­யிட்டதும் இதே களனி தொகுதியில் வைத்துத் தான். இதேவேளை பண்டாரநாயக்கா தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த ”சுதேசியவாதம்” எனும் கருத்தாக்கமும் சிங்கள­மயப்­படுத்தலை இலக்காகக் கொண்டி­ருந்தது. அது போல 1956ம் ஆண்டு என்பது 2500வது பௌத்த ஆண்டாகும். அந்த சமயத்தில் பௌத்தத்தைத் தூக்கிப்பிடிப்பது என்பது முக்கிய அரசியல் போட்டியாகவும் அமைந்திருந்தது. பண்டார­நாயக்காவுடன் கூட்டமைத்திருந்த மக்கள் ஐக்கிய முன்னணியில் இணைந்திருந்த கட்சிகளும் அது வரை சிங்கள மொழியை தேசிய மொழியாக ஆக்குவதற்கான நிர்ப்பந்தங்களை கொடுத்துக் கொண்டிருந்தன. ஐ.தே.க.வின் ”சிங்கள மொழி மட்டும்” எனும் களனி பிரகட­னமானது 1956 தேர்தலில் இரு பிரதான கட்சிக­ளுக்குமான சிங்கள வாக்குகளைக் கைப்பற்றும் ஒரு கருவியாக ஆனது. இதன் விளைவாக பண்டாரநாயக்காவும் ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்தில் சிங்கள மொழியை தேசிய மொழியாக அமுலாக்குவதாக வாக்குறுதி அளித்ததும், அது போலவே செய்து காட்டியதும் நிகழ்ந்தது. இந்தப் போக்கானது வர­லாற்றில் தமிழ் சிங்கள தேசங்­களுக்கிடையிலான இடைவெளியை அதிகரித்­ததில் முக்கிய பாத்திர­மாற்றியிருந்ததுடன். இதன்விளைவாக நடந்த பல்வேறு சம்பவங்களின் விளைவாக 1958 கலவ­ரமும் நடந்து முடிந்தது என்பது பலரும் அறிந்ததே.

அப்பேர்ப்பட்ட களனித் தொகுதி தான் ஜே.ஆரின் சொந்தத் தொகுதியாகவும் இருந்தது. 70களில் அத்தொகுதியில் சிறில் மெத்தியூ ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதுடன், களனியில் பல பேரினவாத அமைப்புகளின் அலுவலகங்க­ளும் இயங்கின.

முக்கியமாக சிங்கள மக்கள் முன்னணி (சிங்­கள மஹாஜன பெரமுன) எனும் அமைப்பும் இங்கு தான் இயக்கியது. இதன் ஆரம்பகர்த்தாவான சிறில் மெத்தியூ அப்போதும் ஐ.தே.க.வின் அமைச்சரவையில் விஞ்ஞான கைத்தொழில் அமைச்சராகவும் இருந்து கொண்டிருந்தார். வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்த விகாரைகளை புதிதாக அமைப்பது, புன­ருத்தாபனம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டார். (இலங்கையின் 10வது பாராளு­மன்றம்- லேக் ஹவுஸ் வெளியீடு -1995)

இந்த சிங்கள மக்கள் முன்னணியின் ஆரம்பத்தை இந்த இடத்தில் அறிந்து கொள்வது அவசியம். 1977 கலவரத்தைத் தொடர்ந்து அக்கலவரத்தின் பின்னணிகளை ஆராய்வதற்காக சன்சோனிக் கமிஷன் அமைக்கப்பட்டது தெரிந்­ததே. (இக்கலவரம் 1983 இனப்படுகொலைக­ளுக்காக பேரினவாதிகள் செய்த ஒத்திகை என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது) இக்கலவரத்தின் போது தான் ஜே.ஆர். போரென்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்கிற பிரகடனத்தைச் செய்திருந்தார். கண்கட்டி வித்தைக்காக அமைக்­கப்பட்ட அந்த ஆணைக்குழுவின் முடிவில் அக்கலவரத்துக்கு தமிழ் அரசியல் தலைவர்களே காரணமெனக் குற்றம் சாட்டப்பட்டதுடன், அக்கல­வரத்துக்குக் காரணமான எவரும் தண்டிக்கப்பட­வுமில்லை. இந்த ஆணைக்குழு அமைக்கப்­பட்டதும் தமிழர்கள் தான் இத்தனைக்கும் காரணமென்றும், 'தமிழர்களால் தான் சிங்கள மக்கள் கொல்லப்பட்டார்கள், சேதமுற்றார்கள், அகதிகளானார்கள்' என்றும் போலியாக நிறுவி, போலி ஆணைக்குழுவின் அறிக்கையை தயாரிப்­பதற்கு சிங்களத் தரப்புக்கு போலிச் சாட்சியங்கள் தேவைப்பட்டன. அவ்வாறு தயாரிக்கப்பட்டவை அனைத்தும் தொகுக்கப்பட்டு எல்லே குணவங்ச தேரோவால் ”சன்சோனிக் கொமிஷன் அறிக்கை இல-1” மற்றும் 2 என நூல்களாக வெளிவந்தன.


சன்சோனி ஆணைக்குழுவுக்கு போலி ஆதாரங்களை சமர்ப்­பிப்பதற்காக உருவாக்­கப்பட்டது தான் சிங்கள மக்கள் முன்னணி. அவ்வமைப்பு ஆரம்­பிக்­கப்பட்டதன் பின்னணி குறித்து சிங்கள மக்கள் முன்னணியின் உத்தி­யோகபூர்வ பத்திரிகையாக அன்று வெளிவந்த ”மாத்ரு பூமி” (அன்னை பூமி) பத்திரிகையின் முதலாவது இதழில் காணலாம். அதில் ”...இவ்வா­ணைக்குழுவுக்கு நாடெங்கிலும் உள்ள சிங்கள­வர்களை சாட்சிக்கு கொண்டு வரும் வேலையைத் தொடங்கியிருக்கிறோம். இதற்கு நிதிப்பிரச்சினை ஒரு பெரும் தடையாக இருந்தா­லும் சில வள்ளல்களின் உதவியால் அதனை மேற்கொள்ள முடிகிறது.... இதிலிருந்து எமது கடமைகளை ஆரம்பிக்கிறோம். ஆனால் தமிழ் இனவாதத்துக்கு எதிராக நீண்டதூரம் நாங்கள் செல்ல வேண்டி­யிருக்கிறது....” (”மாத்ரு பூமி”-1979 பெப்ரவரி)

இப்படித் தொடக்கப்பட்ட இந்த அமைப்பும், அதன் பத்திhpகையும் அதன் பின் அவை ஆற்றிய பாத்திரம் குறித்து மேலோட்டமாக எம்மில் பலர் அறிந்திருப்பர். 1979 பெப்ரவரியில் இதன் முதலாவது இதழ் வெளிவந்தது. 1980 ஏப்ரலில் இப்பத்திரிகை நின்று போனது. மாதாந்தம் வெளிவந்த இப்பத்திரிகை மொத்தம் 14 இதழ்கள் கிரமமாக வெளிவந்து கொண்டிருந்தது என்பது சுவடிகூடத் திணைக்கள காப்பகத்திலிருந்து இது குறித்து தேடிய போது அறியக் கிடைத்தது. மொத்­தம் 8 பக்கங்களை மட்டுமே கொண்டிருந்தாலும் இப்பத்திரிகை முழுவதும் இனவெறியைத் தூண்டும் ஆக்கங்களைத் தவிர வேறு எதுவும் இருந்ததில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயற்பாடுகள், அதன் பத்திரிகையான ”சுதந்தி­ரன்” மற்றும் துண்டுப்பிரசுரங்களை மாத்ருபூமியில் முன்பக்கத்தில் படமாக வெளியிட்டு அதனைத் திரிபுபடுத்தி இனவாத கருத்தேற்றம் செய்து கொடுப்பது மாத்ருபூமியின் முக்கிய பணியாக இருந்தது. முதலாவது இதழில் முன்பக்கத்தில் சுதந்திரன் பதிப்பகத்தில் கோப்பாய் தொகுதி உறுப்பினர் சீ.கதிரவே­லுப்பிள்ளையால் பிரசுரிக்­கப்பட்ட ”சுதந்திரத் தமிழீழம் மலர்க” எனும் தலைப்பிட்டு அதில் இலங்கையில் தமிழீழத்தை வேறு பிரித்துக் காட்டி அதில் வடகிழக்கைச் சேர்ந்த பாராளு­மன்ற உறுப்பினர்களின் புகைப்­படங்களைப்பிரசுரித்து இலங்கைப் பாரா­ளு­மன்றத்தின் தமிழீழ உறுப்பி­னர்கள் என்று குறிப்பிட்டிருந்த அந்த துண்டுபிரசுரம் அப்பயே பிரசுரிக்கப்பட்டிருந்தது­டன் இதனை மீள பிரசுரிக்கும்படி வாசகர்கள் கோரியதால் அதன் 1979 ஏப்ரலில் வெளியான மூன்றாவது இதழிலும் அது பிரசுரிக்கப்பட்­டிருந்தது.

”...சிங்கள நாட்டின் 7இல் 5 பகுதியைத் தமிழர்கள் பிரித்தெடுக்கப் போகிறார்கள், சிங்களவர்கள் கடலில் தள்ளப்படப் போகிறார்கள். ஒரே ஒரு பௌத்த நாடு இல்லாமல் ஆக்கப்படப்­போகிறது, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் இதற்கு ஆதரவு. தமிழ்நாட்டோடு ”ஈழத்தை இணைத்து” சிங்களவர்களை அழிக்கப்­போகிறார்கள், சிங்கள பௌத்த விகாரைகள் வடக்கு கிழக்கில் அழிக்கப்படுகிறது...”

இவை போன்றவற்றை பேரினவாத கருத்திய­லாக புனைவதிலும், திரிபுபடுத்துவதிலும் நிறுவுவதில் இப்பத்திரிகை ஆற்றிய பாத்திரம் லேசானவை அல்ல. பின்னர் வந்த பேரினவாதிகள் இந்தத் தளத்தின் மேலிருந்து இனவெறியைக் கூர்மைப்படுத்த இலகுவாக்கியது சிறில் மெத்­தியூவின் பாத்திரம். இது வெறும் சிங்கள பேரின­வாத சித்தாந்தம் மட்டுமல்ல அதன் வடிமும், அதன் தளமும் தான். இன்று பேரினவாதம் பலர் நம்பிக் கொண்டிருப்பதைப் போல கிராமியத்­திலிருந்து தொடங்கி விசாலிக்கவில்லை அது நகர்ப்புறங்­களில் தோன்றி அங்கேயே மையப் படுத்தப்பட்டு வலைப்பின்னல்களாக கிராமங்­களுக்குள் விரிவா­கிச் செல்கிறது. இது ஒரு முக்கியமான போக்கு.

சிறில் மெத்தியூ எழுதிய ”கவுத கொட்டியா” (யார் புலி-1980-சிங்கள மக்கள் முன்னணி வெளியீடு) எனும் நூலை எவரும் இலகுவில் மறக்கமாட்டர்கள். குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் அதிலுள்ளவர்கள் என்போர் எப்படி சிங்கள நாட்டைக் கைப்பற்ற தமிழ் இளைஞர்களை அணிதிரட்டிக் கொண்டிருக்­கிறார்கள் என்றும், சிங்கள இனம் ஒன்றும் தெரியாத அப்பாவிகளாக இருக்கிறார்கள் என்பதுமே அந்நுhலின் சாராம்சம். அது போல அவர் இன்னும் பல நூல்களையும் எழுதி­யிருக்கிறார். சிங்கள­யாகே அதிசி சத்துரா” (சிங்களவர்களின் உடனடி எதிரி-1970) எனும் தலைப்பில் சிறில் மெத்திவ் எழுதிய நூல் மலையக மக்கள் ஆக்கிரமிப்­பாளர்கள் என்றும், நாட்டிலுள்ள சிங்கள பௌத்தர்களின் சொத்துக்களை இந்தியாவுக்கு அள்ளிச் செல்கிறார்கள் என்றும் இந்தியா தமிழீழம் அமைவதற்கு அனைத்து ஆதரவையும் வழங்கி வருகிறது என்றும் உடனடி எதிரிகள் இவர்கள் தான் என்பதுமாக அதன் சாராம்சம் அமைகிறது. இந் நூல் குறித்த சில தகவல்களை குமாரி ஜயவர்தனா தனது இலங்­கையின் இனவர்க்க முரண்பாடுகள் எனும் நூலிலும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதில் இது யாரால் எழுதப்பட்டது என்து பற்றியோ அதன் சாராம்சம் பற்றியோ தெளிவாக குறிப்பிடப்பட்டி­ருக்கவில்லை.

1977 தேர்தலில் முதன்முறையாக தமிழ் கட்சி (கூட்டணி) பிரதான எதிர்க்கட்சியாக வந்ததானது பாராளுமன்றத்தில் ஐ.தே.க.வுக்கு இருந்த ஒரே இடைஞ்சலாக அது ஆனது. அதற்கு பாடம் படிப்பிக்கும் வேலையையும், சிங்கள பௌத்­தர்களை திருப்தி படுத்தும் வேலையையும், சிங்கள பேரினவாதத்தை மக்கள் மயப்படுத்தும் வேலை­யையும் தனது கட்சியை நேரடியாக சம்பந்தப்­படாமல் கட்சியைச் சேர்ந்த சேர்ந்த ஒரு அமைச்சர் அக்கடமைகளைச் செய்வதற்கு ஐ.தே.க. இடம­ளித்­திருந்தது. மாத்ரு பூமியில் வெளிவந்த தகவல்­களைப் பார்க்கின்ற போது வெறும் சிறில் மெத்தியூ அல்லது அவரின் அமைப்பால் மட்டும் அவற்றைப் பெற்றிருக்க வாய்ப்பில்லை. நிச்சயம் அது அரசின் புலனாய்வுப்பிரிவினரின் தகவல்கள் என்பதை விளங்கிக் கொள்வது கடினமில்லை. 1979 பெப்­ரவரி 14ஆம் திகதி ”மாத்ரு பூமி” பத்திரிகைக்கு இரகசிய பொலிஸார் புகுந்து விசாரணை செய்ததாக மார்ச் மாத இதழில் கட்டுரையொன்று வெளியாகி­யிருக்கிற போதும் இது வெறும் கண்துடைப்­பாகவே இருக்குமெனத் தோன்றுகிறது. ஏனெனில் அதன் பின்னர் ஒரு வரு­டமாக அப்பத்திரிகை அதனை விட மோசமான இனவெறியைத் தூண்டுகிற வகையில் வெளிவந்துகொண்டு தான் இருந்திருக்கிறது.

”மாத்ரு பூமி” பத்திரிகையில் வந்த சில தலைப்புகளைப் பார்ப்போம்.

-சிங்களவாpன் கழுத்தில் சுருக்கி­டப்படும் காலம் அருகில்! (79-பெப்), -எமது இனத்தை தூஷிக்க இடம் கொடுப்போமோ? (79-பெப்), ஈழம் தமிழ் நாடு பூட்டு! (79-மார்ச்), தமிழ்நாடுக்கே ஓடுங்கடா! (79-மார்ச்), இனம் இனிமேலும் மிஞ்சுமா?(79-மார்ச்), பூசாரிகள் கொழும்பில் இரகசிய கூட்டம் (79-ஏப்ரல்), எம்.ஆர்.-அப்பாபிள்ளை குசுகுசுக்­கிறார்கள். (79-ஏப்ரல்), சிங்கள ஒற்றுமையே தேசத்தின் விடிவு (79-ஏப்ரல்), கஸ்ட்மஸ் திணைக்களம் இனவாதிகளின் குகை! (79-ஏப்ரல்), பாலஸ்தீன விடுதலை இயக்கமும் பின்னணியில் (79-மே), வவுனியாவில் புராதன விகாரைகள் அழிக்கப்­படுகின்றன (79 டிச), மட்டக்களப்பில் அரச நிர்வாகம் சிங்களத்தில் இல்லை! (79-டிசம்பர்), தமிழுக்கும் அரச கௌரவம்! (79-பெப்ரவரி), ஈழம் கோரிக்கைக்கு வாசு-விஜேவீர ஒத்துழைப்பு! (79-ஏப்ரல்)

இவ்வாறு ”மாத்ரு பூமி” பத்திரிகை பேரினவாதத்தைப் பரப்பியதில், கருத்துருவாக்கத்தை புனைவதில் ஆற்றிய பாத்திரம் முக்கியமானது. அது போல சிங்கள மக்கள் முன்னணிக்குப் பின்னால் திரண்ட மக்களை தனது அரசியல் செல்வாக்கால் தக்க­வைத்துக் கொள்வதிலும் தமது நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதிலும் சிறில் மெத்தியூ முக்கிய பாத்திரமாற்றியிருந்தார். தமிழ் மக்கள் பற்றிய மோசமான அவதூறு­களைப் பரப்பியதும், எதிரிகளாக சித்திரித்ததும் தான் 1983 கலவரத்தைக் கொண்டு நடத்த இலகுவாக ஆனது. 83 இனப்படுகொலைச் சம்பவத்தில் சிறில் மெத்தியூ தமது சகாக்களைப் பயன்படுத்தி தமிழர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்களை பட்டியலிட்டுச் சென்று திட்டமிட்டு அழித்ததும், விரட்டியடித்ததும் தெரிந்ததே. அது போல 1981இல் யாழ் நூலக எரிப்­பினை மேற்கொண்டவர் சிறில் மெத்­தியூ என்பது இன்று சகலரும் அறிந்த விடயம்.

சிங்களப் பேரினவாதத்தின் தொடர்ச்சியை மாறி மாறி கையேற்று முன்னெடுத்துச் செல்ல வரலாற்றில் பலர் வந்து போயிருக்கிறார்கள். அவர்களை வெறும் நபர்களாக மட்டும் பார்க்கத் தேவையில்லை. அதற்குப் பின்னால் பல்வேறு நலன்களைச் சார்ந்த சக்திகளும் இருந்து வந்திருக்கிறார்கள். வெளித்தோற்றத்தில் இந்த நபர்கள் மட்டுமே தெரிவார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் சிறில் மெத்தியூ. சிறில் மெத்தியூவின் காலம் முடிந்தது. அவரால் வழிநடத்தப்பட்ட சிங்கள மக்கள் முன்னணியின் காலமும் முடிந்­தது. ஆனால் அவர் பலப்படுத்தி­விட்டுச் சென்ற சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தம் மட்டும் மிஞ்சியது மட்டு­மன்றி மேலும் கூர்மைப்படுத்தப்பட்டு இன்று பாசிச வடிவம் எடுத்து வருகி­றது. அந்த சித்தாந்­தத்தை மக்கள் மயப்­படுத்துவதற்கு பல்வேறு பேரினவாத அமைப்புகளும் ஒனறிணைந்து ஒரு குடையின் கீழ் மையப்பட்டு, வலைப்­பின்னல்களைக் கொண்டு உறுதியான நிறுவன வடிவம் பெற்று தொழிற்­புரிகின்ற காலத்தை வரலாற்றில் இப்­போது தான் பார்க்கிறோம் என்பதை நினைவிற் கொள்வோம்.

இந்த பேரினவாதம் மக்கள்மயப்பட மக்கள்மயப்பட தமிழ் சிங்கள இன விரிசல் விரிவடைந்து கொண்டே செல்கிறது. சந்தேகங்கள், நம்பிக்கை­யின்­மைகள் அதிகரித்து சிந்தனைகள் துருவமயப்பட்டு செல்கின்றன. அதனைச் செய்வதற்கு இன்று அரசு, தொடர்புசாதனங்கள், சிவில் அமைப்­புகள், கல்வி (அமைப்பும் நிறுவனமும்) எல்லாமே சாதகமாக இருக்கின்றன. சேர்ந்து வாழலாம் என்பது வெறும் வாய்ப்பேச்சாக மட்டுமே ஆகிவிட்டி­ருக்கிறது.

இன்டெர்நெட் (Internet) வரை பாசிசம்



என்.சரவணன்
சிங்களப் பேரினவாதம் எடுத்து வரும் நவ பாசிச வடிவம் குறித்த உரையாடல் தற்போது மேலெ­ழுந்துள்ளன. இன்று சிங்கள வீரவிதா­னவை மையப்படுத்தி ஏனைய சகல இனவாத அமைப்புகளும் அதனைச் சுற்றி வலைப்பின்னல்களாக வகுத்தி­ருப்பதையும், அணிவகுத்து வருவது குறித்தும் பேசி வருகிறோம். அது சகல தளங்களிலும் தன்னை நிறுவி வருவ­தையும், ஊடுறுவி வருவதையும் கூட வெளிப்படுத்தி வருகிறோம்.

இன்றைய நிலையில் சித்தாந்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்த ஊடகங்­களைக் கைப்பற்றல் என்பது கட்டாய நிபந்தனையாக ஆகியிருக்கிற நிலை­யில் பாசிசம் அதனையும் கவனமாக கைப்பற்றத் தொடங்கியிருப்பதையும் நேரடியாகக் கண்டு வருகிறோம். அந்த வகையில் இணையம் (இன்டர்நெட்) தளங்களை ஏற்படுத்தி தமது பிரச்சாரங்களையும், சித்தாந்தங்­களை­யும் நிலைநாட்டுவது என்கிற விடயத்­தில் பேரினவாதமும் மிக நுணுக்கமாக தொழிற்பட ஆரம்பித்திருக்கிறது.

இன்று சிங்கள வீரவிதான இயக்­கத்­துக்கு என இணையத்தளம் (web site) உண்டு. scc.org எனும் இந்த இணையத் தளத்தில் தேசிய செய்திகள், கட்டுரைகள், வீரவிதான செய்திகள், அறிக்கைகள், இணைப்புகள் (links) தமக்கு சார்பான அல்லது தமது துறை­யைச் சார்ந்த இணைத்­தளங்­களுக்கு இது அழைத்துச் செல்லும்) இதனைத் தவிர சிங்கள வீரவிதானவின் இங்கி­லாந்துக் கிளை மற்றும் ஜெர்மன் கிளைகளின் வெப் தளத்திற்குமான இணைப்புகளும் இந்த தளத்தில் இருக்கின்றன. www.sinhala.de/ எனும் விலாசத்தில் ஜேர்மனியக் கிளையின் தளத்திற்குச் செல்லலாம். வீரவிதான­வின் தோற்றம் அவற்றின் வடிவம், மற்றும் அவற்றின் செயற்பாடுகள், நிலைப்பாடுகள் என்பன குறித்து அவை பகிரங்கமாக முன்வைப்பன மட்டுமே இந்த தளத்தில் காணலாம். மேலும் பயங்கரவாத ஒழிப்பு தேசிய இயக்கத்­துக்கும் (NMAT) தமக்கும் இடையில் எந்தவிதத் தொடர்பும் கிடையாது என்று கூறி வரும் வீரவிதானவின் வெப் தளத்தில் NMATயின் வேலைத்திட்டம் செயற்­பாடுகள் என்பனவற்றையும் நாம் காணலாம். சமீபத்தில் சமவாய்ப்புச் சட்டம் குறித்து அமைச்சர் அஷ்ரப்பின் மீது வீண் பழியைச் சுமத்தி செய்யப்­பட்ட பிரச்சாரத்தோடு சம்பந்­தப்பட்ட அறிக்கைகளையும் இதில் காணக் கிடைக்கின்றன.

கடந்த நான்கு வருடங்களாக தமிழ்த் தேசப்போராட்டத்துக்கான சர்வதேசப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டதில் இணையத்திற்கு முக்கிய பாத்திரம் உண்டு. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பல்வேறு இணையத் தளங்கள் இருக்கின்றன. சில இணை­யத்­தளங்கள் வேறு ஆதரவு அமைப்பு­களைக் கொண்டு மேற்கொள்ளப்­படுகின்றன. உடனடிச் செய்திகள், தனித் தனியான தலைப்­புகள் அமைந்த செய்திகள், கட்டுரைகள், விசேட குறிப்­புகள், படங்கள், பாடல்­கள், கவிதைகள் என பலவற்றையும் உள்ளடக்கிய இணையத்­தளங்களை உலகம் முழுவ­தும் எங்கிருந்தும் காணக் கிடைத்து வருகிறது.

எந்த செய்தித் தணிக்கையை ஏற்படுத்தினாலும் இதனை தணிக்கை செய்ய அரசால் முடியாத நிலையில் இதற்கான ஒரே வழி எதிர்ப்பிரச்சாரம் செய்வதே அதற்கு தாமே சில இணைத் தளங்களை ஏற்படுத்தியாக வேண்டும். இந்த சவாலான நெருக்­கடிக்குள் சிக்கிய நிலையில் சமீபத்தில் தான் தகவல் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு என்பன தமக்கான இணைத்தளங்களை நிறுவிக் கொண்டன என்றபோதும் அவை போதி தகவல்களை உள்ளடக்கி­யவை அல்ல. மேலும் அவற்றை கணி­ணியில் இறக்க (download செய்ய) எடுக்கும் நேர­மும் அதிகம். இவ­ற்றை ஒரே தளத்திற்கு சென்று பார்வையிட www.lacnet. எனும் தளத்­திற்குச் செல்லாம். அதிலிருந்து மேற்படி தள­ங்களுக்குச் செல்­லலாம்.

இப்படியான நிலை­யில் தான் பேரினவாத சக்திகளுக்கு தமிழீழ போராட்டம் குறித்த எதிர்ப்­பிரச்சாரங்களை நடத்த இணை­யத்தளங்­களை ஏற்படுத்தும் தேவை ஏற்பட்டது. இப்படியான நிலையில் முதன் முதலில் பேரின­வாதத்தரப்பி­லிருந்து தோன்றிய இணையத் தளம் நளின் டி சில்வாவின் www.kalaya.com எனும் இணையத்­தளம். இந்த தளத்தில் நளின் டி சில்வா ஐலண்டில் எழுதி வரும் கட்டுரைகள் பத்திகள், திவய்ன பத்திரிகையில் வெளியான கட்டுரைக­ளின் ஆங்கில வடிவம் என்பன கிடைக்கின்றன.

இதனைத் தவிர www.spur.asn.au. எனும் தளத்தை முக்கியமான தளமாகக் கொள்ளலாம். இது அவுஸ்திரேலி­யாவிலிருந்து இயக்கப்படுகிறது. இத் தளத்தில் புலிகளுக்கெதிராக ஆங்கிலப் பத்தி­ரிகை­களில் வெளிவரும் கட்டு­ரைகள் எல்லாவற்றையுமே அடக்கி­யுள்ளனர். அதை விட சிங்களக் கட்டு­ரைகளின் ஆங்கில வடித்தையும் காணலாம். இத்தளம் சிங்கள வீரவி­தானவின் தளத்துக்கு முன்னமேயே தொடக்கப்­பட்டுவிட்டது. ஏகப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய இத்தளத்தில் இது வரை புலிகளால் சிவில் மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்க­ளின் அட்டவணையொன்று உள்ளடக்­கப்­பட்டிருக்கிறது. அதில் 132 சம்ப­வங்கள் அடக்கப்பட்டுள்ளன. 1984 இலிருந்து 1999 செப்டம்பர் வரை அதில் உள்ளடங்குகிறது. சம்பவம் நடந்த நாள், இடம், கொல்லப்பட்டோர், காய­மடைந்தோர். சொத்துக்கள் என்பன உள்ளிட்ட விடயங்கள் அட்ட­வணைப்­படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த செப்டம்பர் மாதம் கோணகல கிராமத்தில் கொல்லப்பட்ட சம்பவம் பற்றிய முழுமையான கட்டுரை­யொன்று பிரசுரிக்கப்­பட்டிருப்பதுடன் புலிகள் பற்றியும், புலிகள் சர்வதேச பயங்கரவாதிகளாக இருக்கிறார்கள் என்பதற்கான அமெரிக்க அரச திணைக்கள அறிக்கைகள் தொடக்கம் வேறு நாடுகளின் அறிக்கைகள், சர்வ­தேச மன்னிப்புச்சபை அறிக்கைகள் என்பனவற்றையும் அதில் உள்ளடக்கி­யிருக்கிறார்கள். கோணகல சம்பவம் பற்றி பத்திரிகைகளில் வெளியான 60 கட்டுரைகளின் தலைப்புகளை ஒரே பார்வையில் காட்டியிருக்கிறார்கள். இதிலுள்ள முக்கியத்துவம் என்ன­வெனில் அந்த ஒவ்வொரு கட்டுரை­யையும் மவுஸால் கிளிக் செய்து கிளிக் செய்து 60 கட்டுரைகளையும் முழுமை­யாகப் பார்க்கலாம் என்பது தான். அது தவிர ராஜீவ் கொலை பற்றிய கட்டு­ரைகள், இது வரை நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகள் என்பன பற்றியும் கட்டுரைகளும் உள்ளடங்குகின்றன.

இதனை விட www.sinhaya.com எனும் தளமும் www.Lankaweb.com எனும் தளமும் www.voice of lanka.net அதுதவிர www.sinhalanet.org எனும் தளமும் www.members.tripod.com/ spsl/massac.htma மற்றும் www. Lankaweb.com/news/latest.html என்பன போன்ற இணையத்தளங்க­ளும் இருக்கின்றன.

இது தவிர மக்கள் ஐக்கிய முன்ன­ணியின் www.mep.net எனும் தளமும் இருக்கின்றன. இதில் அவர்களின் அரசியல் கொள்கை, வேலைத்திட்டம், என்பனவற்றைக் காணக்கிடைக்கும்.

இந்த வெப்தளங்களின் முக்கிய இலக்காக இருப்பது புலிகளை அம்பலப்படுத்துவது என்பது. புலிகள் பயங்கரவாதிகள். ஆகவே இது பயங்­கரவாதப் போராட்டம் என்பதை நிறுவு­வதற்கான தளங்கள் இவை. புலிகளை பயங்கரவாதிகளாக சித்திரி­ப்பதன் மூலம் அவர்கள் நிறுவ வருவது ஒட்டுமொத்தத்தில் தமிழர்கள் இனவாத யுத்தத்தை நடத்துகிறார்கள் என்றும், சர்வதேசத்துக்கே ஆபத்தை விளைவிக்­கக்கூடிய சக்திகள் என்றும், சிங்கள இனச்சுத்திகரிப்பைச் செய்து வருகி­றார்கள் என்றும் ஆகவே சர்வதேச ஆதரவை அனைத்து நாடுகளும் விலக்கிக்­ கொள்ளும்­படியும், தமக்கு அந்த ஆதரவை வழங்கும்படி கோரு­வதுமே இந்த பிரச்சாரங்களின் சாரா­ம்சமாக இருக்கின்றன. இந்த இணை­யத்தைப் பொறுத்த வரையில் பாசிசம் காலூன்றியது, உள்நாட்டவர்களை இலக்காக வைத்தல்ல. அது சர்வதேச சமூகத்தை இலக்காக வைத்தே என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் நுணுக்­கமாகவும், திட்டமிட்டும் இவை தயா­ரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இவை இன்று பேரினவாத அமைப்புகள் அனைத்தும் வீரவிதானவைச் சுற்றி ஒன்றிணைக்கப்பட்டு வருவதைப்போ­லவே இந்த இணையத் தளங்களும் வீரவிதானவுக்கு பக்கபலமாக ஒன்றிணைவதைக் காண முடிகிறது.

இன்றைய பேரினவாதத்தின் நவ வடிவம் என்பது பாசிசம் தான் என்­பதை இன்று சகலரும் உணரத்தொட­ங்கியிருக்கிற நிலையில் அவற்றின் சாமர்த்தியமான, நுணுக்க­மான அணுகு­முறைகள் குறித்து விழிப்­பு­டனும், கண்காணிப்புடனும் இருப்ப­தும் அவை குறித்த எச்சரிக்கைகளை ஏற்படுத்து­வதும், அதன்படி அதிலிருந்து விடுபட எத்தனிப்பதும், அதற்காக அணிதிரள்­வதன் அவசியமும் அதிகரித்து வருகி­ன்றன என்பதை சொல்லித் தெரியத் தேவையில்லை.

குமார் பொன்னம்பலத்தின் படுகொலையும் பாசிசத்தின் செய்தியும்

என்.சரவணன்

நேற்று இலங்கை நேரப்படி நண்பகல் 11.15 மணியளவில் வெள்ளவத்தை இராமகிருஸ்ண வீதியில் பெற்றோல் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் வைத்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும் பிரபல சட்டத்தரணியுமான குமார் பொன்னம்பலம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் குமார் பொன்னம்பலம் பிரபலமான சட்டத்தரணி ஜி.ஜி. பொன்னம்பலத்தின் புதல்வராவார். 1938ம் ஆண்டு ஆவணி மாதம் 12ம் திகதி பிறந்த குமாருக்கு இறக்கும் போது வயது 61. றோயல் கல்லூரியில் கல்விகற்ற இவர் பின்னர் சட்டக்கல்வி கற்று 1974 ஆண்டு பரிஸ்ரர் ஆனார். சிறுவயது முதலே தந்தையின் பாசறையில் அரசியலில் ஈடுபாடு கொண்ட இவர் 1966ம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இளைஞர் அணியின் தலைவர் ஆனார். 1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணத்தொகுதியில் போட்டியிட்டார், பின்னர் 1982ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டார், இதுவரை காலமும் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்ட ஒரேஒரு தமிழர் குமார் பொன்னம்பலம் ஆவார். குமார் பொன்னம்பலத்திற்கு இரு பிள்ளைகள் உண்டு. குமாரின் மனைவி யோகலட்சுமி இலங்கையில் பிரபல இருதய சத்திர சிகிச்சை நிபுணராவார்.

குமாரின் படுகொலை குறித்து இலங்கையில் தமிழ் செய்தி ஊடகங்கள் பல இப்படுகொலைக்கு பின்னால் அரசு நிற்கிறது என்றும் இவர் அரசுக்கு தான் கடும் சவாலான நபராகவும் தொடர்ந்தும் எரிச்சல் ஊட்டும் நபராகவும் உலகுக்கு அரசை அம்பலப்படுத்துவதில் தீவிர அக்கறை காட்டி வந்தவராகவும் இருந்தார். அதனால் தொடர்பு சாதனவியலாளர்கள் எதிர்க்கட்சியினர் மற்றும் தமது அரசை விமர்சிக்கும் கண்டிக்கும் அனைத்து சக்திகளையும் வேட்டையாடி வரும் அரச நடவடிக்கையின் ஒரு அங்கமே குமாரின் படுகொலை என்றும் தென்னிலங்கை தமிழ் ஊடகங்கள் கூறி வருகின்றன. புலம் பெயர் நாடுகளிலுள்ள வானொலிகள் மற்றும் ஏனைய ஊடகங்கள் அமைப்புகள் என்பனவும் இதே வகையான கருத்துக்களையே பிரச்சாரம் செய்து வருகின்றன. அதே வேளை புளொட் மற்றும் இ.பி.டி.பி. இயக்கம் போன்றன இதனை புலிகளின் செயலாக எதிர்ப்பிரச்சாரம் செய்து முழு சம்பவத்தையும் முடிமறைக்கவும் திசைதிருப்பவும் முயற்சி செய்கின்றன. ஆனால் இப்பிரச்சாரங்கள் எல்லாமே அரசுக்கும் புலிகள் இயக்கத்தும் சாதகமாகவும் எதிராகவும் பயன்படுத்த மட்டுமே பயன்படுமே ஒழிய இவை உண்மையான அரசியலை விளங்கிக் கொள்ள பயன்படப் போவதில்லை. இப்படுகொலையின் பின்னால் அரசு இருப்பதாகக் கூறுவது எமக்கு வசதியானதும் சாதகமானதும் தான். ஆனால் இலங்கையில் தற்போது நிலவும் சுழலில் வேறு நிலமைகளையும் கவனத்திற்கொண்டாக வேண்டும். ஏனெனில் குமார் வெறும் சிறி லங்கா அரசுக்கு மட்டும் எதிரியாக இருக்கவில்லை. அவர் ஒட்டுமொத்த சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கும் எதிரியாக இருந்தார்.

இலங்கையில் கடந்த முன்று வருட காலமாக தலைதூக்கி வரும் பாசிச இயக்கமான சிங்கள வீர விதான இயக்கம் தொடர்ச்சியாக குமாரை கண்காணித்தும் அவரைக் கண்டித்தும் வந்ததுடன் குமாருடன் தொலைகாட்சி நிகழ்ச்சி பலவற்றில் விவாதம் செய்திருந்தனர். அந்த விவாதங்களிலெல்லாம் குமாரின் தர்க்க நியாயங்களுக்கு முன் இடுகொடுக்க அவ்வியக்கத்துக்கு முடியாமல் இருந்தது. இந்த இயக்கத்தினர் அம்பாந்தோட்டை காலி மாத்தறை போன்ற பகுதிகளில் அவர்களின் இயக்கத்தினருக்கு ஆயதப்பயிற்சி வழங்கி வருவதுடன் கடந்த வருடம் நடந்த இரத்தினபுரி கலவரம் உட்பட தமிழ் மக்களுக்கு எதிரான பல சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்த இயக்கம். தலைமறைவு மற்றும் பகிரங்க செயற்பாடுகளில் இடுபட்டு வரும் இவ்வியக்கத்தில் பல இன்றைய மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகளும் பல அரசியற் தலைவர்களும் பல தொழிலதிபர்களும் இருக்கின்றனர். தமிழ் மக்களை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் இவ்வியக்கத்தினரின் செயற்பாடுகளுக்கு முன்னால் இலங்கையில் உள்ள எந்த அமைப்பும் இடுகொடுக்காது என்று கூறுகின்றனர். இன்று இலங்கையில் புலிகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அதற்கடுத்ததாக வேகமும் தீவரமும் மிக்க இயக்கமாக இருப்பது இவ்வியக்கம் என்பதை இலங்கையில் பல ஆய்வாளர்கள் எச்சரித்து வந்திருக்கின்றனர்.

குமார் பொன்னம்பலம் நேற்று காலை கொலை செய்யப்படுவதற்கு முன்னர் குமாரின் வீட்டுக்கு வந்த சாந்த என்ற பெயர் கொண்ட நபர் குமாரோடு சிங்களத்தில் உரையாடிவிட்டுச் சென்றதாகவும் அந்த நபர் தான் குமாரை கொலை செய்ததாகவும் குமார் கொலை செய்யப்படும் போது அவருடன் காரில் இருந்த சிறுவன் குறிப்பிட்டுள்ளான். புளொட் இயக்கத்தினரோ இந்த சாந்த என்ற பெயரை சாந்தன் என்று திரித்து ஆகவே அவன் புலிகள் இயக்கத்தவன் என்று நிறுவி புலிகளைக் கண்டித்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

குமார் தமிழர்களுக்கெதிரான பல படுகொலைச் சம்பவங்கள் கைது மற்றும் ஏனைய மனித உரிமை மீறல் வழக்குகளை இலவசமாக செய்து கொடுத்து வந்துள்ளதுடன் அதனை உள் நாட்டிலும் வெளிநாடுகுளிலும் பிரச்சாரமாக செய்து அரசையும் பேரினவாதத்தையும் அம்பலப்படுத்தி அவர்களுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர். இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தமிழ் இழத்தையும் பகிரங்கமாக ஆதரித்து வந்த ஒரே முதுகெழும்புள்ள தமிழராக இருந்தவர் அவர். அதற்கு அவரது சட்ட நிபுனத்துவமும் பணச்செல்வாக்கும் முக்கியகாணமாக இருந்தன. அவ்வப்போது அரசையும் சனாதிபதியையும் கண்டித்து அவர் விட்ட அறிக்கைகள் சந்திரிகாவை ஆத்திரமுட்டுபவையாக இருந்து வந்திருக்கின்றன என்றால் அது மிகையாகாது. கொலை செய்யப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன்னர் அவர் சனாதிபதிக்கு எழுதியிருந்த கடிதம் ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. அதன் சில பகுதிளை தருகிறோம்.

ஒருதமிழ் ஈழவன் என்ற வகையில் உங்களுக்கு எழுதுகிறேன் ஆனால் அதைவிட முக்கியமாக விடுதலைப்புலிகளின் அரசியல் தத்துவத்தின் சஞ்சலமேதுமில்லாத உறுதியான ஒரு ஆதரவாளன் என்ற வகையிலும் அந்த நம்பிக்கையுடன் தெற்கில் வாழும் ஒருவன் என்ற வகையிலும் இதைஎழுதுகிறேன். உங்கள் பேச்சு சமாதானம் என்ற சொல்லினால் நிரம்பிவழிகிறது, ஆனால் உங்களது பேச்சின் உள்ளடக்கமும் தொனியும் எந்த வகையிலுமே இணக்கப்போக்கையோ சமாதானத்தையோ சமிக்கை காட்டுவதாக இல்லை.

நீங்கள் இந்த வகையாக சொற்சிலம்பம் ஆடுவதில் ஈடுபடுகின்றீர்கள் ஏனென்றால் அது உங்களைப்பாதிக்க நேரிட்ட காரணத்தால். தமிழ்ஈழத்திலே ஆணிரக்கணக்கான விதவைகளுக்கு சில குறிப்பிட்ட இரவுகள் அவர்களது சொந்த வாழ்வில் தாங்கள் ஆயதபடைகளின் பிரதம தளபதி என்ற வகையில் உங்கள் நடவடிக்கைகளால் உருவான இருளின் கரங்களால் தொடரப்பட்ட இரவுகளாக அமைந்ததை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?

விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்ட நீங்கள் விரும்புகிறீர்கள். தயவு செய்து அதை உங்களால் முடிந்தால் அதை செய்யுங்கள், அத்துடன் இந்த நாட்டில் நிரந்தர சமாதானத்திற்கான சகல வாய்ப்புகளுமே அடியோடு அற்றுப்போய்விடும் .

தமிழ்ஈழவர் மாத்திரமல்ல மலையகத்தமிழ் மக்களும் கூட உங்களை விரும்பவில்லை என்பது மாத்திரமல்ல உங்களை நம்பவும் தயாராக இல்லை. உங்களிடமிருந்து ஒரு அரசியல் தீர்வை விரும்பவும் இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன. நிரந்தர சமாதானத்தைக் காண்பதற்கு விரும்புவதாக நீங்கள் காட்டும் பாசாங்குகள் மீதான ஒரு தீர்ப்பே இது.

எதிரி இந்த மண்ணில் சுதந்திரமாக நடமாடுவதை வெகுதெளிவாக காண்பதாக நீங்கள் கூறியிருக்கிறீர்கள். வெறுப்புணர்வுதான் அந்த எதிரி என்று கூறியிருக்கிறீர்கள். இல்லை இந்த நாட்டில் நீங்கள் காணும் எதிரிகள் தமிழர்கள் தான்.

ஆண்டவனுக்கு நன்றி சொல்லவேண்டும் தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் உங்களை எதிரியாகவே கருதுகிறான், தேர்தல் முடிவுகள் அதை துல்லியமாக்குகின்றன.

உங்கள் மீதோ அல்லது உங்கள் தீர்வுப்பொதிகளிலோ தங்களுக்கு அக்கறை இல்லை என்பதை தமிழர்கள் எந்தவிதமான சந்தேகத்­திற்கு இடமில்லாதவகையில் வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

உண்மையில் தமிழர்கள் தன்மானமுள்ளவர்களாக இருந்தால் உங்களால் கொடுக்கப்படும் எதையம் அவர்கள் விரும்பமாட்டார்கள். எதற்காக அவர்கள் அவ்வாறு செய்யவேண்டும்.

தமிழர்களும் சிங்களவர்களும் தனித்தனியான பிராந்தியங்களில் வாழ்ந்து தங்கள் தங்கள் அலுவல்களை தாங்களே பார்க்ககூடியதாக இருந்தால் மாத்திரமே இருதரப்பினரும் இத்தீவில் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழமுடியும் என்பதே எனது உறுதியான அபிப்பிராயமும் நம்பிக்கையுமாகும்.
அத்தகைய ஏற்பாடு ஒன்று மாத்திரமே நீங்கள் உங்கள் உரையில் குறிப்பிட்ட சமாதானம் தொடர்பான மகத்தான மேற்கோள் பொருத்தமானது என்பதை நிரூபிக்கும்.

சமாதானம் என்பது ஒருபோராட்­டம். சமாதானம் என்பது ஒருபொ­ழுதுமே வெறுமனே கொடுக்கப்படுவ­தில்லை, ஒருபோதுமே அபகரிக்கப்­படுவதும் இல்லை. மற்றவர்களுக்கு மதிப்பளிப்பதன் மூலமும் தைரி­யத்தின் முலமுமே சமாதானம் வெற்றி கொள்ளப்படுகிறது சமாதானத்­தைக்­காண ஒவ்வொருவரிடமும் விழிப்புணர்வும் பற்றுறதியும் தேவை.

இவ்வாறு அந்த கடிதத்தில் இருந்தது.

எவ்வாறு இருந்த போதும் குமாருக்காக கண்ணீர் வடிக்கும் பல லட்சக்கணக்கான தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இது தான். இதனை அரசு செய்திருந்தாலும் ஏனைய பேரினவாத சக்திகள் செய்திருந்தாலும் இப்படுகொலை எமக்கு உணர்த்தும் சமிக்ஞை பயங்கரமானது என்பது தான். இலங்கையில் நசுக்கப்படும் தமிழ் மக்களுக்கும் நசுக்கப்படும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இயங்கும் நபர்களுக்குமான எச்சரிக்கைதான் இது. ஆக குமாரின் படுகொலை ஒரு முடிவல்ல. அது ஒரு தொடாச்சியின் அங்கம்.

யூன-2000 தமிழ்நாதம்

இலங்கையின் இனக் குழும அரசியல் சி.அ.சோதிலிங்கத்தின் நூல் பற்றிய விமர்சனக்கூட்டத்தில் என்.சரவணன் ஆற்றிய உரை


இன்று இந்தநூல் பொருத்தமான நேரத்தில் வெளியாகின்றது. சரிநிகரில் இது வெளிவந்த போது இக்கட்டுரைகள் எனக்கூடாகவே சோதிலிங்கம் அவர்கள் கொடுத்தனுப்புவார். இந்தக் கட்டுரைகளின் முக்கியத்துவம் குறித்து அப்போது நிறைய உரையாடியிருக்கிறோம். இந் நூலின் பலமே அதன் காலப்பொருத்தம் தான். மேலும் இதன் வெற்றிக்கு முக்கிய காரணம் சோதிலிங்கம் அவர்களுக்கு இருந்த தேசிய மற்றும் மார்க்சிய புரிதலும், அவற்றுடனான நேரடியாக இருந்த நடைமுறை அனுபவங்களும் தான். தேசிய விடுதலைப் போராட்டத்துடன் அவர்கொண்டிருந்த நேரடி ஈடுபாடு மற்றும் மாக்சிய புரிதலும் சமூகவியல் பார்வையுமாக இவருக்கு தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய பரந்துபட்ட பார்வையை வழங்கியிருக்கிறது. அதன் வெளிப்பாடுகளைத் தான் நாங்கள் அனுபவிக்கிறோம்.

இத்தொடாpன் முக்கியத்துவம் கருதி நான் இவருக்காக செய்த இணையத்தளமொன்றில் முழுக் கட்டுரையையும் உள்ளடக்கியிருக்கிறேன். ஆண்டாண்டு காலமாக எம்மை அடிமைப்படுத்த இந்த அரசியல் சட்டங்களுக்கூடாகத் தான் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இவை சட்டபூர்வமாக்கப்பட்டதன் பின் அதனை மறுப்பதும் எதிர்ப்பதும் குற்றத்துக்குரியதாகிவிடுகின்றது.

சுதந்திரத்திற்குப்பின்னர் யாப்புகளின் மூலம் எமது உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாற்றையும், அதன்பின்னணியையும், அதன் பின்னால் இருந்த நலன்களையும், என்னஎன்னஏற்பாடுகளின் மூலம்அவை செய்யப்பட்டனஎன்பதையும் அவர் இங்கு தெளிவாக விளக்குகிறார். யாப்பு குறித்தவிடயத்தில் உள்ள தமித்தேசியப் பார்வை அவரது இந்தியா பற்றிய கட்டுரையில் மேலும்ஆழப்படுத்தியிருக்கலாம். இந்தியா எப்போதுமே தமிழ் மக்களின் எதிரி என்பதை நிரூபித்துவரும் நிலையில் அது கட்டயம்செய்யப்படவேண்டியவை. மேலும் அதனை செய்யக்கூடிய அரசியல் பார்வையையும் கொண்டிருப்பவர் சோதிலிங்கம் அவர்கள். வெளியாகியிருக்கும் அவரது இரு நூல்களிலுமே இருக்கின்ற முக்கிய வெற்றிஎன்னவென்றால் இது மாணவர்களுக்கான கல்விசார் தேவையை நிறைவேற்றும் அதேவேளை அரசியல் பிரக்ஞை மற்றும், தேடல், கொண்ட அனைவரையும் கூட திருப்திப்படுத்தக்கூடியது என்பது தான். நான் இவரிடம் படித்த காலத்தில் இவரிடம் இருந்து கல்விசார் தேவையை மட்டும் சவீகரித்துக்கொள்ளவில்லை. அரசியல் பார்வையையும் சுவீகரித்துக் கொண்டேன். அவரது பாடக்குறிப்புகள் அப்படித்தான் அமையும். அவர் உருவாக்கியிருக்கிற மாணவர்கள் பெரும்பாலும் போட்டிக்கல்விமுறைக்குள் தங்களை மட்டுப்படுத்திக்கொள்ளவில்லை. அதற்கு அப்பால் சமூக அக்கறையுள்ள அரசியல் பிராணிகளாகவும் மாற்றிவிட்டிருக்கிறார் என்றால் அது மிகையாக இருக்காது.

இந்நூலின் உள்ளடக்கம் குறித்துஅதிகம் பேசுவதைவிட இதன் உருவகத்தின் கால அவசியம் அவசரம் குறித்து பேசுவதே அதி முக்கியம் என்று நினைக்கிறேன்.

இன்று நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கும் சக்திகளுக்கு நாங்கள் பொதுஜன ஐக்கிய முன்னணி என்றோ அல்லது ஐக்கிய தசியக் கட்சியென்றோம் ஏதாவது ஒரு கட்சியின் பெயரை அழைப்போம், அல்லது சிங்கள பௌத்த அரசு என்று கூட நாங்கள் கடந்த காலங்களில் அழைத்து வந்திருக்கிறோம். ஆனால் அந்தப் பார்வை மிகவும் மேலோட்டமானது. மிக மிக மேலோட்டமானது.

அப்படியென்றால் இன்று ஆட்சி செய்வது யார்? ஒக்டோபர் 10குப் பின்னால் ஆட்சி செய்யப்போவது யார்? சந்திhpகாவா, ரணிலா டில்வினா இல்லவே இல்லை. பாசிசம். அது தான் கடந்த மூன்று வருடங்களாக ஆட்சி செய்துகொண்டிருப்பது. ஒக்டோரகுக்குப் பிறகும் ஆட்சி செய்யப்போவது.

இது மிகவும் கவனிக்க வேண்டிய விடயம். பாசிசம் பற்றிய அச்சுறுத்தலை நான் சரிநிகரில் நான்கு வருடங்களுக்கு முன்னர் எழுதி வந்த போது அதனை ஒரு தமிழ் இனவாதக் குரலாகப் பார்த்தவர்கள் ஓரிரு வருடங்களின் பின்னர் தான் அதன் நேரடித் முகத்தை பார்க்கத் தொடங்கினார்கள். ஒப்புக்கொள்ளத் தொடங்கினார்கள்.

இன்றைய பாசசத்தின் நவ வடிவத்தையோ அல்லது அதன் மறுஉற்பத்தியையோ அவை பற்றிய சம்பவங்களையோ நான் அடுக்கப்போவதில்லை. அதற்கான அவகாசமும் இல்லை. அதற்கான முழுமையான களமும் இதுவல்ல. அது பற்றி நிறையவே சரிநிகரில் விரிவாக எழுதி வந்திக்கிறோம். ஆனால் அதன் சாராம்சம் பற்றிய புரிதலை விளங்கிக்கொள்கிற போது தான் சமகால யதார்த்தத்தையும், இந்த நூலின் முக்கியத்துவத்தையும் உணர முடியும்.

கிரெம்சி கூறுவார், பாசிஸ்டுகள் தங்களின் சக்தியையும், ஸ்தாபனத் திறமையையும் பறையடித்துக்காட்டடி ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியை தங்களுக்கு ஆதரவளிக்கும்படி செய்துவிடுவார்கள், அதிலும் மிதவாத ஆளும் வர்க்கத் தலைமை நம்பகத்தன்மையை இழந்து வருகிறதோ அல்லது ஸ்திரமற்றதான சூழல் உருவாகி வருகிறதோ, அந்த இடைவெளியை பாசிஸ்டுகள் கைபற்றிவிடுகிறார்கள், அந்த இடைவெளியை பாசிஸ்டுகள் நிரப்பிவிடுகிறார்கள். இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் குழப்பியடிக்கப்பட்டு பலவீனப்படும் போது பாசிசம் தலைதூக்கிவிடுகிறது என்பார் மேலும் அவர் இப்படிக் கூறுவார்.

-எப்போதெல்லாம் வளமான சிந்தனைகளும் ஜனநாயகத் தன்மைகளும் முடங்குகிறதோ எப்போதெல்லாம் முதலாளித்துவ தேசியவாதம் தன்னளவில் தோல்வியை தோல்வியை தழுவுகின்றதோ அப்போது பழமைவாதம் பாசிசத்துக்கான தளத்தை உருவாக்கிக்கொள்கிறது. என்பார்.

வீரவிதான இயக்கம் 1995ஆம் ஆண்டு யூலை 7ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்ட போது அது வெறும் இயக்கமாகத் தான் பார்க்கப்பட்டது. ஆனால் அது எத்தனை பெரிய அபாயகரமான இயக்கம் என்பதை அதன் வியூகங்களும் திட்டங்களும், வேலைமுறைகளும் நிரூபித்துக்கொண்டு வந்தபோதுகூட பலரும் அதனை அசட்டைச் செய்தார்கள். ஒரு காலத்தில் சிங்களத் தேசியவாதம் என்கிற பதப் பிரயோகத்தைப் பாவித்தோம், அதன் பின் கநற்தேசியவாதம் என்கிற பதப்பிரயோகத்தை பாவித்தோம், அதன் பின் இனவாதம், அதன் பின் பேரினவாதம் என்றெல்லாம் பதங்களை பாவித்தோம், இந்த பதங்களுக்குப் பின்னால் அர்த்தங்களும், அந்தந்தக்கட்ட பாசசத்தின் வளர்சிக் கட்டங்களையும் சேர்த்தே உணர்த்தியது. ஆனால் இன்று அது முழு அளவிலான செயற்பாட்டுக்கு தன்னை பலப்படுத்திக்கொண்டுள்ள பாசிச இயக்கம், முழு சிங்கள மக்களையும் ஓரணிக்குள் திரட்டியுள்ள, திரட்டி வருகின்ற சிங்கள மக்களை பாசிசமயப்படுத்துவதில் மிகவும், நுணுக்கமாக செயற்பட்டுவருகின்ற இயக்கம்.

தேசியத்துக்கு பல முகங்கள் உள்ளன. பல சந்தர்ப்பங்களில் அது தேசிய சித்தாந்தத்தை உயர்த்திப்பிடிக்கின்ற பண்புகளை உருவகப்படுத்திக் கொண்டுள்ள சித்தாந்தமாக இருந்தாலும், வேறு சந்தர்ப்பங்களில் அது சோசலிச முகுமூடிகளையும் கூட அணிந்து வரும். ஹிட்லர் பாசிச சித்தாந்தம் கூட தேசிய சோசலிசம் பற்றிய கருத்தாக்கத்துடன்தான் தன்னை அடையாளப்படுத்தியது. இன்று சிறி லங்காவில்; சிங்கள பாசிசத்துக்கு வடிவம் கொடுக்கும் சம்பிக்க ரணவக்கவின் சித்தாந்தமும் கூட தேசிய சோசலிசம் தான் என்பதை கவனியுங்கள். ஆரம்பத்தில் ஜே.வி.பி.யுடன் இணைந்து பணியாற்றிய சம்பிக்க ரணவக்க அதிலிருந்து விலகி ஜனத்தா மித்துரோ எனும் இயக்கத்தை ஆரம்பித்து இலங்கைக்கான சோசலிச பொருளாதார கட்டமைப்பு குறித்த ஆய்வுகளையும், கருத்துருவாக்கங்களையும் செய்து இயங்கிக்கொண்டிருந்த போது அதன் ஒரு கட்டத்தில் சோசலிச கோசம் சரிவராது என்கிற கருத்தையும், சோசலிசத்தை தேசிய சித்தாந்தத்தோடு இணைத்து புதுவகை சிங்கள பௌத்த சித்தாந்த மற்றும் அமைப்புத்துறைக்கான சேவலைகளை தொடங்கினார். அதன் வடிவம் தான் 1995இல் சிங்கள வீரவிதானவின் தோற்றம். மிகவும் நுணக்கமாக இயங்கி அது வரை சிங்கள பௌத்தம் பேசிய இயக்கங்களை தம்மோடு சுவீகரித்தும், சிலவற்றை நாசூக்காக இயங்கவிடாமல் பண்ணியும், ஒட்டுமொத்த சிங்கள பௌத்த அமைப்புகளையும் ஒரே இயக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. பௌத்த மகா சங்கத்தினரை முழமையாக தமது கட்டுப்பாடடுக்குள் கொண்டு வந்தது. சமூகத்தில் கருத்துரவாக்கங்களை பலப்படுத்தும் நிறுவனங்களான தொடர்பூடகங்கள் அiனைத்திலும் ஊடுறுவியது. திவய்ன போன்றவற்றை தமது கைக்குள் போட்டுக்கொண்டது லங்காதீப, சண்டே டைமஸ் போன்றவற்றை அச்சுறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது, ஏனைய இலத்திரனியல் சாதனங்களுக்குள் சிங்கள தேசிய உணர்வுகொண்டவர்களை அடையாளம்கண்டு தமது வலைக்குள் சிக்கவைத்தது.

அரசியல் கட்சிகளுக்குள் ஊடுறுவி அதன் அதிகார மற்றும் நிறைவேற்று அங்கங்களுக்குள் சென்று அரசியல் முடிவுகுளை எடுக்க வைத்தது. அவ்வாறு எடுக்க வைப்பதற்கு வெளியில் இருந்து அழுத்தங்களை பிரயோகிக்க பெருமளவான முன்னணி அமைப்புகளை உருவாக்கியது. ஒரு அரசை கொண்டுள்ள சிறிலங்கா கூட இணையத்தளம் உருவாக்காத காலத்தில் 96ஆம் ஆண்டே தமக்கான இணையத்தளத்தை வீரவிதான தோற்றுவித்தது. சிங்கள வர்த்தகர் சங்கத்தை ஆரம்பித்து குறகிய காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கிளைகளை நாடளாவ ஏற்படுத்தியது. பெண்கள் அமைப்புகள், வேலைவாய்ப்பு அணி, என பல அமைப்புகளஷளை உருவாக்கியது.

அரசியல்வாதிகள், கலைஞர்கள், விளையாட்டுவீரர்கள் என சமூகத்தில் உள்ள பிரமுகர்வட்டார சகத்களை குறகிய காலத்தில் சுவீகரித்தது மட்டுமல்லாமல் இராணுவத்தில் சமகாலத்தில் பொpய அதிகாரிகள் பலரையும் இணைத்துக்கொண்டது. தப்பியோடிய இராணுவத்தினரை உள்வாங்கி இரகசிய பயிற்சி முகாம்களை நடத்திவருவது பற்றிய செய்திகளை ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள்.

முன்னரெல்லாம் பல பெயர்களைக்கொண்ட பேரினவாத அமைப்புகள் நிறையவே இருந்தன. அவற்றுக்கு பொதுவான சித்தாந்த வடிவம் இருக்கவில்லை. பொதுவான அமைப்பு வடிவம் இருக்கவில்லை. பொதுவான அரசியல் வடிவம் இருக்கவில்லை. ஆனால் இன்று அப்படியல்ல சிங்கள சிவில் சமூகத்தில் ஆழமாக வேர்விடுகின்ற அளவுக்கு அணைத்தையும் மையப்படுத்துகின்ற பலமான சித்தாந்த வடிவம் அதற்கு உண்டு. உறுதியான அமைப்புவடிவம் உருவாக்கியாகிவிட்டது. அது போல அரசயில் வடிவமும் அதற்கு ஏற்படுத்தியதகிவிட்டது. இனி அது இராணுவ வடிவம் பெறவேண்டியதும், அரசை கைப்பற்றுகின்ற வேலையும் தான் பாக்கி என்று கூறிவந்தோம். அதற்கு இராணுவு வடிவம் இருப்பதை இராணுவ பயிற்சிகள் பற்றிய செய்திள் உர்ஜிதப்படுத்துகின்றன. சாதாரண தமிழ் சிவிலியன்களின் மீதான வன்முறைச் சம்பவங்கள் பல செய்திகளை நிரூபித்தன.

உங்களுக்குத் தொpயும் குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்ட செய்தி, சிங்கள வீரவிதான n‘லருவன எனும் பத்திரிகையொன்றை கடந்த மூன்று வருடங்களாக வெளியிட்டுக்கொண்டிருப்பதை அறிந்திப்பீர்கள், இதனைத் தவிர அவர்கள் ஒரு செய்தி ஏடு நியுஸ்லெட்டர் ஒன்றை வெளியிட்டுவருகிறார்கள். வொய்ஸ் ஒப் த நேசன் எனும் பெயர் கணட இந்த செய்தி ஏட்டின் கடந்த பெப்ரவரி இதழில் கடைசி பக்கத்தில் ஆசிரியர் தலையங்கத்தில் இப்படி கூறப்படுகிறது. கொழும்பில் இருந்துகொண்டு கொஞச்ம் கூட அச்சமின்றி புலிக்குத் வால்பிடித்துக்கொண்டு இருந்த புள்ளிமாடு இனந்தெரியா நபரால் புதைகுழிக்கு அனுப்பட்டதானது, நமது தேசத்தை பாதுகாக்க சிங்கள இனத்தைப் பாதுகாக்க தற்போது இருக்கின்ற சக்திகளுக்கு அப்பாலும் ஒரு அமைப்பு இருப்பதையே நம்மெல்லாருக்கும் தைரியமளிக்கின்றது.

என்று இருந்தது அந்தச் செய்தியில் இவ்வாறானவர்களுக்கு என்ன நேரும் என்கின்ற எச்சரிக்கையும், அவ்வாறான இயக்கமொன்று இருப்பதை பற்றிய சிங்கள மக்களுக்கு iதாpயத்தையும் அளிக்கும் செய்தியாகவே அது இருந்தது. இதை விட முக்கியமாக கவனிக்க வேண்டிய வியம் என்னவென்றால் அதே பக்கத்தில் 7 கோசங்கள் இருந்தன. அந்த கோசத்தில் இருதியானது என்ன தெரியுமா, நாட்டையே யுத்தத் தாயாரிப்புக்கு உட்படுத்துவோம், புலி எதிர்ப்பு தேசிய முன்னணியை கட்டியெழுப்புவோம் என்பது தான் அந்த கோசம். உங்களுக்குத் தெரியுமா குமார் பொன்னம்பலத்தின் கொலைக்கு உரிமை கோரிய இயக்கமும் இது தான். National Front against tigers இதனை நீங்கள் உன்னிப்பாக கவனியுங்கள். இந்த விடயம் எங்கும் கவனிக்கப்பட்டதாக இது வரை நான் அறியவில்லை.

அவர்களின் கொலைபட்டியல் அடுத்தது யார் என்கிற கேள்வி பல புத்திசீவிகள், அரசியலாளர்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்துள்ளன.

கடந்த 10ஆம் திகதி லக்பிம பத்திhpகையில் சம்பிக்கவின் பேட்டி ஒன்று வெளியாகியிருந்தது. அந்தப் பேட்டியில் ஒரு கேள்வி. இந்தம குறகிய காலத்தில் நீங்கள் கண்டடைந்த வெற்றிகள் என்ன? அதற்கு சம்பிக்கவின் பதில் இப்படி இருந்தது. இது வரைகாலம் செக்கியுலரிசம் பற்றி பேசிக்கொண்ருந்த ஐக்கிய தேசியக்கட்சி இன்று ரணில் தலைமையில் மகாசங்க்தினரை சந்தித்து பன்சில் எடுக்கிறார். இது வரைகாலம் மார்க்சியம், பேசிக்கொண்டிருந்த ஜே.வி.பி. தங்கள் ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் பிரதியை மகாசங்கத்தினருக்கு கொடுத்து ஆசி பெற்று அடபிரி செய்கின்றனர். இது யார் கண்ட வெற்றி எனட்பதை நீங்கள் தீர்மானியுங்கள் என பதிலளிக்கிறார் சம்பிக்க.

இந்தப்புள்ளியைத் தான் நாங்கள் அவதானிக்க வேண்டிய முக்கிய புள்ளி. இன்று ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டத்தையும் கட்டுப்படுத்தும் வலிமையை பாசிசம் பெற்றுவிட்டது. ஆயதப் புரட்சி பற்றி பேசிக்கொண்டிருந்த ஜே.வி.பி.யை சிங்களத் தேசியம் பற்றி பேசவும், அதற்கு எதிராக போகாமலும் பண்ணியிருக்கிறது. குறைந்தபட்சம் சமவாய்ப்புச் சட்டத்தைக் கூட பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாபமல் போனது எவரது வெற்றி? தமிழர்களின் உரிமைகளுக்கே வேட்டு வைக்க இருந்த தீர்வுப்பொதியைக் கூட பாராளுமன்றத்தில் நிறைவேற்றவிடாமல் செய்தது யாரது வெற்றி. சிறிமா அம்மையாரை பதவி விலக்கி சிங்கள வீரவிதானவுக்கு நெருக்கமான ரத்னசிறி விக்கிரமநாயக்கவை பிரதமராக போட்டு மகாசங்கத்தினரை அணுக வைத்தது யாரது வெற்றி. தமிழ் கட்சிகள் மகா சங்கத்தினருடன் பேசி தீர்வு தொடர்பாக ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று ரத்னசிறி வக்கிரமநாயக்க கூறியது யாரது வெற்றி. இந்த நிலைமைகளை விளங்கிக்கொள்ளவும், அதற்கேற்ப தங்களை தயார்படுத்தவும் தமிழ்த் தேசம் அதிக அக்கறை செலுத்த வேண்டிய கட்டம் இது.

இன்று முழு சிவில் சமூகத்தையும், அரச கட்டமைப்பையும், பாசிசம் தான் வழிநடத்துகிறது என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள். இதற்குப் பின்னால் முதலாளித்துவ நலன்கள், பல்வேறு சக்திகளின் நலன்கள் கலந்திருக்கும் என்பது உண்மை. ஆனால் அவற்றின் அறுவடை அனைத்தும் பாசிசம் சுவீகரித்துக்கொள்கிறது. சிங்கள வீரவிதான இன்று ஒட்ட இருந்த சுவரொட்டியை நேற்றே ஜே.வி.பி.யினர் ஒட்டிவிடுகின்றனர். சிங்கள வீரவிதானவுக்கு வேளை மிச்சம். ஜே.வி.பி. மட்டுமல்ல சிங்கள கட்சிகள் அனைத்தினதும் இன்றைய நடவடிக்கையின் அறுவடை பாசசத்துக்குரியவை என்பதை நினைவிற்கொள்வோம். இனி பாசிசத்துடனான கொடுக்கள் வாங்கல்களை செய்துகொள்ளாமல் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் சக்திகளும் இருப்புகொள்ளமுடியாது.

வரப்போகும் ஒக்டோபர் 10ஆம் திகதிக்குப் பின் நாட்டின் நிலைமை மிகமிக மோசமடையப் போகிறது. திறைசேரியில் பணம் இல்லை என உத்தியோக பூர்வ அறிவித்தலும் வெளியாகிவிட்டது. எந்தநேரத்திலும் வெடிக்கக்கூடிய பண நெருக்கடியும், பஞ்சமும். தேர்தலுக்காக வெடிக்க விடாமல் அதிக முயற்சிசெய்து கொண்டிருக்கிறது அரசு. 94ஐப் போலல்லாது இம்முறை குறைந்த வித்தியாசத்தில் தான் அரசாங்கம் வெல்லும். பாசிசத்தல் தங்கியிருப்பது மேலும் உறுதிப்படும். தேர்தல் முடிந்ததும் அது வெடிப்பது பற்றி அரசுக்கு கவலை இல்லை. அவ்வாறு எதிரி நெருக்கடிக்குள் சிக்குகின்ற சந்தர்ப்பமானது போராட்டத்துக்கு சாதகமான அம்சம். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போராட்ட சக்திகள் அரசை மேலும் பலவீனப்படுத்த முயற்சிப்பர். அந்த முயற்சிகளை எதிர்த்து பாசிசம் அரசை நிர்ப்பந்நித்pகும். ஆனால் தேர்தலுக்காக குவித்திருக்கின்ற ஆயுததளபாடக் குவிப்புகள் மட்டும் தான் அரசின் கையிருப்பில் இருக்கும். அதன் பின்னர் இருப்பதை வைத்துக்கொண்டு தான் அரசு போருக்கு முகம்கொடுக்க வேண்டி வரும் அந்தகைய சூழலில் பாசிசமயப்பட்டுவரும் மக்களை திருப்திபடுத்த அரசு எண்ணிக்கைகளை காட்டவேண்டிவரும். அதற்கு தமிழ் மக்களின் மதான குண்டுவீச்சுகள், அழித்தொழிப்புகள், கைதுகள் என்றெல்லாம் செய்து தான் பாசிசத்தை திருப்திபடுத்த முடியும். போராட்டம் அடுத்த கட்டத்தை நெருங்கும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ்மக்களுக்கு ஆதரவளிப்பதைக் காட்டிலும், சிறிலங்கா அரசுக்கு இந்திய மற்றும், ஏனைய வல்லரசு நாடுகள் உதவி வழங்க முயலும். எனவே தமிழ் தேச விடுதலையில் பிரக்ஞை உள்ள சக்திகள் தேசத்துக்குள் இது பற்றிய விழிப்பூட்டவும், எச்சரிக்கவுமான வேலையை தொடங்க வேண்டிய பொறுப்பு உள்ளது. தேசத்துக்கு வெளியில் எதிரிக்கு ஆதரவாக சர்வதேச சக்திகள் போக விடாமல் தடுப்பதற்கான வழிகளை கண்டாக வேண்டி வரும்.

இன்று வடக்கில் இந்திய ஹெலிகப்டர்கள், படகுகள், ஆயுதங்கள் என குவிக்கப்பட்டுத் தான் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வீரவிதானவுடன் இந்திய உளவுப்பிரிவு நெருங்கிய உறவுகளை வைத்துக் கொண்டிருப்பதாககிடைக்கின்ற செய்திகள் பீதியடையச் செய்கின்றன. இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கக்கோரி இலங்கை அரசுக்கு முன்னரே வீரவிதான கோருகிறது. இந்தியா வழங்குகிறது. சம்பிக்க ரணவக்க இந்தியா சென்று வருகிறார் பயிற்சிகள் வழ்கப்படுவதாக கேள்விப்படுகிறோம். அந்தப் பயணத்தின் பின் இராணுவ உயர்அதிகாரிகள் இந்தியா சென்று வெற்றியுடன் திரும்பியிருப்பதாக அறிக்கை வெளியிடுகிறார்கள். இந்த நிலைமைகள் எல்லாம் எமக்குவிளக்கும் செய்திகள் பல.

இப்படிப்பட்ட சூழலின் பொருத்தப்பாட்டை விளங்கிக்கொண்டு வெளியாகும் நூல் தான் இது.

தளத்தின் உள்ளடக்கம்.

இந்தத் தளத்தில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உருவாக்கம், விரிவாக்கம், கருத்தாக்கம், அதன் வடிவம், அதன் நிறுவனமயமாக்கம், அதன் திசைவழி குறித்து சரிநகர், ஆதவன், நிகரி, விடிவு, பறை, இனி போன்ற பதிப்புகளில் வெளிவந்த என்.சரவணனின் கட்டுரைகள் மறுபிரதியிடப்படுகின்றன.

சுவடி

Template by - Abdul Munir - 2008 - layout4all